கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
தனியார்மயத்தை ஒழிப்பதே தீர்வு!
“கல்லூரியில் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு, பகுதிநேர ஓட்டுநராக இறைச்சிக் கடைகளுக்கு கோழிகளை சப்ளை செய்யும் வேலையைச் செய்கிறேன். முனைவர் பட்டம் பெற்றுள்ள முதல்தலைமுறை பட்டதாரியான எனக்கு கௌரவமான நிரந்தர வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மிகக்குறைந்த சம்பளத்திற்கு கௌரவ விரிவுரையாளராக பணியாற்றி வருகிறேன்” இது அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக (தற்காலிக பேராசிரியராக) பணியாற்றுகின்ற ஒருவரின் வாக்குமூலம்.
இப்பேராசிரியரைப் போலவே பதினோராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கௌரவ விரிவுரையாளர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என வெவ்வேறு பெயர்களில் அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக்குகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாக அற்பக் கூலிக்கு அரசாங்கத்தால் சுரண்டப்பட்டு வருகின்றனர். தற்போது ஊதிய உயர்வு, சமூக பாதுகாப்புச் சலுகைகள், மகப்பேறு விடுமுறை ஆகியவற்றை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
ஊதிய உயர்வு கேட்டு நீதிமன்றம் சென்ற காரணத்திற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதின்மூன்று உறுப்புக் கல்லூரிகள் மற்றும் மூன்று மண்டல வளாகங்களில் பணிபுரியும் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இவ்வழக்கில் “சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற அடிப்படையில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கும் நிரந்தரப் பேராசிரியர்களுக்குக் கொடுக்கப்படும் அடிப்படை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதனை அமல்படுத்தவில்லை என்பதால், பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்த உயர் நீதிமன்றம், உடனடியாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது. பல்கலைக்கழக நிர்வாகமோ, உத்தரவை அமல்படுத்தாமல், ஊதிய உயர்வு கேட்டுப் போராடியவர்களைப் பழி வாங்கியுள்ளது.
போதிய நிரந்தரப் பேராசிரியர்கள் இருப்பதால், 328 தற்காலிகப் பேராசிரியர்களுக்குப் பணி நீடிப்பு வழங்கவில்லை என்கிறார் பல்கலைக்கழகப் பதிவாளர். ஆனால் ஏஐசிடிஇ விதிமுறைப்படி, தற்போது படித்து வரும் 22,230 மாணவர்களுக்கு 1,112 உதவிப் பேராசிரியர்கள் தேவை (20 மாணவர்களுக்கு 1 பேராசிரியர்). ஆனால், 667 நிரந்தரப் பேராசிரியர்களே தற்போது பணியாற்றுகின்றனர். ஒன்பது பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் ஐந்து பேராசிரியர்களை வைத்து வகுப்புகள் நடத்த வாய்வழியாக உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் போலவே, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் 8000 க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச் சலுகைகள் கோரி கடந்த இரண்டு மாதங்களாகப் போராடி வருகின்றனர். மொத்தம் உள்ள 183 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒன்பதாயிரம் கௌரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். இது ஏறத்தாழ மொத்தமுள்ள பேராசிரியர் எண்ணிக்கையில் 60-70 சதவீதமாகும். நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டியே, கடந்த 15 வருடங்களாக இக்கல்லூரிகளுக்கு நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மிகவும் குறைந்த ஊதியத்திற்கு கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே அரசுக் கல்லூரிகளை நடத்தி வருகின்றனர்.
“சம வேலைக்குச் சம ஊதியம்” என்ற அடிப்படையில் தற்காலிகப் பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவும் தற்காலிகப் பேராசிரியர்களின் ஊதியத்தை 50,000 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஏராளமான போராட்டங்களும் நடந்து வருகின்றன. இவை எதையும் மதிக்காமல், தற்காலிகப் பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்த திமுக மறுத்து வருகிறது. தற்போதைய போராட்டத்தின் விளைவாக 25,000 ஆக உள்ள மாத ஊதியத்தை 30,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.
அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தப் பேராசிரியர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க, வருடத்திற்கு 700 கோடி நிதி தேவைப்படும். இது தமிழ்நாடு அரசு உயர்கல்விக்காகச் செலவிடும் தொகையில் (8,505 கோடி) வெறும் 8.2 சதவீதமே. தமிழ்நாட்டின் மொத்த பட்ஜெட்டோடு ஒப்பிடும்போது 700 கோடி என்பது மிகவும் சொற்பமே.
“உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு, அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசாங்கம்” என்று பல கோடிகள் செலவு செய்து விளம்பரம் செய்யும் திமுக, இந்தச் சொற்பத் தொகையைக் கூட ஒதுக்க மறுப்பதற்குக் காரணம், தனியார் கல்லூரி முதலாளிகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அக்கறைதான்.
தமிழ்நாட்டில் 2807 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 85.25% கல்லூரிகள் தனியாருக்குச் சொந்தமானவை. இதில் கணிசமானக் கல்லூரிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் நடத்தப்படுபவை. யுஜிசி சொல்லுகின்ற ஊதியம் அரசுக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு உயர்த்தப்படும்போது, தனியார் கல்லூரிகளும் தங்கள் பேராசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது அவர்களுடைய லாபத்தில் (கொள்ளையில்) பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் எதிர்க்கட்சியாக இருக்கும் போது கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை விடும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அமைதியாகிவிடுகின்றனர்.
புதிய தாராளமயக் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட அதிமுக அல்லது திமுக அரசாங்கங்களோ, மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்தத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே வந்த அதேவேளையில், நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்கத் தனியார்மயத் திட்டங்களைப் புகுத்தி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஐந்தாண்டு காலத்தில் அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியை திமுக அரசாங்கம் ஒதுக்கவில்லை. அதனைச் சமாளிக்கத் தனியார்மயத்தையே தீர்வாகக் காட்டியது.
சென்னைப் பல்கலைக்கழக நிதி நெருக்கடியை ஒட்டிப் பேசிய அத்துறைச் சார்ந்த செயலாளர், பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு இல்லை, நீங்களே நிதி திரட்டிக் கொள்ளுங்கள் என்றார். செலவுகளைக் குறைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தனியார் நிறுவனத்தின் மூலமாகப் பணியமர்த்தப் போவதாக கடந்த வருடம் அறிவித்தது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இங்குள்ள 150 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றிக் கொள்வதற்கான சட்டத்திருத்தத்தினை திமுக கொண்டு வந்து பிறகு பின்வாங்கியது.
கூடவே, தேசிய கல்விக் கொள்கையைச் சிறிதும் பிழையில்லாமல் அமல்படுத்தி வரும் திமுக, குஜராத் (ஜிஃப்ட் சிட்டி), மகாராஷ்டிராவைப் போலவே தமிழ்நாட்டிலும் லாப நோக்கில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடங்க வசதியாக அறிவுசார் நகரத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். மொத்தத்தில் உயர்கல்வியில் வளர்ச்சி என்ற போர்வையில் தனியார்மயத்தையே திமுக முன்னிலைப்படுத்துகிறது.
தனியார் கல்வி முதலாளிகளின் வளர்ச்சிக்காகவே, உயர்கல்விக்கான நிதியைக் குறைப்பதும், ஒப்பந்தப் பேராசிரியர்களை ஒட்டச் சுரண்டச் செய்வதும், என்இபி – வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதையும் இவர்கள் செய்து வருகின்றனர். இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என எந்த ஓட்டுக் கட்சிக்கும் வேறுபாடு இல்லை. நமக்கான கோரிக்கைகளுக்கான தீர்வே கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்பதில்தான் உள்ளது. எனவே தனியார்மயத்திற்கெதிரான போராட்டத்தின் மூலமே நமக்கான உரிமையை நாம் பெறமுடியும்.
- மாணிக்கம்


