காவி பாசிச ஆதரவாளர்களுக்குப் பிணை,
ஜனநாயக சக்திகளுக்குச் சிறை
உச்சநீதிமன்றத்தின் பாசிசப் பாசம்

லக்கிம்பூர் கேரி வழக்கில் பாஜக அமைச்சரின் மகன்தான் விவசாயிகள் மீது வண்டி ஏற்றிப் படுகொலை செய்தார் என நேரில் கண்ட நூற்றுக் கணக்கான சாட்சியங்கள் இருந்த போதும், அவர் திட்டமிட்டு இந்தப் படுகொலைகளைச் செய்தார் என குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்த போதும் உச்சநீதிமன்றம் அவருக்குத் தொடர்ந்து பிணை வழங்குகிறது. இதே உச்சநீதிமன்றம், பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக வழக்கு விசாரணையே தொடங்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே சிறையில் இருக்கும் உமர் காலித்திற்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்துவருகிறது.

காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதாக கூறிக்கொண்டிருக்கும் பலரும் நீதித்துறையையே தங்களது புகலிடமாகக் கொண்டிருக்கின்றனர். காவி பாசிச சக்திகள் இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதன் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியும் என அவர்கள் மக்களை நம்பவைக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி தற்போது பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) வரை அனைத்து நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் தாங்கள் வழக்குத் தொடுத்ததையே சாதனையாகப் பிரச்சாரம் செய்கின்றனர். ஊடகங்களும் கூட சாட்டையைச் சுழற்றிய நீதிமன்றம், கடுமையாகக் கண்டித்த நீதிபதி எனச் செய்தி வெளியிட்டு நீதிமன்றங்கள் பாசிச சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது போன்ற பிம்பத்தை உருவாக்குகின்றன.

ஆனால் உண்மையில் இந்திய நீதித்துறையில் காவி கார்ப்பரேட் பாசிசத்தின் ஊடுருவல் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட நீதிமன்றங்கள் தொடங்கி, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையிலும் நீதிபதிகளை நியமனம் செய்வதில் காவி பாசிச சக்திகளின் தலையீடு உள்ளதை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். காவி பாசிச சக்திகளுக்கு ஆதரவாகவும், அவர்களை எதிர்த்துப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் எவ்வாறு பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன என்பதைத் துலக்கமாக எடுத்துக் காட்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் நடந்துள்ளன.

அதிலும் குறிப்பாக கொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்ற குற்றவாளிகளுக்கு அவர்கள் பாசிச சகதிகளின் ஆதரவாளர்களாக இருக்கும் காரணத்திற்காகவே மீண்டும் மீண்டும் பிணை வழங்கப்படுவதும், அதேசமயம் உழைக்கும் மக்களின் நலனுக்காகப் போராடிய ஜனநாயக சக்திகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களுக்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பிணை வழங்க மறுக்கப்படுவதும் நீதிமன்றங்களின் காவி பாசிச ஆதரவுத் தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

2021ம் ஆண்டின் இறுதியில் பல்வேறு வடமாநிலங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கிய போது அது பல வடமாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராட்டத்தை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் போலீசை இறக்கிவிட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை ஏவிவிட்டதுடன், அவர்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தையும் காவிபாசிச சக்திகள் முழுமூச்சுடன் செய்துவந்தன. அந்தச் சமயத்தில் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், ஒன்றிய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் விவசாயிகள் போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது, அப்போதைய ஒன்றிய அரசில் உள்துறை இணை அமைச்சராக இருந்த அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா தனது காரை ஏற்றிப் போராடிய விவசாயிகள் நான்கு பேரையும், பத்திரிக்கையாளர் ஒருவரையும் கொலை செய்தார். அத்துடன் தன்னைத் தடுக்க வந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டு, மேலும் மூன்று பேரைப் படுகொலை செய்தார்.

பட்டப்பகலில் பலநூறு விவசாயிகள், பொது மக்கள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடந்த இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பிறகு ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். போராடும் விவசாயிகளைப் படுகொலை செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டு இந்தச் செயலைச் செய்ததாக ஆசிஷ் மிஸ்ராவுக்கு எதிராகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரித்த உ.பி. போலீசின் சிறப்பு புலனாய்வுக் குழுவும் தனது 5000 பக்க அறிக்கையில் இதை உறுதிசெய்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட நான்கு மாதத்திற்குள் ஆசிஷ் மிஸ்ராவினை அலகாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. இந்தப் பிணையை உச்சநீதிமன்றம் முதலில் ரத்து செய்வதாக கூறினாலும், இறுதியில் 2023 ஜனவரியில் அவருக்குப் பிணை வழங்குவதாக அறிவித்தது. ஆரம்பத்தில் தில்லியில் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலும் பின்னர் 2024 ஜூலை மாதத்தில் அவரது பிணையில் கூறப்பட்டிருந்த எல்லா நிபந்தனைகளையும் தளர்த்தியது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை ஆசிஷ் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தில் வாங்கிய பிணையில் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

அவரது தயாரைக் கவனித்துக் கொள்ள வேண்டும், மகளின் அறுவை சிகிச்சையின் போது உடனிருக்க வேண்டும், ராம நவமி கொண்டாட்டங்களின் போது குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி அவரது பிணையில் இருந்த நிபந்தனைகள் ஒவ்வொன்றாக உச்ச நீதிமன்றம் நீக்கியது. சமீபத்தில் ராம நவமியைக் கொண்டாடப்போவதாக கூறி லக்கிம்பூர் கேரிக்குச் சென்ற ஆசிஷ் மிஸ்ரா, பாதிக்கப்பட்ட விவசாயிகளை தனக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது என மிரட்டியிருக்கிறார். இதனைச் சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றத்தில் அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி போடப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஊறரிந்த கொலைகாரனுக்கு இத்தனை சலுகைகளை அள்ளி வழங்குகின்ற, அவர் தனது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும், பண்டிகை காலத்தின் போது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என அக்கறைப்படுகின்ற இதே உச்சநீதிமன்றம் பாசிசத்திற்கு எதிராகப் போராடுகின்ற ஜனநாயக சக்திகளுக்கு எதிராக மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்கிறது.

2020ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் மிகத் தீவிரமாக நடந்து வந்த சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தை முடக்குவதற்காகத் தில்லியில் காவி பாசிச பயங்கரவாதிகள் திட்டமிட்டு கலவரத்தை நடத்தினார்கள். இந்தக் கலவரத்தை சாக்காக வைத்துக் கொண்டு, சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த பலரையும் ஊபா உள்ளிட்ட கொடூர சட்டங்களில் கைது செய்து சிறையில் அடைத்தது ஒன்றிய பாசிச மோடி அரசு. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தான் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான உமர் காலித். உமர் காலித்தின் மீது கலவரத்தைத் தூண்டுதல் உட்பட்ட பல பொய் வழக்குகளை போலீசார் பதிந்துள்ளனர். ஆனால் அவர்மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஐந்து ஆண்டுகள் ஆகியும் போலீசு தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவே இல்லை. வழக்கு விசாரணையும் தொடங்கவில்லை.

ஐந்து ஆண்டுகளாகத் தில்லியில் திகார் சிறையில் விசாரணைக் கைதியாகவே உமர் காலித் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இதுவரை ஒரு ஆதாரத்தையும் அரசுத் தரப்பில் கொடுக்கவில்லை. வேறுமனே சந்தேகத்தின் பெயரிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் தனக்கு பிணை வழங்க வேண்டும் எனக் கோரி உமர் காலித் தாக்கல் செய்த  வழக்குகள் அத்தனையையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

லக்கிம்பூர் கேரி வழக்கில் பாஜக அமைச்சரின் மகன்தான் விவசாயிகள் மீது வண்டி ஏற்றிப் படுகொலை செய்தார் என நேரில் கண்ட நூற்றுக் கணக்கான சாட்சியங்கள் இருந்த போதும், அவர் திட்டமிட்டு இந்தப் படுகொலைகளைச் செய்தார் எனக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்த போதும் உச்சநீதிமன்றம் அவருக்குத் தொடர்ந்து பிணை வழங்குகிறது. சாட்சிகளை அவர் மிரட்டிக் கலைக்க முயற்சித்தாலும் பிணையை ரத்து செய்ய மறுக்கிறது. இதே உச்சநீதிமன்றம், பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளாக வழக்கு விசாரணையே தொடங்கப்படாமல் விசாரணைக் கைதியாகவே சிறையில் இருக்கும் உமர் காலித்திற்கு தொடர்ந்து பிணை வழங்க மறுத்துவருகிறது.

உச்சநீதிமன்றம் இவ்வாறு பாரபட்சமாக நடந்துகொள்வது இது முதல் முறை அல்ல. ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த போலிச் சாமியார் குர்மித் ராம் ரஹிம் சிங், அவரது பெண் பக்தர்கள் இருவரை பாலியல் வல்லுறவு செய்த வழக்கிலும், பத்திரிக்கையாளர் ஒருவரைப் படுகொலை செய்த வழக்கிலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 2020ம் ஆண்டு முதல் இவருக்குப் பல முறை தொடர்ந்து பரோல் வழங்கப்படுகிறது. ஹரியாணா மாநிலம் தேர்தல்களைச் சந்திக்கும் போதெல்லாம் இவருக்கு பரோல் வழங்கப்படுகிறது. குர்மித் ராம் ரஹிமைப் போன்ற இன்னொரு போலிச் சாமியார்தான் ராஜஸ்தானைச் சேர்ந்த அசராம் பாபு, இவர்மீது ஒரு சிறுமியை பாலிய வல்லுறவு செய்தது உட்படப் பல வழக்குகள் பதியப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அசராம் பாபுவிற்கு தற்போது அவரது வயதைக் காரணம் காட்டி பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.

பாசிச சக்திகளுக்கு ஆதரவாக இருப்பதால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவிக்கும் போலிச் சாமியார்களுக்கு வயது மூப்பையும், உடல்நிலையையும் காரணம் கூறி பிணையில் வெளியே விடும் இதே உச்ச நீதிமன்றம், பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடிய பாதிரியார் ஸ்டேன் சாமிக்கு பிணை வழங்க மறுத்து அவரைச் சிறையிலேயே சாகடித்தது. பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த 84 வயது பாதிரியார் ஸ்டென் சாமி, பாசிச சக்திகளுக்கு எதிராக, பழங்குடியினர் நலனுக்காகப் போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக, பொய்யாகப் புனையப்பட்ட பீமா கொரேகன் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு எதிராக எவ்வித ஆதாரத்தையும் அரசுத் தரப்பில் கொடுக்க இயலாத போதும், அவரது வயதையும், உடல்நிலையையும் கூறி பல முறை பிணை கோரிய போது உச்சநீதிமன்றம் அவரைப் பிணையில் வெளிவிட மறுத்துவிட்டது. பார்க்கின்சன்ஸ் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு தண்ணீரைக் கூட குடிக்க முடியாமல் தவித்து வந்த ஸ்டேன் சாமிக்கு நீரை உறிஞ்சிக் குடிக்க ஒரு ஸ்டிரா கூடக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். வயது மூப்பாலும், நோயின் பாதிப்பாலும் துவண்டிருந்த ஸ்டேன் பாதிரியார் விசாரணைக் கைதியாகவே சிறையில் செத்துப் போனார்.

ஸ்டேன் பாதிரியார் கைது செய்யப்பட்ட அதே பீமா கொரேகான் வழக்கில் பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் சாய் பாபா, உடல்நிலை பாதிக்கப்பட்டு 90 சதவீதம் செயல்பட முடியாமல் முடங்கிய போதும் அவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது. ஸ்டேன் பாதிரியாரைப் போலவே அவரும் சிறையிலேயே மரணமடைந்துவிடுவார் என்ற நிலை வந்த போது, அவர் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக பிணையில் வெளியே விட்டது. இதுதான் பாரபட்சமின்றிச் செயல்படும் உச்சநீதிமன்றத்தின் யோக்கியதை.

பாசிசத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களுக்காகப் போராடும் ஜனநாயக சக்திகள் மட்டுமல்ல, பத்திரிக்கையாளர்களும் கூட உச்சநீதிமன்றத்தின் ஒருபக்கச் சார்பின் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்., 2020ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஹத்திராசில் 19 வயது தலித் பெண்ணை, தாக்கூர் ஆதிக்கச் சாதி வெறியர்கள் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக அம்மாநிலத்தை ஆண்ட பாஜக அரசும், அதன் எம்.எல்.ஏ,க்களும் செயல்பட்டனர். இதனை அம்பலப்படுத்த நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பத்திரிக்கையாளர்கள் ஹத்திராசிற்கு பயணித்தனர். அவர்களில் ஒருவான கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் காப்பான் உபி போலீசாரால் ஹத்திராசுக்கு வெளியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊபா உள்ளிட்ட பிரிவுகளில் பல பொய்வழக்குகள் போடப்பட்டன. 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டாலும் 2022ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகள் காப்பானுக்குத் பிணை வழங்க உச்சநீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்தது. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியதுடன் பல்வேறு தரப்புகளிடமிருந்து, எதிர்ப்பு வரவே இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்குப் பிணை வழங்கப்பட்டது.

காப்பானைப் போலவே அரனாப் கோசாமியும் பத்திரிக்கையாளர்தான். ஆளும் காவி பாசிச கும்பலின் ஊதுகுழலாக ஒரு தொலைக்காட்சி சேனலையே நடத்திவருபவர் அர்னாப் கோசாமி. புலவாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய இராணுவம் பாகல்கோட்டில் தாக்குதல் தொடுக்கப் போகிறது என தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அறிந்து கொள்ளும் அளவிற்கு ஆளும் பாசிச கும்பலுடன் நெருக்கமாக இருப்பவர் அவர். அத்தகைய அர்னாப் கோசாமி 2020ம் ஆண்டில் ஒரு கட்டிடக் கலைஞரையும் அவரது தாயாரையும் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது, உச்சநீதிமன்றம் பரிதவித்துவிட்டது. அர்னாபுக்கு உடனடியாக பிணை வழங்கி உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், பிணை வழங்க மறுத்த மும்பை உயர்நீதிமன்றத்தைத் தனது தீர்ப்பில் கண்டித்திருந்தார்.

இவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டதற்கு அவர்கள் பணக்காரர்கள், பெரிய பெரிய வழக்கறிஞர்களை வைத்துக் கொண்டு வாதாடும் அளவிற்கு வசதிபடைத்தவர்கள் என்பது காரணமில்லை. இவர்கள் அனைவரும் காவி பாசிச கும்பலுடன் நெருக்கமாக இருப்பவர்கள். இந்த ஒரே காரணத்திற்காகத்தான் அவர்கள் எத்தகைய கொடூர குற்றவாளிகளாக இருந்தாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர்களை விடுதலை செய்வதில் உச்சநீதிமன்றத்திற்கு எந்தத் தயக்கமும் இல்லை. அதே சமயம் காவி பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளையும், பத்திரிக்கையாளர்களையும் நம்பத் தகாதவர்களாகப் உச்சநீதிமன்றம் பார்க்கிறது. அவர்களது பிணை கோரும் மனுக்களைப் பரிசீலிக்கவும் கூட மறுக்கிறது.சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றைத் தொடர்ந்து நீதித்துறையும் காவி பாசிசக் கும்பலின் கைப்பாவையாக மாறிக்கொண்டிருக்கிறது. இனியும் நீதிமன்றத்தின் மூலம் காவி பாசிசக் கும்பலைத் தடுத்து நிறுத்திவிட முடியும், தண்டித்துவிட முடியும் என யாராவது கூறுவார்கள் எனில் அவர்களை விட முட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது.

  • அறிவு

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. அசிஸ் மிஸ்ராவை தியாகி என போற்றி விடுதலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.