அணுசக்தி மசோதா : அமெரிக்காவின் இலாப வெறிக்கு அடிமை சேவகம் செய்யும் மோடி அரசு!

டிசம்பர் 2, 1984 அன்று போபாலிலுள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மெத்தில் ஐசோ சயனைட் வாயு 20,000 மக்களை படுகொலை செய்து 41 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அங்கு உயிருடன் இருக்கும் மக்களோ பிள்ளைகளை பறிகொடுத்து, ஊனமுற்ற பேரப் பிள்ளைகளை சுமந்தபடி, சுமார் 41 ஆண்டுகளாக நம் கண் முன்னே சாட்சிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த கொடூரப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்கள் நம்மிடம் வலியுறுத்திக் கூறும் விசயம் என்னவென்றால் ”மீண்டும் இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழாமல் இருப்பதை நாட்டு மக்களும், அரசும் உறுதி செய்ய வேண்டும்” என்பது தான்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மோடி அரசோ, இப்பேரழிவிலிருந்து பாடங்கற்றுக் கொண்டு நாட்டு மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் உத்திரவாதம் செய்யும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதில், முழுக்க முழுக்க அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலாப வெறிக்காக அணுசக்தி சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன், அம்மசோதாவிற்கு ’சாந்தி’ எனப் பெயரிட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய அணுசக்தி சட்டத்தை திருத்துவதற்கு கடந்த இருபது ஆண்டுகளாக காய் நகர்த்தி வருகிறது. அமெரிக்க அடிமையான மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் அதாவது 2005-ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும்-இந்தியாவிற்கும் இடையே கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயர் 123 ஒப்பந்தமாகும். அமெரிக்காவின் சிறந்த அடிமையாக முன்நிறுத்திவரும் மோடி அரசு, பழைய 123 ஒப்பந்தத்தைதான் தற்போது “சாந்தி” எனும் பெயரில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

பழைய அணுசக்தி சட்டத்தைத் திருத்துவதற்காக மோடி அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயலாற்றி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்திய அணுசக்தி துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சிறிய இரக அணு உலைகளுக்காக 20,000 கோடி நிதி ஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடியோ அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் “சாந்தி” மசோதாவிற்கு அச்சாரமிட்டார்.

டிரம்ப்-மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது அதில் பேசிய டிரம்ப், ”இந்தியச் சந்தையில் மேம்பட்ட அமெரிக்க அணுசக்தித் தொழில்நுட்பத்தை வரவேற்பதற்காக இந்தியாவும் தனது சட்டங்களைத் திருத்தி வருகிறது. இத்திருத்தம் அமெரிக்க சிவில் அணுசக்தித் துறைக்கு பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை ஈட்டித் தரும் என்றார். இவ்வாறு மான ஈனமற்ற அமெரிக்க அடிமைத் தனத்திற்கு மோடி அரசு புதிய இலக்கணம் படைத்து வருகிறது என்பதற்கு இவையே சாட்சிகளாக உள்ளன.

இதுமட்டுமின்றி இந்திய நாடாளுமன்றத்தில் “சாந்தி” மசோதா நிறைவேறிய இரண்டே நாட்களில், அமெரிக்க அதிபர் டிரம்ப்,  அமெரிக்க தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்நாட்டின் இந்தச் சட்டம், அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலரை இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவும், இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி பொறுப்பு விதிகளை சர்வதேச விதிகளுடன் இணைத்து செயலாற்றவும் வழிவகுக்கிறது.

மேலும் இம்மசோதா நிறைவேறிய நான்கு நாட்களில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், இம்மசோதா இந்தியாவுடனான அணுசக்தி ஒத்துழைப்பில் ஒரு மைல்கல் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அணுசக்தி தொழில்நுட்பத்தின் வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் ஏதேனும் சிறிய குறைபாடுகள் ஏற்பட்டால் கூட அதிலிருந்து ஏற்படும் கதிரியக்க கசிவு நாடு முழுவதும் பெரும் பேரழிவை ஏற்படுத்தும். இதனால் தான் அணுசக்தி தொழில்நுட்பம் அரசின் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக 1962-இல் அணுசக்தி சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இச்சட்டம் யுரேனிய எரிபொருள் சுழற்சியை தனியார் நிறுவனங்களுக்காக அனுமதியளித்திருக்கிறது.

போபாலை விஞ்சும் படுகொலைகளை நிகழ்த்தினாலும் கூட சல்லிக்காசு செலவில்லாமல், அமெரிக்கா அணு உலை முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக திட்டமிட்டு 1962 மற்றும் 2010 ஆகிய இரண்டு இந்திய அணுசக்தி சட்டங்களையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டு, ”சாந்தி” மசோதாவை மோடி அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் சேர்ந்து உருவாக்கியிருக்கின்றன. இதில் இந்தியாவிற்கு அணு உலைகளைக் கொடுப்பவர்களுக்கு எவ்வித இழப்பீடும் கிடையாது எனவும், அதேவேளையில் அணு உலையை நாட்டில் இயக்குபவர்களுக்கு மட்டுமே இழப்பீடு எனவும் மசோதா மாற்றப்பட்டிருக்கிறது.

பெரியளவிலான அணுவுலை விபத்து நடந்தால் அவ்வுலையின் உற்பத்தித் திறனைப் பொறுத்து ரூ.100 கோடி முதல் ரூ.3000 கோடி வரை இழப்பீடு செலுத்தினால் போதுமானது என்கிறது புதிய மசோதா. இழப்பீடானது சேதத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படாமல் உலையின் திறனின்  அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பது  தனியார் அணு உலை முதலாளிகளுக்கு   சாதகமானதாகும். குறிப்பாக 150 MW  உலைக்கு 100 கோடி, 150 MW–750 MW  உலைக்கு 300 கோடி, 750 MW–1500 MW  உலைக்கு 750 கோடி, 1500 MW- 3600 MW  உலைக்கு 1500 கோடி, 3600 MW  மேல் திறன் கொண்ட உலைக்கு 3000 கோடி என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ஆனால் தனது அமெரிக்க அடிமைத்தனத்தை மறைத்துக் கொள்ளும் பிரதமர் மோடியோ “சாந்தி” மசோதா இந்திய தொழில்நுட்பத் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், செயற்கை நுண்ணறிவு முதல் பசுமை உற்பத்தி வரை இந்த தூய்மையான எரிசக்தி, எதிர்காலத்திற்குத் தீர்க்கமான உந்துதலை அளிக்கும் என்கிறார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதற்காக அணுசக்தி மூலம் வரும் 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்காக இத்துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் “சாந்தி” மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்கிறார் இந்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பராமரிப்பதற்கு மின் உற்பத்தியை பன்மடங்கு பெருக்க வேண்டும் என்பது உண்மை தான் என்ற போதும், அதற்கு அணு மின்சக்தி தான் சிறந்த வழி என்பதும் அதற்காக அமெரிக்க தனியார் நிறுனவங்களின் அணு உலைகளையும், அணுசக்திக்கான மூலப் பொருட்களையும் இறக்குமதி செய்து தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் உண்மையல்ல.

2025-ஆம் ஆண்டு ஜூலை மாத மதிப்பீட்டின் படி, இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி 1,824 பில்லியன் யூனிட் ஆகும். இதில் 56 பில்லியன் யூனிட் மட்டுமே அணு மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது நாட்டின் மொத்தத் தேவையான மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே அணு மின்சக்தி மூலம் பெறப்பட்டிருக்கிறது.

தற்போது இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தி கொள்ளளவான (capacity) 475 ஜிகாவாட்டில், அணு மின்சக்தியின் கொள்ளளவு வெறுமனே 8.7 ஜிகாவாட் தான். இந்தியாவில் தற்சமயம் 24 அணு உலைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. அணு மின்சக்தியின் கொள்ளளவை வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் 22.3 ஜிகா வாட்டாகவும், 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகா வாட்டாகவும் உயர்த்தப் போவதாக பா.ஜ.க அரசு மார்தட்டி வருகிறது.

ஆனால் ஒன்றிய அரசின் மின்சாரத் துறை அமைச்சர் மனோகர் லாலோ, 2047-ஆம் ஆண்டின் போது நாட்டின் மின்சாரத் தேவை 705 ஜிகா வாட்டை எட்டும் என்றும், இந்த மின்சக்தியின் தேவைகளைப்  பூர்த்தி செய்வதற்கு 2047-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து மின்சாரத் திட்டங்களின் கொள்ளளவுகளை 2100 ஜிகா வாட்டாக உயர்த்த வேண்டும் என்கிறார்.

இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முழுமையாகவும், சரியாகவும் அமலானால் கூட, 2047-ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தி கொள்ளளவான 2100 ஜிகா வாட்டில், அணு மின்சக்தியின் மூலம் கிடைக்கும் 100 ஜிகா வாட் கொள்ளளவு என்பது வெறுமனே 4 சதவீதமாகத் தான் இருக்கப் போகிறது. ஆனால் அமெரிக்க அடிமைகளான பா.ஜ.க.வினரோ அணு மின்சக்திதான் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகவும், இன்றியமையாததாகவும் இருக்கப்போகிறது என்று புளுகித் தள்ளுகின்றனர்.

மேலும் காவிக் கும்பல்கள் கூறுவதைப் போல அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பமே உலகிலேயே அதிஉயர் தொழில்நுட்பம் என்பதும் உண்மையல்ல. அமெரிக்காவில் அணு உலை தயாரிப்பில் கோலோச்சி வரும் வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) மற்றும் ஜி.இ (GE) போன்ற நிறுவனங்கள் தனது சொந்த நாட்டிலேயே அணு உலைகளை விற்க முடியாத நிலையில் தான் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. வெஸ்டிங்ஹவுஸ் என்ற அணு உலை நிறுவனம் திவாலாகி 2018-ஆம் ஆண்டில் தான் மீண்டு வந்திருக்கிறது. ஜார்ஜியாவில் உள்ள வோக்டில் அணுமின்நிலையத்தை 2023-ஆம் ஆண்டில் தான் இயக்கத் தொடங்கியுள்ளது. ஜார்ஜியா அரசு மின்நிறுவனம் வெஸ்டிங்ஹவுஸின் AP 1000 எனும் அணு உலையை ஆரம்ப மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து சுமார் 37 பில்லியன் டாலர்கள் செலவில் வாங்கியிருக்கிறது. தென் கரோலினாவில் ஒரு அணு ஆலை 9 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட பிறகு கைவிடப்பட்டது. இப்படி அமெரிக்காவிலேயே போணியாகாத கழித்துக் கட்டப்படும் அணு உலைகள் தான் இந்தியாவில் தலையில் கட்டப்பட இருக்கின்றன. அமெரிக்காவை விட அணுசக்தி உலை தொழில்நுட்பத்தில் பல மடங்கு முன்னேறிய ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து, தனியார் நிறுவனங்களை ஏன் இந்த துறையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பு நடைப்பெற்ற ஜப்பானில் நடந்த பேரழிவு மறக்க முடியாத பேரழிவாக நம் முன்னே இருக்கிறது

ஜப்பானில் டோக்கியோ மின்சார நிறுவனம் (TEPCO) என்ற தனியார் நிறுவனம் தான் புகுஷிமா ஆலையை நடத்தி வந்தது. 2011-ஆம் ஆண்டில் நடந்த புகுஷிமா பேரழிவுக்குப் பிறகு நடந்த விசாரனையின் போது TEPCO நிறுவனத்தின் முதலாளித்துவ இலாபவெறி அம்பலமாகியது. சுனாமி மற்றும் பேரலைகளைப் பொருட்படுத்தாமால் தான் TEPCO நிறுவனம் புகுஷிமாவில் அணு உலையைக் கட்டியிருக்கிறது. பேரழிவுக்கு முன்பு TEPCO பல ஆண்டுகளாக விபத்து குறித்து எந்தவித ஆய்வும் நடத்தவில்லை என்பதும் தெரியவந்தது.

சுனாமி பேரலைகள், அணு உலைக்குள் புகுந்து குளிர்விப்பான் செயல்படாமல் போனதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடல் நீரைப் பயன்படுத்தி உலையைக் குளிர்விக்க முயன்ற போது, உப்பு நீரால் அணு உலை நிரந்தரமாக சேதமாகும். இதனால் தனக்கு பொருளாதாரம் நட்டமாகும் என TEPCO நிறுவனம் தனது முதலாளித்துவ இலாப வெறிக்காக ஆரம்பத்தில் தயக்கம் காட்டியது. வரவிருக்கும் மிகப்பெரிய விபரீதம் கண்டு அஞ்சிய ஜப்பான் அரசு, உலையை நிரந்தரமாக மூடுவது என்ற முடிவெடுத்தப் பிறகு தான் கடல் நீரை பயன்படுத்தி உலையை குளிர்வித்தனர்.

பேரழிவுக்கு பிறகும் TEPCO கதிர்வீச்சு பாதிப்புகளை குறைத்து மதிப்பீடு செய்தது. இழப்பீட்டிற்கான நிதியை குறைக்க முயன்ற சம்பவங்கள் அம்பலமாகின. இறுதியில் ஜப்பான் அரசு TEPCO-வை தேசியமயமாக்கியது. 14 ஆண்டுகளுக்கு பிறகும் புகுஷிமாவைச் சுற்றியுள்ள இடங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலங்களாகவே உள்ளன. புகுஷிமாவின் பேரழிவை சமாளிப்பதற்கு ஆகும் செலவு சுமார் 728 பில்லியன் டாலர் என ஜப்பான் அரசு மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜப்பான் அரசு, அணு உலையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அந்நாட்டையும், மக்களையும் பேரழிவுக்கு தள்ளியது

தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் நடந்த போபால் துயரமும், ஜப்பானின் புகுஷிமா துயரமும் நம் கண் முன்னே சாட்சியாக உள்ளன. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் மோடி அரசு, அமெரிக்க முதலாளிகளின் இலாபமே முக்கியம் என “சாந்தி” மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் வாங்கி விட்டது.

போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ஒரு ஆண்டர்சன் என்றால் “சாந்தி” மசோதாவின் மூலம் பல ஆண்டர்சன்கள் இந்தியாவிற்குள் நுழையவிருக்கிறார்கள். ஜப்பானில் புகுஷிமா போல, இந்தியாவில் போபால் போல நாட்டின் ஒரு பகுதியை மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் ”சாந்தி”குள் அழைந்து செல்வதற்கே இந்த மசோதா என்பதைப் புரிந்துகொண்டு உழைக்கும் மக்களும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்தியாவிற்குள் நுழையவிடாமல் விரட்டியடிக்கத் தயாராகுவோம்.

  • தாமிரபரணி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. அடுத்த ஆண்டர்சன் நம்ம மோடிஜி தான், இன்னும் எத்தனை அப்பாவி மக்களை கொள்ள போகிறார்களோ தமிழகமே விழித்துக் கொள் போராடு !