சமீபத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சட்டீஸ்கரிலும், மகாராஷ்டிராவிலும் சரணடைந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தின் உயர்நிலைத் தலைவர்களில் ஒருவரான மல்லுஜூலா வேணுகோபால் ராவ் என்கிற பூபதி, 60 மாவோயிஸ்டுகளுடன் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்திருக்கிறார். இப்படி இவர்கள் தானாகவே முன்வந்து சரணடைந்திருப்பது மாவோயிஸ்ட்டுகளின் இயக்கத்தை பெரும் பின்னடைவுக்கு இட்டுச் செல்லும் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் ஆளும் வர்க்கமும், அதன் ஊதுகுழல்களான பத்திரிக்கைகளும் பூபதி உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்திருப்பதை புரட்சிகர இயக்கத்தின் முடிவு என கருதி அகம் மகிழ்கின்றனர். ”இறங்குமுகத்தில் நக்சல்கள்” என்று கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி தலையங்கம் எழுதிய திணமனி, நக்சல்பாரிகள் மீது அவதூறு சேற்றை அள்ளி வீசியுள்ளது. “நக்சல் இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் எழுதியுள்ள பிபிசி ஊடகமோ, நக்சல் இயக்கம் தோன்றிய வரலாற்றை உண்மைக்கு புறம்பாக திரித்து புரட்டுகிறது. இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது இராணுவ பலத்தை பிரயோக்கிக்கும் அதே வேளையில், புரட்சிகர இயக்கங்கள் பலவீனமடைந்து விட்டதாகவும், கூடிய விரைவில் முற்றிலும் ஒழிந்துவிடும் என்றும் இந்த ஊடகங்கள் ஆருடம் கூறுவதுடன், மக்களிடம் இந்தக் கருத்தைப் பரப்பி அரசுக்கு எதிராக போராடும் சிந்தனையை மழுங்கடித்து வருகின்றன.
ஆளும் வர்க்க நிறுவனங்கள் பரப்பும் புரட்சிகர இயக்கங்கள் பற்றிய ஒரு தலைப்பட்சமான செய்திகள் தான் இன்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன்மூலம் அரசு நியாயத்தையும், ஜனநாயகத்தையும் காப்பதற்காக போராடி வருவதாகவும், புரட்சிகர இயக்கங்கள் அதற்கு எதிராக உள்ளது என்றும் சித்தரித்து வருகின்றன. உண்மைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு ஆளும்வர்க்கத்தின் கருத்தை மட்டும் மக்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறது. தற்போதைய மாவோயிஸ்டுகளின் சரணடைவு ஆளும் வர்க்கத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இது ஆப்பரேசன் காகரின் மூலம் மார்ச் 31, 2025 க்குள் மாவோயிஸ்டுகளை முற்றிலுமாக ஒழிப்பது என்ற திட்டத்திற்கு வெற்றிப் படியாக கருதி ஆளும் வர்க்கங்கள் குதூகலிக்கின்றன.
ஆனால் நக்சல்பாரி இயக்கங்கள் தோன்றியதற்கான காரணங்கள் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மோடி அரசோ, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேறி கொண்டிருப்பதாக கதையளக்கிறது. ஆனால் முதலாளித்துவ நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களே இதை மறுக்கின்றன. ஐ.நா மன்றத்தின் உலகளாவிய பரிமாண வறுமை குறியீடோ இந்தியாவில் சுமார் 23.4 கோடி மக்கள் வறுமையில் வாடுவதாக குறிப்பிடுகிறது. இதில் பாகிஸ்தான் (9.3 கோடி), எத்தியோப்பியா (8.6 கோடி), நைஜீரியா (7.4 கோடி) ஆகிய நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. இந்திய மக்கள் தொகையைக் கணக்கிடும் போது இந்நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றாலும் வறுமையில் உழலும் மக்களின் என்ணிக்கை திகைப்பூட்டுவதாக இருக்கிறது.
உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியா 127 நாடுகளில் 105 வது இடத்தில் இருக்கிறது. உலகின் தீவிர வறுமையில் 110 கோடி பேர் இருப்பதாக UNDP எனும் அமைப்பு கூறுகிறது. இதில் இந்தியாவே முதல் இடத்தில் இருக்கிறது.
உலக மக்கள்தொகை மதிப்பாய்வு (2025) படி, இந்தியாவில் சுமார் 20 இலட்சம் மக்களுக்கு வீடு கிடையாது. இவர்கள் தெருக்களில் வசித்து வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 7.8 கோடி மக்கள் சேரிகளில் வாழ்கின்றனர். உலகின் குடிசைவாசிகளில் 17% பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். இதன் கூடவே வேலையில்லாத் திண்டாட்டம் எனும் கொடிய நோயும் மக்களை வாட்டி வதைக்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற போது நகர்ப்புறத்திலுள்ள, அதிலும் படித்தவர்கள் மத்தியில் நிலவுவதைத் தான் பலரும் கருதுகின்றனர். கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டம் தீராத நோயாக வளர்ந்துள்ளது. பயிர் நடுவது, அறுவடை செய்வது போன்ற காலங்களில் மட்டும் வேலை கிடைக்கும் நிலைமையே உள்ளது. மீதிக் காலங்களில் வேலையின்றித் தவிப்பது என்று முழு வேலையில்லாமல் பெரும்பான்மையான கிராம மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டின் உழைக்கும் மக்களில் பெரும்பான்மையான மக்கள், வேலை கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் நகர்ப்புறத்தை நோக்கி ஓடி வருகின்றனர். கிராமப்புறத்தில் நிலவும் கொடிய வேலையில்லாத் திண்டாட்டமே இதற்கு காரணம். நாளுக்கு நாள் இந்தியாவில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
இப்படி நாட்டின் வறுமையின் பட்டியல் ஒருபுறம் நீண்டு கொண்டே செல்லும் அதே வேளையில், உலகின் செல்வம் கொழிக்கும் பணக்காரர்கள் வாழும் சொர்க்க புரியாக இந்தியா இருக்கிறது. இதன்மூலம் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி இந்தியாவில் அதிகரித்து கொண்டே செல்கிறது.
சுமார் 2 இலட்சம் பேர், ஆண்டு வருமானமாக ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார்கள். அதே நேரத்தில் நாட்டின் சராசரி வீட்டு வருவாய் ரூ.10,000 க்கும் குறைவாக உள்ளது. நவம்பர் 2024 நிலவரப்படி நாட்டின் 350 பில்லியனர்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.167 இலட்சம் கோடி ஆகும். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.10 இலட்சம் கோடியாகவும், அதானியின் சொத்து மதிப்பு ரூ.8 இலட்சம் கோடிக்கும் அதிகமாகவும் உள்ளது. இது அறிவிக்கப்பட்ட வருமானம் மட்டுமே. கருப்பு வருமானத்தைக் கருத்தில் கொண்டால், அது இத்தொகையை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாகும்.
இந்தியாவில் வெறும் 350 பில்லியனர்கள் சுமார் 250 இலட்சம் கோடி ரூபாயை வைத்திருக்கிறார்கள். அதாவது 350 பேர் மட்டும் சராசரியாக 7000 கோடி சொத்து மதிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். இதை நீங்கள் ஆண்டுக்கு சுமார் 1 இலட்சம் அல்லது ரூ.8000 மாத வருமானமாக ஈட்டும் இந்தியரோடு ஒப்பிட்டால் இந்த இடைவெளியைப் புரிந்து கொள்ள முடியும். மேலடுக்கில் உள்ள 1% மட்டுமே நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 22% கொண்டிருப்பதாக பிரான்சின் தாமஸ் பிக்கெட்டி உள்ளிட்ட மூத்த பொருளாதார அறிஞர்களின் அறிக்கை கூறுகிறது.
ஏழைகள் மற்றும் பில்லியனர்களுக்கான இடைவெளிகள் அது கொணரும் உண்மைகள் இந்திய உழைக்கும் மக்களின் வீடுகளில், குடிசைகளில், வீதிகளில் எதிரொலிக்கின்றன. ஆனால் இது தோற்றுவிக்கும் உண்மைகளிலிருந்து தப்புவிப்பதற்காக இந்திய ஆளும் வர்க்கம் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்ற மூட நம்பிக்கையை பரப்பி வருகிறது. ஆளும் வர்க்கமும் அதன் உறுப்புகளும் கம்யூனிசத்தை தோற்கடிக்கவேண்டும் என்று தவியாய் தவிக்கின்றன. தங்களது திட்டப்படி மாவோயிஸ்ட்டுகளை ஒழித்து விட்டால், அவர்களை இந்திய வரலாற்றிலிருந்து அகற்றிவிட்டு, பழங்குடி மக்களை தமது வளர்ச்சி திட்டங்கள் மூலம் வெல்ல முடியும் என காய் நகர்த்துகிறது.
இந்தியாவின் 300 பில்லியனர்களின் சொத்துக்கள், கருப்பு பணம் மற்றும் அந்நிய முதலீடு போன்றவற்றை உழைக்கும் மக்கள் கைப்பற்றி அதை விவசாயம், சிறுகுறு தொழில் போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நாட்டை பல மடங்கு முன்னேற்றம் அடையச் செய்ய முடியும். ஆனால் இந்திய ஆளும் வர்க்கமோ தன் கொள்ளை இலாபத்தை மேன்மேலும் பெருக்கும் பொருட்டு புரட்சியையும் அதன் இயக்கங்களையும் அழிக்க நாள் குறிக்கிறது.
உழைக்கும் மக்களுக்கும் பில்லியனர்களுக்குமான இடைவெளிகள் இருக்கும் வரையில் இம்மண்ணில் நக்சல்பாரிகள் சிந்திய இரத்தமும், தியாகமும் வீண்போகாது. இந்திய முதலாளி வர்க்கத்திற்கு முடிவெழுதும் வரை உழைக்கும் மக்களிடமிருந்து நக்சல்பாரிகள் உருவாகிக்கொண்டேதான் இருப்பார்கள்.
- தாமிரபரணி





