பார்ப்பனிய மேலாதிக்கமே இந்து ராஷ்டிரம்

"2014-இல் மோடி பிரதமரான பின்னர், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.ஸை மோடி வெகுவாக மாற்றிவிட்டார்; பிராமின் - பனியா கட்சி என்பதில் இருந்து மாற்றி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அனைவரையும் முக்கியப் பொறுப்புகளில் கொண்டுவந்து, அனைத்து இந்துக்களையும் உள்ளடக்கியதாக (inclusive) கட்சியை மாற்றிவிட்டார்; பா.ஜ.க. பார்ப்பன கும்பலின் கட்சி என்பதெல்லாம் கடந்த காலப் பேச்சுகள்" - என்று காவி பாசிசக் கும்பல் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், மோடி ஆட்சியின் கீழ் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில் மேலாதிக்கம் புரிவது பார்ப்பன கும்பலும் பார்ப்பனிய சித்தாந்தமுமே

இந்து ராஷ்டிரம் என்பது இசுலாமியர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மட்டுமே எதிரானதல்ல; அது பார்ப்பனிய, வேத, மனுதர்ம ஆட்சியை நவீனவடிவில் நிலைநாட்டுவது; ஆகப் பெரும்பாலான ‘இந்துக்களான’ பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது – என்பதைச் சமீபத்தில் பா.ஜக. ஆளும் மாநிலங்களில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

உத்திரப் பிரதேசத்தில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள எடவஹா எனும் கிராமத்தில், யாதவ சாதியைச் சேர்ந்த முகுந்த் மணி சிங் என்றவொரு ஆன்மீக சொற்பொழிவாளர், அவர் பகவத் கீதையைப் உபதேசம் செய்த ‘குற்றத்திற்காக’, பார்ப்பனர்களால் மொட்டை அடிக்கப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. அவர் மொட்டையடிக்கப்பட்டதோடு, ஒரு பார்ப்பனப் பெண்ணின் காலில் விழவைத்து, பிறகு அவளின் சிறுநீரை அவர் மீது ஊற்றியுள்ளது, பார்ப்பன கும்பல். ஈராயிரம் ஆண்டுகட்கு முந்தைய மனுதர்மம், சூத்திரர்கள் வேதம் ஓதினாலோ, கேட்டாலோ கூட அவர் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்றது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மனுதர்மமோ பகவத் கீதையைப் பாடியதற்காக சிறுநீரை ஊற்றுகிறது. பார்ப்பனிய, மனுதர்ம சித்தாந்தத்தின் மேலாதிக்கம்தான் இந்துராஷ்டிரம் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று தேவை!

இது ஏதோவொரு தனித்த சம்பவமல்ல; பா.ஜக. ஆளும் மாநிலங்களில் – அதாவது இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில் – நாள்தோறும் சூத்திரர்கள், பஞ்சமர்கள் நிகழ்த்தப்படும் தொடர் அநீதியின் சிறுதுளியே!

மத்திய பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தேவிகா படேல் எனும் இடைநிலை சாதியைச் சேர்ந்த ஆன்மீக சொற்பொழிவாளர், பகவத் கீதையை பாடும்போது தடுத்து நிறுத்தப்பட்டு, கொலைமிரட்டலுக்கு ஆளாக்கப்பட்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு ம.பி.யில் யாமினி சாஹு எனும் சொற்பொழிவாளருக்கும் நடந்ததும் இதேதான். யாமினியின் சாதியை குறிப்பிட்டு “நீ கீதை எல்லாம் பாட தேவையில்லை, உன் சாதிக்கான வேலையான முஜ்ரா [அரசர் முன்பு ஆடும் கேளிக்கை நடனம் ] நடனத்தை ஆடு” என அங்கிருந்த பார்ப்பன இளைஞர்களால் மிரட்டப்பட்டார். 2024-இல் பார்ப்பனர்களின் வீடுகளைக் கடந்துசெல்லும் பொழுது பார்ப்பனர்களின் கால்களில் விழுந்து வணங்கவில்லை என யாதவ சாதியைச் சேர்ந்தவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டனர்.

சூத்திர சாதியைச் சேர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல, அமைச்சர்களானாலும் இதேகதிதான்! பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் கல்வித்துறை அமைச்சரான சந்திரசேகர யாதவ் (ஜே.டி.யு.) “ராம்சரித்திரமனாஸ் எனும் [பார்ப்பனிய] நூலில் சூத்திரர்களை இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என விமர்சித்தபோது அவருக்குப் பார்ப்பனர்களின் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. சந்திரசேகர யாதவுக்கு சமஸ்கிரதம் தெரியவில்லை என்றும் அவர் தவறாக வியாக்கியானம் செய்வதாகவும் பா.ஜ.க. கூச்சலிட்டது. எப்போதெல்லாம், பார்ப்பனிய சாஸ்திரங்களை, நூல்களை அம்பலப்படுத்தி யார் பேசினாலும், பேசுபவர்களை “சமஸ்கிருதம் தெரியாதவர்கள்” என்றும் “ஒரு மதத்தின் நூலை அந்த மதப் பெரியவர்கள், குருக்களிடம் கேட்டுத்தான் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் திசைதிருப்புவதை காவி பாசிசக் கும்பல் ஒரு உத்தியாகவே கையாண்டுவருகிறது. இறுதியாக அமைச்சரான சந்திரசேகர் மீது வழக்குப் பதியப்பட்டு ‘இந்து தர்மம்’ நிலைநாட்டப்பட்டது!!

உ.பி.யின் எடவஹா கொடூரத்தையடுத்து போலிசுத் துறையை நாடிய யாதவ் சாதியினரின் நிலைமை இன்னும் மோசம். முகுந்த் மணி சிங்கை அவமானப்படுத்திய பார்ப்பன கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யாமல், சிறுநீர் ஊற்றிய அப்பெண்ணின் மீது மட்டும் சம்பிரதாயமாக வழக்குப் பதிந்த போலிசு, அப்பெண்ணைக் கைது கூட செய்யவில்லை. மாறாக, புகாரளித்த ‘குற்றத்திற்காக’ முகுந்த் மணி சிங் மீதும் வழக்குப் பதிந்து மிரட்டியுள்ளது! அதாவது, மாட்டுக்கறியைக் கொண்டு சென்றதாக இசுலாமியர்களைக் காவிக் கும்பல் அடித்துத் துன்புறுத்தினால், பாதிக்கப்பட்ட இசுலாமியர் மீதே வழக்குப் பதிவு செய்து மிரட்டுவதை ஒரு உத்தியாக போலிசு கடைப்பிடித்து வந்தது! அதே உத்திதான் இப்போது சூத்திர ‘இந்துக்கள்’ மீதும் கடைப்பிடிக்கப்படுகிறது! முகுந்துக்கு நடந்த இக்கொடூரத்தை எதிர்த்துப் போராட்டம் செய்த யாதவ் சாதி இளைஞர்கள் 19 பேரை, விசாரணையே இன்றி ஒருவருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் கொடிய சட்டமான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது!! இவ்வளவுக்குப் பிறகும், இந்துராஷ்டிரம் முசுலீம்களுக்கு மட்டும் எதிரானது என்று சொல்ல முடியுமா?!

முகுந்த், தேவிகா படேல் போன்றோர் பகுத்தறிவாளர்களோ, நாத்திகர்களோ அல்ல. காவி பாசிசக் கும்பல் கூறும் வேதம், புராணத்தை ஏற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்தவர்களே! அவர்களுக்கே இதுதான் கதி என்பதை நினைவில் கொள்க!

இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில், சூத்திரர்களுக்கே இந்த நிலை என்றால், தாழ்த்தப்பட்ட பஞ்சம சாதி மக்களின் நிலைமையை விளக்கவா வேண்டும்! நாள்தோறும் தலித்துகள், பழங்குடிகள் மீது பல்வேறு அடக்குமுறைகள் ஏவப்பட்டு வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் பார்ப்பனிய, மனுதர்மத்தை எதிர்த்து சமர் புரிந்த, பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கல்வி வேண்டுமென்ற உரிமைக்காகப் போராடிய, ஜோதிராவ் – சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக வெளிவந்தது. ஒன்றிய தணிக்கைத் துறையால் (CBFC) ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளிவந்த அத்திரைப்படத்தை எதிர்த்து, பார்ப்பன சங்கங்கள் (இந்து மகா சங், அகில பாரதிய பிராமின் சமாஜ்) வழக்குத் தொடர்ந்தன. அத்திரைப்படத்தின் முக்கியக் காட்சிகள் அனைத்தையும் நீக்க வைத்துள்ளனர்.

“2014-இல் மோடி பிரதமரான பின்னர், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.ஸை மோடி வெகுவாக மாற்றிவிட்டார்; பிராமின் – பனியா கட்சி என்பதில் இருந்து மாற்றி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ‘இந்துக்கள்’ அனைவரையும் முக்கியப் பொறுப்புகளில் கொண்டுவந்து, அனைத்து இந்துக்களையும் உள்ளடக்கியதாக (inclusive) கட்சியை மாற்றிவிட்டார்; பா.ஜ.க. பார்ப்பன கும்பலின் கட்சி என்பதெல்லாம் கடந்த காலப் பேச்சுகள்” – என்று காவி பாசிசக் கும்பல் தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால், மோடி ஆட்சியின் கீழ் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான இந்து ராஷ்டிரத்தின் சோதனைச் சாலைகளில் மேலாதிக்கம் புரிவது பார்ப்பன கும்பலும் பார்ப்பனிய சித்தாந்தமுமே என்பதையே மேற்கூறிய சம்பவங்கள் நிரூபிக்கின்றன!

எனவே, “இந்து ஒற்றுமை” என்பது இசுலாமியர்களை எதிர்த்த கலவரத்திற்கான பித்தலாட்டமான பிரச்சாரமே அன்றி வேறல்ல! இசுலாமியர்களுக்கு எதிரான கலவரங்களில் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் காலாட்படையாகப் பயன்படுத்துவதற்கான சதித்தனமன்றி வேறல்ல!! உண்மையில், இசுலாமியர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றும் அதேவேளையில், ஆகப் பெரும்பாலான ‘இந்துக்கள்’ மீது பார்ப்பனிய, மனுதர்ம சித்தாந்தத்தின் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதே இந்து ராஷ்டிரம்! அந்த இந்துராஷ்டிரம்தான் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது!

கார்த்திக்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன