பஞ்சாப் பெருவெள்ளம் : இயற்கைப் பேரிடரல்ல, ஆளும் வர்க்கம் உருவாக்கிய பேரிடர்!

“வளர்ச்சி” என்று பீற்றிக்கொண்டு கட்டுக்கடங்காத இலாப வெறியில் ஏகாதிபத்தியங்கள், தரகுமுதலாளிகளின் கொள்ளைக்காக நகரமயமாக்கல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், கூட்டணி போட்டுக்கொண்டு மணலை கொள்ளை அடிக்கும் முதலாளிகளும், அதற்கு துணைபோகும் அரசுகளும்தான் இப்பெரும் அழிவின் முதன்மைக் குற்றவாளிகள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தானிய உற்பத்தியில் முதன்மை மாநிலமாக விளங்கும் பஞ்சாப் ஒரு பெருவெள்ளத்தை சந்திக்க நேர்ந்தது. அளவுக்கு அதிகமாகக் கொட்டித்தீர்த்த தென்மேற்குப் பருவ மழையால் உருவான இப்பெருவெள்ளமானது பஞ்சாப் மட்டுமல்லாமல் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, இமாச்சல பிரதேசம் போன்ற மற்ற மாநிலங்களிலும் பெரும் பெருஞ்சேதத்தை உண்டாக்கியது.

மழைக்காலத்தில் வெள்ளம் வருவது பஞ்சாப் போன்ற வட மாநிலங்களில் இயல்புதான் என்றாலும், இந்த வருடம் பஞ்சாபில் பாய்ந்த வெள்ளமோ கடந்த 35 ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு மிக மோசமான வெள்ளமாகும். 50-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலியாக்கி, 2000-க்கும் மேற்பட்ட கிராமங்களை மூழ்கடித்து, பல இலட்சம் ஏக்கர்கள் பரப்பினுள்ள விவசாய நிலங்களையும், அதிலுள்ள பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. அறுவடைக்குச் சில வாரங்களுக்கு முன்பே நடந்துள்ள இப்பெருஞ்சோகம் பல கிராமங்களையும், அதிலுள்ள விவசாயிகளையும் துக்கத்திலும் அழிவிலும் தள்ளியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் 35 சதவீத மக்கள் விவசாயத் தொழிலையே நம்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.60,000 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டிருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள அதேவேளையில், ஒன்றிய அரசோ ரூ.1,600 கோடியை மட்டுமே நிவாரணமாக வழங்கியுள்ளது. தேர்தல் கட்சிகளோ போட்டி போட்டுக்கொண்டு இந்த நேரத்திலும் “யார் மேல் உண்மையான தவறு” என்ற தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். அதேவேளையில், இது ஒரு எதிர்பாராத, தவிர்க்க இயலாத இயற்கையின் வெறியாட்டம் என்றும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.

ஓராண்டில் பொழிய வேண்டிய சராசரியளவு மழையை விட 53% சதவீதம் அதிக மழை பஞ்சாபில் பொழிந்துள்ளது. இந்நீரைத் தேக்கி வைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், அணைகளில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு, சத்லஜ், ராவி, பியாஸ் போன்ற நதிகள் நிரம்பி வழிந்தோடின. இதுவே, இந்த வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணமாக இருந்தது.

ஆனால், இந்த வெள்ளத்தின் பெருஞ்சேதமோ தவிர்த்திருக்கக்கூடிய ஒன்றுதான்.

வரும் மழைக்காலம் இமாச்சலம், பஞ்சாப் மாநிலங்கள் பெரும் மழையை சந்திக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், பக்ரா அணையை நிர்வகிக்கும் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (Bhakra Beas Management Board – BBMB) மற்றும் ரஞ்சித் சாகர் அணையின் நிர்வாகிகளும் அதை ஒரு எச்சரிக்கையாகவே கருதிக்கொள்ளவில்லை. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் வரப்போகும் மழையை கண்டுக்கொள்ளாது, நீர்மட்டத்தை வழக்கம்போலவே வைத்திருந்ததால், ஆகஸ்ட் மாத மழையால் வந்த உபரி நீரை தேக்கிவைக்க முடியாமல் இந்த அணைகளை திறக்கவேண்டிய சூழ்நிலை உருவானது.

பக்ரா அணையை நிர்வகிக்கும் இந்த பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியமோ ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணையை நிர்வகிக்கும் குழுவை தேர்ந்தெடுக்கும் உரிமையாவது முன்பு பஞ்சாப், இமாச்சலம், ராஜஸ்தான் மற்றும் ஹரியாணாவிற்கே (அதாவது உறுப்பினராக இருக்கும் மாநிலங்களுக்கு) இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசோ அந்த உரிமையைப் பிடுங்கி தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டது. எனவே, இவ்வாரியத்தில் மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை. பஞ்சாப் அரசின் கீழ் வரும் ரஞ்சித் சாகர் அணையின் நிர்வாகத்தின் மீது பஞ்சாப் அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிர்வாகங்கள் இன்னும் எச்சரிக்கையாகச் செயல்பட்டிருந்தால் இப்பேரிடரை சிறிதளவாவது தடுத்திருக்கலாம் என்கின்றனர், ஆய்வாளர்கள்.

இவ்வாண்டு பெரும்சேதம் நிகழ முதன்மைக் காரணம் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் மற்றும் ரஞ்சித் சாகர் அணையின் நிர்வாகமே என்பதில் எள்முனையளவும் ஐயமில்லை. எனினும், பஞ்சாபிலோ கடந்த 7 ஆண்டுகளில் 3 பெருவெள்ளங்கள் மக்களின் வாழ்வை சீர்குலைத்துள்ளது. 2019, 2023-ஐத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டும் மழையும் பெருவெள்ளமும் பேயாட்டம் போட்டன. இது மாறிவரும், மாற்றியமைக்கப்படும் பஞ்சாபின் சூழல்களை சுட்டிக்காட்டுகிறது. பல கேள்விகளை முன்வைக்கவும், அதன் பதில்களை ஆராயவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

இதில் முதல் கேள்வி, 2010-லேயே அகற்றப்பட வேண்டிய பக்ரா அணையானது இன்னும் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான். சரியாக தூர்வாரப்படாமல், தனது மொத்த கொள்ளளவில் 19 – 23 சதவீதம் வரை பக்ரா அணை இழந்து விட்டது என்று பல அறிக்கைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு பயனற்ற அணையைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு ஆர்வம் என்று கேட்டால், இதன் விடை பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியமிடமும், உலக வங்கியிடமும் இருக்கிறது. கடந்த மே மாதம் BBMB தங்கள் நீர்மின்னுற்பத்திக்கான சிறு திட்டங்களைத் தனியார்மயமாக்க முடிவு செய்யபோவதாக கூறப்பட்டு வந்தது. பக்ரா மற்றும் பாங் (Pong) அணைகளுக்கு உலக வங்கி 200 கோடி கடன் வழங்கியதும் இந்த உள்நோக்கத்துடன்தான்.

இரண்டாவதாக, “நவீன இந்தியாவின் ஆலயங்கள்” என்று அன்று நேருவால் புகழப்பட்ட அணைகளின் வரலாற்றையும், அதன் தாக்கங்களையும் நாம் ஆராய வேண்டும். “வேலைவாய்ப்பு”, “பாதுகாப்பு”, “செழிப்பு” என்று நம்பப்படுவது போல் அணைகள் மெய்யாகவே உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்தியதா, அல்லது சுரண்டும் வர்க்கத்திற்கு இலாபத்தை சுருட்ட வாய்ப்புகளை ஏற்படுத்தியதா என்பதே இங்கு கேள்வி.

அணைகளும், கால்வாய்களும் நூற்றாண்டுகாலமாக இந்தியா முழுவதும் கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த ஒன்றாக இருந்தபோதும் காலனிய ஆங்கிலேயரால் 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கனால்கள் மற்றும் அணைகளின் கட்டுமானமானது வழக்கமான பருவகால நீர்ப்பாசன அமைப்பை மாற்றியமைத்து அதை ஆண்டுதோறும் வற்றாத ஒன்றாக மாற்றியது. இதன் கட்டமைப்பு நதிகளின் இயற்கை பாய்ச்சலை கட்டுப்படுத்துவதையே மையமாக கொண்டிருந்தது. ஆனால், இதன் உள்நோக்கம் விவசாய நலனோ, விவசாயிகளின் நலனோ அல்ல – பருத்தி, கரும்பு, கோதுமை, அபின் போன்ற வணிகப் பயிர்களை சாகுபடி செய்வதை சுலபமாக்கவே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் ஆறுகளின் ஓட்டம் – குறிப்பாக டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்டது என்று கூறுகிறார், சுற்றுச்சூழல் வரலாற்றாய்வாளர் ரோஹன் டிசோசா.

இதைதொடர்ந்து, இரண்டாம் உலகப்போருக்கு பின்பு நேரடி காலனிய ஆட்சிகளில் இருந்து விடுபட்ட பல நாடுகளில், அணைகளின் கட்டுமானம் வேகமடையத் தொடங்கியது. இந்த கட்டுமானங்களை மேற்கொண்டது மக்களின் நலனுக்காக அல்ல – தரகு முதலாளிகளின் மேற்பார்வையில் பணத்தை சுருட்டவே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அறிவியல் சார்ந்து பெரிதளவில் திட்டமிடல் இல்லாமலும், கணக்கிடப்படாத செலவுகளை செய்தும், இயற்கையை மாற்றியமைத்து அதை அடக்கும் பேராசையுடனும், இலாபவெறி கன்னத்தோட்டதுடனுமே இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியா முழுவதும் இப்பெரிய அணைகளினால் பாசனம் செய்யப்படும் விவசாய நிலங்கள் வெறும் 10 சதவீதமே உள்ளது என்பது இதற்கு சாட்சி.

இந்த பெரும் அணைகள் பார்க்க மிகவும் பயனுள்ளது போல தெரிந்தாலும், அது “வளர்ச்சி” என்று பலிகொடுக்கப்பட்ட, புறம்தள்ளப்பட்ட மக்களின் கண்ணீரிலும், இரத்ததிலும் கட்டப்பட்ட ஒன்றாகவே இருந்தது, இருக்கிறது. நாட்டு வளங்களின் நீண்டகால நலன்களைக் கணக்கில் கொள்ளாமல் நீரின் சூழலமைப்பை அணைகள் சீரழித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

மூன்றவதாக, நதிக்கரைகளில் கட்டப்படும் கட்டுமானங்கள் அணைகள் நதிகளின் இயற்கை பாதைகளை மாற்றி அமைப்பதால், சீற்றங்களின் பாதிப்பு பெருகிக்கொண்டே வருகிறது. இங்கு நதிக்கரையில் கட்டப்படும் கட்டிடங்களாக இருப்பது இயற்கை நிலங்களை அபகரித்து, வானத்தை தொடும் அளவு உயரத்தில் கண்ணாடி கட்டிடமொன்றை கட்டி, மக்கள் முன்பு அதை “வளர்ச்சி”, “ஸ்மார்ட் சிட்டி பிளானிங்” என்று பீற்றிக்கொள்வதற்கும், இலாபத்தை சுருட்டுவதற்குமே உள்ளது. இவற்றையும், 2023-இல் கிராஸ் டிப்பெண்டென்சி ரிப்போர்ட் (Cross Dependency Report) வழங்கிய அறிக்கையில் உலகலியேலே காலநிலை மாற்றத்தினால் மனித கட்டுமானங்களை அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளில் பஞ்சாப் முதல் 50 இடங்களில் இடம்பெற்றதையும் நாம் தனித்தனியே பார்க்க முடியாது.

நகரமயமாக்கலினால் பஞ்சாப் மாநிலம் தனது காடுகளில் 22 சதவீதத்தை இழந்துள்ளது என்று சமீபத்திய தரவுகள் கூறுகின்றன. அதேபோல் நீர்நிலைகள் ஆக்கிரமித்து அதன்மீதும் கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. “சோயி” எனப்படும் பருவகால நீரோடைகள் மீது கட்டுமானங்கள் கட்டப்படுவதால், சண்டிகர், பட்டியாலா போன்ற பெரும்நகரங்கள் அழிவை நோக்கி மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கின்றன. லூதியானா நகரில் மட்டும் சுமார் 24,311 ஏக்கர் விவசாய நிலம் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றது. அம்ரித்ஸர், ஜலந்தர் போன்ற மற்ற நகரங்களிலும் திட்டமிடப்படாத, தற்போதைய “ரியல் எஸ்டேட்” வளர்ச்சிக்காக, வருங்காலத்தை சிறிதளவிலும் கருத்தில் கொள்ளாமல் நகரமயமாக்கல் நடந்துகொண்டு வருகிறது என்று பல சுற்றுசூழல் ஆய்வாளர்கள் ஆண்டாண்டுகாலமாக கூறி வருகின்றனர். மக்கள் கூட்டத்தை நகரங்களில் குவித்தது சுரண்டி கொள்ளையடிக்கும் நகரமயமாக்கல் என்ற கொள்கையில் திட்டமிடலுக்கும், நாட்டின் நீண்டகால சுற்றுசூழல் நலனுக்கும் இடமில்லை என்பதே உண்மை.

நான்கவதாக, 1990-களில் இந்திய அரசு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைகளை அமல்படுத்தியபின்பு, பஞ்சாபில் ஒரு “மணல் மாஃபியா” உருவானது. பிறகே அரசியல்வாதிகளுடன் கைக்கோர்த்து, பங்குபோட்டுக்கொண்டு இந்த தனியார் மாஃபியாக்கள் மிகவும் தாராளமாக இன்றும் மணலை கொள்ளையடித்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சிகள் மாறும்போதும் இந்த கொள்ளை நிற்கவில்லை என்று கூறுகிறார்கள், பஞ்சாபை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர்களான டிக்கா யஷ்வீர் சந்தும், ஜஸ்ஜித் சிங்கும்.

இதை எதிர்த்துப் புகார் கொடுக்க காவல்துறையிடம் சென்றாலும் அவர்கள் அதை காதுக்கொடுத்தே கேட்பதில்லை என்று பலர் குற்றஞ்சாட்டியதாகவும், அரசு அனுமதித்துள்ள நேரத்தை தாண்டியும் மணல் தோண்டி எடுக்கப்படுவதாகவும், அதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கிறார்கள். அவ்வப்போது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்புகளே என்றும், அவர்களுக்கும் இதில் பெரும்பங்கு உள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த மணல் கொள்ளையானது பஞ்சாப் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் நடந்துகொண்டே இருக்கும் ஒரு பிரச்சினையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் இந்த ஆற்றுமணல் கொள்ளையானது ஆற்றின் போக்கையே மாற்றியமைக்கும். ஆற்றின் மணலை எடுப்பதற்கு ஆற்றுப்படுகையயையும், ஆற்றங்கரைகளையும் தோண்டுவதால், அந்த ஆற்றின் இயல்பான போக்கே மாறி, அங்கு தேக்கங்கள் உருவாவது மட்டுமல்லாது ஆற்றின் போக்கை விரிவுபடுத்தி விடுவதால் வெள்ளம் ஏற்படும் சமயங்களில் நீரோட்டம் பாதிக்கபடுகிறது. அசாதாரண நீரோட்டம் உருவாவதால் வெள்ளத்தின் பாதிப்பு இன்னும் கூடுகிறது.

பஞ்சாபை பொறுத்தவரை, “துஸ்ஸி பந்த்” எனப்படும் மண்ணை பயன்படுத்தி எழுப்பப்பட்ட அணைக்கட்டுகளே இந்தச் சுரண்டலினால் அதிகம் பாதிக்கப்பட்டவை. ஆற்றுக் கினற்றின் ஓரத்தில் எழுப்பப்பட்ட இம்மேடுகள், வெள்ள சமயத்தின்போது தண்ணீர் தாண்டி வருவதை தடுக்க எழுப்பப்பட்டவை. இந்த சுரண்டலினால் பலவீனமான துஸ்ஸி பந்த்கள் தகர்ந்தது இன்னும் பெரிய பாதிப்பை பல கிராமங்களில் ஏற்படுத்தியது. பல எச்சரிக்கைகளை புறந்தள்ளி, பஞ்சாப் அரசோ இந்த துஸ்ஸி பந்த்களை உறுதிப்படுத்தாததும், சுத்தம்செய்யாததும் இந்த வெள்ளத்தின் தாக்கம் பெரிதளவு பெருக காரணம் என்று பலரால் முன்வைக்கப்படுகிறது.

மேற்கூறிய நான்கு பிரச்சனைகளும், பஞ்சாப் மாநிலத்திற்கே உரியது அல்ல, ஏனெனில், இதே பிரச்சினைகளை இமாச்சலம், ஜம்மு & காஷ்மீர், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டே வருகிறது.

உத்தரக்காண்டில் சரியாக திட்டமிடப்படாமல், மரங்களையும் மலைகளையும் வெட்டி, வெடிக்கவைத்து கட்டப்படுகிற அணைகள் உருவாக்கிய சுற்றுசூழல் சேதம் ஜோஷிமாத் பகுதியில் பல மழைவாழ் மக்களை வீடற்றவர்களாக ஆக்கி இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதுவே வெள்ள அபாயத்தை பலமடங்கு உயர்த்துகிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இமாச்சல பிரதேசத்தில் தீவிரமடையும் நகரமயமாக்கல் வெள்ளச்சேதங்களை பெருக்கிக்கொண்டே வருகிறது. ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் மணல் கொள்ளையோ தலைவிரித்து ஆடுகிறது.

மாறிவரும் வெப்பநிலைகளால் இயற்கை சீற்றங்கள் அதிகமாகிக்கொண்டு வருவது உண்மையே என்றாலும், உலகம் முழுவதும் உள்ள ஆளும் வர்க்கத்தின் லாபவெறியும், அலட்சியமும் தான் இந்த சீற்றங்கள் உண்டாவதற்கு ஒரு பெரும்காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த அவலநிலை தொடரும் வரை, இதுபோன்ற பேரிடர்கள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும் – அதாவது பெரும் மழைகள் இனி அடிக்கடி வரும் என்பது சமீபத்திய காலநிலை மாற்றம் பற்றி ஐபிசிசி (IPCC) கொடுத்த அறிக்கை நமக்கு தெரிவிக்கின்றது.

இயற்கையையும், பலரின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும், பயனற்ற அணைகள் இன்னும் இயங்கிக்கொண்டு இருப்பதற்கு காரணமாக இருக்கும் தரகு முதலாளிகளும், அலட்சிய அரசும் அதிகாரிகளும் அணைகளையும், நீராதாரங்களையும் கட்டுப்படுத்தும்வரை, அதை மக்களின் நலனிற்காக உபயோகிக்கவே முடியாது என்பது வரலாறு மட்டும் அல்ல, தற்போது நடந்துள்ள வெள்ளமும் கூறும் உண்மை.

“வளர்ச்சி” என்று பீற்றிக்கொண்டு கட்டுக்கடங்காத இலாப வெறியில் ஏகாதிபத்தியங்களின் நலன்களை உறுதி செய்ய நகரமயமாக்கல் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதும், கூட்டணி போட்டுக்கொண்டு மணலை கொள்ளை அடிக்கும் முதலாளிகளும், அதற்கு துணைபோகும் அரசுகளும் இந்த பெரும் அழிவின் முக்கிய குற்றவாளிகள்.

ஆளும் வர்க்கம் தாராளமாக கொள்ளையடித்து, மக்களை பலிக்கொடுத்து கொண்டிருக்கும் இதேவேளையில், அறுவடையை நம்பி கடன் வாங்கியவர்களும், அப்பாவி மக்களும் தாம் உழைத்து சேமித்த உடைமைகள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, இந்திய விவசாயத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தாக்குதல் போன்றவற்றால் விவசாயிகள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற போக்கை இது தீவிரப் படுத்தப்போகிறது என்பது சந்தேகமில்லை. இந்த பேரிடரின் மக்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்க முன்வராத அரசின் நடவடிக்கையால், கிராமப்புறங்களில் உள்ள நெருக்கடிகளை பயன்படுத்தி சுரண்டி வரும் கந்துவட்டிக்காரர்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்கள் தலைவிரித்து ஆட இந்த பேரிடர் இடமளிக்கும்.

ஆனால், இப்படிப்பட்ட கடும் சூழலிலும் கூட உழைக்கும் மக்கள் உறுதியாகவே இருந்து ஒருவருக்கொருவர் எந்த பேதமுமின்றி உதவி வருகின்றனர். உழைக்கும் மக்களின் ஒற்றுமையே பலருக்கு கைகொடுத்து உதவியது என்பதும், பலரை காப்பற்றியது என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இலாபவெறிக்காக இயற்கையை சுரண்டித்தின்று உலகைச் சீரழித்துக்கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தையும், அதற்கு துணைப்போகும் அரசுகளின் போக்கையும் எதிர்த்து ஒன்றுதிரண்டு, போராடி, வென்றெடுக்க பாட்டாளி வர்க்கத்தினால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட ஒரு புரட்சியால் மட்டுமே இயற்கையையும், மனிதனையும் சீர்படுத்தி, ஒருங்கிணைத்து புதியதொரு உலகை உருவாக்க முடியும்.

  • திருமாறன்

 

பின்குறிப்பு: இதேபோல், கடந்த ஜூலை 30, 2024 அன்று கேரளத்தில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவு 400-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று, மிகப்பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியது. இது வெறும் இயற்கைப் பேரிடர் அல்ல. ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள் உள்ளிட்ட ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவும் மறுகாலனியாக்கக் கொள்ளைக்காகவும் மேற்குத் தொடர்ச்சிமலை கொள்ளையடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவே கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து நிகழும் இத்தகைய நிலச்சரிவுகளுக்கான காரணமாகும். செங்கனல் இணையத்தில் ஆகஸ்டு 2024-இல் வெளியான தொடர் கட்டுரைகள், இவற்றை ஆதாரத்துடன் விரிவாக அம்பலப்படுத்தியது. அக்கட்டுரைகளையும் படித்துத் தெளிவுபெறுமாறு வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரம்:

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன