ஐ.டி. ஊழியர்களின் வேலையிழப்புக்கு காரணம் செயற்கை நுண்ணறிவா? ரிசர்வ் பட்டாளமா?

2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் ஐடி துறையில் மட்டும் 1 இலட்சத்து 80 ஆயிரத்து 94 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை தொடரும் பட்சத்தில் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் அதிகமான ஐடி ஊழியர்கள் பணியை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை Layoff.fyi என்ற ஐடி துறையை சார்ந்த டிராக்கர் உறுதி செய்துள்ளது.

உலகம் முழுவதும் 413 ஐடி நிறுவனங்களின் நடவடிக்கையைக் கண்காணித்து அதன் டேட்டாவை Layoff.fyi டிராக்கர் வெளியிட்டுள்ளது. அதன்படி 2025-ஆம் ஆண்டில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை நிறுவனங்கள் பயன்படுத்துவது மற்றும் செலவை குறைத்தல், பொருளாதாரங்கள் மீதான அழுத்தம் உள்ளிட்ட 3 காரணங்களுக்காக ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக ”ஏஐ பயன்பாடு அதிகரித்தது, பொருளாதார அழுத்தங்கள் உள்ளிட்டவற்றால் 2025-ஆம் ஆண்டில் ஐடி துறையில் ஊழியர்களின் பணி நீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இன்டெல், மைக்ரோசாப்ட், டிசிஎஸ், அக்சென்ச்சர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஐடி துறையில் உள்ளவர்களுக்குப் பணி பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஏஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவது 2026-ஆம் ஆண்டிலும் ஐடி ஊழியர்களை அதிகமாகப் பாதிக்க உள்ளது” என்று Alan S. Cohen கூறியுள்ளார். இவர் DCVC (“Data Collective VC”) என்ற venture capital நிறுவத்தில் General Partner ஆகப் பணியாற்றி வருகிறார். DCVC என்பது USA‑வின் பல்வேறு “Deep Tech” துறைகளில் முதலீடுகளைச் செய்யும் venture capital நிறுவனம். “Deep Tech” என்றால் அறிவியல், கணினி அறிவியல், AI, robotics, computational biology போன்ற தொழில்நுட்பத் துறைகளாகும்.

மேலும் புனேவில் செயல்பட்டுவரும் ஐடி ஊழியர்கள் சங்கமான NITES (Nascent Information Technology Employees Senate), சென்னையில் செயல்பட்டுவரும் UNITE (IT மற்றும் ITES ஊழியர் சங்கம்), கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டுவரும் UNITE (IT மற்றும் ITES ஊழியர் சங்கம்) ஆகிய சங்கங்கள் இதனை எதிர்த்துப் போராடி வருவதுடன் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநில NITES சங்கத்தின் தலைவர் ஹர்பிரித் சிங் சலுஜா சமீபத்திய வாரங்களில் கிட்டத்தட்ட 2,500 ஊழியர்கள் ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அல்லது திடீரென நீக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகமானவர்கள் நடுத்தர மற்றும் சீனியர் லெவல் ஊழியர்கள். இவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டு அனுபவம் உள்ளது. 40 வயது கொண்டவர்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இஎம்ஐ, குழந்தைகளின் பள்ளி கட்டணம், மெடிக்கல் செலவு, வயதான பெற்றோரை உடன் வைத்துள்ளனர். தற்போதைய போட்டி நிறைந்த சூழலில் வேலைவாய்ப்பைக் கண்டுபிடிப்பது அவர்களுக்குக் கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறியுள்ளார். மேலும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இதில் நேரடியாகத் தலையீடு செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள IT மற்றும் ITES ஊழியர் சங்கத்தின் (UNITE) பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மேலும் தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 50 ஊழியர்களைத் தனியாக அழைத்து எச்ஆர் பேசி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கர்நாடகா மாநில ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிக்கா கர்நாடகாவில் கூடுதல் தொழிலாளர் ஆணையரிடம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 15-ஆம் தேதி வருகிறது என்று கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டை டிசிஎஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அதாவது மேலே சொல்லப்பட்டுள்ள தகவல்கள் தவறானவை. வேண்டும் என்றே இந்தத் தகவல் பரப்பப்படுகிறது. எங்கள் நிறுவன பணியாற்றுவோரின் திறன்களை மறுசீரமைக்கும் முயற்சியைச் சமீபத்தில் தொடங்கியுள்ளோம். இதில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனமோ, டீப் டெக் நிறுவனங்களுக்கு முதலீடு செய்யும் Alan S. Cohen போன்றவர்களோ வேலையிழப்பு நடைபெறவேயில்லை என்று கூறவில்லை. மாறாக Layoff.fyi டிராக்கரும், ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழிற்சங்கமும் கூறுகின்ற எண்ணிக்கையைத் தான் தவறானவை என்று கூறுகிறது.

டிசிஎஸ் மறுசீரமைப்பதாக கூறியுள்ளது. இதன் உண்மையான அர்த்தம் என்ன? அதாவது ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு மாதத்தில் கற்று, அதனை ஊழியர்கள் தாங்கள் வேலைசெய்யும் புராஜெட்டில் அமல்படுத்தவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. இது அடிப்படையில் காரிய சாத்தியமற்றது என்பது நிறுவனத்திற்கும் தெரியும், ஊழியர்களுக்கும் தெரியும். இருந்தும் நிறுவனங்கள் மறுசீரமைப்பு என்ற பெயரில் ஊழியர்களைத் திறனற்றவர்கள் என்று கூறி வெளியேற்றுகின்றன.

அதேபோல் இரண்டு வருடச் சம்பளத்தை கொடுத்து தன்னார்வ ஓய்வுத் திட்டத்தில் ( VRS) செல்லும்படி கட்டாயப்படுத்துகின்றன. அவ்வாறு செய்யமுடியாது என்று கூறினால், இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு வேலையைத் தேடிக்கொள்ள முடியாது என்றால் உங்களிடம் அதற்கான தகுதியில்லை என்று கூறி ஊழியர்களைத் குற்ற உணர்விற்குள் தள்ளுகின்றன. 40 வயதிற்கு மேற்பட்டவர்களை அனைத்து நிறுவனங்களும் இப்படித்தான் வெளியில் அனுப்புகின்றன என்ற எளிய உண்மையைக்கூட ஊழியர்கள் புரிந்துகொண்டு குற்ற உணர்விற்கு ஆட்படத் தேவையில்லை என்று கருதுவதில்லை.

நிறுவனங்கள் கூறிக்கொள்வதுபோல அனைவருக்கும் இரண்டு வருடச் சம்பளத்தை கொடுப்பதில்லை. அதிலும் பல்வேறு வகைப்பாடுகளை வைத்துக்கொண்டு ஊழியர்களுக்கு தக்கவாறு கொடுத்து வருகின்றன. அப்படித் தருவதாக கூறிய தொகையைக்கூட முழுவதுமாக தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் தொழிலாளர்களால் எழுப்பப்பட்டு வருகின்றன.

முதலாளித்துவத்தின் ஆன்மா பணத்தில் இயங்குகிறது என்று காரல் மார்க்ஸ் கூறினார். அது இன்று முற்றிலும் உண்மையாகி வருகிறது. அதாவது ஒரு முதலாளி தனது பணத்தை மனித உழைப்பை வாங்குவதற்கான கருவியாக பயன்படுத்துகிறார். இதனால், முதலாளியின் மனித இயல்பு சுருங்கி, மூலதனத்தின் கருவி ஆகிறான். எனவே பணம் மட்டுமே வாழ்க்கையின் நோக்கமாக இருக்கும்போது, மனிதர்கள் ஒருவரையொருவர் பொருளாக பார்க்கிறார்கள்.

எனவேதான் 10, 20 ஆண்டுகள் உழைத்த ஒரு ஊழியரின் வலிகளை கிஞ்சித்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தனது மூலதனத்தைப் பெருக்குவதற்கான வழிகளையே முதன்மையாகக் கொண்டு இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு டிசிஎஸ்-வும் விதிவிலக்கல்ல.

இந்தியாவிலுள்ள ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்களில் சுமார் 50 இலட்சம் பேர் நேரடியாகவும், 2 கோடி பேர் மறைமுகமாகவும் வேலைசெய்து வருகின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 3.5% மட்டுமே. ஆனால் ஐடி துறையில் வேலைசெய்ய வேண்டும் என்பதற்காகப் படித்து வேலையில்லாமல் இருக்கும் ரிசர்வ் பட்டாளமோ இதைவிடப் பல மடங்கு அதிகம்.

டிரம்பின் வரிவிதிப்பின் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். இதனால் பருத்தி விவசாயிகள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அதன் தொழிலாளர்கள், நூற்பாலை நிறுவனங்கள் அதன் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான சிறு -குறு முதலாளிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். H1B விசாவுக்கான கட்டுப்பாடுகளைத் தவிர வேறெந்த பாதிப்பும் இல்லாத ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்வதற்கு பொருளாதாரப் பாதிப்பு என்று கூறுவது நகைமுரண்.

ஐடி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கற்பதில்லை என்பதோ, அதிகரித்துவரும் செலவுகளை குறைப்பதற்காக என்பதோ, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதோ காரணங்களாக இருக்க முடியாது. எத்தகைய சூழ்நிலையிலும் தனது மூலதனத்தைப் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்ற உழைப்பையும் பொருளாக கருதும் முதலாளித்துவ சித்தாந்தத்தின் காரணமாகவே மலிவான கூலிக்கு உழைப்பை விற்கத் தயாராக இருக்கும் ரிசர்வ் பட்டாளத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்ற அடிப்படையிலேயே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஐடி துறையை வேண்டுமென்றே பெரிதாக்கி காட்டுவதற்காக மற்ற எல்லாத் துறைகளையும்விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. எனவே இத்துறையில் சேருவதற்கான படிப்புகளைக் கற்றுத்தருவதாக கூறி கல்வி நிலையங்கள் ஊதிப்பெருதாக்கி விளம்பரம் செய்து கொள்ளை இலாபம் அடைகின்றன என்பது ஒருபுறம் இருக்க, இதனால் ஈர்க்கப்படும் பெற்றோர்களும், இளைஞர்களும் படித்து முடித்தபின் ஐந்திலக்க சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்துவிடலாம் என்ற ஆசையுடனும், பெருங்கனவுடனும் கடன் வாங்கியாவது படிக்கின்றனர். இதனால் ஐடி துறையில் ரிசர்வ் பட்டாளம் அதிகமாக உருவாகியுள்ளது.

முதலாளித்துவம் தனது இருப்பை உறுதிசெய்துகொள்வதற்குத் தேவையான ரிசர்வ் பட்டாளத்தை எப்பொழுதும் உருவாக்கி வைத்துக்கொள்கிறது. தொழிலாளர்களாகிய நாம், நமது இருப்பை எப்படி உறுதிசெய்துகொள்ளப்போகிறோம் என்பதுதான் நம்முன் நிற்கும் கேள்வியாகும்.

அரசும், முதலாளிகளும் ஓரணியில் நின்றுகொண்டு தொழிலாளர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முதலாளிகளுக்கு இலாபம் முதன்மையானது என்றால், அரசுக்கு அதனை உறுதிசெய்துகொடுப்பது முதன்மையானது. எனவேதான் தொழிலாளர்களுக்கு இருக்கும் அரைகுறை சட்டங்களைக்கூட, முதலாளிகள் இலாபம் ஈட்டுவதற்கு ஏதுவாக மாற்றி வருகின்றன.

ஐடி துறைத் தொழிலாளர்கள் 2A, 2K போன்ற பழைய தொழில்தகராறு சட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான தீர்வை இனிமேலும் பெறமுடியாது என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். எந்த நிறுவனமும் தொழிலாளர்களின் நலன் முதன்மையானது என்று கருதுவதில்லை. முதலாளிகளுக்கென்று பல்வேறு சங்கங்கள் இருக்கின்றன. அதில் யாரும் தொழிலாளர்கள் நலன் குறித்து பேசுவதில்லை. மாறாக அவர்கள் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசுகின்றனர். இந்தியா முழுக்க அமல்படுத்துகின்றனர். அப்படியிருக்கையில் நாம் மட்டும் தனித்தனியாக நின்று நமக்கான உரிமைகளைப் பெறமுடியாமா? நிச்சயம் முடியாது. எனவே நாமும் நமக்கான சங்கங்களை கட்டியெழுப்பி ஒன்று சேர்வதுடன், பழைய முறையில் கோரிக்கை வைப்பதோ, வழக்காடுவதோ தீர்வாகாது. மாறாக முன்னிலும் மூர்க்கமாக, விடாப்பிடியாக நமது கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதிலுமுள்ள ஐடி சங்கங்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே நாம் நமது இருப்பை உறுதிசெய்துகொள்ள முடியும் இதற்குக் குறுக்குவழி ஏதுமில்லை.

  • மகேஷ்

செய்தி ஆதாரம்:

https://techcrunch.com/2025/07/16/tech-layoffs-2025-list/

https://layoffs.fyi/

https://www.nerdwallet.com/article/finance/tech-layoffs

https://tamil.oneindia.com/news/chennai/tcs-layoffs-it-union-says-tcs-is-using-coercion-and-pressure-tactics-to-force-employees-to-resign-741583.html

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன