மோடியின் சாந்தி சட்டம் – சொந்த நாட்டு மக்களின் உயிரை விட அமெரிக்க எஜமானர்களின் விசுவாசமே முக்கியம்!
இந்தியாவில் சட்டங்கள் மக்கள் நலனிலிருந்தே நிறைவேற்றப்படுகின்றன. அதை அமல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன; ஊழல் கறை படிந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால்தான் அத்திட்டத்தின் உண்மையான பயன்கள் மக்களுக்குப் போய் சேருவதில்லை என்ற கருத்து/நம்பிக்கை பரவலாக மக்களிடையே உண்டு. செய்தி ஊடக விவாதங்களிலும் நடுப்பக்க கட்டுரைகளிலும் இதனடிப்படையிலேயே விவாதமும் செய்யப்படுகின்றன.
ஆனால் திரையை சற்று விலக்கிப் பார்த்தால் உண்மையே இதற்கு நேரெதிரானதாகத் தெரியும். அதாவது முதலாளிகளின் நலனுக்காகவே (மக்கள் நலனுக்கெதிரான) சட்டங்கள் இயற்றப்படுகின்றன; அவை அதன் முழு இலக்கை எட்டும் வரை ஆளும் வர்க்கத்தின் முழுத்திறனைக் (அரசாங்கம், கட்சிகள், போலீசு, நீதிமன்றங்கள், செய்தி ஊடகங்கள், ஆளும் வர்க்க அறிவுஜீவிகள்) கொண்டும் அமல்படுத்தப்படுகின்றன.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையோ, GST அமல்படுத்தியதோ இன்னும் பல அரசியல்-பொருளாதார நடவடிக்கைகளுக்கு இதனைப் பொருத்திக் கொள்ளலாம். அந்த வரிசையில் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணுசக்தி திருத்த மசோதாவையும் (சாந்தி மசோதா-2025, Shanthi Act-2025) சேர்த்துக்கொள்ளலாம். முந்தையச் சட்டங்களோ பெரும்பான்மை மக்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை மட்டுமே பாதிக்கச் செய்தது. ஆனால் பிந்தைய சட்ட மசோதாவோ அணு உலை விபத்தில் மக்கள் உயிரிழப்பது மற்றும் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை விட முதலாளிகளின் லாபமே முக்கியம் என்கிறது.
சாந்தி சட்டம்-2025 இல் (1) அரசாங்கம் மட்டுமே அணு உலை-மின்சார உற்பத்தியில் ஈடுபட முடியும் என்றிருந்ததை, தனியார் நிறுவனங்களும் மின்சார உற்பத்திக்காக அணு உலைகளைத் தொடங்கலாம் என்று திருத்தியுள்ளனர். (2) அணு உலை விபத்திற்குண்டானால், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் அணு உலைத் தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்கக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்கள் இழப்பீடு தருவதோ அல்லது பொறுப்பேற்க வேண்டியதில்லை. என்கிறது. இச்சட்டத்தினை புரிந்துகொள்ள நமக்கு 123-ஒப்பந்தத்திலிருந்து தொடங்க வேண்டும்.
2008-இல் இந்தியா-அமெரிக்காவுக்கு இடையே 123 ஒப்பந்தம் என்றஅணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம், பொதுப்பயன்பாட்டுக்கான (மின்சாரம் உற்பத்தி) அணு உலைகளை கட்டுவது அதற்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து பெறமுடியும் என்று அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு கூறியது. மேலும் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்களுடன் உதவியுடன் அணு உலைகளைத் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இவ்வாறு அமைக்கப்படும் அணு உலைகளை நேரடியாக அரசு நிறுவனமான NPCIL லே நிர்வகிக்கும் எனவும் சொல்லப்பட்டது.
அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீடுகள் குறித்து அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2011-இல் (CLNDA) கொண்டுவரப்பட்டது. அதில், இந்தியாவில் அமைக்கப்படும் அணு உலைகளில் விபத்துக்கள் நடந்தால் இழப்பீடாக NPCIL 1500 கோடி வரைக் கொடுக்க வேண்டும். அதற்கு மேலான இழப்பீட்டுத் தொகையை ஒன்றிய அரசே ஏற்கும். உபகரணங்கள் குறைபாடினால் விபத்து ஏற்பட்டிருந்தால் அந்தத் தனியார் நிறுவனங்களும் இழப்பீட்டுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அணு உலைகளை அமைக்கும் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க நிர்ப்பந்திக்கும் சட்டப்பிரிவை நீக்கவேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வந்தது. அப்போதைய மன்மோகன் சிங் அரசாங்கம் இதற்கான முயற்சிகள் எடுத்தாலும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக கைவிட்டது. குறிப்பாக அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜகவும் இச்சட்டத்திருத்தத்தினை எதிர்த்தது.
2025 பிப்ரவரி பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அணுசக்தி சட்டம்(AEA-1962) மற்றும் CLNDA-2011 இரண்டிலும் திருத்தங்கள் கொண்டுவரப்போவதாக அறிவித்தார். அதேமாதத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட மோடி, அணு உலைகளை அமைக்கும் நிறுவனங்களை இழப்பீடுகளுக்கான பொறுப்பிலிருந்து நீக்குவதாக உறுதியளித்துப் பேசியிருந்தார். அதன் தொடர்ச்சியில், AEA-1962 மற்றும் CLNDA-2011 இவ்விருச் சட்டங்களையும் திரும்பப்பெற்று அதற்கு பதிலாக SHANTI ACT-2025 ஐ நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம்,
- இந்தியாவில் அணு உலைகளை அமைக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் தனியார்நிறுவனங்கள் அணு உலை விபத்துக்களுக்கு இழப்பீடுகள் தரவேண்டிய பொறுப்பிலிருந்து விலக்கு அளித்துள்ளனர்.
- தனியார் நிறுவனங்கள் பொது பயன்பாட்டிற்கான அணு உலைகளைஅமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளனர். SHANTI ACT-2025 நிறைவேற்றப்பட்ட உடனே அதானியும் டாடாவும் அணு உலை மின்சாரம் தயாரிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
அணு உலை மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் கருவிகளுக்கான சுங்க வரியை 2035 வரை நீக்கியுள்ளதாக சமீபத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். கூடவே அணு உலைகளை நிர்வகிக்கும் பொதுத்துறை நிறுவனமான NPCIL க்கான நிதி ஒதுக்கீட்டை 8,092 கோடியிலிருந்து (2025-26) 5.200 கோடியாக (2026-27) குறைத்துள்ளனர். தனியார் நிறுவனங்களுக்கு முன்னுரிமை என்பதிலிருந்தே இந்த நிதி குறைப்பு நடந்துள்ளதாக நாம் ஊகிக்க முடியும்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அதானி, அம்பானி, டாட்டா ஆகிய இந்திய தரகு முதலாளிகள் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடு இணைந்து இந்தியாவில் தகவல் மையங்களை(Data centre) அமைக்கப் போவதாக அறிவித்தனர். இம்முதலாளிகளுக்கு ஆதரவாக, தகவல் மையங்களை அமைக்கும் நிறுவனங்களுக்கு 2047 வரை வரி விலக்கை மோடி அரசு அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், அதானி நிறுவனமோ, 100 பில்லியன் டாலர் முதலீட்டில் புதுபிக்கத்தக்க ஆற்றலில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை கொண்டு செயற்கை நுண்ணறிவிற்கான தகவல் மையங்களை 2035 க்குள் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. அதாவது அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியுடன் தான் அமைக்கப்போகும் தகவல் மையத்திற்கு தேவையான மின்சாரம் அமெரிக்க அணு உலை நிறுவனங்களின் உதவியோடு தான் தொடங்கப்போகும் அணு உலை மின்சார நிறுவனத்திலிருந்து வழங்கப்படும் என்கின்றனர்.
தகவல் மையம் அமைப்பதிலோ அல்லது அணு உலை மின்சாரம் தயாரிப்பதிலோ அதானி நிறுவனத்திற்கு எவ்வித முன்னனுபவம் கிடையாது. அதற்கான ஒரு திருகாணியைக் கூட அவர்கள் தயாரித்ததில்லை. அதானி உள்ளிட்ட இந்திய தரகு முதலாளிகள் முழுக்க முழுக்க அமெரிக்க நிறுவனங்களின் உதவியுடனே இத்திட்டங்களை அமல்படுத்தப் போகின்றனர். இதற்கான நிதியுதவியை வங்கியிலுள்ள மக்களின் சேமிப்புகளையே மோடி வாரி இறைக்கப் போகிறார். உள்நாட்டில் கூட யாரும் செய்யாத ஒரு பழைய தொழில்நுட்பத்தை பசுமை ஆற்றல் (Green Energy) என்ற பெயரில் இந்திய மக்களின் தலையில் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு தேசபக்தி வேடமணிந்து புரோக்கர் வேலைபார்க்கிறது காவி பாசிச கும்பல்.
தற்போதைய மொத்த மின் உற்பத்தியில் அணு உலை மூலம் பெறப்படும் மின்சாரம் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே. அதாவது 8 ஜிகாவாட். இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால், 2047 க்குள் 100 ஜிகாவாட் ஆக அதிகரிக்க வேண்டும் என்கிறது மோடி கும்பல். இக்கும்பல், மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பிரச்சாரம் செய்கிறது. அனல்மின் நிலையத்திலிருந்தோ அல்லது சூரிய ஒளியிலிருந்தோ ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவை விட பத்து மடங்கு அதிகமாக பணத்தை அணு உலையிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் பெற செலவழிக்க வேண்டியிருக்கும். செலவு குறைந்த வழிகள் இருக்க பல லட்சம் கோடிகளை காலாவதியாகிப்போன மிகவும் ஆபத்தான திட்டத்திற்கு ஏன் ஒதுக்க வேண்டும். இந்திய மக்களுக்காகவா அல்லது அமெரிக்க எஜமானர்களின் நலனுக்காகவா?
அணு உலையில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அணு உலை விபத்து ஏற்பட்டால் உயிர் இழப்புகள் ஏற்படுவதோடு, பாதிப்புக்குள்ளான அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் சிதறியுள்ள அணுக்கழிவுகளை நீக்குவதும் சவாலான காரியம். 2011- இல் புகுஷிமா அணு உலை விபத்தினால் அப்பகுதியில் உள்ள அணுக்கழிவுகளை சுத்தம் செய்ய 150 பில்லியன் டாலர்(1,41,000 கோடி) தேவை என்று கணித்துள்ளனர். இச்செலவுகளை ஈடுகட்ட, ஜப்பான் அரசாங்கம் மின்சாரத்திற்கான சிறப்பு செஸ் வரிகளை வசூலிக்கிறது.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சாந்தி சட்டத்தின் படி, அமெரிக்க நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்படும் அணு உலைகளில் உபகரணக் கோளாறு காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டால் அதற்கு அந்த அணு உலையை இயக்குபவரே பொறுப்பு அவ்வணு உலைக்கான உபகரணங்களைக் கொடுத்த அமெரிக்க நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டியதில்லை. மேலும் விபத்திற்கான இழப்பீட்டிற்கு அதானியே பொறுப்பு என்று சட்டம் சொன்னாலும், அந்த இழப்பீடுகள் அனைத்தும் மக்களிடமிருந்தே எடுத்துக் கொடுக்கப்படும். இப்படி மக்களின் உயிர் போனாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டாலும் அதைபற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அமெரிக்க எஜமானர்கள் மற்றும் தரகு முதலாளிகளின் லாபமே முக்கியம் என்கின்றது காவி கும்பல்.
- மாணிக்கம்
https://rupeindia.wordpress.com/2026/03/19/embracing-nuclear-subordination/
https://www.thehindu.com/opinion/lead/nuclear-energy-dangerous-concessions-on-liability/article69211997.ece
https://www.thehindu.com/news/national/government-plans-to-amend-nuclear-liability-law-in-spotlight-as-modi-heads-to-us-france-this-week/article69198583.ece
https://www.reuters.com/sustainability/climate-energy/adani-power-sets-up-nuclear-focussed-unit-after-india-moves-open-up-guarded-2026-02-12/
https://www.impriindia.com/insights/whats-wrong-with-the-shanti-act/
https://janataweekly.org/dilution-of-the-atomic-energy-act-will-hurt-the-national-interest/
https://www.ndtv.com/business-news/budget-2025-india-plans-to-amend-nuclear-liability-laws-ahead-of-pm-modis-expected-us-visit-7612358
