AMNS ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்
உழைப்பைவிட மூலதனமே முதன்மையானது என்கிறது
குஜராத் மாடல் அரசு

சமீபத்தில் குஜராத் அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தின் மூலம் தினசரி வேலை நேரம் ஒன்பது முதல் பன்னிரெண்டு மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் (Over Time) காலாண்டிற்கு 75 முதல் 125 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த மாற்றங்களை "நெகிழ்வுத்தன்மை" என்று முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. உண்மையில், இது தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தம் அல்ல. ஏற்கனவே முறைசாரா தொழிலாளர்கள் மீதான சுரண்டலை, முறைசார் தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வமாக்குவதுதான் இதன் நோக்கம். சுருங்கக் கூறின், குஜராத்தில் "வணிகம் செய்வதை எளிதாக்குதல்" என்பது குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அதிக உழைப்பை சுரண்டுவதற்கான சுதந்திரமாகும்.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த போது, முதலாளிகள் எளிதாகத் தொழில் தொடங்கும் வகையில் இடம், மின்சாரம் உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளார். பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் இதனை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்தும் வகையில் ஏற்கனவே பெயரளவிற்கு இருந்த தொழிலாளர் சட்டங்களை முதலாளிகள் பலனடையும் வகையில் திருத்தியும், புதிதாக இணைத்தும் அதனை நான்கு தொகுப்புகளாக மாற்றியுள்ளார். இருந்தபோதிலும் இந்த அரசும், அரசாங்கமும் முதலாளிகளுக்கும்-தொழிலாளர்களுக்கும் பொதுவானது என்று நம்பச் சொல்கிறார்.

குஜராத் மாநிலம் சூரத்திற்கு அருகிலுள்ள ஹசிராவில் ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா ஆலையில் லார்சன் & டூப்ரோ ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஊதிய உயர்வு, ஓவர் டைம் (Over Time) வேலை நேரத்தை முறையாக கணக்கிடுதல், வேலை நேரத்தை முறைப்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் இவ்வாறு போராடித்தான் தங்களது உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு பரிசாக, போராட்டத்தைக் கலைக்கும் வகையில் தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். முன்னணியாளர்கள் மீது வன்முறையைத் தூண்டுவதாக குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இருந்தும் இந்த அரசும், அரசாங்கமும் பொது ஒழுங்கை கடைப்பிடிப்பதற்குத்தான் இதனை செய்ததாக மக்களை நம்பச் சொல்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், தொழிலாளர்கள் இக்கோரிக்கைகளை நிர்வாகத்திடம் பல மாதங்களாக வலியுறுத்தி வந்துள்ளனர். நிர்வாகத்தின் அலட்சியத்திற்குப் பிறகே சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடினால் அதனை வன்முறையாக மாற்றி சட்டப்பூர்வமற்றதாக்கிவிடும் அதேவேளையில் முதலாளிகள் காலம் காலமாக தொழிலாளர்களை சுரண்டும் வன்முறையை அப்படியே சட்டப்பூர்வமாக வைத்திருக்கிறது. இருந்தும் இந்த அரசும், அரசாங்கமும் அனைவருக்கும் பொதுவானது என்று நம்பச் சொல்கிறது.

ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா போன்ற பெரு நிறுவனங்கள் பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களையே வேலைக்கு அமர்த்துகின்றன. ஏனென்றால் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலியைக் கொடுத்து ஒட்டுமொத்தமாக சுரண்டுகிறது. நேரடியாகத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தும் போது அவர்களுக்கான கூலி அதிகமாகும், பணிப்பாதுகாப்பு போன்ற உரிமைகளைக் கொடுக்க வேண்டும். இதற்கான நிதியை தாங்களே அனுபவித்துக் கொள்வதற்கு வசதியாக நான்கு சட்டத் தொகுப்பில் ஆலை நிர்வாகத்தை அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளது. இருந்தும் இந்த அரசும், அரசாங்கமும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுவதாக நம்பச் சொல்கிறது.

இந்த போராட்டம் நமக்கு உணர்த்துவது என்ன? குஜராத் தன்னை ஒரு முதலீட்டாளரின் சொர்க்கமாக காட்டிக்கொள்ள விரும்புகிறது. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கும், தொழிலாளர்களின் நலனுக்கும் இடையில் ஒரு சமனற்ற இடைவெளி இருப்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.

போராட்டத்திற்கு முன்பாக தொழிலாளர்கள், தங்களை வேலைக்கு அமர்த்திய எல்&டி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தக் கோரிய போது அதனைக் கேட்பதற்கு தயாராக இல்லை. அதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகப் போராடிய போது, குஜராத் போலீசு தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது, முன்னணியாளர்களைக் கைது செய்தது.

இது குறித்து ArcelorMittal Nippon Steel (AMNS) ஆலையின் நிர்வாகத்திடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, எல்&டி நிர்வாகம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உள்ளூர் போலீசு கள நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

போராட்டத்திற்கு முன்பாக பேச்சுவார்த்தைக்கு தயாரில்லாத எல்&டி நிர்வாகம், தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றால், இது யாருக்கு ஆதரவான பேச்சுவார்த்தையாக இருக்க முடியும். அதேபோல் போலீசும் தொழிலாளர்களின் உரிமைகள் என்ன? அதில் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதைக் கேட்டறிந்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அங்கு வரவில்லை மாறாக போராடிய தொழிலாளர்களை அடக்குவதற்காக வருகிறது என்றால், இது யாருக்கு ஆதரவான போலீசாக இருக்க முடியும். எனவே முதலாளிகளைப் பொறுத்தவரை, அரசு ஒரு கூட்டாளியாக நடந்து கொள்கிறது; தொழிலாளிகளைப் பொறுத்தவரை, அது ஒரு அமலாக்க அதிகாரியாக நடந்து கொள்கிறது. இருந்தும் அரசும், அரசாங்கமும் அனைவருக்கும் பொதுவானது என்று நம்பச் சொல்கிறது.

இந்தப் போராட்டம் ஆர்செலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா ஆலைக்கு எதிராக விதிவிலக்காக நடைபெற்ற போராட்டம் மட்டும் அல்ல. குஜராத் முழுவதும் இதே கதையைத் தான் திரும்பத் திரும்பச் சொல்கிறது. தொழிற்சாலை, ஜவுளி மற்றும் வைரத் தொழிலாளர்களின் ஊதியக் குறைப்பு, தாமதமாகக் கொடுக்கப்படும் ஊதியம், பணி நீக்கம், கடுமையான வேலை நேரம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தும் ஒவ்வொரு முறையும், மேலே குறிப்பிட்ட எதுவும் மாறாமல் அப்படியே தொடர்கிறது. தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைக் கொண்டு தடை உத்தரவுகளைப் போடவும், கலைந்து செல்ல கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசவும் உத்தரவிடும் அரசாங்கம், முதலாளிகள் தடையின்றி சுரண்டுவதற்குப் பாதுகாப்பு அளிக்கிறது. தொழிலாளர்கள் தங்களது உரிமையைப் பாதுகாக்க போராடுவது, அரசின் கொள்கைக்கு தோல்வி என்று கருதுவதில்லை, மாறாக போராட்டக் களத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய பொதுத் தொந்தரவாகக் கருதுகிறது.

இது தவறான மேலாண்மையின் காரணமாக நடைபெறவில்லை. சமீபத்தில் குஜராத் அரசு கொண்டு வந்த தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தின் மூலம் தினசரி வேலை நேரம் ஒன்பது முதல் பன்னிரெண்டு மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் (Over Time) காலாண்டிற்கு 75 முதல் 125 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த மாற்றங்களை “நெகிழ்வுத்தன்மை” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கிறது. உண்மையில், இது தொழிலாளர்கள் நலனைப் பாதுகாப்பதற்கான சீர்திருத்தம் அல்ல. ஏற்கனவே முறைசாரா தொழிலாளர்கள் மீதான சுரண்டலை, முறைசார் தொழிலாளர்களுக்கும் சட்டப்பூர்வமாக்குவதுதான் இதன் நோக்கம். சுருங்கக் கூறின், குஜராத்தில் “வணிகம் செய்வதை எளிதாக்குதல்” என்பது குறைவான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி அதிக உழைப்பை சுரண்டுவதற்கான சுதந்திரமாகும்.

இந்த சீர்திருத்தங்கள் தொழிலாளர்களுக்கு பயனளிக்கின்றன என்று கூறுவது அடிப்படை அறிவற்றது. பன்னிரெண்டு மணி நேர வேலைநேரம் என்பது தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைக் குறைக்கின்றன, அவர்களின் சோர்வை அதிகரிக்கின்றன, அபாயகரமான தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, நீண்டகால உடல்நலப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதேபோல் பாதுகாப்பு நடவடிக்கைகளை பற்றி பேசாமல், அதிகாரமளித்தல் என்ற பெயரில் பெண்களை இரவு வேலைகளுக்கு அனுமதிப்பது முன்னேற்றமல்ல. இவையனைத்தும் சீர்திருத்தம் என்ற போர்வையில் அரசும், அரசாங்கமும் தங்களது பொறுப்புக்களைக் கைவிடுவதாகும்.

மோடி அரசாங்கத்தின் இந்த சீர்திருத்தங்களின் மூலம் முதலீட்டாளர்கள் ஊக்கத்தொகைகளையும், உரிமையாளர்கள் பாதுகாப்பையும், நிர்வாகம் இணக்கத்தையும் பெறும் அதேவேளையில் தொழிலாளர்கள் நீண்ட வேலை நேரங்களையும், உரிமைகள் பறிக்கப்படுவதையும், உரிமைகளைப் பாதுகாக்க எதிர்ப்பு தெரிவிக்கும்போது போலீசின் தடியடிகளையும் பெறுகிறார்கள்.

இது குஜராத்திற்கான வளர்ச்சிக் கதை மட்டுமல்ல. நாளை இந்தியா முழுவதும், ஏன் தமிழகத்திலும் கூட இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். அப்போதும் மு.க.ஸ்டாலின் அரசாங்கம் பாசிசத்திற்கு தடையரணாக இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருப்பதைப்போல், தொழிலாளர்களுக்கு எதிரான சீர்திருத்தம் என்ற பெயரில் மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள நான்கு சட்டத் தொகுப்புகளை அமல்படுத்தாது என்று வாய்வீச்சுக்காரர்கள் தொழிலாளர்களை நம்பவைக்கக்கூடும். அரசும் – அரசாங்கமும் எப்போதும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்றதில்லை என்ற படிப்பினையை தொழிலாளி வர்க்கம் குஜராத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேவேளையில் தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைந்து அரசும் – அரசாங்கமும் தொழிலாளர்களுக்கு எதிரான முன்னெடுப்புகளுக்கு எதிராக வீரமிக்க போராட்டங்களை நடத்தவேண்டும். தொழிலாளி வர்க்கம் இதுநாள் வரைப் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://thewire.in/rights/lt-tear-gas-and-silence-in-gujarats-corporate-order-capital-comes-before-labour  

https://www.chemanalyst.com/NewsAndDeals/NewsDetails/four-workers-killed-in-fire-at-arcelormittal-nippon-steel-plant-in-gujarat-india-32565

https://www.thehindu.com/news/national/andhra-pradesh/groundbreaking-ceremony-for-arcelormittalnippon-steel-plant-on-march-23-says-chief-minister-chandrababu-naidu/article70730947.ece

https://www.amns.in/press-releases/arcelormittal-nippon-steel-india-commences-rs-60-000-crore-expansion-project-in-gujarat

https://www.thehindu.com/news/national/gujarat/workers-killed-in-still-plant-fire-in-surat/article69048066.ece

https://www.deccanherald.com/india/gujarat/seeking-higher-wages-reduction-of-duty-hours-workers-protest-at-hazira-steel-plant-turns-violent-3912960

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன