உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது வெறுப்புப் பேச்சு என்றும் அது இந்தியாவில் வாழும் 80 சதவீத இந்துக்களுக்கு எதிரானது என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் தீர்ப்பளித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்பது கொசு, டெங்கு, கொரோனா போன்றது; அதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியானது” எனப் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜகவின் ஐ.டி. பிரிவின் தேசியத் தலைவர் அமித் மாளவியா மீது திருச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கினை இரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் நீதிபதி ஸ்ரீமதி வழங்கியிருக்கும் தீர்ப்பில்தான் இதுபோன்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்தும், சனாதனம் குறித்தும் பேசாமல் திமுகவினர் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர். இருதரப்பு வாதங்களையும் கேட்காமல் உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கியிருக்கும் இந்தத் தீர்ப்பு தவறான தீர்ப்பு, என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிய கருத்தைத் தவிர இது குறித்து வேறு எந்த எதிர்வினையும் இதுவரையில் திமுக தரப்பிலிருந்து வெளிவரவில்லை.
அதற்கு மாறாக திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை, 69 சதவித இந்துக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய கட்சி திமுக, ஸ்டாலின் முதல்வரான பிறகு 8000 திற்கும் அதிகமான கோவில்களுக்கு அறங்காவலர்களை நியமித்துள்ளோம், 4000 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம் என திமுக இந்து மதத்தின் காவலன் என்ற பிம்பத்தை உருவாக்கத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
த.மு.எ.க.ச. மாநாட்டில் சனாதனத்திற்கு எதிராக பேசிய உதயநிதி ஸ்டாலின், அதனை வெறுப்புப் பேச்சு என நீதிமன்றம் கூறிய போது, “சனாதனத்தை ஒழிப்பது வெறுப்புப் பேச்சு என்றால் அதனை மீண்டும் மீண்டும் செய்வேன்” என பெரியாரது பாணியில் இந்நேரம் பொங்கியெழுந்திருக்க வேண்டுமே ஏன் செய்யவில்லை? உதயநிதிதான் அமைதி காக்கிறார் என்றால், அவர் சனாதனம் குறித்துப் பேசிய போது தலையில் வைத்துக் கொண்டாடிய ஊடகங்கள் அனைத்தும் இன்றைக்கு, வாய்மூடிக் கிடக்கின்றனவே? ஏன் இந்த அமைதி?
தமிழ்நாட்டிற்குச் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், சனாதனம் குறித்து இப்போது பேசினால் அதனை பாஜக உள்ளிட்ட கட்சிகள் பயன்படுத்திக் கொண்டு திமுக இந்து விரோத கட்சி எனப் பிரச்சாரம் செய்யும், அதனால் திமுகவின் வாக்குகள் சரிவடையும் என்பதால் இந்த விசயத்தில் திமுக அடக்கி வாசிக்கிறது என இதற்கு நியாயம் கற்பிக்கப்படுகிறது.
இது உண்மைதான் திமுக எல்லாவற்றையும் தேர்தல் கணக்கிலிருந்துதான் செய்கிறது. சனாதன விசயத்தில் அமைதியாக இருப்பதும் தேர்தல் கணக்குதான், திருபரங்குன்றம் விசயத்தில் நடவடிக்கை எடுத்ததும் தேர்தல் கணக்குத்தான்.
திருப்பரங்குன்றம் விசயத்தில் என்ன நடந்தது? சில நூறு காலிகளைக் கொண்டு காவி பாசிஸ்டுகள் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை செய்த போது, பல இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட திமுக எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதே தவிர மக்கள் மன்றத்தை நாடவில்லை. மக்களைப் பிளவுபடுத்தி, கலவர நெருப்பில் குளிர்காயத் துடிக்கும் காவிக் கும்பலின் அரசியலை அம்பலப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என திமுக நினைக்கவில்லை. ஏனெனில் காவி பாசிஸ்டுகளை தமிழ்நாட்டில் வேரருக்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு இல்லை.
திருப்பரங்குன்றம் விசயத்தை அவர்கள் ஓட்டாக மட்டுமே பார்க்கின்றனர். இன்று சனாதனம் குறித்துப் பேசினால் இந்துக்களின் ஓட்டு பறிபோய்விடும் என அஞ்சுவது போலத்தான் அன்று நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை அமுல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் ஓட்டு பறிபோய்விடுமோ என்று திமுக அஞ்சியது. அதற்காகத்தான் திருப்பரங்குன்றம் மலையின் மீது விளக்கேற்றாமல் தவிர்த்தது. அதனைத் தாண்டி இந்த விசயத்தை நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டது.
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற பெஞ்சிற்கு மனுச் செய்தனர். உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பும் சாதகமாக இல்லாத போது அந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளனர். இதைத்தான் திமுக சனாதன வழக்கிலும் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறது.
உச்சநீதிமன்றம் காவிக் கும்பலுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும் என்று நாம் கனவிலும் கூட நம்ப முடியாது. கடந்தகால அனுபவங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றங்களில் சனாதனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட பல தீர்ப்புகளை காவிக் கும்பல் உச்ச நீதிமன்றத்தில் உடைத்திருக்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் குறித்த வழக்குகள், சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு எனப் பல வழக்குகளை இதற்குச் சான்றாக கூறலாம்.
எனவே உச்சநீதிமன்றத்திலும் திருப்பரங்குன்றத்தில் விளக்கேற்ற காவிகளுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படித் தீர்ப்பு வரும்போது அதையே காரணமாக வைத்து, நீதிமன்றங்களின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம், இஸ்லாமியர்களின் வாக்கு சரியாது என்பது தான் திமுகவின் எண்ணம்.
நீட் விசயத்தில் திமுக இதைத்தான் செய்தது. 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் எனக் கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு சட்டசபையில் நீட் விலக்கு மசோதாவைத் தாக்கல் செய்தது. மசோதா குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தது. ஜனாதிபதி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத போது அதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்திருக்கிறது. அதற்குள் தற்போது அடுத்த சட்டமன்றத் தேர்தலே நெருங்கிவிட்டது. இன்னமும் திமுக சட்டப்போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறது.
“அயோத்திதாசப் பண்டிதர் தொடங்கி, நீதிக் கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என பார்ப்பனியத்திற்கு எதிராக நூறாண்டுகளுக்கும் மேலாகப் போராடிய பல இயக்கங்கள் வேரூன்றிய மண் நம் தமிழ்நாட்டு மண், இது பெரியாரின் மண், இங்கே பாஜக காவி பாசிஸ்டுகள் வேரூன்ற முடியாது” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வீரவசனம் பேசி வருகிறார்களே குறைந்தபட்சம் பெரியார் முன்னெடுத்த பிரச்சாரங்கள் போலவும், இயக்கங்கள் போலவும் ஒன்றையாவது திமுக முன்னெடுத்திருக்கிறதா?
சனாதனம் குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி வழங்கியிருக்கும் தீர்ப்பைப் பார்ப்போம்.
“தமிழகத்தில் இந்து மதத்தினர் மற்றும் சாதி இந்துக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. உதாரணமாக குடுமியை வெட்டுவது, பூணூலைக் கழற்றுவது, பன்றிகளுக்குப் பூணூல் அணிவிப்பது போன்ற இந்து மதத்துக்கும், சாதி இந்துக்களுக்கும் எதிரான குறிப்பிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடந்திருப்பதை நிரூபிக்க ஆவணங்கள் உள்ளன.
இந்து கடவுள்களான இராமர், விநாயகருக்கு பெரியார் செருப்பு மாலை அணிவித்துள்ளார். பல விநாயகர் சிலைகளை உடைத்துள்ளார். இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டன…. இது தொடர்பாக பெரியாருக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, எதிர்காலத்தில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது….” என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
கடந்த காலங்களில் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகப் பல போராட்டங்களைப் பெரியார் முன்னெடுத்திருக்கிறார். அதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகள் வந்த போதும் பிரச்சாரங்களையும், இயக்கங்களையும் அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஏனெனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவோம் என அவர் பயப்படவில்லை. பதவி பறிபோய்விடும் என அஞ்சவில்லை.
ஆனால் இன்றைய திமுக தலைவர்கள் கைதுக்கும் சிறைக்கும் அஞ்சுகிறார்கள். ஓட்டரசியலில் பதவியில் ஒட்டிக் கொண்டு, சொத்து சேர்ப்பதையும், சேர்த்த சொத்துக்களை அனுபவிப்பதையும் விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. எனவே த.மு.எ.க.ச மாநாடு போன்றவற்றில் கலந்து கொண்டு வீரவசனம் பேசுவதைத் தாண்டி அவர்கள் காவி பாசிஸ்டுகளுக்கு எதிராகத் துரும்பைக் கூட அசைக்கப் போவது இல்லை.
அதேசமயம் காவி பாசிஸ்டுகள் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிட்டு அமைதியாக இருப்பதிலை. அவர்கள் தங்களது நச்சுப் பிரச்சாரத்தினை மக்களிடம் தொடர்ந்து கொண்டு செல்கிறார்கள். தற்காலிகப் பின்னடைவுகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. தமிழ்நாட்டில் காவி பாசிசத்தைக் காலூன்றச் செய்ய வேண்டும் என்ற நீண்டகாலத் திட்டத்தில் அவர்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார்கள்.
இதனை எதிர்கொண்டு முறியடிக்கும் அளவிற்கு, காவி பாசிசத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பது இன்றைக்குத் தமிழ்நாட்டில் இல்லை. காவி பாசிச அபாயம் குறித்த புரிதலை உருவாக்குவதற்கு பதிலாக தேர்தலில் திமுகவிற்கு ஓட்டுப்போடுவதன் மூலம் பாசிசத்தை முறியடித்து விடலாம் என்றும் நீதிமன்றத்தின் மூலம் பாசிசத்தைக் கட்டுப்படுத்தி விடலாம் என்றும் தவறான நம்பிக்கையை விதைக்கும் பிரச்சாரங்களே ஓங்கியிருக்கின்றன. இந்நிலை மாறாத வரை, காவி பாசிஸ்டுகளின் ஆபத்தான கொடூர முகத்தினை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்காத வரை தமிழ்நாட்டில் பாசிஸ்டுகளின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.
- சந்திரன்





பாசிசத்தை வீழ்த்துவதற்காக இடதுசாரி அமைப்புகள் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு கேட்டு திமுகவை ஆதரித்து பேசுவார்கள் அவ்வளவு தான் இவர்களுடைய பாசிச எதிர்ப்பு.