காசா – துப்பாக்கி முனையில் அமைதி

தற்போது பாலஸ்தீன மக்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஹமாஸ் அமைப்பினைப் பணிய வைத்திருப்பதன் மூலம் காசாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெற்றிபெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையை அடுத்து காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான டிரம்பின் திட்டம் என அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தினை ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் அரசும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கின்றன. காசாவில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனை இஸ்ரேல் நடைமுறைப்படுத்துவதை அமெரிக்க அதிபர் டிரம்பும் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்த மற்ற நாடுகளும் உறுதிப்படுத்த  வேண்டும் என இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்தப் போர் இத்துடன் முடிந்துவிடும் என அனைவரும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த மாத (செப்டம்பர்) இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் காசாவில் நடந்துவரும் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஒரு சமாதான ஒப்பந்தத்தை முன்மொழிந்திருக்கிறார். ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளாகப் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க வேண்டும். ஹமாஸ் தனது படைகளைக் களைத்துவிட்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். காசா நிர்வாக கவுன்சிலைக் கலைத்து இஸ்ரேலிடம் அவர்கள் சரணடைய வேண்டும். இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளன.

ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் அமெரிக்காவும், மற்ற ஐரோப்பிய நாடுகளும் காசாவின்  மறு நிர்மாணத்திற்கு உதவி செய்யும் என்றும் அப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால் இதுவரை காணாத நரகத்திற்கு நிகரான தாக்குதலை அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தொடுக்கும் என டிரம்ப் மிரட்டினார்.

அதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள ஹமாஸ் இயக்கத்திற்கு இஸ்ரேல் இரண்டு நாள் இறுதிக் கெடு விதித்தது. அமெரிக்க நேரப்படி கடந்த ஞாயிறு (அக்டோபர் 5) மாலைக்குள் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் டிரம்ப் கூறியதை நடத்திக் காட்டப் போவதாக இஸ்ரேல் எச்சரித்தது.

இதனால் வேறு வழியின்றி டிரம்பின் சமாதான ஒப்பந்தத்தை ஏற்பதாகவும், பிணைக்கைதிகளை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் அறிவித்தது. அதேசமயம் ஆயுதங்களை ஒப்படைப்பது, காசா நிர்வாக கவுன்சிலைக் கலைப்பது ஆகியவை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியிருக்கிறது.

இதனை ஏற்றுக் கொண்ட டிரம்ப் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் இஸ்ரேல் காசாவின் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை நேற்று வரை தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டேதான் இருந்தது. நிராயுதபாணியாக இருக்கும் அப்பாவி பொது மக்கள் மீது ஏவுகணைகளைக் கொண்டும், விமானங்களைக் கொண்டும் குண்டு மழை பொழிவதை தொடர்ந்தது. அதுமட்டுமன்றி மற்ற உலக நாடுகளில் இருந்து காசா மக்களுக்குக் கொடுப்பதற்காக நிவாரணப்பொருட்களுடன் வந்த நூற்றுக் கணக்கான படகுகளை இஸ்ரேல் தடுத்து நிறுத்திவைத்துள்ளது.

தற்போது இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அது ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளும் என நிச்சயமாகக் கூற முடியாது. இந்தப் போரை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருவதன் நோக்கமே காசா பகுதியைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அங்கே யூதக் குடியேற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். இந்த ஆக்கிரமிப்பு, இனஅழிப்புப் போரை இஸ்ரேல் தனியாகச் செய்யவில்லை. அமெரிக்காவின் ஆசியுடனும், நிதியுதவியுடனும் தான் செய்து வருகிறது.

போர் ஆரம்பித்த இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியுதவியை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருக்கிறது. அதுமட்டுமன்றி, பீரங்கி குண்டுகள், அமெரிக்க செயற்கைக்கோள் உதவியுடன் துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள், பதுங்கு குழிகளைத் தகர்க்கும் குண்டுகள், ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகள் (ஐயர்ன் டோம்), பல வகையான ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் என இந்த தாக்குதலுக்குத் தேவையான அனைத்து இராணுவத் தளவாடங்களையும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா இலவசமாகக் கொடுத்தது.

இவையெல்லாவற்றையும் கொண்டுதான் இத்தனை ஆயிரம் அப்பாவி பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்தது. ஆனால் இன்றோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் சமாதான பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

டிரம்ப் நினைத்தால் இஸ்ரேலுக்குத் தான் வழங்கிவரும் நிதியுதவி, ஆயுத உதவி, இராணுவ உதவிகளை நிறுத்தினால் போதும் இஸ்ரேல் வழிக்கு வந்துவிடும். ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ஹமாஸை மிரட்டுகின்ற அதே நேரம் இஸ்ரேலின் அடாவடியை அமெரிக்கா கண்டும் காணாமல் இருக்கிறது.

பாலஸ்தீனத்தின் இரண்டு பகுதிகளில் மேற்குக் கரை ஏற்கனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காசா பகுதி ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. அதனை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு, ஹமாஸ் தடையாக இருந்தது. தற்போது பாலஸ்தீன மக்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஹமாஸ் அமைப்பினைப் பணிய வைத்திருப்பதன் மூலம் காசாவைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும் வெற்றிபெற்றிருக்கின்றன.

காசா மறுசீரமைப்பு என்ற பெயரில் இஸ்ரேலிய குடியிருப்புகளை உருவாக்குவதும், பல இலட்சம் கோடிகளைக் கொட்டி பெரிய வர்த்தக நகரத்தை அங்கே ஸ்தாபிப்பதும், பாலஸ்தீன மக்களை நகரின் ஒதுக்குப் புறத்தில் கொட்டடியில் அடைப்பதைப் போன்று அடைத்துவைப்பதும் நடக்கவிருக்கின்றது. இந்த திட்டத்தில் இஸ்ரேலோடு கைகோர்த்துக் கொண்டு பங்கெடுக்க பல நூறு ஏகாதிபத்திய நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

ஏற்கெனவே இஸ்ரேல் அரசு, மேற்குக் கரையில் பாலஸ்தீனர்கள் வசித்த பகுதிகள் அனைத்திலும் யூதர்களைக் குடியேறச் செய்துள்ளது. அத்துடன் அங்குள்ள யூதர்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளவும், பாலஸ்தீனர்களைத் தாக்கவும் வசதி செய்து கொடுத்து அவர்களை ஒடுக்கி வைத்துள்ளது.

தற்போது சுய நிர்வாகத்துடன் இயங்கி வரும் காசா பகுதியையும் ஆக்கிரமித்து தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கேயும் யூதக் குடியேற்றம் செய்வதை நோக்கி நகரப் போகின்றது.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன