“இன்றைக்கு நவீன யுகத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகளாக இருக்கும் பல்வேறு விசயங்கள், அப்போது வேத கால ரிஷிகள் வாய்வழியாகக் கற்பித்ததுதான்“ பண்டைய இந்தியாவின் பெருமை பேசுகிறேன் எனக் கூறித் திரியும் காவிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் வார்த்தைகள் இவை.
இதனை இவர்கள் வெறுமனே பேசுவதோடு நிற்பதில்லை. அடுத்தடுத்து செயலிலும் இறங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு யூடியூப் காணொளிகளில் ஒரு விளம்பரத்தை நாம் அடிக்கடிக் காண முடியும். “உங்கள் குழந்தை கணிதம் கற்றுக் கொள்ள மிகவும் கஷ்டபடுகிறாளா, அவளை உடனடியாக வேத கணித வகுப்பில் சேர்த்துவிடுங்கள்” என 200 ருபாய் தொடங்கி தனியார் சிபிஎஸ்சி பள்ளிகளில் மாத்ந்தோரும் சில ஆயிரங்களை வசூல் செய்வது வரை வேத கணிதம் இன்றைக்கு ஒரு பெரிய வணிகப் பொருளாகியிருக்கிறது. காவிகளைப் பொறுத்தவரை பிரச்சாரத்துக்குப் பிரச்சாரமும் ஆயிற்று பணமும் சம்பாதித்தாயிற்று என வேத கணிதப் பிரச்சாரத்தை கண ஜோராக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வேதகணிதம் மற்றும் ஜோதிடம் ஆகிய பாடங்கள், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் கல்விப்புலத்திற்குள் திணிப்பதற்கான வேலைகள் தொடங்கியது. அடுத்தப் பத்தாண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாடங்களாக்கப்பட்டன. மோடியின் பதினோரு ஆண்டுக்கால ஆட்சியில் தற்போது பண்டைய அறிவு மரபு என்ற புராணப் புனைவுகளும் பொய்க்கதைகளும் அறிவியலாகக் கல்விக்குள் திணிப்பதை ஒருங்கிணைந்த முறையில் முழுவீச்சோடு செய்து வருகிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் (2020) வழிகாட்டுதல் படி, நடப்பு கல்வியாண்டிலிருந்து உத்திரப்பிரதேசத்திலுள்ள மத்திய/மாநில அரசின் பாடத்திட்டத்தினை பின்பற்றும் பள்ளிகளில் வேதகணிதம் என்ற தனிப்பாடத்தினை அமல்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது யோகி அரசாங்கம். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் “மாணவர்கள் பயமின்றி வேகமாக கணக்கீடுகளைப் போடுவதற்கும் இந்திய அறிவியல் மரபை அறிந்து கொள்வதற்கும் இது உதவியாக இருக்கும்” என்கின்றனர். சமீபத்தில் யுஜிசி வெளியிட்ட இளங்கலை கணிதப் பாடத்திட்டத்தில் கூட வேதகணிதத்தை ஒரு பாடமாகச் சேர்த்துள்ளது மோடி அரசாங்கம்.
ஆனால் கணித ஆராய்ச்சியாளர்களோ, வேதகணிதமென்பது ஒரு கணித அறிவியலுமல்ல வேதங்களில் சொல்லப்பட்டதும் அல்ல, கூட்டல், கழித்தல் போன்ற அடிப்படைக் கணக்கீடுகளை செய்வதற்கான எளிய வழிமுறைகளின் தொகுப்பு என்கின்றனர்.
வேத கணிதம் என்ற புத்தகம் முதன் முதலில் 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கு முன்பு வேத கணிதம் என்ற பெயர் கணித அறிவியல் வட்டாரங்களில் பரவலாகக் கிடையாது. இப்புத்தகத்தின் ஆசிரியரான பாரதி கிருஷ்ண தீர்த்தா பூரி கோவர்த்தன மடத்தின் சங்கராச்சாரியாராக இருந்தவர் (1925-1960). ஆங்கில கல்வி முறையில் மேற்படிப்பு வரை படித்தவர். கூட்டல் கழித்தல் போன்ற கணக்கீடுகளைச் செய்வதற்கு தான் கண்டறிந்த எளிய வழிமுறைகளை வேதணிதம் என்று பெயரிட்டு தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்துவந்தார். இதனை அதர்வண வேதத்திலிருந்து கண்டறிந்ததாகவும் கூறிக்கொண்டார்.
ஆனால் அதர்வண வேதத்தின் எந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டது? எந்த ஸ்லோகம் இக்கணித முறைகளைப் பற்றி கூறுகிறது என்ற ஆதாரங்களை பாரதி கிருஷ்ணா வெளியிடவே இல்லை. இந்திய கணித வரலாற்று ஆய்வாளரான பேராசிரியர் சுக்லா, ஒரு முறை பாரதி கிருஷ்ண தீர்த்தாவை நேரில் சந்தித்து அதர்வண வேதத்தின் புத்தகத்தை கொடுத்து வேத கணித சூத்திரங்களுக்கான ஆதாரத்தைக் காட்டுமாறு கேட்டபோது, என்னிடம் உள்ள அதர்வண வேத புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மற்ற அதர்வண வேத புத்தகங்களில் இல்லை என்றும் கூறி ஆதாரத்தைக் காட்ட மறுத்துவிட்டார். மேலும் அதர்வண வேதத்தில் கணக்கீடுகளுக்கான ஸ்லோகங்கள் எதுவும் இல்லை என்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தி விட்டனர். பிறகு இந்தக் கணிதத்திற்கும் வேதத்திற்கும் என்ன தொடர்பு? செத்துப்போன சங்கராச்சாரி உயிரோடு வந்தால்தான் இதற்கு பதில் கிடைக்கும்.
ஆனால் சங்கராச்சாரியின் சீடர்கள் இந்த வேதகணித கட்டுக்கதையை விடுவதாக இல்லை. பாரதி கிருஷ்ண தீர்த்தாவின் சீடரும் வேத கணிதப் புத்தகத்தை வெளியிட்டவருமான மஞ்சுளா திரிவேதி, இப்புத்தகத்திற்குத் தான் எழுதிய முன்னுரையில், அதர்வண வேதத்தில் சிதறிக்கிடக்கும் விசயங்களிலிருந்து பெறப்பட்ட உள்ளுணர்வின் அடிப்படையிலும், தீவிர ஆராய்ச்சி மற்றும் சிருங்கேரியைச் சுற்றியுள்ள காடுகளில் சுமார் எட்டு ஆண்டுகள் செய்த தபஸ்-இன் மூலமாகவும் ‘குருதேவர்’ இதனை உருவாக்கியதாகக் கூறுகிறார்.
அதர்வண வேதம் குறித்து ஆய்வுகளைத் தாண்டி, அதில் சொல்லப்பட்டுள்ள கணித சூத்திரங்களை புரிந்து கொள்வதற்கு ஒருவர் எட்டு ஆண்டுகள் தவம் செய்ய வேண்டும். இதுதான் மஞ்சுளா திரிவேதி கூறுவது. இந்திய அறிவு மரபு குறித்து பெருமை பேசுகின்றவர்கள் மற்றும் படித்த சங்கிகளின் வாதமும் இதுதான்.
உதாரணமாக ராமாயண காலத்திலேயே புஷ்பக விமானம் இருந்தது என்று மோடி பேசுகிறார். அந்த விமான உருவாக்கத்திற்குத் தேவையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் இருந்ததிற்கான ஆதாரங்கள் கேட்டால், எதாவது ஒரு சமஸ்கிருத புத்தகத்தை மேற்கோள்காட்டுகின்றனர். அப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு ஆகாய விமானம் உருவாக்க முடியாது என்று நிரூபித்தால், உடனே கடுமையான தவத்தின் மூலமாகப் பெற்ற அறிவைக் கொண்டு முன்னோர்கள் விமானத்தை உருவாக்கினர் என்று எளிமையாகக் கடந்து விடுகின்றனர். பண்டைய அறிவியலையே யோகம், தவம், வேதம், காலம், ஆன்மீகம், இந்துமதம் போன்ற முலாம்களைப் பூசி கேள்வி எழுப்புவதற்கும் ஆதாரங்களுக்கும் அப்பாற்பட்டதாக்கி அவை குறித்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை வெறும் நம்பிக்கை மட்டுமே முக்கியம் என்கின்றனர்.
இதே வேலையைத் தான் பூரி மடத்தின் சங்கராச்சாரியும் அவரது சீடர் மஞ்சுளாவும் வேதகணிதத்திற்கு செய்துள்ளனர். அதர்வண வேதத்தில் இல்லாத ஒன்றை இருந்ததாகவும் அதைக் கடுமையான தவத்தின் மூலமாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் ஒரு கதையை உருவாக்கி வேதகணிதம் என்ற பிரச்சாரத்தை இத்தனை வருடங்களாகச் செய்து வருகின்றனர்.
ஒரு சமூகத்தின் வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதன் பொருளாதாய உற்பத்தி நிலைக்கு ஏற்றார் போல அச்சமூகத்தின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்கும். பிற நாடுகளைப் போலவே பண்டைய இந்தியச் சமூகத்திலும் கணித மற்றும் வானியல் குறித்த குறிப்புகளும் விவரங்களும் பலரால் எழுதப்பட்டுள்ளன. இவற்றைப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், வேதம்-ஆன்மீகம்-சனாதன தர்மம் என்று தங்களுடைய காவி பாசிச அரசியல் பரப்புரைக்கான ஒரு திட்டமாக பயன்படுத்தி வருகிறது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்.
- செல்வம்




