நிலவுக்கு முதலில் சென்றது யார்? என்று கேட்டால் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பள்ளி குழந்தைகள் கூட சொல்லும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு எட்டு வருடத்திற்கு முன்பே வின்வெளியில் பயணம் செய்தவர் அப்போதைய இரஷ்யாவின் யுரி ககரின். இது உலகம் அறிந்த அறிவியல் உண்மை. ஆனால், ஆர்எஸ்எஸ்-பாஜகவினரைப் பொருத்தவரை இது பாரத பெருமையை மறைப்பதற்காக மேற்கத்திய நாடுகள் செய்யும் சதி. சங்கிகளைப் பொறுத்தவரை, அறிவியலோ அல்லது சாப்பாட்டு அவியலோ, அது வேத பஞ்சாங்கத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளத் தகுதி வாய்ந்தவை இல்லை என்றால் அவை புறந்தள்ளத்தக்கவை. ஆர்எஸ்எஸ்-இன் கடைநிலைத் தொண்டனிலிருந்து பாஜக அமைச்சர் வரையும் இதுதான் அவர்களது கண்ணோட்டம்.
தேசிய விண்வெளி நாளை ஒட்டி (23.08.25) ஹிமாச்சல் மாநிலத்தில் உள்ள நவோதயா பள்ளியில் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மேற்கண்ட கேள்வியைக் கேட்டிருக்கிறார். மாணவர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் என்று பதிலளித்துள்ளனர். உடனே இடைமறித்து சிரித்துக்கொண்டே ஆம்ஸ்ட்ராங் அல்ல, விண்வெளியில் முதலில் பயணித்தது “ஹனுமன் ஜி” என்று தனக்கு ஆர்எஸ்எஸ்-இல் சொல்லிக் கொடுத்ததை மாணவர்களிடம் கக்கியிருக்கிறார். மேலும், இந்த பாடபுத்தகம் பிரிட்டீஷார் தந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் பாடபுத்தகத்தைத் தாண்டி இந்திய அறிவு மரபிலிருந்தும், அதாவது வேதத்திலிருந்து, கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.
இராமயணக் கதையிலே, ஹனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு பறந்து சென்றது மற்றும் சீதையைச் சந்திக்க இலங்கை பறந்து சென்றது என தூர்தர்ஷன் இராமாயண நாடகங்களில் வரும் புனைவுக் காட்சிகளின் அடிப்படையில் ஹனுமனை முதல் விண்வெளி வீரர் என்று அடித்துவிட்டுகிறார் அனுராக் தாக்கூர். அனுமன் பறந்தது உண்மையென்றால், அஸ்வமேதயாகத்தின் மூலம் (புத்திர காமேஷ்டியாகம்) கோசலைக்கும் குதிரைக்கும் பிறந்தவன் இராமன் என்று வால்மீகி சொல்வதையும் அனுராக் ஏற்றுக் கொள்வாரா?
இது நடந்த சில தினங்களுக்குள், பண்டைய இந்தியாவில் விமானம், ட்ரோன்கள் இருந்தது, ரைட் சகோதரர்களுக்கு முன்னே இந்தியாவில் இராமயணக் காலகட்டத்தில் புஷ்பக விமானம் பயன்பாடு இருந்தது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் IISER-Bhopal இன் பட்டமளிப்பு விழாவில் அடித்துவிட்டிருக்கிறார்.
இதே கதையை சற்று விரிவாக NCERT பாடப்புத்தகங்களில் சேர்த்துள்ளனர். கூடவே, பொறியியல் படிப்பு, இளங்கலை அறிவியல் படிப்பு மற்றும் வணிகப் படிப்புகளில் பண்டைய அறிவியல் என்ற பெயரில் யோக, இரசவாதம், அர்த்தசாஸ்திரம், பஞ்சாங்கம், வேதகணிதம், பகவத்கீதை, சரஸ்வதி நாகரீகம், சாவர்க்கர், இராமாயண மகாபாரதத்தின் சில பகுதிகள், முஸ்லீம் வெறுப்பு பிரச்சாரத்திற்காக முகலாய அரசர்களை மோசமானவர்களாகவும், இந்து மன்னர்களைப் புனிதர்கள் போலவும் வரலாற்றை திரித்துச் சொல்வது, இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்போதைய முஸ்லீம் லீக் தலைவர்கள் தான் காரணம் என ஒருபக்க உண்மையை மட்டும் சொல்வது என மாணவர்களிடையே இந்து தேச வெறியை திணிப்பதற்கான சகலவேலைகளையும் காவி கும்பல் செய்துவருகிறது.
************************************************
ஒரு பொருள் பறக்க வேண்டும் என்றால் அதன் மேல் மற்றும் கீழ் பகுதிக்கு இடையே அழுத்த வேறுபாடு இருக்க வேண்டும். இந்த அழுத்த வேறுபாடுதான் அப்பொருளை மேல் நோக்கித் தூக்குவதற்கு காரணமாகிறது. பொருளின் எடைக்கு ஏற்ப அழுத்த வேறுபாடும் மாறுபடும். மேலும் அப்பொருள் முன் நோக்கி நகருவதற்கு முன்னோக்கிய உந்துவிசையும் வேண்டும். இவ்விசை, பொருள் நகரும் போது அதைச் சுற்றியுள்ள வளிமண்டல காற்று உருவாக்கும் பின்னோக்கிய விசையை விட அதிகமாகவும் அதற்கு எதிர் திசையிலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு, ஒரு பொருளின் மீது எதிரெதிர் திசைகளில் நான்கு விசைகளை செயல்படுத்துவதன் மூலமே அப்பொருளை பறக்க வைக்க முடியும். இவைதான் விமானங்கள் பறப்பதற்கான அடிப்படைக் கோட்பாடு ஆகும். பறவைகள் பறப்பதற்கு கூட இதுதான் அடிப்படை. விமானங்களில், அதில் பொருத்தப்பட்டுள்ள என்ஜின்கள் இவ்விசைகளை உருவாக்குகின்றன. பறவைகளைப் பொறுத்தவரை, அவை தன்னுடைய இறக்கைகளின் மூலம் இவ்விசைகளை உருவாக்கிக் கொள்கின்றன.
அனுமனுக்கு இறக்கைகள் கிடையாது வால் மட்டுமே உண்டு. வாலை மட்டும் கொண்டு பறக்கின்ற உயிரினங்கள் இன்றுவரைக் கண்டறியப்படவில்லை. நாமறிந்து குரங்குகள் பறந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் எதுவுமில்லை. பிறகு அனுமன் எவ்வாறு பறந்திருக்க முடியும் என்று கேட்டால், ஆதாரம் கேட்காதே இது எங்கள் நம்பிக்கை என்று மிரட்டுகிறது காவி வானரக் கும்பல்.
ஆங்கிலேயர் தந்த பாடத்தினைத் தாண்டி வேதத்தையும் பார்க்கச் சொல்கிறார் மத்திய அமைச்சர். அவர் பாரதத்தின் கண்டுபிடிப்பான புஷ்பக விமானத்தில் பயணிக்காமல், மேற்கத்திய நாடுகள் கண்டுபிடித்த விமானத்தில் பயணித்ததால், எந்த அசௌகரியமும் இல்லாமல், தில்லியிலிருந்து சில மணி நேரங்களில் ஹிமாச்சல் சென்று மாணவர்களிடையே வேதப் பெருமைகளை (குப்பைகளை) பிரச்சாரம் செய்ய முடிந்தது. ஒருவேளை அருகில் உள்ள அனுமன் கோவிலுக்குச் சென்று குரங்கின் முதுகில் ஏறியோ அல்லது புஷ்பக விமானத்திலோ ஹிமாச்சல் பயணிக்கத் திட்டமிட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? ஹிமாச்சல் போயிருக்க முடியாது, ஹனுமனோடு சேர்ந்து மோலோகம் சென்று இராமனைத் தான் தரிசித்திருக்க முடியும்.
இவர்கள் சங்கிகள் என்பது ஒருபுறம் இருந்தாலும், தாங்கள் பேசுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்பது இவர்களுக்கு தெரியாமல் இல்லை. வேதகாலம் பொற்காலம் என்று நிருவுவதற்காக, நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் அதன் மூலமாக பெறப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும் பின்னால் உள்ள காரண காரியங்கள் மற்றும் வழிமுறைகளை நைச்சியமாகப் புறந்தள்ளிவிட்டு அதன் இறுதி முடிவுகளை மட்டும் எடுத்துக் கொண்டு அவற்றை நேரடியாக வேத-புராணக் கதைகளோடு பொருத்திப் பேசுகின்றனர். ஆங்கிலேய கல்வியினால் பயன்பெற்ற பார்பனர்கள் இருநூறு ஆண்டுகளாக இந்தவேலையைச் செய்துவருகின்றனர்.
உதாரணமாக, விமானம் என்பது நவீன அறிவியலின் வெளிப்பாடு. அதன் இயக்கத்திற்கு பின்னால் மிகவும் சிக்கலான பல அறிவியல் தொழில்நுட்ப கோட்பாடுகளும், அதற்கான சோதனைகளும் அதில் அடங்கியுள்ளன. அதனடிப்படையில் விமான இயக்கத்திற்கான காரண காரியத்தையும் அதன் செயல்முறையையும் நம்மால் விளக்க முடியும். முக்கியமாக விமானத்தினுடைய அறிவியல் தொழில்நுட்பங்களை ஒருவர் அறிந்து கொண்டால் அவர் அதை உற்பத்தி செய்யமுடியும் மேம்படுத்தவும் முடியும்.
ஆனால் இராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைத் தாண்டி, அனுமான் பறந்தார் என்பதற்கான ஆதாரம் என்ன? அவர் பறந்ததற்கு பின்னால் உள்ள காரண-காரியங்களும் அதற்கான கேட்பாடு மற்றும் செயல்முறை விளக்கங்களும் என்ன? இந்தக் கேள்விகளுக்கு சங்கிகள் தரும் ஒரே பதில், இது எங்களுடைய நம்பிக்கை. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த நம்பிக்கையை ஓரளவிற்கு மேல் கேள்வி கேட்க முடியாத அளவிற்கு இந்திய சட்டமும் இந்து மதவாதிகளுக்கு ஆதரவாகவே உள்ளது.
இங்கு காரண-காரியத்தை புறந்தள்ளி விட்டாள், முன்பு அனுமன் பறந்தார், இப்போது விமானம் பறக்கிறது. விமானம் கண்டறிவதற்கு முன்பே அனுமன் பறந்தாக புராணக்கதைகள் சொல்லுவதால் பாரதமே முதன் முதலில் விமானத்தை உலகிற்கு தந்தது. இதுதான் சங்கிகள் முன்வைக்கும் வேதகாலப் போலிப் பெருமைகளுக்கு பின்னல் உள்ள தர்க்கம். இதை நீங்கள் மோடி சொன்ன பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் பொருத்தலாம் அல்லது சௌகான் சொன்ன விமானக்கதைக்கும் பொருத்திக் கொள்ளலாம்.
************************************
புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசுகின்ற, இந்த அறிவு நாணயமற்ற வேலை தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் என தொடங்கி அரவிந்தர், திலகர், சாவர்கர், பெரிய சங்கராச்சாரி வழியாக இப்போது சக்கிவாசுதேவ், ரவிசங்கர், ராம்தேவ் என தொடர்கிறது. இவர்கள் தங்களது காலசூழலுக்கு ஏற்றவாறு இந்து மதத்திற்கு புது புது விளக்கங்களை கொடுத்து, தேச உணர்வையும் இந்துமதத்தையும் கலந்து, இந்து-இந்தி-இந்தியா என்ற இந்து தேச வெறி பிரச்சாரத்திற்கு ஆதாரமாக செயல்பட்டுவந்துள்ளனர்.
இதே வேலையை, கடந்த 100 வருடங்களாக ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் அரசியல் தளத்தில் செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ்-பாஜக பொறுத்தவரை பாரதம் ரிஷிகளால் உருவாக்கப்பட்டது, இங்கே அறிவியல், மருத்துவம், கலை-இலக்கியம், வானவியல் என அனைத்தும் செழிப்புற்று இருந்தது. உலகிற்கே விஷ்வ குருவாக இருந்த பாரதம் அந்நிய படையெடுப்புகளால் குறிப்பாக இஸ்லாமியப் படையெடுப்புகளால் அதனுடைய சீறும் சிறப்பையும் இழந்தது. அப்பெருமைகளை மீட்டெடுக்க, இஸ்லாமியர்களை வீழ்த்த இந்துக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுவே காவி கும்பலின் அரசியல் அடிப்படை. துளியும் ஆதாரம் இல்லாத இப்பொய்களைப் பிரச்சாரம் செய்துதான் ஆர்எஸ்எஸ்-பாஜக மக்களைத் திரட்டுகிறது.
இந்த பொய்களை உண்மையாக்க, வேதகாலம் பொற்காலம் என்ற பொதுக்கருத்தை உருவாக்க, புராணக்கதைகளை நவீன அறிவியலின் வெளிப்பாடுகளோடு கொச்சையாகப் பொருத்தி பிரச்சாரம் செய்வது, வரலாற்றைத் திருத்தி எழுதுவது, தொல்லியல் ஆய்வு முடிவுகளை முடக்குவது என்று பல்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனர். அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்தினை மாற்றுவதும் அதில் காவி அரசியலை புகுத்துவதும். பாடப்புத்தகங்களில் இந்தியாவின் உண்மையான வரலாற்றை திருத்தி எழுதுவதும் இந்திய அறிவு மரபு என்று அனுமன் பறந்தான் போன்ற புராணக்கதைகளை சேர்ப்பதும் அத்திட்டத்தின் ஒரு அங்கம். பொய் என்று தெரிந்தும் கூட, அனுராக் தக்கூர், சௌகான், மோடி உள்ளிட்ட பல சங்கிகள் புராணக்கதைகளை அறிவியல் என்று பேசிவருவதற்கு காரணம் இதுதான்.
மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது மற்றும் சமூகத்தில் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்வது போன்றவை காவி கும்பலின் வரலாற்று திரிபுகளை முறியடிப்பதற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால், “வேதகாலம் பொற்காலம் என்பதும், இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரிப்பதும்” இதன் மூலம் இந்து தேச வெறியை பரப்புவதும் தான் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலினுடைய காவி பாசிச அரசியலின் முக்கியமான கூறாகும். எனவே காவி பாசிச அரசியலை வீழ்த்துவதற்கான அரசியல் செயல்பாடுகளின் மூலமாகவே இந்து தேசவெறிப் பிரச்சாரத்தையும், போலிதேசியப் பெருமைகளையும் நாம் வீழ்த்த முடியும். அதற்கான செயல்பாடுகளில் மாணவர்கள், பேராசிரியர்கள், அறிவுத்துறையினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதே நாட்டைக் கவ்வியிருக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை விரட்டுவதற்கான ஒரேவழி.
- செல்வம்
https://www.newsclick.in/ncert-modules-partition-distortions-galore
https://thewire.in/education/ten-reasons-why-ugcs-push-for-indian-knowledge-is-a-threat-to-education
https://ramayanam.mooligaimannan.com/2018/04/blog-post_20.html