“பாகிஸ்தானை வென்றது இந்தியா” – கிரிக்கெட்டை பயன்படுத்திப் பரப்பப்படும் போலி தேசிய வெறி

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை, இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன என்று பார்ப்பதற்குப் பதிலாக இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன என்ற போலி தேசியவெறி ஏற்கனவே இந்தியாவில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது எதிர்க்கட்சிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கெடுக்க கூடாது என்று போராட்டம் நடத்தி உண்மையான தேசப்பற்றாளன் நாங்கள் தான் எனக் கூறுகின்றனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிறு அன்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த வெற்றியைக் கொண்டாடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் “இந்த வெற்றியை, எல்லையில் வீரத்தைக் காட்டிய நமது இராணுவப் படைகள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்க விரும்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார். “பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அணியாக நாங்கள் ஒற்றுமையைக் காட்ட விரும்பினோம். ஆபரேஷன் சிந்தூருக்காக எங்கள் வீரர்களுக்கு நன்றி” என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌத்தம் கம்பீர் கூறியிருக்கிறார்.

வழக்கமாக கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளின் போது இரு அணி வீரர்களும் போட்டி தொடங்குவதற்கு முன்னரும், போட்டி முடிந்த பின்னரும் கை குலுக்குவது வழக்கம். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை. போட்டி முடிவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர்கள் கை குலுக்கக் காத்திருந்த போதும் இந்திய அணி வீரர்கள் யாரும் அவர்களிடம் செல்லாமல் புறக்கணித்தனர்.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ”நேற்றைய போட்டியில் அறம் காணாமல் போனது மிகவும் ஏமாற்றத்திற்குரியது. விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது. இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் அணிகள் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் “கிரிக்கெட்டைத் தவிர மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள்” என இருநாட்டு கிரிக்கெட் வீரர்களிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என பாகிஸ்தான் அணியினரும், விளையாட்டை அரசியலாக மட்டுமே பார்க்கப் பழக்கப்பட்டிருக்கும் இந்திய அணியினரும் கூறியுள்ள கருத்துகள் ஒருபுறம் இருக்க இந்திய பாசிஸ்டுகளும், பாசிச எதிர்ப்பாளர்களும் முன்வைக்கும் தேசப்பற்றின் அளவுகோலைப் பற்றி இனி பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகம் மறைவதற்குள், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவதா என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

சிவசேனா உத்தவ் தாக்கரே அணி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தேசபக்தி உணர்வை பணம் மற்றும் அதிகாரத்திற்காக பாஜக அரசு விட்டுக் கொடுத்துவிட்டதாக பாசிச எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆம் ஆத்மி தில்லியில் போராட்டம் நடத்தியது. அக்கட்சியின் மாநில தலைவர் இன்ஸ்டாகிராமில் இது தொடர்பாக காணொளி ஒன்றைப் பகிர்ந்து, “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க நினைத்தவர்களுடன் கிரிக்கெட் போட்டி விளையாட வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் இதனை வன்மையாக எதிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம்.” எனப் பதிவிட்டுள்ளார்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, “இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்ற மோதியின் முந்தைய கருத்தை மேற்கோள் காட்டி, இரத்தத்தையும் தண்ணீரையும் ஒன்றாகப் பார்க்க முடியாது என்றால் கிரிக்கெட்டும் இரத்தமும் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? கிரிக்கெட்டையும் போரையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா?” எனக் கேள்வி எழுப்பி, அரசாங்கம் தனது நடவடிக்கைகளைப் பாதியில் நிறுத்திவிட்டு தேசப்பற்றை வெறும் வணிகமாக மாற்றிவிட்டது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநில அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரியங்க் கார்கே தனது பதிவில், “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இழந்த உயிர்களின் மதிப்பு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியிலிருந்து கிடைக்கும் விளம்பர வருவாயைவிட குறைவாகப் போய்விட்டதா? இது விளையாட்டு அல்ல, நமது தியாகிகளின் இரத்தத்திற்கு மேலாக இலாபத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவமானகரமான உதாரணம் ஆகும்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல், அதற்கடுத்து மோடி அரசு நடத்திய ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றுக்கடுத்து தேசவெறி, இராணுவவெறி, போர்வெறிக் கூச்சலில் சர்வகட்சிகளும் கலந்துகொண்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மோடி அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனக் கூறிக்கொண்டு பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது தொடங்கி, ‘ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் இயங்கி வந்த தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து அழிப்பது வரை இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளில் “இனி எதிர்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை உணர்த்துவதற்காக” இந்தப் பதிலடி கொடுக்கப்பட்டதாக மோடி கூறினார். இதற்கு முன்பும் மோடியின் ஆட்சிக் காலத்திலேயே நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குப் பதிலடியாக இதே பாணியில் மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2016 பஞ்சாப் பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்த போது, கடும் நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தீவிரவாதிகளை எச்சரித்ததுடன், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்றார் மோடி. அதே ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஊரி பகுதியில் இருந்த இராணுவ தளத்தை தீவிரவாதிகள் தாக்கிய போது “சர்ஜிகல் ஸ்டிரைக்” நடத்தி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததாக இந்திய அரசு அறிவித்தது. 2019-ல் புல்வாமா தாக்குதலில் துணை இராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்ட போது, பாகிஸ்தானின் பாலகோட்டில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இப்படி தீவிரவாத தாக்குதல்களைத் தடுக்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கடந்த காலங்களில் எடுத்த நடவடிக்கைகளால் பஹல்காமில் நடந்த தாக்குதலைத் தடுக்க முடியவில்லை.

இருந்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் பாதுகாப்பு குளறுபடி காரணமாகத்தான் பஹல்காம் தாக்குதல் நடந்துள்ளது இதற்கு மோடி-அமித்ஷா பொறுப்பெடுக்க வேண்டும் என்ற எல்லையைத் தாண்டி போகவில்லை. மேலும், ஒருமித்த குரலில் மோடி அரசின் மேற்படி நடவடிக்கைகளுக்கு இலாவணி பாடினார்கள் என்றால் மிகையாகாது. மோடி அரசு போலி தேசியவெறியைக் கட்டியமைத்து இஸ்லாமிய வெறுப்பையும், இந்துக்களின் ஒற்றுமையும் ஒருசேர அறுவடை செய்துகொள்வதற்குப் பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டை, இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன என்று பார்ப்பதற்குப் பதிலாக இரு நாடுகளும் மோதிக் கொள்கின்றன என்ற போலி தேசியவெறி ஏற்கனவே இந்தியாவில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது எதிர்க்கட்சிகள் இதனைப் பயன்படுத்திக்கொண்டு மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கெடுக்க கூடாது என்று போராட்டம் நடத்தி உண்மையான தேசப்பற்றாளன் நாங்கள் தான் எனக் கூறுகின்றனர்.

உண்மையான தேசப்பற்றாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று கூறிய பொழுது அதற்கெதிராக கிளர்ந்தெழுந்து எதிர்க்கட்சிகள் என்ற முறையில் நாட்டின் இறையாண்மையை பாதுகாத்திருக்க வேண்டும், பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியாவின் மீது 50% வரியை விதித்தபோது அதற்கு எதிராக அமெரிக்காவிற்குப் பதில் வரி போடு என்றும், பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். இதனைச் செய்ய துப்பில்லாமல் காவி-கார்ப்பரேட் கும்பல் செய்து கொண்டிருக்கும் போலி தேசவெறி அரசியலை கையிலெடுத்துக்கொண்டு மக்களிடம் மீண்டும் செல்வாக்கு பெறுவதற்கு எத்தனிக்கிறார்கள்.   

அதேபோல், பாஜக எம்பியும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூர், இது தொஇடர்பாக செய்தியாளர்களிடம் பேசியபொழுது, “பன்னாட்டுத் தொடர்களை ஏசிசி அல்லது ஐசிசி ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும் அதில் கலந்து கொள்வது ஒவ்வொரு நாட்டிற்கும் கட்டாயமும், தேவையும் ஆகும். இந்தப் போட்டிகளில் நாம் கலந்து கொள்ளவில்லையென்றால், தொடரிலிருந்து வெளியேறிவிடுவோம். இதனால் மற்ற அணிகளுக்குப் புள்ளிகள் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

அதாவது பன்னாட்டு தொடர்களில் இந்தியா விளையாடுவதை இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கட்டுப்படுத்த முடியாது என்றும், இந்தியா மீதான தீவிரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் நிறுத்துகின்ற வரை அவர்களுடன் இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய வெறுப்பையும், கிரிக்கெட்டின் மூலம் போலி தேசியவெறியையும் கட்டியமைத்து மக்களைப் பிளவுபடுத்தி இந்து தேசியத்தை கட்டியமைப்பது என்ற நோக்கத்திற்காகவே கிரிக்கெட்டையும் இராணுவத்தையும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு தனது கேடான நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எனவே, தேசப்பற்றின் மோகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய இராணுவத்தின் நடவடிக்கையையோ, கிரிக்கெட் விளையாட்டையோ ஆதரிக்கும் உழைக்கும் மக்களே சிந்தியுங்கள்!

நாட்டின் அனைத்துச் சொத்துக்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கு ஏது தேசப்பற்று?

சுதந்திரப் போராட்டத்தின்போது ஆங்கிலேயரிடம் சரணாகதி அடைந்த ஆர்.எஸ்.எஸ்-க்கு ஏது தேசப்பற்று?

உழைக்கும் மக்களின் சொத்துக்களை சூறையாடும் பாசிஸ்டுகளுக்கு ஏது தேசப்பற்று?

கார்ப்பரேட்டுகளுக்காக இந்திய விவசாயிகளின் மீது இராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்திய பாசிஸ்டுகளுக்கா தேசப்பற்று உள்ளது?

பன்னாட்டு கார்ப்பரேட் முதலைகளுக்காகத் தொழிலாளர் உரிமைகளைப் பறித்து தொழிலாளர் சட்டங்களை ஒழித்துக் கட்டி வரும் பாசிஸ்டுகளுக்கு எங்கே உள்ளது தேசப்பற்று?

ஒருபுறம் மறுகாலனியாக்கக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டே மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுப்போம் என்று கொக்கரிக்கும் பாசிஸ்டுகளுக்கு எள் முனையளவும் கிடையாது தேசப்பற்று!

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன