அன்பார்ந்த தொழிலாளர்களே!
நடைமுறையில் உள்ள 44 தொழிலாளர் நலச் சட்டங்களை முற்றிலுமாக ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக 4 சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது, பாசிச மோடி அரசு. தொழிலாளிகளுக்கு நன்மை செய்வதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுமே இதன் நோக்கமென அரசும் ஊடகங்களும் கூசாமல் புளுகுகின்றன. உண்மையில், தொழிலாளிகள் இதுவரை போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பிடுங்கி, நவீன கொத்தடிமைகளாக்குவதே இவற்றின் நோக்கம்!
8 மணிநேர வேலை, பணிநிரந்தரம், தொழிற்சங்க உரிமை – எதுவும் இனி ஏட்டளவிலும் இல்லை!
தொழிலாளிகள் தமது உயிரையும் உதிரத்தையும் தியாகம் செய்து 12 – 14 மணி நேர வேலை நேரத்தை 8 மணிநேரமாக மாற்றினர். ஆனால், மோடி அரசின் இச்சட்டங்களோ மீண்டும் அதை 14 மணிநேரமாக மாற்றியுள்ளது. ‘100 தொழிலாளர்கள் வேலை செய்தால் கூட அரசின் அனுமதியின்றி தொழிற்சாலையை மூட முடியாது’ என்பது ஏற்கனவே இருந்த சட்டம். தற்போது அதைத் திருத்தி, 300 பேருக்குக் குறைவாக வேலை செய்யும் ஆலைகளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரவோடு இரவாக மூடிவிடலாம் என்று கூறியுள்ளது.
இனி நிர்வாகம் தொழிலாளிகளைப் பணி நிரந்தரம் செய்யத் தேவையில்லை. குறுகிய கால வேலைவாய்ப்பு (FTE) என்ற புதிய வசதி மூலம், மொத்த ஆலையையும் ஒப்பந்தத் தொழிலாளரைக் கொண்டே இயக்கிக் கொள்ளலாம். நிர்வாகத்தின் சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக தொழிலாளர் ஆணையரிடம் முறையிட்டு நிர்வாகத்துடன் சமரசப் பேச்சுவார்த்தையெல்லாம் இனி நடத்த முடியாது. தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிடவும் முடியாது. சொல்லப்போனால் இனி தொழிலாளர் நீதிமன்றங்களே இருக்காது. அதற்குப் பதிலாக தீர்ப்பாயங்கள் எனும் கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளிடம் தொழிலாளர் நலனை மோடி அரசு ஒப்படைத்துவிட்டது.
மேலும், ஒவ்வொரு தொழிற்சாலையும் தங்களது விருப்பத்திற்கு ஏற்றார்போல நடத்தை விதிகள் (Code of Conduct) உருவாக்கிக் கொள்ளலாம். அவ்விதிகளின்படி தொழிலாளர்களுக்கு என்ன தண்டனையை வேண்டுமானாலும் நிர்வாகம் வழங்கலாம்.
அரசின் அனுமதியோ, முன்னறிவிப்போ இன்றி ஆலையை மூட முதலாளிக்கு சுதந்திரம் வழங்கும் இச்சட்டங்கள், தொழிலாளியின் வேலைநிறுத்த உரிமையை முற்றாகப் பறித்துவிட்டன. வேலைநிறுத்தம் செய்வதெனில் 60 நாட்களுக்கு முன்பே எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதிக்கப்பட்டு, இனி தொழிலாளர்கள் வேலைநிறுத்தமே செய்ய முடியாத நிலை உருவாயுள்ளது. மருந்து, பால் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளில் வேலை நிறுத்தம் மேற்கொள்ள பல கட்டுப்பாடுகள் முன்பு இருந்தன. தற்போது, அக்கட்டுப்பாடுகளை எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளனர். அதாவது, முதலாளித்துவச் சுரண்டலை எதிர்க்க தொழிலாளியின் கையிலிருந்த கடைசி ஆயுதமான “வேலை நிறுத்த உரிமையை” சட்ட விரோதம் எனப் பிரகடனம் செய்துள்ளது, மோடி அரசு.
சாம்சங் தொழிலாளர் போராட்டமானது இன்றைய தேதியில் புதிதாக ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதற்கு எத்தனை போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது என்பதை நமக்குக் காட்டியது. இந்நிலையில், இருக்கும் தொழிற்சங்கங்களின் பதிவைக் கூட அற்பமான காரணங்களைக் கூறி இரத்து செய்யும் வசதியையும் தற்போது ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம் தொழிற்சங்கங்களை முற்றிலுமாக அழித்துவிடத் துடிக்கின்றனர்.
பணியிடப் பாதுகாப்பும் இனி முதலாளி கையில்!
உரிமைகளைப் பறித்தது போதாதென்று, பணியிடத்தில் உயிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதுவரை ஆலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை திடீர் சோதனை செய்வதற்கென அதிகாரிகள் இருந்ததைக் கூட ஒழித்துவிட்டு, தற்போது ஆலை நிர்வாகம் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக தமக்குத் தாமே சான்றளித்துவிட்டு அதை இணையத்தில் பதிவேற்றினாலே போதுமானது என்று கூறியுள்ளது, மோடி அரசு.
பணியிடப் பாதுகாப்பின்றி தொழிலாளியின் உயிரே பறிபோனாலும் முதலாளியை இனி தண்டிக்க முடியாது. ஏனெனில், முதலாளிகளின் குற்றங்களுக்கு கிரிமினல் நடவடிக்கையும் தண்டனையையும் வழங்கும் சுமார் 20,000 சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டுவிட்டன. இனி முதலாளிகள் சிறைத் தண்டனைக்குப் பதில் அபராதம் கட்டினால் போதுமானது.
போராடும் தொழிலாளர்களை “வழிக்குக் கொண்டுவர” சட்ட விரோதமாக சம்பளப் பிடித்தம் செய்யும் முதலாளிக்கு மூன்று வருடச் சிறைத்தண்டனை என்பதை மாற்றி, 50,000 ரூபாய் அபராதம் செலுத்தினாலே போதுமெனக் கூறுகிறார்கள்.
மேலே சொன்னவை சிறுதுளியே; மோடி அரசு செய்துள்ள நூற்றுக்கணக்கான திருத்தங்களைப் பட்டியல் போட்டால் மாளாது!
ஒரே வழி – உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவதே!
1926-இல் ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளால் தொழிற்சங்கச் சட்டம், கொண்டுவரப்பட்டது முதல் கடந்த 100 ஆண்டுகளில் சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, கூட்டுப் பேர உரிமை, முதலாளிகள் கதவடைப்பு செய்வதில் கட்டுப்பாடு, பணியிடத்தில் பாதுகாப்பு, வேலைநேரம், விடுப்பு – என பலவற்றை தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்றுள்ளது. இன்றோ அவையனைத்தையும் ஒழித்துக்கட்டி, உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக நம்மை மாற்றியுள்ளது, மோடி அரசு.
இனி நாம் என்ன செய்யப் போகிறோம்? தி.மு.க. காங்கிரசு போன்ற எதிர்க்கட்சிகளை நம்பலாமா? இச்சட்டங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போதும் சரி, அவை நடைமுறையாவதாக அறிவித்தபோதும் சரி, ஒருசிறு எதிர்ப்பைக் கூட அவர்கள் வெளிப்படுத்தவில்லை. மாறாக, மோடி அரசின் இத்தொழிலாளர் விரோதச் சட்டங்களுக்கு ஒத்திசைவாக, தான் ஆளும் கர்நாடகாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியது, காங்கிரசு. தமிழ்நாட்டிலும் 12 மணி நேரமாக உயர்த்தி பிறகு பின் வாங்கியது, தி.மு.க.
சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமைக்காகப் போராடிய போது, “சங்கம் அமைப்பது அந்நிய முதலீட்டைப் பாதிக்கும்” என்று அதை ஒடுக்கியதும் இதே தி.மு.க.தான். எனவே, ஏகாதிபத்திய, தரகு முதலாளிகளுக்குச் சேவை செய்வதில் பா.ஜ.க.வுக்கும் இவர்களுக்கும் எந்தக் கொள்கை வேறுபாடும் கிடையாது!
ஆக, ஓட்டுக் கட்சிகளை நம்பமுடியாது; நீதிமன்றமாவது தொழிலாளர் பக்கம் நிற்குமா? இவ்வாறான சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை, “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது” எனக் கூறி உச்ச, உயர் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துவிடுகின்றன. மேலும், சமீபத்தில் பெண் தொழிலாளர்கள் சங்கம், ‘வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, அற்பக் காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ததுடன், இதுபோன்று “கொடிபிடித்துப் போராடும் தொழிற்சங்கங்களால்தான் தொழில்வளர்ச்சி முடங்குகிறது” என அரசியலமைப்பு வழங்கியுள்ள அரைகுறை உரிமை மீது கூட வெறுப்பைக் கக்கியுள்ளது, உச்ச(அ)நீதிமன்றம். எனவே, நீதிமன்றத்திடம் தொழிலாளிகள் மன்றாடுவதும் கசாப்புக் கடையில் ஆடுகள் கருணை கோருவதும் ஒன்றுதான்!
எனவே, நம்மைக் காக்கவும் இரட்சிக்கவும் எந்த அரசமைப்பு நிறுவனங்களும் கட்சிகளும் வரப்போவதில்லை! இந்திய நாட்டையே கட்டியெழுப்பிய தொழிலாளிகளாகிய நாம் இன்று நிர்கதியாக நிற்கிறோம்! நம்முன் இரண்டு வழிகள்தான் உள்ளன: ஒன்று, இச்சட்டங்களை ஏற்று நவீன கொத்தடிமைகளாக வாழ்வைக் கழிப்பது; இன்னொன்று, அரசியல் கட்சிகள், தொழிற்சங்க வேறுபாடுகள் கடந்து நாடெங்கும் தொழிலாளி வர்க்கமாய்க் கிளர்ந்தெழுந்து, “இச்சட்டங்களைத் திரும்பப் பெறு” என முழங்குவது!!
உழைக்கும் கரங்கள் உயர்ந்தால் எத்தகைய சர்வாதிகாரமும் மண்டியிடும் என்பதே வரலாறு! மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகளிடம் மோடி கும்பல் மண்டியிடவில்லையா?! அதுதான் இந்தியத் தொழிலாளி வர்க்கமும் இன்று தேர்வு செய்ய வேண்டிய பாதை!!
- 8 மணிநேர வேலை, பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு என உதிரம் சிந்திப் பெற்ற உரிமைகள் பறிபோவதை அனுமதியோம்!
- தொழிலாளியை நவீன கொத்தடிமையாக்கும் மோடி அரசின் சட்டங்களைக் கிழித்தெறிவோம்!
- ஓட்டுக் கட்சிகள், நீதிமன்றங்கள் மீதான மாயையை உதறியெறிவோம்!
- “தொழிலாளர் விரோதச் சட்டங்களைத் திரும்பப்பெறு” என முழங்குவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF)
89030 42388 | 90252 13374




வீதிக்கு வருவோம் மோடியின் பாசிச சட்டங்களை தீயிட்டுக் கொளுத்துவோம்.