மீண்டும் 50 இந்தியர்களை, சட்டவிரோதக் குடியேறிகள் எனக் கூறி, கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, 15 மணி நேரம் தண்ணீர் கூடக் கொடுக்காமல் விலங்குகளை அடைப்பது போல அடைத்துக் கொண்டுவந்து இந்தியாவில் விட்டுச் சென்றுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் மனிதத்தன்மையற்ற இந்தச் செயலைக் கண்டிக்கக் கூட துப்பில்லாமல் வாய்மூடி மௌனமாக இருக்கிறது மோடி அரசு.
இந்த ஆண்டில் மட்டும், நான்காவது முறையாக அமெரிக்கா இவ்வாறு இந்தியர்களை விலங்கிட்டுத் திருப்பி அனுப்பியிருக்கிறது. இதற்கு முன்பு நடந்தது போலவே அமெரிக்காவிலிருந்து விமானம் புறப்பட்ட பிறகே இந்திய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். பயணிகள் விமானத்திற்குப் பதிலாக, சரக்குகளைக் கொண்டு செல்லும், இராணுவ விமானங்களையே பயன்படுத்தியிருக்கின்றனர். இந்த முறையும் இந்திய அரசு இதற்கு எதிராக முனுமுனுக்கக் கூட இல்லை.
இந்தியர்களைப் போன்றே சீனர்களும் கணிசமான அளவில் அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டவர்களாவர். இந்தியர்களைத் தொடர்ந்து இராணுவ விமானங்களில் விலங்கிட்டு அழைத்து வருவதைப் போல சீனர்களை அமெரிக்கா திருப்பி அனுப்புவதில்லை. பயணிகள் விமானங்களில் தான் அவர்களை அனுப்பிவைக்கிறது அதுவும் சீன அரசின் முன் அனுமதியுடன் தான் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மிகவும் சிறிய நாடுகளான பனாமா, மெக்சிக்கோ போன்ற நாடுகள் கூட தங்களது நாட்டினர் அமெரிக்காவின் இராணுவ விமானங்களில் விலங்கிட்டு அழைத்துவரப்படுவதை எதிர்த்ததால், தற்போது அந்நாட்டவர் பயணிகள் விமானத்தில் அழைத்து வரப்படுகின்றனர். எனில் இந்தியர்களை மட்டும் ஏன் அமெரிக்கா இவ்வாறு இழிவுபடுத்துகிறது? ஏனென்றால் இந்திய ஆட்சியாளர்களின் அமெரிக்க அடிவருடித்தனம் தான் இதற்கு முதன்மையான காரணம்.
அதற்குச் சமீபத்திய உதாரணம்தான் இரஷ்ய எண்ணெய், உக்ரைனுடனான போரை இரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவேற்ற இரஷ்ய அதிபர் புடின் தயாராக இல்லை. ஆகையால் இரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க நினைத்த அமெரிக்கா, இரஷ்யாவின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை தருகின்ற எண்ணெய் ஏற்றுமதியைத் தடை செய்ய நினைத்தது, அதன்படி இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது என உலக நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டது.
இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் உலக அளவில் மூன்று நாடுகள் முன்னணியில் இருந்தன. இந்தியா, சீனா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகள்தான் அவை. இரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதியில் 47 சதவீதத்தை சீனாவும், 38 சதவீதத்தை இந்தியாவும் வாங்கிக் கொண்டிருந்தன. துருக்கியின் இறக்குமதி அளவு 6 சதவிதம்தான் என்றாலும் அது தனது இரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மிக வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் மற்ற இரண்டு நாடுகளையும் தவிர்த்துவிட்டு இந்தியா மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீது 50 சதவிகித வரிகளை விதித்தார் டிரம்ப். ஏனென்றால் இந்திய ஆட்சியாளர்கள்தான் எவ்வளவு அடித்தாலும் அதனை தாங்கிக் கொண்டு, மீண்டும் தன் காலடியில் வந்து விழுவார்கள் என அமெரிக்கா நினைத்தது.
அது சரியென்று தற்போது மோடி அரசு நிரூபித்திருக்கிறது. இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தற்போது படிப்படியாக குறைத்து, இன்னும் இரண்டு மாதங்களில் முற்றிலுமாக நிறுத்தப்போகிறது இந்தியா. இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டுவிட்ட நிலையில் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய இரஷ்ய எண்ணெய் இறக்குமதியாளரான ரிலையன்ஸ் நிறுவனமும், இரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் அரசின் கொள்கை முடிவுகளுக்குத் தகுந்தபடி எண்ணெய் இறக்குமதி செய்தது போன்றே தற்போதும் மாறியுள்ள அரசின் முடிவுகளுக்குத் தக்கபடி தங்களது முடிவுகளையும் மாற்றிக்கொண்டுள்ளதாக கூறியிருக்கிறது. அதாவது கடந்த காலத்தில் இரஷ்ய எண்ணெயை வாங்க வேண்டும் என அரசு எடுத்த முடிவின் அடிப்படையில்தான் தாங்கள் வாங்கியதாகவும். தற்போது அரசின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தப்போவதாகவும் ரிலையன்ஸ் கூறுகிறது.
இரஷ்ய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லூகாயில் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு கொண்டுவந்த பொருளாதாரத் தடையின் காரணமாகத்தான் அந்நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக முதலாளித்துவ பத்திரிக்கைகள் இந்திய அரசின் கொள்கை முடிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்குச் சப்பைக் கட்டு கட்டுகின்றன. இந்த சூழ்நிலையில் சீனா என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை இவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள்.
இரஷ்ய எண்ணெயின் மிகப்பெரிய இறக்குமதியாளரான சீனாவும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டுள்ள இரண்டு இரஷ்ய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை இரத்து செய்வது குறித்துப் பரிசீலித்து வருகிறது. ஆனால் அதே சமயம், சீனா, கடந்த ஒன்பது மாதங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இரஷ்ய எண்ணெயை வாங்கி இருப்பில் வைத்துள்ளது. மாதம் ஒன்றிற்கு 11 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கியிருக்கிறது. இது சௌதி அரேபியாவின் மொத்த உற்பத்தியையும் வாங்கியதற்குச் சமமாகும். தற்போது சீனாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு கிட்டத்தட்ட 1.5 பில்லியன் பேரல்களாகும். இவ்வளவு அதிகப்படியான கச்சா எண்ணெய் கையிருப்பை வைத்திருப்பதன் மூலம் தற்போது இரஷ்ய நிறுவனங்கள் மீதான அமெரிக்க அரசின் தடைக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை தனது நாட்டினைத் தற்காத்துக் கொள்ள சீனாவால் முடியும்.
சீனா தனது நாட்டு மக்கள் தடையின்றிப் பயன்படுத்துவதற்காக இரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியது. இதன்மூலம் தனது மக்கள் நலனைத் தற்காத்துக் கொள்ள, உள்நாட்டுத் தேவையை ஈடுகட்டத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்கா உருவாக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்கத் தயாராக உள்ளது. ஆனால் இந்தியா தனது நாட்டு மக்களுக்காக இரஷ்ய எண்ணெயை வாங்கவில்லை. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மலிவு விலையில் இரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி அதனை சுத்திகரித்து பெட்ரோலாகவும், டீசலாகவும், ஐரோப்பிய சந்தையில் விற்றுக் கொள்ளை இலாபம் அடைவதற்காகவே இந்தியா இரஷ்ய எண்ணெயை வாங்கியது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 90 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட போது, இந்தியா ஒரு பேரலை 60 டாலருக்கு இரஷ்யாவிடமிருந்து வாங்கியது. இந்த மலிவு விலைக் கச்சா எண்ணெயை உள்நாட்டு மக்களுக்கு இந்தியா கொடுக்கவில்லை. இந்தியர்கள் தொடர்ந்து 105 ருபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கிக் கொண்டிருக்க ஐரோப்பாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடிகளை அம்பானி சம்பாதித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் 55 ஆயிரம் கோடி ருபாய் அளவிற்கு இரஷ்ய எண்ணெயின் மூலம் இலாபமாக ஈட்டியிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் தலையீட்டால் இது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப தனது எண்ணெய் வாங்கும் முடிவுகளை இந்தியா மாற்றிக் கொள்வது இது முதல் முறை அல்ல. 2019-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, பெரும்பான்மையாக ஈரானிடமிருந்து வந்துகொண்டிருந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டில் அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தபோது, ஈரானை நிர்பந்திக்க அமெரிக்கா இந்தியாவைப் பயன்படுத்தியது. இந்தியா ஈரானுடனான எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்து செய்து ஒன்றிரண்டு மாதங்களில் ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டது.
இவ்வாறு தனது விசுவாசமான அடிமையாக இந்திய ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதால்தான், அடிமைகளை வழிக்குக் கொண்டுவர, 50 சதவீத வரி என்ற சாட்டையைச் சுழற்றியது, டிரம்ப் அரசு. அமெரிக்க எஜமானர்களின் எண்ணத்திற்குத் தகுந்தபடி இந்திய ஆட்சியாளர்களும் தற்போது நடந்து கொள்கிறார்கள்.
இரஷ்யா, ஈரானுடனான உறவுகளை அமெரிக்காவிற்காக முறித்துக் கொண்டதைப் போன்றே, மற்ற எல்லா வெளிநாட்டு உறவுகளையும் மோடி அரசு, அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறது, சமீபத்தில் எடுத்துள்ள முடிவுகள் அனைத்தும் இதையே பிரதிபலிக்கின்றன.
இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் இதுகாறும் இந்தியாவானது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வந்தது. ஆனால் சமீபத்தில் இஸ்ரேல் அரசுடன் பல்வேறு ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொண்டுள்ள மோடி அரசு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனஅழிப்புப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றது. போரில் பயன்படுத்திய ஆயுதங்களை இந்தியா உற்பத்தி செய்து இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது. அமெரிக்காவின் விருப்பத்திற்கு இணங்கியே இதனை இந்தியா செய்தது.
தற்போது ஆப்கானிஸ்தானிலும் இந்தியா இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இந்தியா ஆப்கானிஸ்தானுடனான எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானுடனான உறவை இந்தியா புதுபித்துக் கொண்டுள்ளது. காபூலில் இந்தியத் தூதரகம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், தாலிபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருக்கிறார். இதற்கு முன்பு எப்போதும் நடந்திராத இந்த நிகழ்வு, மிகத் துரிதமாக மாறியிருக்கும் இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எடுத்துக்காட்டு.
ஆப்கானிஸ்தானின் நண்பனாக இந்தியா மாறியிருப்பதற்கும் அமெரிக்க சார்புதான் முக்கிய காரணமாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பாகிஸ்தான்தான் அமெரிக்கா சார்பாக தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆப்கானில் இருந்த அமெரிக்க படைகளுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு செல்ல பாகிஸ்தான் தான் தாலிபான்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் தாலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்குமான உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் ஆப்கானில் சீனாவின் தலையீடு ஆகியவற்றின் காரணமாக, இந்தப் பகுதியில் அமெரிக்காவின் நலனைப் பாதுகாக்க இந்தியா களமிறங்கியிருக்கிறது. ஏற்கெனவே சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டணியில் அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்த்திருக்கிறது என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இவ்வாறு முதுகெலும்பில்லாமல் அமெரிக்க எஜமானர்களிடம் கூழைக் கும்பிடு போட்டுக் கொண்டிருக்கும் அடிமைகள் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருப்பதால்தான், இந்தியாவைவிட மிகச் சிறிய நாட்டு மக்களுக்குக் கொடுக்கும் மரியாதையைக் கூட இந்தியர்களுக்கு கொடுக்க முடியாது என அமெரிக்க அரசு அடாவடி செய்து வருகிறது.
- அறிவு.





