இந்திய தேர்தல் ஆணையம், பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் சுமார் 1.2 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளது. அதேபோல் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து பாஜக வெற்றி பெற்றதுள்ளது. இதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நீதித்துறை ஆகிய அரசு உறுப்புக்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை எப்படி தனது வழிக்குக் கொண்டுவந்ததோ அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி ஓட்டுத்திருட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளது.
இந்த மோசடிகளெல்லாம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தவையல்ல. 2014-இல் பாஜக கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அறிக்கை கொடுப்பது, வாய்ச்சவடால் அடிப்பது என்ற வரம்பிற்குள் தன்னை நிறுத்திக்கொண்டன.
தற்பொழுதுதான் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி, பீகாரின் தேஷஸ்வியுடன் இணைந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறார். இதுவும்கூட ”இந்தியா” கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றுசேர்ந்து இந்தியா முழுமைக்கும் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் தேர்தலை மையப்படுத்தியே நடத்தப்படுகிறது.
ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் அடுத்த தேர்தலை நடத்தாமல், இனி அதிபர் ஆட்சிமுறை என்று அறிவித்துவிட்டு தங்களுடைய ஆட்சியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பேசப்பட்டுவரும் இன்றைய சூழலில் எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாசிசத்தை எதிர்ப்பதாகச் சொல்லும் ”இந்தியா” கூட்டணிக் கட்சிகள் ஏன் பெரியளவில் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. இன்னும் புரியும்படிக் கூறினால் தெற்கே அதுவும் தமிழ்நாட்டில் அப்படி ஒருபோதும் நடக்காது என்று நம்புகிறார்கள். தான் நம்புவதுடன் மற்றவர்களையும் நம்பவைப்பதற்குப் பெரியளவில் வேலைசெய்கிறார்கள். இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 40/40 வெற்றியடைந்து விட்டோம். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு வெற்றியை அடையவில்லை என்பதைத் தாண்டி வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
இருக்கிறது. கூட்டணியிலுள்ள தத்தமது கட்சிகள் வெற்றியடைய வேண்டும். அதற்குப் பாசிச எதிர்ப்பை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ளவேண்டும் என்றளவில் தான் ஒவ்வொரு கட்சிகளும் சுயநலமாகச் சிந்திக்கின்றன. மாறாகக் கூட்டணியே வெற்றிபெற வேண்டுமென்றோ, பாசிசம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்றோ சிந்திப்பதில்லை. இதன் காரணமாகத்தான் வெவ்வேறு மாநிலங்களில் ”இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள்ளேயே போட்டிபோட்டுக்கொண்டு பாசிசத்திடம் தோற்கின்றன.
இப்படி சிதறுண்ட கூட்டணியைக் கண்டு பாஜக அஞ்சுவது ஏன்? இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, பாசிசம் என்ற வார்த்தை பரவலாக புழக்கத்தில் இருந்தாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்று ”இந்தியா” கூட்டணிக்கட்சிகள் இந்த நொடிவரை மக்களிடம் சென்று சேர்க்கவில்லை. இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. அதனால்தான் த.வெ.க தலைவர் விஜய் பாசிசம், பாயசம் என இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேசமுடிகிறது. இப்படிப் பேசியதற்காக விஜயை தற்குறி என்று பேசுவது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்களுக்குப் பாசிசம் குறித்த புதிதலை விஜய் பேசும்பொழுது கேட்டக்கொண்டிருக்கும் அளவிற்குத்தான் மக்களிடம் பாசிசத்தை கொண்டு சேர்த்திருக்கிறோம் என்ற பதற்றம் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளுக்கு வரவில்லை. எனவேதான் பாஜகவை, காங்கிரசைப் போன்று மற்றொரு கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள்.
இரண்டாவதாக, இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டுதான் ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் மற்றறெந்த கட்சிகளையும்விட தேசப்பற்று கொண்ட கட்சியாக மக்களிடம் தன்னை முன்னிறுத்திக் கொண்டு வருகிறது. சமீபத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கத்தையும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஓட்டைத் திருடி வெற்றிபெற்றதையும் பீகார் மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருவதன் விளைவாக ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பலின் செல்வாக்கு கணிசமான அளவில் சரிந்துள்ளது. இதனை தங்களுடைய அரசு உறுப்புக்களின் மூலம் ராகுல்காந்தி, தேஷஸ்வி முன்வைக்கும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்பதை மக்கள் மத்தியில் பாஜக-வால் கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால் அதற்கு முன்பாகவே ராகுலின் பிரச்சாரம் பீகார் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. எனவேதான் சாம,பேதத்தை விட்டுவிட்டு பீகாரில் தண்டத்தை (காங்கிரஸ் அலுவலகத்தைத் தாக்கியது) பயன்படுத்தி இருக்கிறார்கள்.
எனவே பாசிசம் (ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல்) தன்னைத் தற்காத்துக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல எப்பொழுதும் தயாராகத்தான் இருக்கிறது. இதனை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் ”இந்தியா” கூட்டணியோ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை ஒரு வரம்பிற்குள் நிறுத்திக்கொள்கிறது.
முதலில் எந்த ஓட்டுக்கட்சிகளை நம்பியும் பயனில்லை. திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் தன்மையுடையவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தேர்தலின் மூலம் பாசிசத்தை தோற்கடிக்க முடியாது என்பதையும் புரிந்துகொள்ளமுடியும். உண்மையிலேயே பாசிசத்தை வீழ்த்தவேண்டும் என்ற அக்கறையுடைய ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள் ஒன்றிணைந்து விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரிடத்திலும் பாசிசம் குறித்த புரிதலையும், ஓட்டுக்கட்சிகளை நம்பிப்பயனில்லை என்பதையும், தேர்தல் தீர்வல்ல என்பதையும் விளக்கிப்பேசி மக்கள் அடித்தளத்தை உருவாக்க வேண்டும். இப்படி ஒளியூட்டப்பட்ட மக்களைக் கொண்டு வீதியிலிறங்கிப் போராடும் பொழுதுதான் பாசிசத்தை வீழ்த்த முடியும்.
- மகேஷ்