தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது வெளியாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. பொதுவான திரைப்படத்தின் மீதான விமர்சனம் என்பதைத் தாண்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் போது பல்வேறு கட்சிகள், ஆளுமைகளின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், திமுகவின் பங்கு என்ன என்பது குறித்தும் பல விவாதங்கள் ஊடகங்களில் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் குறிப்பானதொரு விடயம் குறித்து யாருமே விவாதிக்கவும் இல்லை. விவாதிக்கத் தயாராகவும் இல்லை.
1960-களில் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த, வரலாற்றைத் திருப்பிப் போட்ட, இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் சமுதாயம் ஏன் இன்றைக்கு எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்கவியலாத நிலையில் முடங்கிக் கிடக்கிறது என்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை.
சமூகப் பிரச்சனைகளுக்காக மாணவர்கள் போராடவில்லை என்பது மட்டுமல்ல தங்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கூட போராடவியலாமல் மாணவர் சமுதாயம் இன்றைக்கு முடக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சமீப காலங்களில், கட்சிகளும் இயக்கங்களும் நடத்துகின்ற போராட்டங்களில் கூட மாணவர்களின் பங்கேற்பு என்பது மிகவும் சொற்பமாகத்தான் இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்துடன் ஒப்பிடும் போது, எழுச்சியுடன் செயல்பட்ட மாணவர் அமைப்புகள் போன்று, ஒன்று கூட இன்றைக்கு இல்லை. ஏன் இந்த தலைகீழ் மாற்றம்? தமிழ்நாட்டு மாணவர் சமுதாயம் முழுவதையும் எந்தவொரு அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவிடாமல் முடக்கிப் போட்டிருப்பது எவ்வாறு நடந்தது? என நாம் பரிசீலித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
அதற்கு முன்பாக இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் குறித்தும், அதனை மாணவர்கள் கையிலெடுத்து எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது குறித்தும் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை 1937-இல் இராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போதிலிருந்தே இந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன. இந்திய அளவில் அது அரசியல் நிர்ணய சபையில், துலக்கமாக வெளிப்பட்டது. இந்திய அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கும் போதே ‘இந்தி’தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதில் இந்திய ஆளும்வர்க்கம் தீர்க்கமாக இருந்தது. அதேசமயம் அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின் போது, எழுந்த எதிர்ப்பைப் பார்த்த பிறகு, எல்லா மாநிலங்களிலும் இந்தியைப் புகுத்துவதற்கு குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும் எனக் கணித்து இடைப்பட்ட அந்த 15 ஆண்டுகளில் ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரலாம் என முடிவெடுத்தனர்.
1950 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்திய அரசியல் சாசன சட்டத்திலேயே மொழிக்கான சரத்துகள் இணைக்கப்பட்டன. அதன் 343-வது சரத்து, இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக இந்தியை (தேவநாகிரி) அறிவித்தது. அடுத்த 15 வருடங்களுக்கு அதாவது 1965 ஜனவரி 26 வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடரும் என அறிவித்தது. அதேசமயம் சரத்துகள் 344-351 ஆகியவற்றின்படி மொழிவாரியம் (Language Commission) அமைப்பதன் மூலம் இந்தியை எல்லா மாநிலங்களுக்கும் பரவலாக்குவதையும், இந்தி பேசாத மாநிலங்கள் அதனை எதிர்த்திட எவ்வித உரிமையும் கிடையாது என்பதையும் சட்டத்தின் மூலமே உறுதி செய்தனர்.
அதற்கு அடுத்தபடியாக 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இது 1965-க்குப் பிறகு இந்தியை அலுவல் மொழியாக அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர்வது குறித்து இந்தச் சட்டம் எவ்வித உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை.
அரசியல் சாசனத்தில் அலுவல் மொழி குறித்த எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வராமல், இதற்கென புதிய சட்டங்களை உருவாக்காமல், உருவாக்கிய சட்டங்கள் அனைத்திலும் இந்தியை அலுவல் மொழியாக கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்தையும் செய்து கொண்டே மறுபுறம் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடரும் என்று வெற்று வாக்குறுதிகளைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. 1964-இல் நேரு இறந்த பிறகு இந்த வெற்று வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் கரைந்து போயின.
1965-க்குப் பிறகு இந்திதான் இந்தியா முழுமைக்கும் அலுவல் மொழியாகப் போகிறது என்பது கிட்டத்தட்ட உறுதியானது. கலாச்சார அடிப்படையில் ஒரு வேற்று மொழியை கட்டாயப்படுத்தித் திணிக்க நினைத்தனர் என்பதுடன் பொருளாதார ரீதியிலும் இந்தியைக் கற்றவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்ற நிலையையும் திட்டமிட்டு உருவாக்கினார்கள். அரசின் கோப்புகள், சுற்றறிக்கைகள், கடிதங்கள் என அனைத்தும் இந்தியில்தான் இருக்கும் என்பதால் அரசு வேலைக்குச் செல்வது என்றாலே இந்தி கற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்ற சூழலை உருவாக்கினார்கள். நீதிமன்றங்களில் இந்திதான் அலுவல் மொழி என்றால் இந்தி படித்தவர்கள் மட்டுமே வழக்குரைஞர்களாக வாதிட முடியும், நீதிபதிகளாகத் தீர்ப்பெழுத முடியும்.
இது தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எல்லாக் கல்லூரிகளிலும் இது குறித்த விவாதங்கள் நடந்தன. மிகத் தீவிரமாகவும் பரவலாகவும் நடைபெற்ற இந்த விவாதங்களின் ஊடாக மாணவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக அணி திரண்டனர். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை எந்தவொரு மாணவர் அமைப்பும் தனியாக நின்று நடத்தியது என்று கூற முடியாது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் மாணவர் சங்கங்கள், கல்லூரி வளாகங்களுக்குள் செயல்பட்ட படிப்பு வட்டங்கள் ஆகியவைதான் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் முதுகெலும்பாக இருந்தன.
தமிழ்நாடு மாணவர் பேரவை, மாநிலம் முழுவதும் உருவான இந்தித் திணிப்பு எதிர்ப்பு கமிட்டிகள், மெட்ராஸ் பல்கலைக் கழக மாணவர் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சங்கம், பச்சையப்பன் கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை நகர அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர் சங்கங்கள் எனத் தளர்வான அதேசமயம் சக்திவாய்ந்த அமைப்புகளின் கூட்டமைப்பிலிருந்து இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலிமையடைந்தது.
மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர், ஊர்வலங்கள் நடத்தினார்கள், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். நகரங்களில் இயங்கிய மெட்ராஸ் பல்கலைக் கழக மாணவர் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சங்கம், பச்சையப்பன் கல்லூரி மாணவர் சங்கம் ஆகியவை ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளுடனும் விவாதங்கள் நடத்தி, பெருந்திரளான இளைஞர்களை இந்தித் திணிப்புக்கு எதிராகத் திரட்டினார்கள். மதுரை, திருச்சி, கோவை நகர அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர் சங்கங்கள் மூலம், முதல் தலைமுறைப் பட்டதாரிகளையும் கிராமத்திலும், சிறு நகரங்களிலும் இருந்து வந்த மாணவர்களை அணிதிரட்டி எழுச்சிகரமான போராட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.
மாணவர்களின் போராட்டங்களை அன்றைய பக்தவத்சலம் அரசு போலீசைக் கொண்டு, தடியடி நடத்திக் கலைத்தது. காங்கிரசுக் கட்சியின் குண்டர்கள் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துக் கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள். இவையெல்லாம் சேர்ந்து அமைதியாக நடந்து கொண்டிருந்த மாணவர் போராட்டங்களை வன்முறையின் பக்கம் தள்ளிவிட்டது. இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல இளைஞர்கள் தீக்குளித்து மாண்டனர். தபால் நிலையம் உள்ளிட்ட பல ஒன்றிய அரசுக் கட்டிடங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வன்முறையை அடக்குகிறேன் என்ற பெயரில் காங்கிரசு அரசு முதலில் போலீசையும், பின்னர் இராணுவத்தையும் இறக்கிவிட்டுப் போராடிய மாணவர்கள், இளைஞர்களைச் சுட்டுத் தள்ளியது. மாணவர் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது.
இந்தித் திணிப்பை எதிர்த்து நடைபெற்ற மாணவர் போராட்டங்களை அரசு வன்முறையின் மூலம் அடக்கினாலும், அதன் தாக்கம் தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல இந்திய அளவிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகத்தான் அலுவல் மொழிகள் சட்டத்தில் 1967-ஆம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டு இன்று வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாகத் தொடர்கிறது. 1967-க்குப் பிறகு தமிழக அரசியலில் இருந்தே காங்கிரசுக் கட்சியானது துடைத்தழிக்கப்பட்டது. மாணவர் போராட்டத்தின் பலன்களை அறுவடை செய்து கொண்ட திமுக ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.
1965-க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1970-களில் இந்திராகாந்தி அமுல்படுத்திய அவசரநிலையின் போது அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. 1983 ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கறுப்பு ஜூலையை ஒட்டியும் அதன் பிறகும் எண்ணற்ற சமயங்களில் தமிழ்நாடு முழுவதும் ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. அவற்றில் மாணவர்கள் கணிசமான அளவிற்குப் பங்கேற்றனர். அதற்குப் பிறகு 2013-ஆம் ஆண்டில், ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசைக் கண்டித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதிலும் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் போராடினார்கள். 2017-இல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்திலும், அதையொட்டி மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களிலும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு போராடினார்கள்.
இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றையும் மாணவர் அமைப்புகள் முன்னின்று ஒருங்கிணைக்கவில்லை. பிற அரசியல் கட்சிகள் இயக்கங்கள் முன்னெடுத்த போராட்டங்களில் மாணவர்கள் கலந்து கொண்டனர். 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு இந்த பங்கேற்பும் கூடக் கணிசமான அளவிற்குக் குறைந்துவிட்டது. 2017 நீட் எதிர்ப்புப் போராட்டம், 2018 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், 2019-20 சிஏஏ எதிர்ப்புப் போராட்டம், 2023 முதல் புதிய கல்விக் கொள்கை, இந்தியைப் புகுத்துவதற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் மாணவர் பங்கேற்பு என்பது மிகவும் குறைந்து போய் பெயரளவிற்கு ஒரு சில மாணவர்கள் மட்டும் அதுவும் அரசியல் பின்புலம் உள்ள, கட்சிகளுடன் தொடர்பிலுள்ள மாணவர்கள் மட்டும் பங்கேற்பது எனச் சுருங்கியிருக்கிறது.
1965 மாணவர் போராட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, மாணவர் இயக்கத்தைச் சீர்குலைக்கும் வேலையைத் திமுக செம்மையாக நிறைவேற்றியது. மாணவர் இயக்கத் தலைவர்களை தனது ஓட்டரசியலுக்கு இழுத்து விட்டு அவர்களது போராட்ட குணத்தை மழுங்கடித்தது. திமுக மட்டுமன்றி அதிலிருந்து பிரிந்து சென்ற அதிமுகவும், பின்னர் மதிமுகவும் கல்லூரி மாணவர் சங்கங்களைத் தங்களது அரசியல் கூட்டங்களுக்கு ஆட்சேர்க்கும் மையங்களாக மட்டுமே பார்த்தனர். கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்களில் பணமும் அரசியல் பலமும் விளையாடத் தொடங்கின. மாணவர் சங்கத் தேர்தல்களில் வெற்றி பெற்றால் அரசியல் கட்சியில் பதவி நிச்சயம் என்பதால் அவற்றில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று மாணவர்களிடையே உருவான போட்டி பல சந்தர்ப்பங்களில் வன்முறையில் சென்று முடிந்தன. இவையெல்லாம் மாணவர் சங்கத் தேர்தல்களை முற்றிலுமாகத் தடைசெய்ய ஆளும் வர்க்கத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தன. ஓட்டுக் கட்சிகளின் அரசியல் தலையீட்டைக் காரணமாகக் காட்டி ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையும் அரசியலற்றதாக மாற்றும் வேலையில் அரசு இறங்கியது. மாணவர்கள் மத்தியில் அரசியல் இயக்கங்கள் வளரக் கூடாது, மாணவர்கள் அரசியல் கற்க கூடாது, பேசக் கூடாது என ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சி செய்த அரசுகள் திட்டமிட்டுச் செயல்பட்டன.
இந்திய ஆளும்வர்க்கத்தைப் பொருத்தவரை, பன்னாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக வேலை செய்யக்கூடிய, எதிர்த்துக் கேள்வி கேட்காத, உரிமைகளுக்காகப் போராடாத தொழிலாளர்களை உற்பத்தி செய்து தரவேண்டும். அதற்கு கல்வி வளாகங்களிலிருந்து அரசியல் நீக்கம் செய்யப்பட வேண்டும். மாணவர்களுக்கு பிழைப்புவாதம்தான் புகட்டப்பட வேண்டும், அரசியல் அறிவும், சிந்தனையும் துளியும் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. இதற்கு ஏற்ப கல்விச் சூழலை மாற்றியமைக்கும் வேலையை அவர்கள் நடைமுறைப்படுத்த தொடங்கினார்கள்.
ஒன்றிய அளவில் மாணவர்களை அரசியலைவிட்டு விலக்கி வைப்பதற்கான முயற்சிகள் 2006-லேயே தொடங்கிவிட்டன. 2006-ஆம் ஆண்டு, கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தேர்தல்களில் பண பலம் மற்றும் அதிகார பலத்தைப் புகுத்துவதைத் தடுப்பதற்காக, இந்திய உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட, லிங்டோ கமிட்டியின் பரிந்துரைகள் வெளியாயின. அது கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்களை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவர் சங்கத் தேர்தலையே நடத்த முடியாத அளவிற்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அதே கமிட்டியின் அறிக்கையில் கல்வி வளாகங்களுக்குள் அரசியல் நடவடிக்கைகளைத் தடை செய்யவும், மாணவர்கள் மத்தியில் அரசியல் பரப்புரை செய்வதையும் அவர்களை அணிதிரட்டுவதையும் சட்டவிரோதம் என அறிவிக்கப் பரிந்துரை செய்தது. ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுகின்ற மாணவர்கள் மீது கூட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அது வலியுறுத்தியது. லிங்டோ கமிட்டியின் பரிந்துரைகள் அனைத்தும் முதலில் மத்தியப் பல்கலைக் கழகங்களிலும் அதன் பின்னர் மாநில அரசின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கல்லூரிகளிலும் ஒன்றின் பின் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்பட்டன.
2013-ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராடிய போது அதிமுக அரசானது எல்லாக் கல்லூரிகளையும் காலவரையின்றி மூடியதுடன், கல்லூரி விடுதிகள் அனைத்தையும் மூடி மாணவர்கள் விடுதிகளைக் காலிசெய்துவிட்டு வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. அத்துடன் எல்லா விடுதிகளுக்கும் போலீசை அனுப்பி மாணவர்கள் இடத்தை காலி செய்து சென்றதை உறுதிப்படுத்தியது.
2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஒன்றிய கல்லூரிக் கல்வி இயக்குநரகம், கல்வி நிறுவனங்களுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களை பேச்சாளர்களாக அழைத்து அரசியல் விவாதங்கள் நடத்துவதைத் தடைசெய்து ஒரு சுற்றறிக்கையை எல்லாக் கல்லூரிகளுக்கும் அனுப்பியது. இந்த வழிகாட்டுதல்களை அமுல்படுத்த கல்லூரி முதல்வர், அல்லது இணை இயக்குநர் தலைமையில் குழுக்களை அமைத்திடவும் வழிகாட்டியிருந்தது. இதன் மூலம் கல்லூரிகளுக்குள் இயங்கி வந்த படிப்பு வட்டங்கள் அனைத்தும் செயல்பட விடாமல் முடக்கப்பட்டன. கல்லூரி நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி கல்வி வளாகத்திற்குள் அரசியல் விவாதம் நடத்தவும், புத்தகங்கள் விற்பனை செய்யவும் கூடத் தடை விதிக்கப்பட்டது.
2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா அரசுக் கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தல் என்பது நடைபெறவில்லை. அப்படியே நடந்தாலும் பேருக்கு நடந்தது மாணவர் சங்கங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. 2015-ஆம் ஆண்டு மாணவர் சங்கத் தேர்தல் நடத்தக் கோரிய சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இடைநீக்கம் செய்வது, தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுவது போன்ற தண்டனைகளை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அக்கல்லூரி முதல்வர் பகிரங்கமாகவே மிரட்டினார். 2019-ஆம் ஆண்டு எல்லாக் கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்தாமல் நிறுத்தி வைக்கும்படி மாநில அரசிடமிருந்து வாய்மொழி உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது.
2023-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்திற்குள் எந்தவிதமான போராட்டம் நடைபெற்றாலும் அதில் ஈடுபடும் மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றைய பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ். கௌரி எச்சரித்தார். கிட்டத்தட்ட எல்லாக் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நடத்தை விதிகள் ( code of conduct) என்ற பெயரில் மாணவர்கள் கல்வி வளாகத்திற்குள் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று கூறிவிட்டன. அதனை மீறித் தமது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு எல்லா அரசுக் கல்லூரிகளிலும், விடுதிகளிலும் போலீசார் நிறுத்தப்பட்டு மாணவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது மாணவர் சங்கங்கள் மிக வலுவாக இருந்தன, கல்லூரி விடுதிகள் அரசியல் விவாதம் நடைபெறுவதற்கும், மாணவர்களை அணிதிரட்டுவதற்கும் களமாக விளங்கின. கல்லூரிகளில் இயங்கிய படிப்பு வட்டங்கள் மாணவர்களுக்கு அரசியல் சித்தாந்தப் புரிதலை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இருந்தன. அதுமட்டுமன்றி முக்கியமாக அன்றைக்கு இருந்த கல்லூரிகள் பெரும்பான்மையாக அரசுக் கல்லூரிகள்தான்.
ஆனால் இன்றைக்கோ மாணவர் சங்கங்கள் தடை செய்யப்பட்டுள்ளன அல்லது பெயருக்கு இருக்கின்றன, கல்லூரி விடுதிகள் கடுமையான போலீஸ் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன, அரசியல் விவாதம் தடை செய்யப்பட்டு மாணவர்கள் மத்தியில் பிழைப்புவாதத்தை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளும், சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்பும் நிகழ்ச்சிகளும் கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றன. அரசுக் கல்லூரிகள் பெரும்பான்மை என்ற நிலை மாறி இன்றைக்கு பெரும்பாலான மாணவர்கள் தனியார் கல்லூரிகளில்தான் படிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
திடீர் பணக்கார அரசியல் ரௌடிகளான, “கல்வி வல்லள்களால்” நடத்தப்படும் தனியார் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் தாங்களே சொந்தமாக குண்டர் படையை வைத்துக் கொண்டு மாணவர்களைத் தங்களது கட்டுப்பாட்டை மீறிச் செல்லாதவாறு தடுக்கின்றனர். அதுமட்டுமன்றி கல்விக்கான கட்டணம் இன்று பலமடங்கு அதிகரித்து விட்டது. மாணவர்கள் தங்களது கல்விக்காக வாங்கிய கடனை அடைக்கவே வாழ்நாளில் பெரும்பகுதி உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இதனால் அரசியல் பேசினால் வாழ்க்கையைத் தொலைத்து விடுவோம் என்ற பயத்தை மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கின்றனர்.
இவையெல்லாவற்றையும் தாண்டி இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில் ஒரு கோரிக்கைக்காக களத்தில் இறங்கிப் போராடுவதை விட சமூக ஊடகத்தில் வினையாற்றுவது சிறந்த வழியாக மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதை விட இணையக் கையெழுத்து இயக்கங்கள் புரட்சிகரமாகிவிட்டன. பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதை விடக் காணொளிகளுக்கு லைக் போடுவது சிறந்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அரசியலற்ற வெற்று அரட்டைகளுக்கே சமூக ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள் அனைத்தும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான, எந்தக் கேள்வியும் கேட்காத, சங்கம் வைத்துப் போராடாத, அடிமை வேலை செய்வதற்குத் தயாராக இருக்கக் கூடிய தொழிலாளர்களை உற்பத்தி செய்து தரும் மையங்களாக மாறியிருக்கின்றன. ஐ.டி. நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர் முதல் கைப்பேசி தயாரிப்பு நிறுவனத்தின் காண்டிராக்ட் தொழிலாளி வரைக்கும் இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆளும்வர்க்கம் நினைக்கிறது. திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் மாறி மாறி நமது மாநிலத்தில் ஆட்சி செய்தாலும் கூட மாணவர்களை அரசியலை விட்டு நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் அவர்களே அந்நடவடிக்கைகளைத் துரிதமாக அமுல்படுத்தவும் செய்துள்ளனர்.
இன்றைய சூழல் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட காலத்தை விடவும் மோசமானதாக உள்ளது. ஒன்றியத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் காவி கார்ப்பரேட் பாசிச் சக்திகள் மக்களை மத ரீதியில் பிளவு படுத்திட, அதனைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டில் கால்பதித்திட ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. முன்னைவிடவும் இந்தித் திணிப்பு என்பது வெளிப்படையாகவே நடந்தேறுகிறது. கல்வி தனியார்மயத்தின் ஒரு அங்கமாக புதிய கல்விக் கொள்கை புகுத்தப்பட்டு மாணவர் சமுதாயத்தின் எதிர்காலமே இன்றைக்குக் கேள்விக் குறியாகி வருகிறது. ஆனால் இதையெல்லாவற்றையும் குறித்துச் சிறிதும் அறிந்து கொள்ளாமல் இன்றைய மாணவர்கள் அரசியலில் இருந்து விலக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டு, கண்காணிப்பின் கீழ் இருத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மாறாவிட்டால் மெரினா போராட்டம் தான் தமிழகம் கண்ட கடைசி மாணவர் எழுச்சியாக நிலைத்து விடும்.
- அறிவு






