கடந்த ஞாயிறு அன்று (26-10-2025) மனதின் குரல் (மன்–கி-பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக கூறியிருக்கிறார். மேலும் வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசியுள்ள மோடி, “மாதா பூமி: புத்ரோ அஹம் பிருதிவ்யா என்று வேதங்கள் முழங்கி, பாரதிய கலாச்சாரத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தன. பங்கிம் சந்திரர், வந்தே மாதரம் பாடலை எழுதி, தாய்த்திருநாட்டிற்கும், அதன் குழந்தைகளுக்கும் இடையேயான உறவினை, உணர்வு உலகில் ஒரு மந்திரத்தின் வடிவிலே இறுகப் பிணைத்தார்.” என வேதங்களில் கூறப்பட்டுள்ள பாரத கலாச்சார அடித்தளத்தை வந்தே மாதரம் பாடல் பிரதிபலிப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி “வந்தே மாதரம் என்ற கோஷம், 140 கோடி நாட்டு மக்களுக்குள்ளே ஒற்றுமை சக்தியை நிரப்பி விடுகிறது. தேசபக்தி, பாரத தாயின் அன்பு, சொற்களுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்றால், வந்தே மாதரம் அந்த வெளிப்படுத்த இயலாத உணர்வுகளுக்கு வடிவம் தரும் பாடலாகும். பல நூற்றாண்டுக்கால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் இதனை இயற்றினார்.” என்றும் கூறியிருக்கிறார். மோடியின் அழைப்பிற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் சூடுபிடித்திருக்கிறது.
வந்தே மாதரம் பாடலை வைத்து இஸ்லாமிய வெறுப்பைப் பிரச்சாரம் செய்வது காவி பாசிசக் கும்பலுக்குப் புதிதல்ல. பசுவதை, அயோத்தி, காஷ்மீர் பிரச்சனைகளைப் போன்று வெறுப்பை விதைப்பதற்கு, வந்தே மாதரமும் பாசிசக் கும்பலின் முக்கிய ஆயுதமாக இருக்கிறது. இந்தப் பாடலில் பாரதமாதாவை இந்து மதக் கடவுள்களான துர்கையுடனும், இலட்சுமியுடனும் உருவகப்படுத்தி எழுதப்பட்டிருப்பதால் இஸ்லாமியர்கள் பலர் வந்தே மாதரம் பாடலைப் பாட மறுக்கின்றனர். இதனைச் சாக்காக வைத்து இஸ்லாமியர்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். வந்தே மாதரம் பாடதவர்கள் பாகிஸ்தானுக்குப் போங்கள் என விசத்தைக் கக்குகின்றனர்.
இந்தப் பாடல் குறித்த மோடியின் புகழுரையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் இரண்டு உள்ளது. முதலாவது, இந்தப் பாடல் பல நூற்றாண்டுகால அடிமைத்தனத்தில் சிதைந்து போயிருந்த பாரதத்தில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்த இந்தப் பாடலை பங்கிம் சந்திரர் இயற்றியதாக மோடி கூறியிருக்கிறார். இங்கே பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் என்று மோடி கூறுவது ஆங்கிலேயர்களால் நம் நாடு அடிமைப்படுத்தப்பட்டதை அல்ல. முகலாயர்களது ஆட்சியைத்தான் அவர் பல நூற்றாண்டுகால அடிமைத்தனம் என்கிறார். இரண்டாவது இஸ்லாமிய ஆட்சியாளர்களின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்த இந்துக்களை வேதங்கள் கூறிய கலாச்சாரத்தை முன்னிறுத்தி இந்தப் பாடல் ஒன்றுபடுத்தியது என்று மோடி தனது உரையில் கூறியிருக்கிறார்.
இதுதான் காவிபாசிஸ்டுகள் திரும்பத் திரும்பக் கூறிவரும், பரப்பிவரும் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலின் அடிப்படை. வேத கலாச்சாரத்தின்படி உலகுக்கே வழிகாட்டியாக வாழ்ந்து வந்த இந்துக்களை வெளியிலிருந்து வந்த இஸ்லாமியர்கள், பலநூற்றாண்டுகள் அடிமைகளாக வைத்திருந்தார்கள் என்றும், மீண்டும் வேதங்கள் கூறுகின்ற கலாச்சாரத்தினை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதைத்தான் அவர்கள் தேசபக்தி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். மோடி கூறுவதைப் போல வேதகாலத்து கலாச்சாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறுவதைத் தவிர “வந்தே மாதரம்” பாடலுக்கும் உண்மையான தேசபக்திக்கும் சம்பந்தமில்லை.
1882-ஆம் ஆண்டு வெளிவந்த “ஆனந்த மடம்” எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் “வந்தே மாதரம்”. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சட்டர்ஜி, 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.
1773-ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாப்பான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்திரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது “வந்தே மாதரம்” பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.
“இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்திவிட வேண்டும்” என்றும், “இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்” என்றும் “நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் இராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!” என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.
“இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை” என்றும் “இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்” என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, “பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!” என்கிறார் பங்கிம் சந்திர சட்டர்ஜி.
முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பன பாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?
வந்தே மாதரம் என்றால் “தாய்க்கு வணக்கம்” என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, இலட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தே மாதரம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.
முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக “ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்” என்றும் “இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்” என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் “வந்தே மாதரம்” பிறந்துள்ளது.
ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, “வந்தே மாதரம்” பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. ஒன்று, சுபாஷ் சந்திரபோஸின் “ஜெய்ஹிந்த்” மற்றொன்று, பகத்சிங்கின் “இன்குலாப் ஜிந்தாபாத்”. 1929-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே “இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக) தான்.
கடந்த 150 ஆண்டுகளாக நாட்டின் பிரிவினையைத் தூண்டுவதற்காக ”வந்தே மாதரம்” பாடல் பாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதேவேளையில் கடந்த 100 ஆண்டுகளாக ஜாதி, மதம், இனம், மொழி, பண்பாடு ஆகியவைகளைக் கடந்து ஒரு வர்க்கமாய் ஒன்றிணைய ”இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கம் ஓங்கி ஒழித்துக் கொண்டிருக்கிறது.
இன்று நம் நாட்டைக் கவ்வியுள்ள காவி கார்ப்பரேட் பாசிசம் என்ற காரிருளைக் கிழித்தெரிய வேண்டும் என்றால், ஒரு வர்க்கமாய் உழைக்கும் மக்கள் அனைவரும் ஏந்தவேண்டிய முழக்கமும் ”இன்குலாப் ஜிந்தாபாத்” இன்றி வேறெதுவாகவும் இருக்க முடியாது.
- அன்பு





இன்றைக்கு நமது முழக்கம் இன்குலாப் ஜிந்தாபாத்தாகவே இருக்க வேண்டும். மீண்டும் புரட்சி கடலாக பல நூற்றுக்கணக்கான பகத்சிங்குளை உருவாக்குகின்ற போராட்ட களத்தை நாம் கட்டியமைக்க வேண்டும்.
அருமையான தெளிவான பதிவு தொடர்ந்து இந்து மதவெறி பாசிஸ்டுகள் இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் எப்படி துரோகம் செய்தார்கள் என்பதை வெளிப்படுத்துகின்ற சித்திரம்