ஏழுமலையான் யாருக்கு?

இந்தியக் கார்ப்பரேட் முதலாளிகளில் முன்னணியுள்ள அதானியைப் போல, கார்ப்பரேட் சாமிகளில் முன்னணியான செல்வச் செழிப்புள்ள ஏழுமலையானுக்கும் கோடிக்கணக்கில் பணம் காணிக்கையாகக் கொட்டப்படுகிறது. அப்படி, உண்டியலில் கொட்டப்பட்ட கோடிக்கணக்கானப் பணத்தில் 100 கோடி மதிப்புள்ள அந்நியக் கரன்சியை ஜெகன்மோகன் ஆட்சிக் காலத்தில் களவாடியுள்ளனர் ஏழுமலையான் ஊழியர்கள் இருவர். திருடிய அந்நியக் கரன்சியைப் பிளாஸ்டிக் கவரில் அடைத்து தனது ஆசன வாயின் மூலம் கடத்தியுள்ளனர்.

‘சர்வ சக்திப் படைத்த கார்ப்பரேட் ஏழுமலையானால், இதை, கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவேளை, தெரிந்தும் (தனது ஞானக்கண் மூலம் தெரிந்தும்) கடத்திச் சென்ற வழியின் அருவருப்பைக் கருதியோ அல்லது ‘அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்! என்கிற முதுமொழிக்கேற்ப நாம் தான் தெய்வமாயிற்றே பிறகு பார்த்துக் கொள்வோம் என்று விட்டார் போலும்.

எது எப்படியிருப்பினும், அறிவியல் தொழில்நுட்ப் படைப்பான CCTV காமிராவோ விடுவதாக இல்லை. திருட்டைப் படம் பிடித்துக் காட்டிக் கொடுத்து விட்டது. அறியாமையால் உருவான கடவுள் படைப்புக்கும், அனுபவங்களால் உருவான அறிவியல் படைப்புக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். அறியாமையை அகற்றும், உள்ளதை உள்ளபடியே ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தும் தன்மையும், ஆற்றலும் அறிவியலுக்கு மட்டுமே உள்ளது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். இவற்றை, உணராத, எவராலும் அறியாமையால் உருவான கடவுள் படைப்பின் மீதான நம்பிக்கையில் இருந்து விட முடியாது. இதற்குத் தேவை ஒரு பண்பாட்டுப் புரட்.சி. இல்லையேல், கடவுளின் பெயரால் கட்டியமைக்கப்பட்ட மத நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்தும் வெளிவர முடியாது.

இது ஒரு புறம் இருக்க, ஏழுமலையான் வருவாயைத் திருடியதில் ஊழியர்கள் இருவருடன், அதன் அறங்காவலர், பகுதி எம்எல்ஏ, அம்மாநில ஆட்சியில் இருந்த கட்சி ஆகிய அனைவரும் கூட்டுக் களவாணிகள் என்கிறது செய்திகளின் தொகுப்பு. கரன்சியைத் திருடுவதோடு, நெய், லட்டு தயாரிப்பு, சிறப்பு தரிசனம் போன்ற இதர வழிகளிலும் கொள்ளையை அரங்கேற்றி வந்துள்ளனர், இந்தக் கூட்டு களவாணிகள். இது ஒன்றும் புதிதல்ல. காலம் காலமாக நடந்து வருவது தான் என்பதை அனைவரும் அறிவார்கள்.

இத்திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட இருவரைக் காவல் துறையிடம் ஒப்படைக்கவில்லை. ஏழுமலையான் ‘மானம்’ மலையேறி விடக்கூடாது என்பதற்காக லோக் அதாலத் மூலம் ஊற்றி மூட முயன்றது ஏழுமலையான் கோவில் நிர்வாகக் கமிட்டி. ஆனால், முடியவில்லை. திருடிய இருவரும், திருடிய பணத்தில் வாங்கிய வீட்டையும், நிலத்தையும் கோயில் நிர்வாகக் கமிட்டியிடம் ஒப்படைப்பதாக லோக் அதாலத்திடம் ஒப்புக்கொண்டனர். அதன்படி, ஒப்படைக்காததால் பிரச்சனை சந்திக்கு வந்துவிட்டது. ஒரு வேளை அவர்கள் ஒப்புக்கொண்டபடி நிலத்தையும், வீட்டையும் ஒப்படைத்து இருந்தால், இத்திருட்டு ஊற்றி மூடப்பட்டிருக்கும். வறுமையில் திருடிய ஒருவன் தான் திருடியதைத் திருப்பிக் கொடுத்து விட்டால் சிறை தண்டனையில் இருந்து விடுபட முடியுமா? முடியாது. இதுதான் இருப்பவனுக்கு ஒரு நீதி! இல்லாதவனுக்கு ஒரு நீதி!

இலவுக் காத்த கிளியாகக் காத்திருந்த இன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு, தனது அரசியல் எதிரியான முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகனை நார், நாராகக் கிழிக்க நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது இச்சம்பவம். இதைப் பயன்படுத்தி ஜெகன்மோகன் ஆட்சியில் நடந்த இத்திருட்டைத் தனது அரசியல் ஆதாயத்திற்கு அம்பல்படுத்தினாரே தவிர, ஏழுமலையான் வருவாய் திருடப்படுகிறதே என்கிற அக்கறையுடன், நல்லெண்ணத்துடன் மேற்கொள்ளப்படவில்லை. அவரால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில், அவர் காலத்தில் இருந்தே இது போன்ற திருட்டுகள் நீக்கமற நிலவுகிறது, நீடித்தும் வருகிறது. இதை அறியாத முட்டாள் அல்ல சந்திரபாபு நாயுடு.

இதுபோன்ற திருட்டையும், அவற்றை நடத்தி வரும் கூட்டுக் களவாணிகளையும் ஏழுமலையானால் ஒருபோதும் கண்டுபிடிக்கவோ, தண்டிக்கவோ முடியாது. அதற்குத் தேவை அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின், உழைக்கும் மக்களின் பங்களிப்பை, கண்காணிப்பை உள்ளடக்கிய ஆலய நிர்வாகிகளுடன் கூடிய ஒரு நிரவாகக் கமிட்டி. இவை தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும், தவறு செய்தால் தண்டிக்கவும் அப்பகுதி பக்தர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் அதிகாரம் அளிக்கக் கூடிய வகையில், அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமே, ஏழுமலையான் சொத்துக்கள் திருடப்படுவதையும், பல்வேறு முறைகளில் நடந்தேறும் ஊழலையும் கொள்ளையையும் தடுத்து நிறுத்த முடியும். கூட்டுக் களவாணித்தனத்தையும் முடிவுக்குக் கொண்டு வர முடியும்.

அரசைப் போல ஆண்டவனாகிய ஏழுமலையானும் அனைவருக்கும் சொந்தமானவன், பொதுவானவன், அனைவரையும் சமமாக நடத்துபவன் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் தரிசிக்கச் செல்கின்றனர். ஏழுமலையானை முதலீடாக வைத்து வியாபாரத்தை நடத்திவரும் கோவில் நிர்வாகக் கமிட்டியோ, பக்தர்களை வர்க்க ரீதியாகக் கூறு போட்டு, அவரவர் அளிக்கும் நன்கொடையின் மதிப்புக்கேற்ப தரிசிக்க அனுமதிக்கிறது. ரூபாய் 10,000 முதல் ஒரு கோடி வரை நன்கொடை அளிப்புகளுக்கு வி.ஐ.பி என்ற பெயரில் பிரேக் தரிசனம், சிறீவாணி தரிசனம் என சிறப்புத் தரிசனங்களுக்கு அனுமதி அளிக்கிறது. இத்துடன் சிறப்பு விடுதிகள் ஒதுக்கப்படுவதோடு, கூடுதல் லட்டுகளும், பிரசாதங்களும் வழங்கப்படுகின்றன. அவரவர் அளிக்கும் நன்கொடைகளின் மதிப்பிற்கேற்ப வருமானவரி 80(ஜி)இன் படி வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

இத்தகைய வசதியில்லாதவர்கள், ஏழுமலையானை தரிசிக்க நாள் கணக்கில் கால் கடுக்கக் காத்திருக்க வேண்டியதுள்ளது. பணம் படைத்தவனுக்கு நோகாத, தாமதம் இல்லாத, விரைவான, ஆண்டவனை அருகில் நின்று தரிசிக்கும் சிறப்பு தரிசனமும், இல்லாதவனுக்கு நெரிசலில் சிக்கிக் சீரழிந்த தரிசனமும் ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம், பணம் படைத்தவனுக்கு சொகுசான தரிசனத்தையும், இல்லாதவனுக்கு இன்னல் மிகுந்த தரிசனத்தையும் அளித்து வருவதை அனுமதிக்கும் ஆண்டவனும் அரசைப் போலவே ஓரவஞ்சனையுடன் கூடிய ஒரு வர்க்க விரோதியே. இல்லாதவனை வதைத்து, இருப்பவனை இலகுவாக அரவணைத்துத் தரிசிக்க வைக்கும் ஆண்டவனாகிய ஏழுமலையானை இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பக்தர்களிடமே விட்டுவிடுவோம்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன