ஈரான் போர்; டிரம்ப் ஒரு காகிதப் புலியே!
அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றது முதல் தன்னுடைய பாசிச முகத்தை வெளிப்படுத்தி வருகிறார். எஞ்சியிருக்கும் தன் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை மேற்காசியாவில் நிலைநாட்டவேண்டும் என்ற நோக்கத்தில் ஈரான் மீது இரண்டாவது முறையாக போர் தொடுத்திருக்கிறார்.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும் ஈரானின் எதிர்த்தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றன. ஈரானில் ஆட்சிக்கவிழ்ப்பை நிகழ்த்தி ஒரு சில நாளிலேயே போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற டிரம்பின் திட்டம் பலனின்றியும், இப்போரை முடிவுக்கு கொண்டு வரும் வழியின்றியும் விழி பிதுங்கி நிற்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
ஈரானைச் சுற்றியுள்ள பிராந்திய நிலைமைகளை கணிக்காமல் போர் தொடுத்த டிரம்பின் அரசு தற்போது போரின் விளைவுகளால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கிறது. வளைகுடா நாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சொந்த இராணுவத் தளங்களை ஈரான் குறி வைத்து தாக்குகிறது.
கடந்த மாதத்தில் ஈரான் நெருக்கடிக்குள்ளாயிருந்த சமயத்தில் அந்நாட்டின் மீது போர் தொடுத்து அதன் தொடக்கத்திலேயே ஈரானியத் தலைவர்களை கொல்வது; அமெரிக்க,இஸ்ரேல் உளவு அமைப்புகளை பயன்படுத்தி மக்கள் எழுச்சியினால் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவது; தான் விரும்பிய பொம்மை அரசை அமைப்பது;அதன் மூலம் ஈரானை கட்டுக்குள் கொண்டு வருவது; சொற்ப நாட்களிலேயே போரை முடிவுக்கு கொண்டு வருவது என்ற திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசும் அதன் அடியாளான இஸ்ரேல் இனவெறி அரசும் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஈரான் மீது இரண்டாவது முறையாக தாக்குதல் தொடுத்தன.
ஈரான் மீது முதன் முறையாக வான் வழி தாக்குதல் நடத்தப்பட்ட போது, ஈரான் மக்களை வீட்டினுள்ளே இருக்குமாறும்; குண்டு வீச்சிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் தஞ்சம் புகுமாறு டிரம்ப் அறிவுறுத்தினார். நாங்கள் குண்டு வீசி முடித்த பின்னர் உங்கள் அரசாட்சியை நீங்களே கைப்பற்றி கொள்ளுங்கள், அது உங்களுக்கே சொந்தமானது என்றார் டிரம்ப்.
போர் தொடங்கி நான்கு வாரங்கள் ஆகிறது.அமெரிக்க -இஸ்ரேல் உளவுத்துறைகள் கணித்த படியே ஈரானின் இஸ்லாமிய அரசு பலவீனமடைந்திருக்கிறது. அதன் உயர் மட்டத் தலைவர்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.. ஆனாலும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள இராணுவத் தளங்கள், நகரங்கள், கப்பல்கள், எளிதில் தாக்கப்படக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் என தாக்குதல்களையும் எதிர்த் தாக்குதல்களையும் ஈரான் அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது வரை டிரம்பின் போர் இலக்கான ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை
இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, வானிலிருந்து மட்டும் மக்கள் கிளர்ச்சியை உருவாக்க முடியாது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு உதவியாக தரைப்படைகளும் மக்கள் கிளர்ச்சிக்கு தேவைப்படுகின்றன. ஈரான் மக்கள் வீதிகளில் இறங்குவதை தற்சமயம் கணிப்பது கடினம். அந்த இலக்கை நோக்கியே நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்கிறார்.
அதாவது வானிலிருந்து அமெரிக்க -இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிக் கொண்டிருக்கும் போது ஈரானிய மக்கள் வீதிக்கு வந்து கிளர்ச்சி செய்வார்கள் என டிரம்பும், நெதன்யாகும் தமது நாட்டு மக்களை மீண்டுமொருமுறை ஏமாற்ற முயல்கின்றனர்.
ஆனால் அமெரிக்கா-இஸ்ரேலின் உளவுப்பிரிவுகளில் முன்பு பணியாற்றிய அதிகாரிகளோ, ஈரானில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்துவதற்கான திட்டமே மேற்கொள்ளப்படவில்லை என்று கூறியதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
டிரம்ப் அரசின் கீழ் ஈரான் பேச்சுவார்த்தை குழுவில் ஜூலை மாதம் வரை அங்கம் வகித்தவரும், வெள்ளை மாளிகையின் முன்னாள் அதிகாரியுமான நேட் ஸ்வான்சன் என்பவர் ஈரானின் வெளியுறவு கொள்கை சார்ந்த விஷயங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். அமெரிக்க அரசிற்கு, ஈரானில் ஒரு கிளர்ச்சியை தூண்டுவதற்கான எந்த ஒரு திட்டமும் பல ஆண்டுகளாக கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்தில் முன்னாள் தலைவரான யோசி கோஹன் என்பவரோ, ஈரான் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு எவ்வளவு பேரை கொண்டு கிளர்ச்சியை நடத்துவது என்பதை நாங்கள் கணக்கீட்டோம். ஈரானில் 1979 ஆம் ஆண்டின் இஸ்லாமிய கிளர்ச்சிக்கு பிறகு நடைப்பெற்ற போராட்டங்களின் அளவோடு தற்போதைய நிலைமையை ஒப்பீடு செய்த போது, எங்களால் அது போன்ற கிளர்ச்சியை தூண்ட இயலாது என்ற முடிவுக்கே வந்தோம் என்று அவர் கூறியதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆனால் இப்போரை நியாயப்படுத்துவதற்காகவும், போரின் யதார்த்தங்களை மக்களிடம் மறைப்பதற்காகவும் அது தொடங்கிய நாளிலிருந்து பாசிஸ்ட் டிரம்ப் கட்டவிழ்த்துவிடும் பொய்கள், அமெரிக்க ஒற்றை மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் தான் ஒரு மாபெரும் அரசியல் – இராணுவ தலைவன் என சித்தரிப்பதற்கு அவரின் தன்னகங்கரமான பேச்சுக்கள் வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் கேலிக்கூத்தாகி வருகின்றன
அப்பாசிஸ்டை அமெரிக்க மக்களே நம்ப மறுக்கிறார்கள். அமெரிக்க மக்கள் டிரம்பின் பொய்களுக்கு பழகி விட்டதால், அதை தற்போது யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என அமெரிக்க முதலாளித்துவ பத்திரிகைகளே தலையங்கம் எழுதும் அளவுக்கு டிரம்ப் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார்.
பாசிஸ்டுகளுக்கு கோயபல்ஸ் பாணியில் பிரச்சாரம் செய்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பாசிஸ்டு டிரம்ப் அவிழ்த்து விடும் பொய்களுக்கு ஒரு நீண்ட வரலாறே இருக்கிறது. டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக எட்டு பொய்களை கூறியதாக சி.என்.என் நிறுவனம் கணக்கிட்டதன் மூலம் பாசிஸ்டு டிரம்பை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பிறந்த அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஒபாமாவை அமெரிக்காவிலேயே பிறக்கவில்லை என்றார். இதனால் அமெரிக்க குடியுரிமையற்ற ஒபாமா அந்நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு தகுதி கிடையாது என பல ஆண்டுகளாக பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார். இதற்கு பதிலடியாக வெள்ளை மாளிகை ஒபாமாவினுடைய பிறந்த சான்றிதழை வெளியிட்ட பின்பு ஆம்! ஒபாமா அமெரிக்காவில் தான் பிறந்தார் என ஒப்புக்கொண்டார் .
டிரம்ப்பின் சொத்து மதிப்பு, வணிகம், அவருக்கு கூடும் கூட்டத்தின் அளவு, தனது தேர்தல் தோல்வி என பல்வேறு விசயங்களை பற்றி பல இடங்களில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.
ஆனால் ஒரு நாட்டின் அதிபர் என்ற முறையில், வேறோரு நாட்டின் மீது போர் தொடுக்கும் போது உலக மக்களுக்கு உண்மையை கூற வேண்டும் என்ற அறநெறிகளை டிரம்ப் போன்ற பாசிஸ்டுகளிடம் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. போரின் உண்மை நிலவரத்தை மக்களிடம் இருந்து மறைப்பதன் மூலம் போரை தவறாக வழிநடத்துவதோடு உலக மக்களை சொல்லொணா துயரங்களுக்கு ஆளாக்குகிறோமே என்று பாசிஸ்டுகள் அக்கறை கொள்வதில்லை. ஆனால் இதை மூடிமறைத்து தன் தலைமையின் கீழ் அமெரிக்க மேலாதிக்கம் வெற்றி பெற போவதாக ஒரு மாயை உருவாக்கி வருகிறார். இதற்கு உதாரணமாக போர் தொடங்கிய நாளிலிருந்து அப்பாசிஸ்டு பேசும் முரண்களே அவர் ஒரு காகிதப் புலி தான் என்பதை நிருபிக்கிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்திய பின்பு ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக தான் முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் தற்போதைய போருக்கு காரணமாக முன்பு ஒழித்த அதே ஈரான் அணுசக்தி திட்டத்தை மீண்டும் ஒழிக்கப் போவதாக கூறினார். இப்படி போர் தொடங்கப்பட்ட காரணத்தை கூட அமெரிக்க மக்களுக்கும் உலக மக்களுக்கும் டிரம்ப் மறைக்கிறார்.
ஈரானின் இராணுவத்தின் திறன்களை 100% அழித்து விட்டதாக வாய்ச்சவால் அடித்தார். ஆனால் ஈரானோ அரபு நாடுகளை தொடர்ந்து தாக்கி வருகிறது. இப்போர் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது என்றும் போரில் அமெரிக்கா வெற்றி பெற்று விட்டது எனவும் நான்கு வாரங்களில் ஐந்து முறைக்கும் மேலே கூறி வருகிறார். ஆனால் ஈரான் மீதான போரில் அமெரிக்க துருப்புகளை ஈடுபடுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கப் படைகளை வரவழைத்து கொண்டிருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
ஈரான் போருக்கு தேவையான உயர் ரக ஆயுதங்கள் அமெரிக்க இராணுவத்திடம் அதிகளவில் இருப்பதாக ஒரு புறம் கூறிக் கொண்டே மறுபுறம் ஈரான் மீதான போரை தொடந்து நடத்துவதற்கு தென்கொரியாவுக்கு தான் அளித்த ஆயுதங்களை திரும்ப பெற்று வருகிறார் டிரம்ப்
ஈரான் தன்னைச் சுற்றியிருக்கும் அரபு நாடுகளை ஒருபோதும் தாக்காது; ஈரான் அரபு நாடுகளை குறி வைத்து தாக்கும் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும்; இதுவே பெரிய வல்லுநர்களின் கருத்து என்று போரின் திட்டத்தில் தனது இராணுவ புலமையை வெளிக்காட்டினார். ஆனால் போர் தொடங்குவதற்கு முன்னரே பல நிபுணர்கள் ஈரான், அதைச் சுற்றியிருக்கும் அரபு நாடுகளை தாக்கும் என எச்சரித்தனர். அதன் படியே ஈரான், அரபு நாடுகளை தாக்கி வருகிறது. ஈரானைச் சுற்றியிருக்கும் பிராந்திய நிலைமைகளை கணக்கிடாமலேயே டிரம்ப் இப்போரில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு இதுவே சாட்சியாக உள்ளது.
டிரம்ப் தான் சிறந்த அமெரிக்க ஜனாதிபதி எனக் காட்டுவதற்காக ஒரு சுயவிளம்பரத்தையும் கட்டவிழ்த்துவிட்டார் , ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியிடம் தன்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய போது, டிரம்ப் தாக்கியது போலவே தானும் ஈரானை தாக்கியிருக்க வேண்டும் என அந்த முன்னாள் ஜனாதிபதிகூறியதாக கூறினார். ஆனால் சி.என்.என் செய்தி நிறுவனம், தற்போது உயிருடன் இருக்கும் நான்கு அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் இதுபோல டிரம்ப்பிடம் பேசவில்லை என்று விசாரித்து டிரம்ப்பின் முகத்திரையை கிழித்து செய்தியை வெளியிட்டிருந்தது.
ஈரானும், அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஏ.ஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமெரிக்க விமானம் கடலில் தீப்பிடித்து எரிவது போல போலியான வீடியோ காட்சிகளை வெளியிடுகிறது என்று தன் சமூகவலைத் தளத்தில் பதிவு செய்தார். ஆனால் அமெரிக்க முன்னணி செய்தி நிறுவனங்களோ போலி ஏ.ஐ வீடியோக்களை மக்களுக்கு அம்பலப்படுத்தும் கடமைகளை செய்து வருகின்றன. இதன் பிறகும் டிரம்ப் போலி வீடியோக்களை பரப்பும் ஊடகங்கள் மீது தேச விரோதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்றார்.
மார்ச் 7ம் தேதியன்று ஈராக்கின் மினாப் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுவர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஈராக்கே நடத்தியது என டிரம்ப் கூசாமல் புளுகினார். ஆனால் அமெரிக்க இராணுவம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அமெரிக்க ஏவுகணையின் மூலமே அப்பள்ளியின் மீது தாக்குதல் ஏற்பட்டது என கூறியது.
மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்ற மமதையில் இது போன்று பாசிஸ்டு கும்பல் தொடர்ந்து பொய்களை கட்டவிழ்த்துவிடுகிறது.ஆனால் உண்மைகளை திரிப்பதன் மூலம் போரின் யதார்த்தங்களையும், வழிநடத்தும் முடிவுகளையும் டிரம்ப் போன்றவர்களால் எதிர்கொள்ளமுடியாமல் திணறி வருகிறார்கள்.
போர் தொடங்கிய சிறிது நாட்களிலேயே ஹார்மூஸ் நீரிணையில் நடைப்பெற்று வரும் கப்பல் போக்குவரத்தை ஈரான் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தற்போது அந்நீரிணையின் இருமுனைகளிலும் நூற்றுக்கணக்கான எண்ணெய் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக எண்ணெய் விலை உயர ஆரம்பித்து, உலகப் பொருளாதாரத்தை உலுக்கி வரும் நிலையில் இக்கப்பல் போக்குவரத்து பாதையை தான் மீட்கப்போவதாக சூளுரைத்தார் திருவாளர் டிரம்ப் வளைகுடாப் பகுதியின் கப்பல் போக்குவரத்துப் பாதை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அமெரிக்க கடற்படை தயாராக இருப்பதாக அறிவித்தார்.
ஆனால் இந்நீரிணையின் வழியாக கடற்படையை அனுப்புவது அமெரிக்க இராணுவத்திற்கே பாதகமாக முடியும் என பல்வேறு கடற்படை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஹார்மூஸ் நீரிணை மிக குறுகியதாகவும், ஆழமற்றதாகவும் அதே சமயம் அலைகள் அதிகமாக எழும்பும் கடல் நீர் பரப்பை கொண்டிருக்கிறது.இதனால் இதில் செல்லும் சரக்கு கப்பல்கள், கடற்கரையோரம் இருக்கும் ஈரானின் மலைப் பிரதேசங்களை ஒட்டியே செல்ல வேண்டியிருக்கிறது.
ஈரானுக்கு புவியியல் ரீதியில் சாதகமான இம்மலைப் பகுதி, அதன் போர் உத்திகளுக்கு மிகவும் சாதகமானது. இப்புவியியல் அமைப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதில் ஈரான் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறது. கடற்கரையோரம் அமைந்திருக்கும் தனது மலைப்பகுதியில் இருந்து ஈரானால் டிரோன்களை எளிதாக எதிரிகளின் இலக்குகளின் மீது ஏவ முடியும். இந்த நீரிணையில் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும் கப்பலுக்கு எதிர்வினையாற்ற கூட நேரம் கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் பதில் தாக்குதல் கொடுப்பது என்பது கடினம் அமெரிக்க கடற்படையின் பெரிய கப்பல்கள் இப்புவியியல் அமைப்பில் ஈரானின் சிறிய ஆயுதங்களினால் கூட பலத்த சேதங்களுக்குள்ளாகும் என்கிறார்கள் கடற்படை நிபுணர்கள்.
இதுமட்டுமில்லாமல் ஈரானோ, ஹார்முஸ் நீரிணையை தாண்டியும் தனது இராணுவ வலிமையை நிலைநாட்டி வருகிறது, ஓமன் வளைகுடா, பாரசீக வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த 17 கப்பல்களை இதுவரை தாக்கி அழித்திருக்கிறது.
ஆனால் இதுவரை டிரம்போ தான் கூறிய படி அமெரிக்க கடற்படையை அனுப்பவில்லை. பாரசீக வளைகுடாவில் மட்டும் தற்போது 500 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க -இஸ்ரேல் போரின் விளைவாகவும் தற்போது ஈரான் தொடுத்து வரும் தாக்குதல்; அது ஹார்முஸ் நீரிணையை மூடியது போன்ற பல்வேறு எதிர் தாக்குதல்கள் மூலம் அமெரிக்க மக்கள் மட்டுமில்லாமல் உலக மக்களும் டிரம்ப் ஒரு காகிதப் புலி தான் என்பதை கண்கூடாக உணர்ந்து வருகிறார்கள்.
- தாமிரபரணி



