உமர் – இமாம் பிணை மறுப்புக்கு எதிராக JNU மாணவர்கள் போராடுவதைக் குற்றமெனக் கூறும் காவி பாசிஸ்ட்டுகள்

கடந்த பத்தாண்டுகளில் ஏறத்தாழ அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடைய ஆக்டோபஸ் கரங்களுக்குள் கொண்டு வந்து விட்டனர். அந்த வரிசையில் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், போராட்டத்திற்கும் பெயர் பெற்ற தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், இன்று காவிகளின் கூடாரமாக மாறியிருப்பது போராடிய மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, போராட்டத்தை நம்புகின்ற, மதிக்கின்ற, அவசியம் எனக் கருதுகின்ற ஒவ்வொருவருக்கும் எதிரானது.

2020 தில்லி கலவரச் சதி வழக்கின் மூளையாக செயல்பட்டதாகக் கூறி உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜேஎன்யு மாணவர் தலைவர்களான உமர் மற்றும் இமாம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை (ஜனவரி 6, 2026) இரவு ஜே.என்.யு வளாகத்திற்குள் குழுவாகத் திரண்ட மாணவர்கள் பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் துணைவேந்தருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

அதனைத் தொடர்ந்து பாஜகவும், அதன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தும் (ABVP) போராடிய மாணவர்களை தேசத் துரோகிகளாகச் சித்தரித்து கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்கலைக் கழகத்திற்கும், பொது வெளியிலும் கடுமையான அழுத்தம் கொடுத்தனர்.

அதன்விளைவாக, வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தின் தலைமை போலீசு இது தொடர்பாக புகார் கொடுக்கும்படி ஜேஎன்யுவின் துணைவேந்தரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்பிறகு ஜேஎன்யுவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி, முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யக் கோரி அந்த அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதேபோல் ஜேஎன்யு தனது எக்ஸ் பக்கத்தில் “மரியாதைக்குரிய பிரதமர் மற்றும் மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு ஜேஎன்யு துணைவேந்தரின் (Prof. சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் 2022 – தற்பொழுது) சார்பு தன்மையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது இப்பொழுது மட்டுமல்ல இதற்கு முன்பு துணைவேந்தராக இருந்த எம். ஜகதேஷ் குமாரும் (2016 – 2022) பாஜக-ஆர்எஸ்எஸ் கருத்துக்களை எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

எந்தவொரு குடிமகனும் தான் ஏற்றுக்கொண்ட கருத்துக்கு எதிராக செயல்படும் ஒரு அரசாங்கத்தையோ, நிர்வாகத்தையோ எதிர்த்துப் போராட்டம் நடத்துவதும், முழக்கங்கள் எழுப்புவதும் அடிப்படை உரிமையாகும். அந்த முழக்கங்கள் நிச்சயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக இருப்பதில் என்ன குற்றம் இருக்க முடியும்?

இல்லை. இது ”ஜனநாயக ரீதியான எதிர்ப்பிற்கு முற்றிலும் முரணானது மற்றும் ஜேஎன்யு நடத்தை விதிகளை மீறுகிறது” என்று பல்கலைக் கழகமும், தில்லி அமைச்சர்களான கபில் மிஸ்ரா, மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் ஆஷிஷ் சூட் ஆகியோரும். அதேபோல் ஒன்றிய அமைச்சர்களான கிரண் ரிஜிஜுவும், பியூஷ் கோயலும் ஜேஎன்யு மாணவர்கள் பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சருக்கும் எதிராக முழக்கமிட்டதைக் கண்டித்துள்ளனர். இப்படி கண்டிப்பதற்கு பாசிஸ்டுகளுக்கு உரிமை உண்டா?

இல்லை. ஏனென்றால் பாசிஸ்டுகளுக்கு ”கருத்துச் சுதந்திரம்” என்றாலே ஒவ்வமைதான்.. இதில் அவர்களுக்கு எதிரான கருத்து என்று ஒன்று தனியாக இருக்க முடியுமா என்ன? எனவே தான் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, “பிரதமரைத் தொடர்ந்து அவதூறாகப் பேசிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் கோருகிறார்கள்” என்றும், இத்தகைய மனநோயாளிகளிடமிருந்து இந்தியா விடுபடும் என்றும் கூறியுள்ளார். அதாவது ரிஜிஜுவின் கூற்றுப்படி, பிரதமருக்கு எதிராக முழக்கமிடுவது அவரைப் பற்றி அவதூறு பேசுவதாகவும், தனிநபர் தாக்குதல் செய்வதாகவும் பொருள் கொள்ளப்படும். பிறக்கட்சிகள் குறித்த அவதூறுகளை அள்ளிவீசும் போது அதனைக் கருத்துச் சுதந்திரம் என்று வாதாடும் காவி கும்பல் ஆர்எஸ்எஸ்-பாஜக வினரை விமர்சிக்கும் போது சகித்துக்கொள்ளக்கூட முடிவதில்லை. எனவே தான் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் திரணியற்ற அமைச்சர் போராடுபவர்களைப் பார்த்து மனநோயாளிகள் என்று கூறியுள்ளார்.

அதேபோல் தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா, பாம்புகள் நசுக்கப்படுகின்றன, எனவேதான் அதன் குட்டிகள் அலறுகின்றன என்று கூறியுள்ளார். அதாவது உமரும், இமாமும் பாம்புகள் அவர்களுக்காகப் போராடுகிறவர்கள் அனைவரும் அதன் குட்டிகள், எனவே உமரையும், இமாமையும் ஆதரிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

உபாவில் கைது செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் உமர் – இமாம் வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையே தொடங்கவில்லை. இருந்தபோதிலும் உமரையும், இமாமையும் பார்த்து பாம்பு என அலறுகிறார் மிஸ்ரா, அவர்களை ஆதரிப்பவர்களை மனநோயாளிகள் என்கிறார் ரிஜிஜூ.  இப்படி கூறுகின்றவர்களின் மூளையில் எத்தகைய விஷம் ஏறியுள்ளது என்பதை அறிய வேண்டுமானால் அவர்கள் யாருடைய வாரிசுகள் என்று தெரிந்து கொண்டால் போதுமானது. எனவே கோட்சேவின் வாரிசுகளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பின்னர் உமரையும், இமாமையும் ஆதரிப்பவர்களுக்கு வரலாம்.

பொதுவாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளே நடத்தப்படும் மாணவர்கள் போராட்டத்திற்கு போலீசு அனுமதி பெறவேண்டியதில்லை. ஒருவேளை அப்போராட்டத்தில் தவறுகள் நடந்தால் கல்லூரி நிர்வாகமே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம்.அது முழுக்க முழுக்க கல்லூரி முதல்வர்கள், துணைவேந்தர்களின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது.

ஜேஎன்யு பல்வேறு இன, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு இடமாக இருந்து வருகிறது. அதேபோல் பல்வேறு கருத்துக்களை கொண்ட மாணவர்களும், அவர்களுக்கான அமைப்புகளும் இருக்கின்றன. அந்தவகையில் தத்தமது கருத்துக்களை உயர்த்திப் பிடிக்கும் அமைப்புகளுடன் இணைந்து தங்களுடைய கருத்துக்களை மேலும் தெளிவடையச் செய்வதும், வளர்த்துக் கொள்வதும் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் காவி பாசிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்களை மட்டுமே பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் நியமித்து வருகிறது. அந்தவகையில் ஜேஎன்யு துணைவேந்தர் ஒரு ஆர்எஸ்எஸ் சங்கி என்பதால் பாஜக கும்பலுடன் சேர்ந்து கொண்டு உமர் – இமாமை ஆதரித்துப் போராடிய மாணவர்கள் மீது தில்லி போலீசிடம் புகார் அளித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை என்பது பாசிச கருத்துக்களுக்கு எதிராக வரும் எந்தவொரு கருத்தையும் அனுமதிக்காமல் முடக்குவதேயன்றி வேறொன்றுமில்லை.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிராக போராடும் அதேவேளையில் கல்வியையும், கல்விக் கூடங்களையும் காவிமயமாக்கப்படுவதற்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே எதிர்காலம் ஏழை, எளிய உழைக்கும் மக்களின் வசப்படும், இல்லையென்றால் பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் செல்வதை தவிர்க முடியாது என்பதை உணர்ந்து கல்வியாளர்கள், பகுத்தறிவாளர்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

– மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன