நடந்து முடிந்த பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று முக்கிய சட்டத் திருத்தங்களை முன்மொழிந்தார். இந்தச் சட்டத்திருத்தங்கள் நாட்டின் பிரதமரையும், எந்த ஒரு மாநிலத்தின், யூனியன் பிரதேசத்தின் முதல்வரையும், அமைச்சர்களையும், அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமாகத் தண்டனை பெறக் கூடிய குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்குகளில், 30 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் பட்சத்தில், பதவி நீக்கம் செய்வதற்கு வழிசெய்கின்றன. அவர்கள் குற்றஞ்செய்தார்களா இல்லையா என்பது நிரூபணமாகவில்லை என்றாலும் கூட 30 நாட்கள் சிறையில் இருந்தாலே அவர்களது பதவி பறிக்க இந்த மசோதாக்கள் வகைசெய்கின்றன.
இதன் மூலம் ஒரு மாநிலத்தின் முதல்வரோ, அமைச்சரோ கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31வது நாள் அம்மாநில ஆளுநர் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய முடியும். ஒருவேளை அவ்வாறு ஆளுநர் அவர்களைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் 32வது நாள் அவர்களது பதவி தானாக காலவதியாகிவிடும்.
மக்களவையில் இந்தச் சட்டத்திருத்தங்களைத் தாக்கல் செய்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் ஒருவர் கொஞ்சமும் வெட்கமின்றி அரசியல் அதிகாரம் கொண்ட பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது” என்று கூறினார். நாடாளுமன்றத்திற்கு வெளியே இந்த மசோதாவிற்கு, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த மசோதாவானது சட்டமானால் சிறையிலிருந்து ஆட்சி செய்வது தடுத்து நிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இது அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் எனவும் இந்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மசோதா நகலைக் கிழித்தெறிந்து, பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். தற்போது இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை கொடூரமான கருப்புச் சட்டம் என அழைத்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி, இதனை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை எனக் கூறுவது மக்களின் கண்களில் திரையைப் போர்த்துவதற்கு ஒப்பாகும் எனக் கூறியிருக்கிறார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் இந்தச் சட்டம் ஒரு கருப்புச் சட்டம் எனவும் இந்த நாள் ஒரு கருப்பு தினம் எனவும், சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் தொடக்கம் எனவும் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிப் பேசிய அமித்ஷா இந்தச் சட்டத்திலிருந்து தானோ, நரேந்திர மோடியோ கூட தப்ப முடியாது எனவும், அந்த அளவிற்கு வெளிப்படையான சட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறியிருக்கிறார்.
அமித்ஷா கூறும் வெளிப்படைத் தன்மை என்ன என்பது குறித்து நாம் ஏற்கெனவே பலமுறை பார்த்திருக்கிறோம். கடந்த ஆண்டு தில்லி சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக, அன்று ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் தில்லி முதல்வராயிருந்தவருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை வழக்கில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவரை 30 நாட்கள் சிறையில் அடைத்தது, இதே பாஜக தான்.
அதுபோலவே ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரனையும், அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்குச் சிறிது காலத்திற்கு முன்பு சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தது பாஜக அரசு.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து அதன் மூலம் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க முயன்றதும் இதே பாஜக அரசு தான்.
ஆகையால் இந்தச் சட்டத்தை பாஜக கொண்டுவந்திருப்பதன் நோக்கமே இதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி முதல்வர்களை, அமைச்சர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு அவர்களது பதவியைப் பறிப்பதுதான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதே சமயம் எதிர்க்கட்சியினரை மட்டுமல்ல, கூட்டணிக் கட்சியின் முதல்வர்களான நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் கூட பாஜகவின் வழிக்கு வராவிட்டால் அவர்களைக் கைது செய்து தண்டிக்கவும் இந்தச் சட்டத்தைப் பாஜக நிச்சயமாகப் பயன்படுத்தும். இஸ்ரேல் உளவு மென்பொருளான பெகாசஸைத் தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் மீது பிரயோகித்து அவர்களைக் கண்காணித்த காவி கும்பலுக்கு இது ஒன்றும் பெரிய காரியமில்லை.
இது ஒருபுறம் என்றால், இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அமித்ஷாவிற்கோ, மோடிக்கோ இல்லை பாஜகவிற்கோ அருகதை இருக்கிறதா என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது.
2002ம் ஆண்டு குஜராத் கலவரம் நடந்த போது அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடி, கலவரத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்காததுடன், அதனைத் தூண்டி விடும் வேலையிலும் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. கலவரம் நடந்து கொண்டிருந்த போது, போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டிய நரேந்திர மோடி, இந்துக்கள் தங்களது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் வரை அவர்களைத் தடுக்காமல் இருக்கும்படி கூறியதாக, சஞ்ஜீவ் பட் என்ற போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதும், எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி அம்மாநில முதலமைச்சராகத் தொடர்ந்ததுடன், தனக்கு எதிரான சாட்சிகளைக் கலைத்து, குற்றஞ்சாட்டியவர்களைக் கைது செய்து ஒடுக்கும் வேலையையும் மோடி செய்தார்.
இன்றைக்கு உத்தமர் போலப் பேசும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநில அமைச்சராக இருந்த போது இரண்டு போலி என்கவுண்டர் வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன. குஜராத் மாநிலத்தின் பாஜக அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சொராபுதீன் ஷேக் மற்றும் அதற்குச் சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி இருவரும் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமித்ஷாவைப் பாதுகாப்பதற்காகவே இந்தப் போலி என்கவுண்டர் நடத்தப்பட்டது. இது குறித்து அமித்ஷாவை முதல் குற்றவாளியாக கொண்டு சிபிஐ பதிந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது அமித்ஷாவை தப்புவிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறின. வழக்கு விசாரணையைத் தீவிரமாக நடத்திக் கொண்டு சென்ற நீதிபதி லோயா சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து போனார். அவரை அடுத்து வந்த நீதிபதி சதாசிவம் அமித்ஷாவை குற்றமற்றவர் என விடுதலை செய்ததுடன், அமித்ஷாவிற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய முடியாதபடி பார்த்துக் கொண்டார். இதற்குப் பிரதிபலனாக ஓய்வு பெற்ற பிறகு நீதிபதி சதாசிவத்திற்கு கேரள மாநில ஆளுநர் பதவி பரிசளிக்கப்பட்டது.
அசாம் முதலமைச்சராக இருக்கும் ஹேமந்த் பிஸ்வாஸ் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர் மீது மிகப்பெரிய ஊழல் பட்டியலை வெளியிட்ட காவி கும்பல் அவர் பாஜகவில் இணைந்தவுடன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை காற்றில் விட்டுவிட்டது. சமீபத்தில் கூட அவர் மீதும் அவர் மனைவி மீதும் மீண்டும் ஒரு ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜகவின் கண்களுக்கு அவர் அப்பழுக்கற்றவராகத் தெரிகிறார்.
ஹேமந்த் பிஸ்வாஸ் போன்றே, மராட்டிய மாநிலத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பல சிவசேனா அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகளை பாஜக கிடப்பில் போட்டிருக்கிறது.
இவர்கள் மட்டுமன்றி பாஜகவின் பெரும்பாலான தலைவர்கள் மீதும் இது போன்ற கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் மீதெல்லாம் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டம் நிச்சயமாகப் பாயாது.
தற்போது இந்தச் சட்ட திருத்தம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்தாலும் வெகு விரைவில் இது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு அமுலுக்கு வந்துவிடும். ஆனால் எதிர்க்கட்சிகளோ, தங்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் வகையிலான சட்டங்களை ஆளும் காவிப் பாசிஸ்டுகள் கொண்டுவந்தாலும், அதனை நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து அடையாள எதிர்ப்போடு நிறுத்திக் கொள்கின்றனர். பின்னர் அது தங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் போது செய்வதறியாது புலம்புவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போது மௌனமாக இருந்துவிட்டு பின்னர் அவற்றைப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யும்போது, குய்யோ முறையோ என கூச்சலிடுகின்றனர்.
மக்கள் மத்தியிலிருந்து எழும் கண்டனப் பேரொலியாக இல்லாமல் வெறுமனே நாடாளுமன்றத்தின் மூலையில் ஒலிக்கும் புலம்பலாக இவை இருக்கும் வரை எதிர்க்கட்சிகளின் குரலைக் காவிக் கும்பல் சிறிதும் மதிக்காது.
- சந்திரன்.
திருடர்கள் திருட்டை ஒழிப்போம் என்பது போல, கொலைகாரர்கள்,கொள்ளைக்காரர்கள் பாசிஸ்டுகள் குற்றத்தை தண்டிப்பது என்பது கேலி கூத்தானது.