இந்தியக் கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறையை நிலைநிறுத்துவதற்காக, காவி பாசிஸ்டுகள், நம் கண் முன்னே, ஒரு அரசியல் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். ஆதிக்க சக்திகள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்திக் கொள்ளும், மண்டல் கமிசன் எதிர்ப்புக் காலத்துக் கதை வசனங்களை இதற்காக மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல அழு, என்று நடந்த இந்த நாடகத்தில் ஆளும் பாஜக அரசும், ஆதிக்க சாதிவெறியர்களும், நீதிமன்றமும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு இராம இராஜ்ஜியத்தை நடத்திவரும் பாஜக அரசு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்கு ஒழுங்குமுறைகளைக் கொண்டுவருகிறது என்பதே முதலில் நம்பமுடியாததொரு நாடகம். அடுத்ததாக இந்த ஒழுங்குமுறைகளை எதிர்த்து பாஜகவின் ஆதரவாளர்களே போராட்டம் நடத்துகிறார்கள். அதாவது காவி பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிராகத் தாங்களே போராடிக் கொள்கிறார்கள். அடுத்த காட்சியில், இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் நீதிமன்ற வழிகாட்டுதல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதே நீதிமன்றம் அவற்றை நிறுத்திவைக்க உத்தரவிடுகிறது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமத்துவத்தை உருவாக்குவது குறித்தும், சாதிய ஒடுக்குமுறையை தடுப்பது குறித்தும் விவாதங்கள் நடைபெறுவதற்குப் பதிலாக, கூச்சல்களையும், குழப்பங்களையும் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் இன்று ஒடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உயர்கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையின் கோர முகத்தை ரோகித் வெமுலாவின் மரணம் வெளிச்சம் போட்டுக் காட்டியது. ரோகித் வெமுலாவின் மரணம் உருவாக்கிய வலியின் தாக்கம் மறையும் முன்பே மும்பையின் டோப்பிவாலா மருத்துவக் கல்லூரியில், சாதிரீதியிலான துன்புறுத்தல்களால், பழங்குடியின மாணவி பாயல் தாத்வி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலாவும், பாயல் தாத்வியின் தாயான அபேதா சலிம் தாத்வியும் 2019 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கில் உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது தற்செயலானதோ அல்லது தனிப்பட்ட சம்பவமோ அல்ல என்றும் அது ஒரு கட்டமைப்பு ரீதியான, நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்றாகும் எனவும் அரசின் தோல்வியால்தான் இதுபோன்ற பாகுபாடுகள் சாத்தியமாகிறது என்றும் அந்த பொது நல வழக்கில் வாதிட்டனர்.
கல்வி நிறுவனங்களில் சாதியப் பாகுபாடுகளைத் தடுக்க தேசிய அளவில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும், ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் சுயமாக இயங்கக் கூடிய குறைதீர் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும், கல்வி வளாகங்களில் நடக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கு தனிப்பட்ட நபர்களை மட்டுமன்றி கல்வி நிறுவனத்தையும் பொறுப்பாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அந்தப் பொது நல வழக்கு முன்வைத்தது.
இந்தப் பொது நல வழக்கினை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை செய்து வந்த உச்சநீதிமன்றம், புதிய ஒழுங்குமுறை விதிகளை ஆறு வாரங்களுக்குள் அறிவிக்குமாறு, பல்கலைக் கழக மானிய குழுவிற்கு (யுஜிசி) இந்த ஆண்டின் தொடக்கத்தில் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவையடுத்துத் தான், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல் பற்றிய யுஜிசி ஒழுங்குமுறைகள் 2026 அறிவிக்கப்பட்டன.
இந்த ஒழுங்குமுறைகள் கூட முற்றிலும் புதியவை அல்ல. ஏற்கெனவே இதே போன்றதொரு ஒழுங்குமுறையை 2012 ஆம் ஆண்டில் யு.ஜி.சி. அறிவித்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு இழைக்கப்படும் சாதிய வங்கொடுமைகளைத் தடுப்பது பற்றி மற்றும் பேசியது, இப்போது கொண்டு வரப்பட்டிருக்கும் விதிகள் பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மாணவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் ரோகித் வெமுலா மற்றும் பாயல் தாத்வியின் பெற்றோர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் அவர்கள் கேட்டிருந்த படியே ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் சாதிய ஒடுக்குமுறைகளை விசாரிக்க தனியான குழுக்கள் அமைக்கப்படுவதுடன், அந்தக் குழுவிற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றும், குழுவில் கல்வி நிறுவனத்திற்கு வெளியில் இருந்தும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் யுஜிசி தனது சுற்றறிக்கையில் கூறியிருக்கிறது. அதுமட்டுமன்றி இது போன்ற குழுக்களை அமைக்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யுஜிசியிடம் இருந்து அவர்களுக்கு அளிக்கப்படும் நிதியுதவி நிறுத்தப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.
இவ்வாறு குறிப்பான ஒழுங்குமுறை விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த சுற்றறிக்கையில் பிரச்சனையே இல்லை என்று அர்த்தம் ஆகாது. எது சாதிரீதியிலான வன்கொடுமை என்று இந்த சுற்றறிக்கை தெளிவாக வரையரை செய்யாமல் பொத்தம் பொதுவாகப் பேசுகிறது. இதுவே 2012 ஒழுங்குமுறை விதிகளில் — துன்புறுத்துவது, திட்டமிட்டு தண்டிப்பது, அவமதிப்பது, புறக்கணிப்பது, சாதியைக் காரணம் காட்டி ஒதுக்குவது, என அனைத்தும் வன்கொடுமைகள் எனத் தனித்தனியாகப் பட்டியலிட்டுள்ளன. அதே போல ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களுக்கு 2026 ஒழுங்குமுறை விதிகளை அமுல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யுஜிசியின் இந்த ஒழுங்குமுறை விதிகள் வெளியானவுடன் வட மாநிலங்களில் உள்ள ஆதிக்க சாதி அமைப்புகள் போராட்ட ஆரம்பித்தனர். இந்த ஒழுங்குமுறைகள் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறி அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என சவர்ன சேனா என்ற அமைப்பு புதுதில்லியில் உள்ள யுஜிசி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடியது. இராஜஸ்தான் மாநிலத்தில் விப்ர மகாசபா, கர்னி சேனா, பரசுராம் சேனா, பிராமின் சேனா, அகர்வால் சேனா மற்றும் வைசிய சேனா ஆகிய ஆதிக்க சாதி அமைப்புகள் ஒன்று சேர்ந்து சங்கநாத சபா என்ற அமைப்பை உருவாக்கி யுஜிசியின் ஓழுங்குமூறைகளுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.
உத்தர பிரதேசத்தில் லக்னோ பல்கலைக் கழகம் மற்றும் ஜாவுன்பூர் பல்கலைகழகம் ஆகியவற்றில் கர்னி சேனா மற்றும் சவர்ன சேனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடினார்கள். அதுமட்டுமன்றி உத்தர பிரதேச பாரதிய ஜனதா கட்சியில் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பன்னிரண்டு தலைவர்கள் தங்களது கட்சிப்பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் யுஜிசியின் ஒழுங்குமுறைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். இந்த புதிய ஒழுங்குமுறைகள் கல்வி வளாகங்களில் சாதிய வேறுபாடுகளை உருவாக்கிவிடும் மாணவர்களைச் சாதி ரீதியாகப் பிரித்துவிடும் என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். அதாவது கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடு ஒடுக்குமுறையும் இல்லாதது போலவும் யுஜிசியின் இந்தப் புதிய ஒழுங்குமுறைகள் தான் இனி புதிதாக முரண்பாடுகளை உருவாக்கப்போகிறது என்றும் கூறுகிறார்கள்.
இந்தியக் கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் நிறைந்திருப்பதற்கு ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. 2019ஆம் ஆண்டில் ஐஐடி தில்லி நடத்திய ஆய்வில் இந்தியாவில் உயர்கல்வி கற்க கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் வரும் பிறபடுத்தப்பட்ட மற்றும் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாணவர்களில் 70 சதவீதம் மாணவர்கள் சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகளை ஏதாவதொரு வகையில் எதிர்கொள்கின்றனர் எனக் கூறியுள்ளது.
தில்லி பல்கலைக் கழகத்தின் அரசியல் துறைத் பேராசிரியரான என். சுகுமார், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 600 மாணவ மாணவிகளிடம் நேர்காணல் நடத்தியதிலிருந்து பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் சமூகப் புறக்கணிப்பை நிலைநிறுத்தும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், வகுப்பறைகளும், ஆய்வகங்களும் சாதிரீதியிலான பாகுபாடுகள் காட்டப்படும் களங்களாக மாறியிருப்பதாகவும் கூறுகிறார்.
யுஜிசி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கூட 2019-20 ஆண்டுகளில் ஆண்டுக்கு அதிகாரப்பூர்வமாக பதிவான குற்றச்சாட்டுகளி எண்ணிக்கையானது 173 இல் இருந்து 2024-25ஆம் ஆண்டில் அதாவது ஐந்து ஆண்டுகளில் 378ஆக அதாவது 118 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகாலத்தில் மட்டும் மொத்தமாக 1,160 சாதிய ஒடுக்குமுறை குறித்த குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்கின்றன.
2023ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் கல்வித்துறை கொடுத்துள்ள தகவலின் படி 2019 முதல் 2021க்கு இடைப்பட்ட காலத்திம் மத்தியப் பல்கலைகழகங்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் மட்டும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 98 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக காரக்பூர் ஐ.ஐ.டி.யில் 2025ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 4 தற்கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த த் தற்கொலைகள் அனைத்தும் கல்லூரி வளாகத்தில் அதிகரித்து வரும் சாதிய முரண்பாடுகளே இந்தத் தற்கொலைகளுக்குக் காரணம் என மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.[1]
2014ல் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி வளாகங்களில் காவி பாசிச சித்தாந்தம் பகீரங்கமாக ஊடுருவ ஆரம்பித்ததன் பயனாக சாதிய ஒடுக்குமுறைகள் வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்துள்ளன.
பம்பாய் ஐஐடியில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன. மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் இன்னும் ஒருபடி மேலே போய் அசைவ உணவு சாப்பிடுபவர்கள், சைவ உணவு சாப்பிடுபவர்களைத் தொட்டுவிடக்கூடாது என்பதற்காக தனித்தனி நுழைவாயில்கள், கைகழுவும் இடங்கள் எனப் பிரித்து வைத்து நவீன தீண்டாமையைப் புகுத்தியது.
இது போன்ற கல்வி நிர்வாகங்கள் எப்போதும் இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை நடத்தியதே இல்லை. ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவ்வாறு வெளிப்படையாக சாதியப் பாகுபாட்டைக் காட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவிற்கு துணிந்து செயல்படுகின்றன. நிர்வாகமே இவ்வாறு செயல்படும் போது இந்தக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களையும், ஆதிக்க சாதி மாணவர்களையும் கேட்கவா வேண்டும். ஆதிக்க சாதித் திமிருடன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மீது இவர்கள் தொடுக்கும் வன்கொடுமையின் இரத்த சாட்சியாக, இந்தக் கல்லூரிகளில் தற்கொலைகள் தொடர்கின்றன.
இவையெல்லாம் பதிவு செய்யப்பட்ட, ஊடக வெளிச்சம் பெறப்பட்ட குற்றச்சாட்டுகள். ஆனால் பதிவு செய்யப்படாமல், விசாரணக்கு ஏற்றுக் கொள்ளப்படாத சாதி ரீதியான ஒடுக்குமூறைகளையும், புறக்கணிப்புகளையும், துன்புறுத்தல்களையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மாணவர்கள் தினம் தினம் அனுபவித்து வருகின்றனர்.
சாதி ரீதீயிலான ஒடுக்குமுறைகளைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்றிய பாஜக அரசுக்கோ அல்லது கல்வி நிறுவனங்களுக்கோ நிச்சயமாகக் கிடையாது. மாணவர்களின் தற்கொலை செய்து கொள்வது அரசுக்கும் கல்வி நிறுவங்னகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்துவதால் அதனை எப்படித் தடுப்பது என்பது குறித்து மட்டுமே அவர்கள் சிந்திக்கிறார்கள். சமீபத்தில் காரக்பூர் ஐ.ஐ.டி. மாணவர் ரிதம் மோண்டலின் தற்கொலைக்குப் பிறகு அதன் இயக்குனர் சுமன் சக்ரவர்த்தி கொடுத்துள்ள அறிக்கையில், தற்கொலைகளைத் தடுப்பதற்காக அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்த போவதாக கூறியிருக்கிறார். சாதி ரீதியிலான ஒடுக்குமுறையைத் தடுப்பதற்கு பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திகொள்ளாமல் அதனைச் சகித்துக் கொண்டு வாழ வழி செய்து கொடுக்கப்போவதாக இதன் மூலம் அவர் கூறியிருக்கிறார்.
காவி பாசிச மோடி அரசு கொண்டுவந்திருக்கும் புதிய கல்விக் கொள்கையிலும் கூட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. கல்வி வளாகங்களில் சாதிய ஒடுக்குமுறை இருப்பதை அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
ஆனால் ஆதிக்க சாதி சங்கங்களும் காவி பாசிஸ்டுகளின் மாணவர் அமைப்புகளும் ஏதோ பொதுப்பிரிவில் படிக்கும் ஆதிக்க சாதி மாணவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் போலவும் அவர்களுக்கு நீதிவேண்டும் எனவும் கேட்டுப் போராடுகிறார்கள். நீதிமன்றமும் அவர்களது போராட்டத்தை அங்கீகரித்து யுஜிசியின் ஒழுங்குமுறை விதிகளுக்குத் தடைவிதிக்கிறது.
பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சாதிய ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகத்தான் இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தின் தலையெழுத்தை கல்வி மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கையில் படிக்க வரும் இந்த மாணவர்கள் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளை எதிர்த்து முறையிடுவது கூட இல்லை.
பேராசிரியரை, சீனியர் மாணவர்களைப் பகைத்துக் கொண்டால் கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய்விடுமோ எனும் இவர்களது அச்சத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். போதாக் குறைக்கு அவர்களைப் பாதுகாக்க கல்லூரி நிர்வாகமும், அரசும், நீதிமன்றமும் கேடயமாக இருப்பதால் இனி உயர்கல்வி நிலையங்களில் சாதிய வன்கொடுமைகள் அதிகரிக்கவே செய்யும்.
- அறிவு
குறிப்புகள்
[1]https://timesofindia.indiatimes.com/city/kolkata/4th-suicide-in-7-months-rocks-iit-kharagpur/articleshow/122771660.cms
https://sansad.in/getFile/annex/260/AU647.pdf
https://thefederal.com/category/education/ugc-equity-rules-protests-yogendra-yadav-interview-227237





