மாட்டுக்கறி விற்ற பணத்தில் மஞ்சக்குளிக்கும் பாஜக!

மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அச்சமூகத்தைப் பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் வக்கிர நோக்கமும், பசு புனிதம் என்ற கபட நாடகமும் பல முஸ்லிம்களின் வாழ்வைப் பாதிக்கிறது. ஆனால் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து கோடிக் கணக்கில் இலாபமீட்டும் நிதின் கட்காரி மோடியின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருக்கிறார்.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டத்தை நிறைவேற்றுவதிலும், கொடுக்கப்படும் தண்டனையைக் கடுமையாக்குவதிலும் பா.ஜ.க மாநில அரசுகள் ஒன்றோடொன்று போட்டி போட்டு வருகின்றன.

மாட்டை வெட்டினால் ஹரியானாவில் 10 ஆண்டு சிறை, ம.பி.யில் 7 ஆண்டு சிறை; மகாராஷ்டிராவில் 5 ஆண்டு சிறை என காவிகள் ஆளும் மாநிலங்கள் அனைத்திலும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாடுகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர் தொடங்கி மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருப்பவர் வரை யாரை வேண்டுமானாலும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். என காவிக் கும்பல் வெறியாட்டம் போட்டு வருகின்றது. இதற்காக அம்மாநிலங்களில் பல்வேறு சிறப்பு போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டு முதல் பசுவதை தடுப்பு அவசரச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 14,182 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இவ்வழக்குகளின் கீழ் 35,924 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இதில் 13,793 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. 178 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 83 கோடி ரூபாய்க்கு மாடுகள் மற்றும் மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தைப் பிளவுபடுத்த பசுவதை காவிக் கும்பல் பயன்படுத்தியது. தற்போது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, மாட்டிறைச்சியை முஸ்லிம்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக நாடு முழுவதும் மூர்க்கமாகப் பயன்படுத்தி வருகின்றனர். பசுவின் புனிதம் என்ற கட்டுக்கதையை இந்துக்களின் பண்பாடாகச் சித்தரித்து வருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் முன்னெடுத்து வரும் பசுவின் புனிதம் என்ற அரசியல் பிரச்சாரத்தின் விளைவாக, ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஆனால் பசுவின் புனிதம் என்ற பெயரில் நாடகமாடும் காவிக் கும்பலின் கபட வேடத்தை அம்பலமாக்கியிருக்கிறது மார்ச் மாத கேரவன் இதழில் வெளிவந்த கட்டுரை.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லோனாவாலா போலீசார், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமார் 28 டன் (20 கிலோ எடையுள்ள 1400 பெட்டிகள்) மாட்டிறைச்சியை ஏற்றிச் சென்ற சரக்கு லாரியைப் பறிமுதல் செய்தனர். அதை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அஷ்ரஃபி பாஸ்வான் (35) மற்றும் கிளீனர் சுபம் சர்மா (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த லாரியின் ஆவணங்களைப் போலீசார் ஆய்வு செய்த போது மாட்டிறைச்சி கொண்டு செல்வதற்கான சான்றிதழோ, போக்குவரத்துக்கான ஆவணங்களோ ஓட்டுநரிடம் எதுவும் இல்லை; லாரியோ ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டிருந்தது. ரெஹான் அகமது குரேஷி என்பவர்தான் அந்த மாட்டிறைச்சியை ஹைதராபாத்திலிருந்து மும்பைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினார் என்பது மட்டுமே அவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்த உண்மை.

மறுநாளே புனே மாவட்டத்தின் வட்காவ்மால் எனும் புறநகர்ப்பகுதியில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில், போலீசார் கைப்பற்றிய 28 டன் மாட்டிறைச்சி பசுவின் இறைச்சி அல்ல என்றும், அது எருமையின் இறைச்சி என ரெம்பல் அக்ரோ அண்ட் ஃபுட்ஸ் (Rembal Agro and Foods) என்ற நிறுவனம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், எருமையின் இறைச்சி மகாராஷ்டிராவில் சட்டப்பூர்வமானது; உ.பி.யின் அலிகாரில் எருமை இறைச்சி வாங்கப்பட்டு, பதப்படுத்துவதற்காக ஹைதராபாத்திற்கு அனுப்பப்பட்டது; அங்கிருந்து மும்பை வாயிலாக வியட்நாமிற்கு இந்த 28 டன் இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட இருந்தது என உரிமைச் சான்றுகளுடன் அந்நிறுவனம் கூறியது.

ஆனால் அம்மனுவில் அது எருமை இறைச்சி என்பதற்கு எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. ஹைதராபாத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் அனுமதியையும் பெறவில்லை. மின்னணுப் போக்குவரத்து ஆவணமோ நாக்பூரைச் சார்ந்த ரெஹான் என்பவரால் வாங்கப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, ரெம்பல் அக்ரோ அண்ட் ஃபுட்ஸ் சார்பில் போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் கூறி அந்த 28 டன் மாட்டிறைச்சியையும் குளிர்பதனக் கிடங்கில் வைக்க உத்தரவிட்டார்.

கேரவன் நிருபர் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, ரெம்பல் அக்ரோ அண்ட் ஃபுட்ஸ் என்ற நிறுவனம், சியான் அக்ரோ என்ற நிறுவனத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. சியான் அக்ரோ என்ற நிறுவனம் பா.ஜ.க வின் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரியின் வணிகச் சாம்ராஜ்யத்தின் ஒரு முக்கிய நிறுவனமாகும். இதன் நிர்வாக இயக்குநராக நிதின் கட்காரியின் மகனான நிகில் கட்காரி இருக்கிறார்.

சியான் அக்ரோ காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனம். ரெம்பல் நிறுவனமோ மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகும். இரண்டு நிறுவனங்களுக்கிடையிலான தொடர்பை கேரவன் நிருபர் பல்வேறு தரவுகள் மூலம் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

நிதின் கட்காரியின் மனைவி கஞ்சன் கட்காரி சம்ருத்தி கூட்டுறவு வங்கியில் தலைவராகப் பதவி வகிக்கிறார். இந்த வங்கி ரெம்பல் நிறுவனத்திற்கு 46.7 இலட்சம் கடன் கொடுத்திருக்கிறது. ரெம்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக வேலை செய்து வரும் பாலகிருஷ்ண பிள்ளை என்பவர் சியான் அக்ரோ நிறுவனத்தின் துணை நிறுவனமான சியான் கேபிட்டல் நிறுவனத்தின் இயக்குநராக இதற்கு முன்பு பதவி வகித்திருக்கிறார். இவ்விரண்டு நிறுவனங்களும் ஒரே முகவரியின் கீழ்தான் செயல்படுகின்றன.

சியான் அக்ரோவும் ரெம்பல் அக்ரோவும் தமது பொருட்களை ஷார்ஜாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மித்ர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் விநியோகம் செய்து வருகின்றன. கட்காரி நிறுவனத்தின் தயாரிப்புகளான அனைத்து வேளாண் வணிகப் பொருட்களையும், ரெம்பல் அக்ரோ நிறுவனத்தின் மாட்டிறைச்சியையும் மித்ர் இன்டர்நேஷனல் நிறுவனமே விநியோகிக்கிறது. இதை மித்ர் நிறுவனத்தின் இணையதளத்தின் விற்பனைப் பொருட்களிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். மித்ர் நிறுவனம் தன் இறைச்சிகள் பலவற்றை மாட்டிறைச்சி என்றும், ஒரு சிலவற்றையே எருமை இறைச்சி என்றும் அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

இதோடு நாக்பூரின் ரெம்பல் அக்ரோ நிறுவனத்தின் முகவரி, கட்காரியின் இரண்டு நிறுவனங்களின் இயக்குநர்களின் பெயரில் இருக்கிறது. நீங்கள் கூகுள் மேப்பில் ரெம்பல் அக்ரோ நிறுவனத்தின் பெயரைத் தேடினால், ரெம்பல் அலுவலகத்தின் வரவேற்பறையில் ரெம்பல் முத்திரையும், அதன் கீழே சியான் நிறுவனத்தின் முத்திரையும் இருப்பதிலிருந்தே சியான் மற்றும் ரெம்பல் நிறுவனங்களின் கூட்டிணைவைப் புரிந்து கொள்ள முடியும்.

லோனாவாலாவில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை மீட்பதற்காக ரெம்பால் நிர்வாக இயக்குநர் பிள்ளை மனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக ரெஹான் என்பவர் மூலமே மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ரெஹான் என்பவர் நாக்பூர் காம்ப்டீ பகுதியில் சட்டவிரோத மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். ரெம்பால் நிறுவனத்திற்காக இந்தியா முழுவதிலுமிருந்து மாட்டிறைச்சியை வாங்கி, அதை மும்பை வழியாக ஏற்றுமதி செய்வதில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

லோனாவாலாவில் பறிமுதல் செய்யப்பட்டது காளை மாட்டின் இறைச்சி என்றும்; தெலங்கானாவில் காளை மாட்டை வெட்டுவதும், அதை மகாராஷ்டிரா வழியாக அனுப்புவதும் சட்டப்பூர்வமானது என்கிறார் ரெஹான். போலீசார் விசாரணை நடந்து கொண்டிருந்த போது நிகில் கட்காரியின் வீட்டிற்கு நான்கு முறை ரெஹான் சென்றிருக்கிறார்.

மாட்டிறைச்சி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் நிதின் மற்றும் நிகில் கட்காரியும், வெளிநாடுகளில் மித்ர் நிறுவனம் நடத்திய உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு, மாட்டிறைச்சி விளம்பரம் தெரியாதபடி புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்திருக்கின்றனர் என்கிறார் கேரவன் நிருபர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ரெம்பால் மாட்டிறைச்சி நிறுவனத்தின் முதல் மூன்று ஆண்டு வருவாய் ரூ. 72.56 கோடி. இந்திய வர்த்தக அமைச்சகம் ரெம்பால் நிறுவனத்தின் வர்த்தகச் சேவையைப் பாராட்டி சிறப்பு நட்சத்திர அந்தஸ்தும் வழங்கியிருக்கிறது. இதனால் 2025 ஆம் ஆண்டில் அதன் ஏற்றுமதி மதிப்பு மட்டும் 3 மில்லியன் டாலர் (280 கோடி ருபாய்) என்ற அளவிற்கு உயர்ந்திருக்கிறது. தற்போது ரெம்பால் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஜோர்டான், ஈராக், லெபனான், பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா, வியட்நாம், செர்பியா, ரஷ்யா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து வருகிறது.

மாட்டிறைச்சித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களில் கணிசமானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அச்சமூகத்தைப் பொருளாதார ரீதியில் சீர்குலைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-ன் வக்கிர நோக்கமும், பசு புனிதம் என்ற கபட நாடகமும் பல முஸ்லிம்களின் வாழ்வைப் பாதிக்கிறது. ஆனால் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து கோடிக் கணக்கில் இலாபமீட்டும் நிதின் கட்காரி மோடியின் ஆட்சியில் முக்கிய அமைச்சராக இருக்கிறார்.

இந்தியாதான் உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் மாட்டிறைச்சி மூலம் ரூ. 34,177 கோடி ஈட்டப்பட்டிருக்கிறது. உ.பி, மகாராஷ்டிரா போன்ற காவிகள் ஆளும் மாநிலங்களே இந்த ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன. உள்நாட்டில் முஸ்லிம்கள் வீட்டில் இறைச்சி இருந்தால் தேடிச் சென்று சிறையில் அடைக்கும் காவிகளின் ஆட்சியில் மாட்டுக்கறி ஏற்றுமதிக்குத் தடையில்லை.

மதவெறி பிடித்த காவிகள், பசுக் கறியின் ஏற்றுமதிக்குத்தான் தடை விதித்திருக்கிறார்கள். எருமை இறைச்சி ஏற்றுமதியை அனுமதித்திருக்கிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டு, பசுக் கறியை எருமை இறைச்சி என்று லேபில் ஒட்டி ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கு மித்ர் நிறுவனமும் ரெம்பால் நிறுவனமும் சாட்சியாக உள்ளன.

காவிகள் ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்தின் போபால் மாநகராட்சியின் கீழ் இயங்கும் அரசு – தனியார் கூட்டு நிறுவனமே மாட்டிறைச்சி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 26 டன் மாட்டிறைச்சி கடந்த ஜனவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டிருந்தது.

மேலும் பசுவின் புனிதம் என்ற கபட நாடகம் என்பது காவிகளின் இந்துத்துவ அரசியல் துருப்புச் சீட்டே என்பதை, பா.ஜ.க பெற்ற தேர்தல் நன்கொடை மூலம் சமீபத்தில் ஸ்கிரோல் இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது. 2019-ஆம் ஆண்டில் நாட்டின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனமான அலானா என்ற நிறுவனம் ₹2,000 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறையின் சோதனையைச் சந்தித்தது. இதே மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பா.ஜ.க விற்கு 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் 30 கோடி ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறது. இதிலிருந்தே காவிகளின் பசுவின் புனிதம் என்ற போலித்தனத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

மோடி அரசு 2023 ஆம் ஆண்டில் ஹலால் தொடர்பான புதிய சட்டங்களை இயற்றி, மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் செழித்து வளர வழி செய்தது. இதன் விளைவாக, அலானா நிறுவனத்தின் வருவாய் 2024-25-ஆம் ஆண்டில் 10,320 கோடி ரூபாய் என்ற அளவுக்குப் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

பசுவின் புனிதம் என்ற வடிகட்டிய பொய் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் திசைதிருப்ப காவிகள் பயன்படுத்தினர். தற்போது இதை மதவெறிக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.

பசுவின் புனிதம் என்ற பெயரில் காவிகளின் நடத்தும் அட்டூழியங்களையும், கபட நாடகத்தையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கு மேற்கூறிய சம்பவங்கள் உதாரணமாகத் திகழ்கின்றன.

  • தாமிரபரணி

 

படங்கள் : நன்றி கேரவன் இதழ்

மூலக்கட்டுரை: https://caravanmagazine.in/business/nikhil-nitin-gadkari-beef-rembal-cian

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன