புல்டோசர் ஆட்சியை விரிவுபடுத்தும்
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்!

சமீபத்தில் நடந்து முடித்த பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம், ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன. இது இந்தியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி தேசகூ-வை வீழ்த்தி வெற்றிபெறும் என்ற ஆருடங்களை தவிடுபொடியாக்கியுள்ளது.

பீகார் தேர்தலில் காவி பாசிச கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக இருந்தது எது? அவர்கள் முன்னெடுத்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தமா? ( SIR), வெறுப்பு அரசியலா? இலவசங்களா?

இந்தத் தேர்தலில் காவி பாசிஸ்டுகள் இவையனைத்தையும் பயன்படுத்தித்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  SIR நடைமுறையின் மூலம் பல இலட்சம் வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்தும், தங்களுக்கு ஆதரவாக புதிதாகப் பல இலட்சம் போலி வாக்காளர்களைச் சேர்த்தும் மிகப்பெரிய மோசடியைச் செய்தார்கள். தேர்தல் நடத்தை விதிகளை மீறி 75 இலட்சம் பெண் வாக்காளர்களின் வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய் பணத்தை, நலத் திட்டம் என்கிற பெயரில் செலுத்தினார்கள். அதேபோல் அமித்ஷா, ராஜ்நாத்சிங், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வழமையான வெறுப்பு அரசியலையே பிரதான பிரச்சாரமாகக் கொண்டிருந்தார்கள். அதனை தற்பொழுது நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள்.

உபியில் முன்வைத்த அதே வெறுப்பு அரசியலைத் தான் யோகி ஆதித்யநாத் மீண்டும் தனது பீகார் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார். அதாவது உத்தர பிரதேசத்தைப் போல் பீகாரிலும் ரவுடிகளின் வீடுகள் புல்டோசரால் தகர்க்கப்படும் என்றும், அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவோம் என்று கூறிய வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியதுபோல் பீகாரிலுள்ள சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு கோவிலைக் கட்டி, இராம ஜானகி பாதை வழியாக அந்தக் கோவிலை அயோத்தியுடன் இணைப்போம் என்றும், குற்றவாளிகளையும், ஊடுருவல்காரர்களையும் அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

அதேபோல் பீகாரில் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்காளதேசத்தினர், இங்குள்ள மக்களின் வேலைவாய்ப்புகளைப் பறித்துக்கொண்டனர் என்றும், இவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். மேலும் பீகாரை ஊடுருவல்காரர் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்றும் கூறியுள்ளார்.

ஒருபடி மேலே சென்று, ஒன்றிய அமைச்சர் லாலன் சிங், பீகாரில் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் தேர்தல் நாளில் நடமாட முடியாது என வாக்காளர்களை நேரடியாகவே மிரட்டியுள்ளார்.

அமித்ஷா, ஆதித்யநாத், லாலன் ஆகியோரின் பேச்சுக்கள் அப்பட்டமான வெறுப்பு அரசியல் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஏற்கனவே  NRC-யை அமல்படுத்த முடியாத நிலையில், குறுக்கு வழியில் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி  SIR-இன் மூலம்  NRC-யை திணித்து வருகிறார்கள். இதன்மூலம் மதச் சிறுபான்மையினர், ஜனநாய சக்திகள், பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் என அனைவரையும் நீக்குவதற்கும், அதன் தொடர்ச்சியாக நீக்கப்பட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்வதற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை பீகார் தேர்தலுக்கு முன்பாக பார்த்தோம். இது தற்பொழுது தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ”புல்டோசர் பாபா” என்று செல்லமாக அழைப்பது பற்றி பாஜகவினர் சிறிதும் வெட்கப்படுவதில்லை. மாறாக அதனைப் பெருமையின் அடையாளமாகவே கருதுகின்றனர். எனவே தான் இவர்கள் உபியில் இஸ்லாமியர்களின் வீடுகளையும், தில்லியில் சி.ஏ.ஏ போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் வீடுகளையும், ஆர்.டி.ஐ செயற்பாட்டாளர்களின் வீடுகளையும், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களின் வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் பீகாரிலும் தொடரும் என்று தேர்தல் பரப்புரையின் பொழுது ஆதித்யநாத் பேசியுள்ளார்.

பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே புல்டோசர் ஆட்சியை அமல்படுத்தியும் விட்டார்கள். உபியில் ரௌவுடிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது போல பீகாரிலும் நில மாஃபியா, மணல் மாஃபியா மற்றும் பிற முக்கிய குற்றவாளிகள் உட்படச் சட்டவிரோத சொத்துக்களைக் குவித்த 1,600 பிரபல குற்றவாளிகளின் பட்டியலைத் தயார் செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு நிலங்களைத் தவிர பிற இடங்களை இடிக்கக்கூடாது. அது ரௌடிகளின் இடமாக இருந்தாலும் இடிக்கக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் பீகார் ரௌடிகள் சிலரின் வீடுகளைப் புல்டோசர் மூலம் இடித்துள்ளனர்.

இது சரியான நடவடிக்கை என்று ஒருபுறம் மக்களை நம்பவைத்துவிட்டு மறுபுறம் ஆக்கிரமிப்பு இடங்களை இடிப்பதாகக்கூறி ஏழை, எளிய மக்களின் வீடுகளையும், கடைகளையும் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி புல்டோசரைக் கொண்டு இடித்துள்ளனர்.

இவையனைத்தும் சிறிய இடங்களிலும், தள்ளுவண்டியிலும் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் எளிய மக்கள். வாழ்நாள் சேமிப்பான வீடுகளை இழந்த மக்கள் இனி எங்குத் தங்குவது, எப்படி மீண்டும் தங்களுடைய வாழ்க்கையைப் புனரமைத்துக் கொள்வது என்பதறியாமல் அழுது புலம்புவது காதுகளை இரணமாக்குகின்றன.

இதனை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத காவிக் கும்பல் தள்ளுவண்டிக் கடைகளைக்கூட புல்டோசரை கொண்டு நொறுக்குவதும், ஆக்கிரமிப்பில் உள்ள பெரிய கட்டிடங்கள் எதையும் இடிக்கப்படாமல் இருப்பதும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான  நடவடிக்கையாகத் தெரியவில்லை. மாறாக இது ஏழை, எளிய நடுத்தர மக்களையும், சிறுபான்மையினர், ஜனநாயக சக்திகள், பாஜகவிற்கு எதிராகப் போராடுபவர்கள் என அனைவரையும் உபியில் எப்படி அடித்து ஒடுக்கிக் காவி பாசிசத்தை நிறுவினார்களோ அதைப்போலவே பீகாரிலும் நிறுவ முயன்று வருகின்றனர் என்பதையே காட்டுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மதச்சிறுபான்மையினரை ”ஊடுருவல்காரர்கள்” என அமித்ஷா பேசியதும், ஓட்டுப்போடுவதும், போடாமல் இருப்பதும் மக்களின் ஜனநாயக உரிமை என்பதை கிஞ்சித்தும் மதிக்காத பாஜக ஒன்றிய அமைச்சர் லாலன் சிங் பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் நடமாடமுடியாது என்று ஜனநாய சக்திகளை மிரட்டியதும் பாசிசத்தை நிறுவத்துடிக்கும் காவிக் கும்பலின் வெறுப்பு அரசியலன்றி வேறல்ல.

ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் உபியில் புல்டோசர் ஆட்சியை நிறுவியதைப்போன்று பீகாரிலும் நிறுவும் வேலையைத் தொடங்கிவிட்டனர். இதனைப் பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்குத் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல என்பதனைப் புரிந்துகொண்டு நீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி, பாசிசத்திற்கு எதிரான வழுவான கூட்டணி என்ற மாய்மாலத்திற்கு இறையாகாமல் தமிழகத்தில் புல்டோசர் ஆட்சி நிறுவப்படும் வரை காத்துக்கொண்டு இருக்காமல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கிப் போராடும் பொழுதுதான் தடுத்து நிறுத்த முடியும்.

  • மகேஷ் 

செய்தி ஆதாரம்:

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன