தனது அரசியல் நலனுக்காக ரோஹிஞ்சா முஸ்லீம்களை மனிதநேயமற்ற முறையில் நாடு கடத்தும் காவி பாசிச மோடி அரசு

கடந்த மே மாதம் கைருல் மற்றும் அவரது மூன்று உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா முஸ்லீம்கள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதையும், அப்பொழுது அவர்களைப் போலீசும், இராணுவமும் எப்படியெல்லாம் நடத்தியது என்பதைப் பற்றியும் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிபிசி இணையதளம் காணொளியும், செய்தியும் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அரசின் மனிதநேயமற்ற தன்மையையும், அதன் நோக்கத்தையும் நாடு கடத்தப்பட்டவர்கள் வெளியுலகிற்குத் தெரியப்படுத்தியிருப்பதன் மூலம் இந்திய காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகள் அம்பலப்பட்டுள்ளனர்.

தில்லியில் வசித்து வந்த 43 ரோஹிஞ்சா அகதிகளை ஆண்டுதோறும் உயிரி தரவு (பயோமெட்ரிக்) சேகரிக்கப்படுவது கட்டாயம் எனக் கூறி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் தில்லியில் இருந்து வங்காள விரிகுடாவிலுள்ள ஒரு தீவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டு, இறுதியாக ஆழ்கடலில் உயிர்காக்கும் மிதவைகளுடன் விடப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் புற்றுநோய் போன்ற உடல்நல பிரச்சினைகள் உள்ளவர்களும் இருந்துள்ளனர். இத்தனக்கும் இவர்கள் சட்டவிரோதக் குடியேரிகள் அல்ல. இவர்கள் அனைவருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் (UNHCR) இந்தியாவில் வாழ்வதற்கான அகதிகள் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளது.

கடற்படைக் கப்பலில் ஏற்றிசெல்லப்பட்டபொழுது, இந்திய இராணுவ வீரர்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ளனர். ஃபோயாஸ் உல்லா என்ற அகதி தனது வலது மணிக்கட்டில் உள்ள காயங்களையும், முதுகிலும் முகத்திலும் அறையப்பட்டு, மூங்கில் குச்சியால் குத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

நீங்கள் ஏன் இந்தியாவில் சட்டவிரோதமாக இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் ஏன் இஸ்லாமில் இருந்து இந்துவாக மாறாமல், கிறிஸ்தவராக (15/43 பேர் கிறிஸ்தவர்கள்) மாறினீர்கள் என்றும், உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களா என்று பார்க்க கீழாடையை இறக்கவும் செய்து அவமானப்படுத்தியுள்ளனர்.

மியான்மரில் இராணுவ ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வாழ வழியின்றி பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தது பற்றியோ, ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் வழங்கியுள்ள இந்தியாவில் அகதிகளாக வாழ்வதற்கான அடையாள அட்டையை வைத்திருப்பது பற்றியோ கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை என்பதிலிருந்தே இந்(து)தீய இராணுவத்தின் மனநிலையைப் புரிந்துகொள்ளமுடியும்.

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் 26 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காம் படுகொலைக்கும் இமான் உசைன் என்ற அகதிக்கும் தொடர்பிருப்பதாக ஒரு இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இந்திய அரசு இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைக் குற்றம் சாட்டியது. மேலும், ரோஹிஞ்சாக்களுக்கும், பஹல்காம் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதபொழுது அகதிகள் மீது வீண் பழி போட்டு அச்சுறுத்துவது இந்திய இராணுவம் காவிமயமாயிருப்பதை துலக்கமாகக் காட்டுகிறது.

இத்தனை கொடூரங்களை அரங்கேற்றிய பிறகும், இந்திய அரசாங்கமோ அல்லது இந்தியக் கடற்படையோ இது குறித்து ஊடகங்களிடமோ, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடமோ எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான கணிசமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக மியான்மரில் மனித உரிமைகள் குறித்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் தாமஸ் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். மேலும் இந்த ஆதாரங்களையெல்லாம் ஜெனிவாவில் உள்ள இந்திய தூதரிடம் சமர்ப்பித்துள்ளார். எனினும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

அதேபோல் பிபிசி, பல முறை இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டதாகவும், தற்போது இந்தச் செய்தியை வெளியுலகிற்குத் கொண்டு வரும்வரை எந்தப் பதிலும் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளது.

ரோஹிஞ்சா அகதிகள் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்தவுடன், நாடு கடத்தப்பட்ட அகதிகளின் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் இந்திய உச்சநீதிமன்றத்தில் அவர்களை மீண்டும் தில்லிக்கு அழைத்து வரவும், இதுபோன்ற நாடு கடத்தல்களை உடனடியாக நிறுத்தவும், 40 பேருக்கும் இழப்பீடு வழங்கவும் வேண்டி மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் ஒரு நீதிபதி இந்தக் குற்றச்சாட்டுகளை “கற்பனையான கருத்துக்கள்” என்று கூறியுள்ளார். மேலும், நாடு கடத்தப்படலாம் என்ற கூற்றை உறுதிப்படுத்துவதற்கு போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை எனக் கூறி இடைக்கால உத்தரவு வழங்க மறுத்துவிட்டது.

தற்போது இந்திய நீதிமன்றத்திற்குக் ”கற்பனையான கருத்துக்கள்” இல்லை என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை பிபிசி வெளியிட்டுள்ளது. அது பொதுவெளியிலும் காணக்கிடைக்கிறது. அறிவு நாணயத்துடன் இந்திய நீதிபதிகள் தண்டனை பெற்றுத்தருவார்களா? நீதித்துறை தானாக முன்வந்து (Suo Motu case), இந்த வழக்கை எடுக்கவில்லை எனும்போதே அது யார் பக்கம் நிற்கிறது என்பதை சொல்லித் தெரியவேண்டியது இல்லை.

அதேபோல், கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியா சட்டவிரோதமாக அசாமில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் சுமார் 1200-க்கும் மேற்பட்டவர்களை வங்கதேச எல்லைக்குள் அனுப்பியிருக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள்.

தேசிய அளவிலும் அசாமிலும் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அண்மைக் காலங்களில் மாநிலத்தின் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறிக்கொண்டு இந்திய குடிமக்கள் என்று நிரூபிக்க தேவையான சரியான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இந்த மண்ணில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் இஸ்லாமியர்களைக் கூட சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என முத்திரை குத்தி நாடு கடத்தப்படுகிறார்கள்.

இராணுவம், போலீசு, நீதிமன்றம் என அனைத்து அரசு நிரந்தர உறுப்புக்களையும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகள் தங்களின் இந்து-இந்தி-இந்தியா என்ற அகண்ட பாரத கனவை நினைவாக்குவதற்குத் தேவையான ஒத்திசைவாக்கலைத் தீவிரமாக செய்துகொண்டு வருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

மோடி-அமித்ஷா கும்பல் இந்திய தண்டனைச் சட்டத்தை மட்டும் மீறவில்லை, சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கையான உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒருவரை விருப்பத்திற்கு மாறாக ஒரு நாட்டில் இருந்து திருப்பி அனுப்பக்கூடாது என்கிற கொள்கையையும் மீறியுள்ளனர்.

இந்திய பாஸிட்டுகள், இந்து நாடு என்று அறிவிப்பதற்குத் தேவையான இனச்சுத்திகரிப்பை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதாகத்தான் இந்த நிகழ்வுகளையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். காவி-கார்ப்பரேட் பாசிசத்தை உண்மையிலேயே எதிர்க்க வேண்டும், மோடி-அமித்ஷா கும்பலை மக்களிடம் அம்பலப்படுத்தித் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அக்கரையும், ஆர்வமும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இதற்கெதிராகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும். போராட வாருங்கள் என அழைக்கிறோம்.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன