எஸ்.ஐ.ஆர் : மேற்கு வங்கத்தில் மம்தாவின் போராட்டமும், தமிழ்நாட்டில் திமுகவின் அமைதியும்
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி பாஜகவிற்கு எதிராகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) நடைமுறைப்படுத்த ஆரம்பித்த பிறகு, தினமும் ஒரு போராட்டம் எனச் சொல்லும் வகையில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறார்.
7.5 கோடி வாக்காளர்கள் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்குப் பிறகு 63 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாகக் கடந்த மாத இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கூடுதலாக மற்றுமொரு 60 இலட்சம் வாக்காளர்கள் “சரிபார்ப்புப் பட்டியலில்” (under adjudication) வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களது ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே அவர்களது ஓட்டுரிமை உறுதிசெய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதனை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தா நகரில் மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தினார். அப்போது ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசையும், இந்தியத் தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இறந்துவிட்டதாகக் கூறி நீக்கப்பட்டவர்களை மேடையேற்றினார். போராட்டம் நடந்த சமயத்தில் மேற்கு வங்கத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்திக்காமல் தவிர்த்தார்.
இதற்கு முன்னரும் கூட, எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்தியத் தேர்தல் ஆணையம் மக்களைக் காணாமல் போகச் செய்யும் ஆணையம் (Vanishing Commission) எனக் குற்றம் சாட்டினார். எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் நேரடியாகக் கலந்து கொண்டு மேற்கு வங்க மாநில அரசு சார்பாக வாதாடினார். எஸ்.ஐ.ஆர் மூலமாகத் தனது கட்சிக்கு வாக்களிப்பவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட ஒன்றிய அரசு முயற்சிப்பதாகப் பகீரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
ஜனவரி மாதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் ஐ-பேக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது. அப்போது, மம்தா பானர்ஜி அதிரடியாக அம்மாநில போலீசாருடன் அங்கே சென்று, அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் எடுத்துச் செல்ல நினைத்த ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தார். அத்துடன் நில்லாமல் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது பல்வேறு வழக்குகளையும் பதிவு செய்தார். மாநிலம் முழுவதும் இதனைக் கண்டித்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். தற்போது மாநில சட்டசபைக்கான தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜகவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறார்.
மேற்கு வங்கத்தைப் போன்றே தமிழ்நாட்டிலும் எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 6.5 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிந்து வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் 74 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதாவது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 11.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் வெறும் 8.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கே மம்தா பானர்ஜி தெருவில் இறங்கிப் போராடுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் 11.5% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் திமுக தலைமையிலிருந்து குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எதுவும் எழவில்லை.
முதன்முதலாக பீகாரில் எஸ்.ஐ.ஆர் அமல்படுத்தப்பட்டபோது அதனை எதிர்த்து இந்தியா கூட்டணி நடத்திய பிரச்சாரக் கூட்டங்களில், ஊர்வலங்களில் சென்று திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஓட்டுத் திருட்டு குறித்துப் பேசினார். அதேபோல தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியானபோதும் அதனை திமுக எதிர்த்தது, எல்லா மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தியது. எஸ்.ஐ.ஆர் நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது.
அத்துடன் சரி, அதற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியலில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் நீக்கப்பட்டபோதும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும் கூட திமுக சார்பில் அவற்றைக் கண்டித்துப் பெரிதாகப் போராட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தத் தேர்தல் தில்லிக்கும் திமுகவிற்கும் நடக்கும் தேர்தல் என்றும், பாசிச பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க திமுக போராடுகிறது என்றும் முழங்கினாலும், நடைமுறையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தாண்டி திமுக வேறு எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
திமுக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை எதிர்த்துச் செயல்படாமல் ஏன் அமைதியாக இருக்கிறது? இந்தக் கேள்விக்கான விடையைப் பார்ப்பதற்கு முன்னதாக மம்தா பானர்ஜி ஏன் தீவிரமாக எதிர்க்கிறார் என்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. காவி பாசிசத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜி இந்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தவில்லை. மாறாக, அவர் தனது கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளில் மேற்கு வங்கத்தின் தேர்தல் களம் ஒரு பெரிய மாற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. பலமுனைப் போட்டியாக இருந்த நிலை மாறி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி இருமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் கட்சியால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்திருந்தாலும், மேற்கு வங்கத்தில் பாஜக கணிசமான அளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.
2019 பாராளுமன்றத் தேர்தல் அம்மாநிலத்தில் பாஜகவின் பூதாகர வளர்ச்சியைப் படம்பிடித்துக் காட்டியது. அப்போது மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 பாராளுமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
மாநில சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை, 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் வெறுமனே 3 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருந்த பாஜக 2021 சட்டமன்றத் தேர்தலில் 77 இடங்களில் வெற்றிபெற்றது. மேற்கு வங்கத்தை 34 ஆண்டுகள் (1977-2011) தொடர்ந்து ஆண்டுவந்த சிபிஎம் கட்சி, அந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. காங்கிரஸ் கட்சியும், ஒரு இடம் கூட கிடைக்காத அளவிற்கு, தனது செல்வாக்கை முழுமையாக இழந்தது. அம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்தது.
ஆனால் அதற்குப் பிறகு நடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக ஒரு சரிவைக் கண்டுள்ளது. 2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவால் முந்தைய தேர்தலைவிட 6 இடங்கள் குறைவாக 12 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் உள்ள 20 ஜில்லா பரிஷத்துகளில் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்திலும் வெற்றிபெற்றது, பாஜக கட்சியினால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற இயலவில்லை. இந்தத் தேர்தல்கள் அனைத்திலும் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் தொடர்ந்து தங்களது வாக்கு சதவீதத்தை இழந்துவந்தபோதிலும் அது திரிணாமுல் காங்கிரசிற்குத்தான் சென்றதே தவிர, பாஜக தனது வாக்கு சதவீதத்தை அதிகரிக்க இயலவில்லை. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான், 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்றியே தீர வேண்டும் என பாஜக களத்தில் இறங்கியிருக்கிறது.
தனது வெற்றியை உறுதி செய்ய எஸ்.ஐ.ஆர் நடைமுறையை பாஜக கையில் எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சிகள் அமைத்த வலுவான கூட்டணியை வெல்வதற்கு பாஜக எஸ்.ஐ.ஆர்-ஐ பயன்படுத்தியது. காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடியவர்களின் வாக்குகள் இந்த எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் மூலம் பறிக்கப்பட்டதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டின. அதிலும் குறிப்பாக பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் எனக் கருதப்பட்ட சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளன. அரசியல் செயல்பாட்டாளரும், தேர்தல் ஆய்வாளருமான யோகேந்திர யாதவின் ஆய்வின்படி பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் 33% பேர் இஸ்லாமியர்கள் என வெளியானது.
பீகாரில் எதிர்க்கட்சிகளின் கோட்டை எனக் கூறப்பட்ட மூன்று மாவட்டங்களில் இருந்த 25 தொகுதிகளில், முந்தைய தேர்தலில் பதிவான வெற்றி வித்தியாசத்தைவிட அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த 25 தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18 தொகுதிகளை வென்றது. இது தவிர போலி வாக்காளர்களைச் சேர்த்தது, மற்ற மாநிலங்களில் இருந்து போலி வாக்காளர்களைக் கொண்டுவந்து தேர்தலில் வாக்களிக்கச் செய்தது எனப் பல குறுக்குவழிகளைப் பாஜக பயன்படுத்தியது. இவை எல்லாம் இணைந்துதான் பீகாரில் பாஜக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்தது.
பீகாரில் செய்ததுபோலவே தற்போது மேற்கு வங்கத்திலும் எஸ்.ஐ.ஆர் மூலம் பாஜக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே தனது ஆட்சியும், அதிகாரமும் பறிபோகாமல் பாதுகாக்க மம்தா பானர்ஜி தெருவில் இறங்கிப் போராடி வருகிறார். ஒருவேளை மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுவிட்டால் தனது நிலை என்னவாகும் என்பதை மம்தா பானர்ஜி அறிவார். ஏற்கெனவே அவர் மீது சாரதா சிட்பண்ட்ஸ் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக கூறி வருகிறது. வரும் தேர்தலில் திரிணாமுல் கட்சி தோல்வியடைந்து பாஜக ஆட்சியைக் கைப்பற்றினால், நிச்சயமாக அவர்கள் மம்தா பானர்ஜியைக் கைது செய்து சிறையில் அடைப்பதுடன், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே மொத்தமாக அழித்துவிடுவார்கள்.
இதனை மம்தா பானர்ஜி நன்றாக அறிந்துவைத்துள்ளார். காவி பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடிப்பதைவிட, அதன் தாக்குதலில் இருந்து தன்னையும் தன் கட்சியையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மம்தா போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலை தமிழ்நாட்டில் இல்லையா? தன்னையும் திமுகவையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஸ்டாலின் இல்லையா?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்கு வங்கத்தில் இருப்பதுபோல பாஜக, ஆளும் கட்சிக்குச் சவால் விடும் அளவிற்குத் தனிப்பெரும் கட்சியாக இன்னும் உருவெடுக்கவில்லை. அதிமுகவின் முதுகில் ஏறிச் சவாரி செய்யும் நிலையில்தான் பாஜக இன்றும் இருக்கிறது. ஆகையால் பீகாரில் செய்ததுபோல, மேற்கு வங்கத்தில் செய்து கொண்டிருப்பதைப் போல பாஜகவின் வெற்றியை உறுதி செய்ய எஸ்.ஐ.ஆர் நடைமுறையை வெளிப்படையாகப் பயன்படுத்தினால் அவர்கள் நிச்சயம் அம்பலப்பட்டுப் போவார்கள்.
ஆனால் அதே சமயம் பாஜக நினைத்தால் தனது கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய அதனைப் பயன்படுத்த முடியும். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியினர் வென்ற 43 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000க்கும் குறைவு. அதிலும் 30 தொகுதிகளில் 5,000க்கும் குறைவான வாக்குகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது.
2021ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் மக்கள் மத்தியில் ஓரளவிற்கு எதிர்ப்பு அலை இருந்தது. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மீது மக்களுக்கு அதிருப்தி எதுவும் இல்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சிதறிப்போயிருந்த அதிமுக இரட்டைத் தலைமையின் கீழ் அல்லாடிக் கொண்டிருந்தது. அப்போதே 43 தொகுதிகளில் மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக கூட்டணி வெற்றிபெற முடிந்தது.
ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அமைச்சர்கள் அடித்த கொள்ளையும், ஊழலும், தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அக்கட்சியின் மேல் ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமன்றி தனியார்மயத்தை உறுதியாக அமுல்படுத்தியதால் துப்புறவுப் பணியாளர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் பல இலட்சம்பேரின் வாழ்வாதரத்தைப் பாதித்ததுடன், இதற்கெதிராக அவரகள் நடத்திய போராட்டத்தையும் திமுக கொடூரமான முறையில் ஒடுக்கியிருக்கிறது. போதாக்குறைக்கு நடிகர் விஜயின் அரசியல் வருகையானது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. இதனைச் சமாளிக்க திமுக, மக்கள் கையில் பணத்தை அள்ளிக் கொடுக்கும் திட்டங்களை அடுத்தடுத்து அறிவித்தாலும், அது பெரிய அளவில் கைகொடுக்கும் என்று சொல்ல முடியாது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடைமுறையைப் பயன்படுத்தி ஒரு 60 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சியின் ஆதரவாளர்களைக் குறிவைத்து, ஒரு தொகுதிக்கு 5000 பேரை நீக்கினால், அவர்களது வெற்றியைத் தடுத்துவிட முடியும். அதன் பிறகு அதிமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கெடுத்து ஒரு சில அமைச்சர் பதவிகளைக் கைப்பற்றினால் கூட, அது தமிழ்நாட்டைப் பொருத்தவரை பாஜகவிற்கு மிகப் பெரிய வெற்றியாகும்.
60 தொகுதிகளில் 5000 வாக்குகள் என்பது மொத்தமாக மூன்று இலட்சம் வாக்குகள். ஒரு கோடி பேரின் வாக்குரிமை பறிபோகும்போது மூன்று இலட்சம் என்பது பெரிதாகத் தெரியாது. பாஜக நினைத்தால் இதனைச் செய்து முடிக்க முடியும். இது திமுகவிற்கும் தெரிந்ததுதான். ஆனால் பாஜக அதனை முன்னெடுத்திருப்பதாகத் தெரியவில்லை, ஆகையால்தான் திமுக எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்களைக் கைவிட்டு, மக்களைக் கவரும் அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இவ்விஷயத்தில் இரு கட்சிகளுக்கும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன என்பதை இங்கே மறுக்க முடியாது.
ஏனெனில், தன்னையும் தனது கட்சியையும் காவி பாசிசம் அழித்துவிடும் என உறுதியாகத் தெரிந்த பிறகும், அதன் தாக்குதலுக்கு எதிராகப் போராடாமல் திமுக அமைதியாக இருக்கிறது என்றால், ஒன்று அது காவி பாசிசத்திடம் சரணடைந்திருக்க வேண்டும் அல்லது அவர்களுடன் பேரம்பேசிச் சமரசமாகியிருக்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும், அது தமிழ்நாட்டில் காவி பாசிசம் வேரூன்றுவதற்கு நிச்சயம் வழிவகுப்பதுடன், இம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
- சந்திரன்


