திருவாளர் மருதையன் பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்க வரம்புகளுக்குள் முடக்குகுவது எப்படி?

23.08.2025 அன்று செங்கனல் தளத்தில் ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் தமிழில் வெளியிடுகிறோம்.

******

குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாடு முழுவதும் முன்னேறித் தாக்கிவரும் நிலைமையானது, அநேகமாக அனைத்து மா-லெ குழுக்கள் மத்தியிலும் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தேர்தல் பங்கேற்பு, புறக்கணிப்பு பிரச்சனை குறித்து மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையை மார்க்சியக் கண்ணோட்டத்தில் பரிசீலப்பதற்குப் மாறாக, தேர்தல் புறக்கணிப்பு என்பது நமது இன்றைய காலத்தின் போராட்டவடிவமாக இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டுக்குள் அக்குழுக்கள் நழுவி விழுந்துள்ளனர். நாம் இன்று தேர்தல் புறக்கணிப்பை அமல்படுத்தினால், அது பாசிசக் கும்பலுக்கு அனுகூலமாகப் போய்விடும் என்று அவர்கள் கருதுகின்றனர். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பல குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதிலும், தேர்தல்களில் அவர்களை நாம் ஆதரிக்க வேண்டுமென்றும் அக்கூட்டணியைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பாசிசம் விரைவாக முன்னேறுவதற்கான வழியைச் செப்பனிட்டுக் கொடுக்கும் என்றும் கூறுகின்றனர். இதுதான் நமது நாட்டில் இன்று மா-லெ குழுக்கள் மத்தியில் நிலவும் பிரதானப் போக்காகும். இவர்களில் சில குழுக்கள் மேற்கூறிய நிலைப்பாட்டை நேர்மையாகவே நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆனால் பல குழுக்களோ தமது நிர்வாணத்தை மறைத்துக் கொள்ளவும், ஆளும் வர்க்கத்தினரிடம் முழுமையாக, வெட்கமின்றிச் சரணடைந்து கிடப்பதை மூடி மறைக்கவும், மக்களை ஏய்க்கவுமே மேற்கூறிய நிலைப்பாட்டைக் கூறுகின்றனர். மார்க்சியத்தைத் துறந்தோடி, ஆளும் கட்சியான தி.மு.க.வை வெட்கமின்றித் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் திருவாளர் மருதையன் பிந்தையதின் துலக்கமான எடுத்துக்காட்டு ஆவார். எனவே, அவரது கருத்துக்களை ஆராய்வது உண்மையாகவே பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்குப் பயனுள்ளதாகும்.

அவரது திரிபுவாதத்திற்கெதிரான எமது அமைப்பின் போராட்டத்தைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்காக சிறு அறிமுகக் குறிப்பை முதலில் கூறுகிறோம். மருதையன் என்பவர், 2020-இன் தொடக்கத்தில் மார்க்சியத்தைத் துறந்தோடி எமது அமைப்பிலிருந்து ஓடிப் போனவராவார். தற்போது அவர் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான தி.மு.க.வின் பிரச்சார உத்திவகுப்பாளராக (strategist) மாறிப்போயுள்ளார். எமது அமைப்பிலிருந்து ஓடிப்போன தொடக்க காலத்தில், அதாவது 2020-களில், அவர் ஒரு மார்க்சியவாதியைப் போல நடித்தார். பாசிசம் மேன்மேலும் முன்னேறிவருவதைத் தடுக்க “தேர்தல் பங்கேற்பு” தேவை என்று வாதிட்டார்.

2021 சட்ட மன்றத் தேர்தல்களுக்குச் சற்று முன்னதாக, 09 மார்ச், 2021 அன்று, ஒரு கட்டுரையில் “பாசிசத்தை எதிர்க்க தேர்தலும் ஒரு களமே! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம்!”[1] என்று பிரகடணம் செய்தார். பல இந்திய ஓடுகாலிகளையும் போல, மருதையனும், “தேர்தல் புறக்கணிப்பு” என்பது ஒரு வறட்டுச் சூத்திரம் என்று இழிவுபடுத்த லெனினின் “இடதுசாரி கம்யூனிசம் – ஒரு இளம்பருவக் கோளாறு” என்ற நூலை திரித்துப் புரட்டும் வகையில் மேற்கோள் காட்டி வாதாடினார். “தேர்தலுக்கு வெளியில்தான் பார்ப்பன பாசிசத்தை முறியடிக்க முடியும் என்பது உண்மைதான். தேர்தல் கட்சிகளும் கூட இந்த உண்மையை ஒப்புக் கொள்கின்றனர்” என்றார். அந்தக் கட்டுரையிலும் அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த பேட்டிகளிலும் பின்வருமாறு அவர் வாதிட்டார்: “சட்டமியற்றும் உறுப்புகள் (சட்டமன்றம், நாடாளுமன்றம்) நீதித்துறை, அதிகார வர்க்கம், ஊடகங்கள் ஆகிய நான்கு ஜனநாயகத்தின் தூண்களில், சட்டமியற்றும் உறுப்பு மட்டும்தான் நம் கையில் உள்ளது. எஞ்சியிருக்கும் மூன்றையும் பாசிஸ்டுகள் ஏற்கனவே கைப்பற்றிவிட்டனர். எனவே, அந்த நிறுவனத்தையும் பாசிஸ்டுகள் கைப்பற்றிக் கொள்வதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூழலில் நமக்குள்ள சாத்தியமான ஒரே மாற்று தி.மு.க.தான். பாசிசத்திற்கெதிரான ஒரு தடையரணாக எதிர்க்கட்சிகள் (குறிப்பாக தி.மு.க.) இருக்கும். பா.ஜ.க. எதிர்ப்புக் கட்சிகள் தேர்தலில் வென்றால், நமக்கு ஒரு மூச்சுவிடும் அவகாசம் கிடைக்கும். கீழிருந்து மக்களை பாசிசத்திற்கெதிராகத் திரட்டுவதற்கான அந்த அவகாசம் பயன்படும்.” என்றார். இந்த வாதங்கள் அறிவுக்குகந்த ஒன்றாகத் தெரிகிறது, அல்லவா?! ஆம்! தேர்தல் பங்கேற்பு பிரச்சனையை அறிவுக்குகந்த முறையிலும் மார்க்சிய முறையிலும் மட்டுமே கையாள்வதைப் போலவும், பாசிசத்தைத் தேர்தலுக்கு வெளியில்தான் வீழ்த்த முடியும், மக்கள்தான் அப்போராட்டத்துக்குத் தலைமைதாங்க முடியும் என்பதையும் ஒப்புக் கொள்வது போலவும் அப்போது அவர் மிகவும் திறமையாகவே நடித்தார்.

எமது அமைப்புத் தோழர்களை இயன்றளவு குழப்பவும், கட்சியை இயன்றளவு கலைக்கவும் ஒரு மார்க்சியவாதிபோல அப்போது அவர் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால், சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மே 2023-இல், மார்க்சியத் திரைகளையெல்லாம் கழற்றியெறிந்து தனது உண்மையான முகத்தைக் காட்டினார். பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கம்தான் தலைமையளிக்க முடியும் என்ற கருத்தை “கோமாளித்தனமான கருத்து” என்றும் அவ்வாறு வாதிடுபவர்களை “கோமாளிகள்” என்றும் ஏளனம் செய்தார்.

எமது சிறுவெளியீடு ஒன்றில், நீண்ட நாட்களுக்கு முன்னரே (ஜூலை 2023), அங்குலம் அங்குலமாக மேற்கூறியவற்றையெல்லாம் விளக்கியுள்ளோம்.[2] மருதையனின் நகைக்கத்தக்க, துரோகத்தனமான வாதங்களை அம்பலப்படுத்தியதைத் தாண்டி, பாட்டாளி வர்க்கமும் புரட்சிகர மக்களும்தான் பாசிச எதிர்ப்புப் போரைத் தலைமை தாங்க முடியும், தாங்க வேண்டும் என்பதை அவ்வெளியீடு நிறுவியது. இந்தியா கூட்டணி பாசிச எதிர்ப்பில் ஊசலாடும், சமரசம் செய்துகொள்ளும் ஒரு சக்தி என்பதையும், அக்கூட்டணியை பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வாறு பாவிக்க வேண்டும் என்பதையும் அவ்வெளியீடு தெளிவுபடுத்தியது. அக்கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியும் பாசிசத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற பூச்சாண்டிக்கு பலியாகாமல், அவர்களின் ஊசலாட்டத்தையும், உறுதியின்மையையும், துரோகத்தன்மையையும் ஊக்கத்துடன் விரிவாக அம்பலப்படுத்த வேண்டுமென்பதையும்; அப்போதுதான் பாட்டாளி வர்க்கமும் புரட்சிகர மக்களும் பாசிச எதிர்ப்புப் போருக்குத் தலைமை தாங்குவதும், அப்போரை பாசிசத்தின் மீதான முழுவெற்றிக்கு இட்டுச் செல்வதும் சாத்தியம் என்பதையும் – அவ்வெளியீடு தெளிவுபடுத்தியது.

நாம் தேர்தல் புறக்கணிப்பு போராட்ட வடிவத்தை புனிதமாகக் கருதவில்லை. ஆம்! பங்கேற்பு / புறக்கணிப்பு என்ற இரண்டும் பாசிச எதிர்ப்புப் போரில் போராட்ட வடிவமாக இருக்க முடியும் என்பதை ஏற்கிறோம். ஆனால், “தேர்தல் புறக்கணிப்பு” மீதான கோட்பாடற்ற வெறுப்பும் ஏளனமும் காட்டுவதும், எதிர்க்கட்சிகளின் மீதும் அரசியல் சட்ட நிறுவனங்கள் மீதும் அப்பாவித்தனமான நம்பிக்கையைப் (naïve optimism) பரப்புவதும் அம்பலப்படுத்தி முறியடிக்கப்பட வேண்டியதாகும். அந்த நோக்கத்திலிருந்தே இச்சிறு கட்டுரையும் எழுதப்பட்டுள்ளது.

******

“அந்த [மென்ஷ்விக்] சமூக-ஜனநாயகவாதிகளையும் … தமது எதிராளிகள் [போல்ஷ்விக்] பக்கம் செல்லும்படியும், அல்லது செல்லத் தொடங்குபடியும் நிகழ்வுகள் நிர்ப்பந்தித்துள்ளன” என்று 1905 ஆம் ஆண்டு மென்ஷ்விக்குகளை அம்பலப்படுத்தும் போது லெனின் எழுதினார். மென்ஷ்விக்குகள் அப்போது தமது முடிவுகளைப் பற்றி உணர்வூப்பூர்வமின்றி இருந்தனர்; ஆனால் நமது ஓடுகாலியான மருதையனோ உணர்வுப்பூர்வமாக ஆளும்வர்க்கத்திடம் சரணடைந்துள்ளார் என்ற உண்மையைத் தவிர, நமது நாட்டில் இன்று நடப்பது துல்லியமாக இதேதான்! ஆம்! தேர்தல் புறக்கணிப்பைக் கடுமையாக எதிர்த்தும் ஏளனம் செய்தும் வந்தவரும், எல்லா மா-லெ குழுக்களும் இந்தியா கூட்டணியைத் தேர்தல்களில் ஊக்கத்துடன் ஆதரிக்க வேண்டுமென்றும் வாதிட்டவருமான திருவாளர் மருதையன் தற்போது தேர்தல் புறக்கணிப்பைப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளார்.

ஏன் இவ்வாறு கூறுகிறார்? அவரது பிரபலமான “மூச்சுவிடும் அவகாசம்” என்ற கோட்பாட்டுக்கு என்னவாயிற்று? ஆளும் பா.ஜ.க.வானது தனது ஏஜெண்டான தேர்தல் ஆணையத்தின் மூலம் “சிறப்பு வாக்காளர் திருத்தம்” என்ற பிரம்மாஸ்திரத்தை ஏவியுள்ளது. இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றியைச் சதித்தனமாகத் தடுப்பதற்காக பா.ஜ.க. எதிர்ப்பாளர்கள், குறிப்பாக இசுலாமியர்களின், வாக்குரிமையைச் சதித்தனமாகப் பறிக்கவும், போலியான வாக்காளர்களை உள்ளே நுழைக்கவும் இதை ஏவியுள்ளது. இதற்கிடையில், 2019, 2024 நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சில சட்டமன்றத் தேர்தல்களிலும் “ஓட்டுத் திருட்டு” நடந்துள்ளது என்ற ‘அணுகுண்டை’ ராகுல்காந்தி வீசினார். இந்நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவே சுக்லா, பிரபல எழுத்தாளரான தெபாஷிஸ் ராய் செளத்ரி ஆகிய இரு முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் “தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தினர். “இந்த மோசடியான, முன்னரே முடிவு செய்யப்பட்ட (rigged and fixed) தேர்தல்களில் பங்கேற்பதன் மூலம், இத்தேர்தல் நடைமுறையை மட்டுமல்ல, அதன் மூலம் அமையவிருக்கும் ஆட்சியையும் நீங்கள் சட்டப்பூர்வமாக்குகிறீர்கள் (legitimizing)” என்று அவர்கள் வாதிட்டனர். அவர்கள் இருவர் மட்டுமல்ல, ஆர்.ஜே.டி., காங்கிரசு கட்சிகளும் பிகார் தேர்தல் புறக்கணிப்பைப் பற்றி “எல்லா வாய்ப்புகளும் திறந்துதான் உள்ளன”[3] என்று கருத்துத் தெரிவித்தனர்.

இவை அனைத்திற்கும் பிறகு, அதாவது முதலாளித்துவ அறிவு ஜீவிகள், ஆளும் வர்க்கக் கட்சிகள் அனைவருக்கும் பிறகு, நமது ‘இடதுசாரி செயற்பாட்டாளரான’ மருதையன் திருவாய் மலர்ந்து பிகாரில் தேர்தல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறியுள்ளார். இதோ அவர் கூறியைவை:

“இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டும்? [அதாவது, பா.ஜ.க. திட்டமிட்டே சதித்தனமாக எதிர்கட்சிகளின் தேர்தல் வெற்றியைத் தடுக்க முயலும் சூழலில்] பிகாரில் தேர்தல் புறக்கணிப்பு குறித்த சாத்தியப்பாட்டைப் பற்றி ஏற்கனவே ஆர்.ஜே.டி.யும் காங்கிரசும் கூறிவிட்டனர். நமது நாட்டில் தேர்தல் ஜனநாயகம் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. [கவனியுங்கள், தமது பிரபலமான “மூச்சுவிடும் அவகாசம்” என்ற கோட்பாட்டை வெளிப்படையாக விட்டொழிக்காமல், ராகுல் காந்தியே “இந்திய தேர்தல் அமைப்பே இறந்துவிட்டது” என்று கூறி நீண்ட நாட்கள் ஆனபின்னர், மருதையன் இந்த உண்மையை ‘ஒப்புக் கொள்கிறார்’] டிஜிட்டல் வாக்காளர் பட்டியலையும், சி.சி.டி.வி காட்சிகளையும் வெளியிடுமாறு ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார். என்னைக் கேட்டால், அவரின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், எதிர்க்கட்சிகள் பிகாரில் தேர்தல் புறக்கணிப்பை அறிவிக்க வேண்டும் என்று சொல்வேன். இந்தியத் தேர்தல் ஜனநாயகம் செத்துவிட்டது. இலத்தின் அமெரிக்காவிலும், பிலிப்பைன்சிலும் தேர்தல் ஜனநாயகம் இல்லை என்று மக்கள் வீதிக்கு வந்ததைப் போல, எதிர்க்கட்சிகள் ஒன்றாகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். யாரோ ஓரிருவர் தேர்தலில் பங்கேற்பதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. இது ஒரு தனித்தலைப்பு. நான் நாடுமுழுவதும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய வேண்டுமென்று கூறவில்லை, பீகாரில் மட்டுமே கூறுகிறேன். தேர்தலில் பங்கேற்பதன் மூலம், எந்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுள்ளதோ அதற்கு நீங்கள் (இந்தியா கூட்டணி) சான்றிதழ் தருகிறீர்கள். புறக்கணிப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு ஏற்படும். புறக்கணிப்பு மூலம் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, 2024 தேர்தல் திருடப்பட்ட ஒன்று என்ற கருத்து மக்களிடம் பரவும்.  … 2024 இல் [தேர்தல் முடிவு வெளியான பிறகு] நான் கூறியதுபோல, ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் 15 ஆண்டுகளாக நடத்திய தேர்தல் ஒரு திருட்டுத் தேர்தல். … அந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடந்தது? ஒரு மிகப்பெரிய கலவரம் அங்கே வெடித்தது.  அந்தக் கலவரத்தின் விளைவாக ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பித்து இந்தியாவுக்கு ஓடிவந்தார். அத்தகையதொரு கலவரம் இங்கும் வர வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. … எனவே, ராகுல் காந்தியின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால், இந்தியா கூட்டணி பிகாரில் தேர்தல் புறக்கணிப்போம் என்ற பிரகடனத்தை வெளியிட வேண்டும். …”[4]

அவ்வளவுதானா? ஆம், அவ்வளவுதான்! 2024-இல் சர்வாதிகாரி ஷேக் ஹசீனாவை எதிர்த்த “மக்களின் எழுச்சியை” அதிகார வர்க்கத் தொணியில் “கலவரம்” என்று நமது ‘இடதுசாரி செயற்பாட்டாளர்’ மருதையன் அழைத்ததை கவனித்தீர்களா! “அத்தகையதொரு கலவரம் இங்கு வர வேண்டுமென்று நாம் விரும்பவில்லை” என்று கூறியதை கவனித்தீர்களா! ஒரு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி இத்தகைய “கலவரத்தை” விரும்புவதைக் கேளுங்கள்: “நாடுதழுவிய [தேர்தல்] புறக்கணிப்பு சிவில் சமூகத்தின் பொது அமைதி குலைவுக்கு வழிவகுக்கலாம். ஆனால் அத்தகையதொரு அமைதிக் குலைவு ஒன்றும் மோசமானதல்ல. இந்திரா காந்திக்கு எதிரான ஜெயபிரகாஷ் நாராயணனின் “சம்பூர்ண கிராந்தி” இயக்கம் இதை நிரூபித்துள்ளது. இந்திரா காந்தியைப் பதவியிலிருந்தே வெளியேற்றியது. இந்தப் புறக்கணிப்பும் அத்தகையதொரு மாற்றத்தின் தொடக்கமாக இருக்கலாம்.” அதாவது, தேர்தல் புறக்கணிப்பின் விளைவாக நாடு தழுவிய அளவில் ஏற்படும் “பொது அமைதிக் குலைவை” சரியானது, தேவையானது என்கிறார், அவே சுக்லா. ஆனால், நமது ஓடுகாலியான மருதையனோ அதை “கலவரம்” என்றும் “விரும்பத்தகாதது” என்றும் கூறுகிறார். ஆம்! ஒரு அதிகாரி இடதுசாரி செயற்பாட்டாளர் மொழியிலும் ஒரு ‘இடது சாரி செயற்பாட்டாளர்’ அதிகாரியின் மொழியிலும் பேசுகிறார். என்னே ஒரு நகைமுரண் இது, அல்லவா!

இவ்வாறு கூறுவது மயிர் பிளக்கும் வாதமோ அல்லது வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதோ அல்ல. பாசிச எதிர்ப்புப் போராட்டமானது பாசிச சக்திகளுக்கும் பாசிச எதிர்ப்புச் சக்திகளுக்கும் எதிரான ஒரு ஆயுதமேந்திய உள்நாட்டுப் போரில்தான் முடிவடையும்; “பாசிசத்திற்கு எதிராகக் கீழிருந்து கட்டும் மக்கள் இயக்கமானது” கட்டாயம், தவிர்க்கவியலாத வகையில் இத்தகைய “மக்கள் எழுச்சியில்”தான் முடிவடையும்; அவேசுக்லாவின் வார்த்தையில் கூறினால், “பொது அமைதிக்குலைவில்”தான் முடிவடையும்; “பாசிசத்தைத் தேர்தலுக்கு அப்பால் முறியடிப்பது” என்பதன் பொருளே இத்தகைய ஆயுதமேந்திய உள்நாட்டுப் போர் என்பதுதான். ஆகையால், இத்தகையதொரு எழுச்சியை “கலவரம்” என்றும் “விரும்பத்தகாதது” என்றும் யாரொருவர் அழைத்தாலும் அவர் ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக பாசிச எதிர்ப்புப் போருக்குத் தெரிந்தே துரோகம் இழைக்கிறார் என்பதைத் தவிர வேறு பொருளில்லை! எனவே, மீண்டும் ஒருமுறை தனது உண்மையான முகத்தைக் காட்டியதற்காக மருதையனுக்கு நாம் நன்றி சொல்வோம்!

தொடர்வோம். “தேர்தலில் பங்கேற்பதன் மூலம், எந்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வோடு கூட்டுச் சேர்ந்து கொண்டுள்ளதோ அதற்கு நீங்கள் (இந்தியா கூட்டணி) சான்றிதழ் தருகிறீர்கள். புறக்கணிப்பின் மூலம் மிகப்பெரிய விழிப்புணர்வு இந்திய மக்களுக்கு ஏற்படும். புறக்கணிப்பு மூலம் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, 2024 தேர்தல் திருடப்பட்ட ஒன்று என்ற கருத்து மக்களிடம் பரவும்.” இந்த வார்த்தைகள் அவேசுக்லாவிடமிருந்தும் தெபாஷிஸ் இடமிருந்தும் கடன் வாங்கியவை. ஆனால், அவர்கள் பெயர்களைக் கூடக் குறிப்பிடாமல், இவற்றைத் தமது சொந்தக் கருத்துக்களைப் போல மருதையன் கூறுகிறார். ஏன்? அறிவு நாணயம் இன்மையாலா? இல்லவே இல்லை. மருதையனின் “மூச்சுவிடும் அவகாசம்” என்ற கோட்பாட்டுக்கும் “எதிர்க்கட்சிகள் தடையரணாக இருக்கும்” என்ற கோட்பாட்டுக்கும் நேரெதிராக அவர்களின் கருத்துக்கள் உள்ளதை ஏற்கனவே நாம் ஒரு கானொலியில் அம்பலப்படுத்தியுள்ளோம்.[5]

இந்தியா கூட்டணியை மதிப்பீடு செய்யும் விவகாரத்தில் கூட, முதலாளித்துவ அறிவு ஜீவிகளைவிட மருதையன் நெடுந்தொலைவு பின்தங்கியுள்ளார். இந்தியா கூட்டணியைப் பற்றிய அவேசுக்லாவின் மதிப்பீட்டைக் கேளுங்கள்: “ஆனால், எதிர்க்கட்சிகள் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. தமது சொந்தக் கையாலாகத்தனம், பேராசை, அதிகாரத்தின் மீதான ஆசை, மிகப்பெரிய ஈகோக்கள், பணவெறி மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சட்ட நிறுவன்ங்களிடமும் மாணக்கேடான முறையில் சரணடைந்து கிடப்பது ஆகியவை காரணமாக எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்துள்ளன. எனவே, எதிக்கட்சிகள் இனியும் இந்த விளையாட்டில் வீரராக இருக்க முடியாது. பயிற்சியாளராகவே இருக்க முடியும்.” இதையொத்த பரகலா பிரபாகரின் மதிப்பீட்டைக் கேளுங்கள்: “வாக்கு எண்ணிக்கையை அடுத்த நாட்களில் [2024 ஜூன்] இந்தியா அமளிதுமளியான வாரங்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டியிருக்கும். மக்களின் வாக்குகள் உண்மையாகவே எந்திரங்களில் பதிவாகின்றனவா என்பதை உத்திராவதப்படுத்துவதில் எதிர்க்கட்சிகள் முற்றாகத் தயாரிப்பின்றி இருப்பது போலத் தெரிகிறது.” ஆக, அவேசுக்லா, பரகலா பிரபாகர் ஆகியோர் எதிர்க்கட்சிகளைப் பற்றி “தோல்வியடைந்துள்ளனர், பணவெறிபிடித்துள்ளனர், கையாலாகமல் உள்ளனர், நீதிமன்றங்கள் உள்ளிட்ட சட்ட நிறுவனங்களிடம் மானக்கேடான முறையில் சரணடைந்துள்ளனர், முற்றாகத் தயாரிப்பின்றி உள்ளனர்” என்று மதிப்பிடுகின்றனர். ஆனால், நமது ஓடுகாலி மருதையனோ “எதிர்க்கட்சிகள் [குறிப்பாக தி.மு.க.] பாசிச எதிர்ப்பில் தடையரணாக இருக்கும்” “அவர்கள் வென்றால் மூச்சுவிடும் அவகாசம் கிடைக்கும்” என்று மதிப்பிடுகிறார். இந்த இரண்டு மதிப்பீடுகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! இந்தியா கூட்டணியின் உறுதியின்மையையும் துரோகத்தன்மையையும் அம்பலப்படுத்துவதற்கு மாறாக, எவ்வளவு கவனமாக அவர் மூடிமறைக்கிறார் என்பது புலப்படவில்லையா?! இந்தியா கூட்டணியைப் பற்றி ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கையை மக்களிடையே பரப்புகிறார் என்பது புலப்படவில்லையா?!

மேற்கூறிய முதலாளித்துவ அறிவு ஜீவிகள் இந்தியா கூட்டணியை அம்பலப்படுத்துவதோடு நிற்கவில்லை, மிக முக்கியமாக அவர்கள் மக்கள் மீது தமது நம்பிக்கையை வைக்கின்றனர். கேளுங்கள்: “அத்தகையதொரு சந்தர்ப்பத்தில் [2024 தேர்தலில் பா.ஜ.க. தோற்று அதிகாரத்தில் இருந்து இறங்க மறுத்து கலவரத்தில் ஈடுபடும் வேளையில்] இந்த ஆட்சி தேர்தலைத் திருடுவதைத் தடுக்கவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் சிவில் சமூகம்தான் தனது வேட்டியை மடித்துக் கொண்டு களத்தில் இறங்கத் தயாராக வேண்டும்” என்கிறார், பரகலா பிரபாகர். “அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட குடிமக்களே இந்த விளையாட்டின் உண்மையான வீரர்களாக இருக்க முடியும். … அவர்களையும் தேர்தல் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்ளும்படி நாம் செய்தாகவேண்டும். … தெபாஷிஸ் சொல்வது போல, உங்கள் வீடு திருடுபோய்விட்டதென்றால் திருடனுக்கு நீங்கள் புகார் கடிதம் எழுதமாட்டீர்கள். போலிசுக்குத்தான் போவீர்கள். இங்கே போலிசு இந்திய மக்கள்தான். அவர்களை நோக்கித் திரும்பவேண்டிய தருணமிது” என்கிறார், அவேசுக்லா. பாசிச எதிப்புப் போருக்கு பாட்டாளிகளும் உழைக்கும் மக்களும்தான் தலைமைதாங்க வேண்டும், தலைமை தாங்க முடியும் என்று நாம் வாதிடும்போதெல்லாம், அக்கருத்தை “கோமாளித்தனமான கருத்து” என்றும் நம்மை “கோமாளிகள்” என்றும் மருதையன் ஏளனம் செய்தார். இப்போது மேற்கூறிய அறிவு ஜீவிகளையும் “கோமாளிகள்” என்று அவர் அழைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

“எல்லா மாநிலங்களிலும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று நான் வாதிடவில்லை. பீகாரில் மட்டுமே கூறுகிறேன். … ராகுல் காந்தியின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் பிகாரில் எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்க வேண்டும்” என்று மிகவும் கவனமாக அவர் தனது வார்த்தைகளை உதிர்ப்பதைக் கவனியுங்கள். அவேசுக்லா போன்றோர் நாடு தழுவிய தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்திவரும் வேளையில், நமது ஓடுகாலி மருதையன், பிகாரில் மட்டும், அதுவும் ராகுல் காந்தியின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் மட்டும் தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று அறிவுரை கூறுகிறார். இந்த விவகாரத்தில் கூட முதலாளித்துவ அறிவு ஜீவிகளைவிடவும் அவர் பின்தங்கியுள்ளார் என்பதைவிட பாசிச எதிர்ப்புப் போரை முன்னே தள்ளுவதற்கு மாறாக, அவர் திட்டமிட்டே பின்னே பிடித்து இழுக்கிறார், ஆளும் வர்க்கக் கட்சிகள் விரும்பும் வரம்புக்குள் இருத்தி வைக்கிறார் என்பதே உண்மை.  ஏன் உதட்டளவில் கூட அவர் நாடு தழுவிய தேர்தல் புறக்கணிப்பைப் பற்றிப் பேசவில்லை? தமிழ்நாடு உட்பட, நாடு தழுவிய தேர்தல் புறக்கணிப்பை உதட்டளவில் பேசினால் கூட அவர் தமது சக தி.மு.க. உத்திவகுப்பாளர்களிடையே இருந்து எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.

ஆகையால், மருதையன் வெட்கமின்றி ஒரு புரட்சியாளர் போல நடித்துவரும் அதேவேளையில், பாசிச எதிர்ப்புப் போராட்டத்தை ஆளும் வர்க்கம் விரும்பும் வரம்புக்குள்ளேயும், அவர்களின் நலன்கள் அனுமதிக்கும் வரம்புக்குள்ளேயும் முடக்கி வைக்கிறார் என்பது வெள்ளிடை மலை!

திருவாளர் மருதையன் அலறட்டும்! நமது வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் நாம் சொல்வோம்: வங்கதேசத்தைப் போலவே இங்கும் அத்தகையதொரு மக்கள் எழுச்சி நிச்சயமாக வெடித்தே தீரும். பாசிஸ்டுகள் தமது உண்மையான எதிரிகளான புரட்சிகர உழைக்கும் மக்களை வீதிகளில் எதிர்கொள்ளும் நாள் வந்தே தீரும். ஆனால், வங்கதேசத்தைப் போலன்றி, இங்கே நாம் அத்தகைய எழுச்சியில் பாட்டாளி வர்க்க முத்திரையைப் பதித்தாக வேண்டும். அதற்காக நாம் இன்று இப்போதிருந்தே “கீழிருந்து மக்கள் இயக்கத்தைக் கட்ட” எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாக வேண்டும். பாசிசத்தை தேர்தலுக்கு வெளியேதான், ஒரு ஆயுதமேந்திய உள்நாட்டுப் போரின் மூலம்தான் முறியடிக்க முடியும் என்பதை இன்று இப்போதிருந்தே நாம் ஊக்கத்துடன் பிரச்சாரம் செய்தாக வேண்டும். மக்களின் அரசியல் உணர்வை பாட்டாளி வர்க்கக் கட்சியின் உணர்வுக்கு இணையாக வளர்த்தெடுக்க வேண்டும்! பாட்டாளி வர்க்கக் கட்சியின் உணர்வை குட்டி முதலாளித்துவ அற்பவாதத்தின் அளவுக்குத் தாழ்த்த முயலும் பேர்வழிகளை அம்பலப்படுத்தி முறியடித்தாக வேண்டும்!

******

பின்குறிப்பு: மேலே மேற்கோள் காட்டிய அவேசுக்லாவின் கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்து, ஆகஸ்டு – செப்டம்பர் 2025 செங்கனல் அச்சு இதழில் வெளியிட்டுள்ளோம். இந்தியத் தேர்தல் ஆணையம் சூதாட்டக் கிளப்பாகவும் தேர்தல் நடைமுறை மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஏய்க்கும் சூதாட்டமாகவும் மாறிப்போயுள்ளதை அவர் வேதனையோடும், கோபத்தோடும் அம்பலப்படுத்துகிறார். அக்கட்டுரையை வாசகர்கள் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

23.08.2025 அன்று நாம் நமது ஆங்கிலக் கட்டுரை வெளியான பின்னர், அதேநாளில் மருதையன் தலைமை தாங்கி நடத்திய கூட்டத்தில் பரகலா பிரபாகர் பேசினார். மேற்கூறிய அவேசுக்லாவின் அதே கருத்துக்களை அப்படியே வழிமொழிந்த அவர், ‘இந்த நிலை தொடர்ந்தால் இனி தேர்தல்களே நடக்குமா என்பதும், இந்தியக் குடியரசே நிலைக்குமா என்பது கேள்விக்குறி ஆகிவிடும்; நாம் இதை இப்போதே தடுத்து நிறுத்தியாக வேண்டும்; தமிழ்நாட்டில், கேரளாவில் இது நடக்காது என்று நாம் இருமாந்து இருக்கக் கூடாது; நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது; மருதையன் போன்ற நபர்கள் தமிழ்நாட்டில் எதுவும் நடக்காது என்பது போல நம்பிக்கையில் உள்ளனர்; இது ஒரு சூதாட்டம் நீங்கள் அங்குமிங்கும் வெல்லலாம் நாடாளுமன்றத்தையும் முக்கிய இடங்களையும் வெல்ல முடியாது; யூடியூபில், சமூக வலைத்தளங்களில் வீடியோ பேசுவதால் பா.ஜ.க.வை முறியடித்துவிட்டதாக திருப்திகொள்ளக் கூடாது; வீதிகளில் மக்களைத் திரட்டி தேர்தல் ஆணையத்தையும் நிலவும் அரசாங்கத்தையும் கலைக்க வைக்க வேண்டும்; அதுவரை [ஒன்றிய, மாநிலம் என எல்லாத்] தேர்தல்களில் இருந்தும் எதிர்க்கட்சிகள் விலகியிருக்க வேண்டும்; இவ்வாறு தேர்தலில் பங்கேற்காமல் இருப்பதால் [புறக்கணித்தால்] பா.ஜ.க. எளிதாக வென்று ஆட்சியமைக்கும் என்று கருதாதீர்கள், மக்கள் பா.ஜ.க.வைப் பார்த்து சிரிப்பார்கள்’ – என்று விரிவாகப் பேசியுள்ளார். சுருங்கக் கூறினால், அவேசுக்லா, தெபாஷிஸ்-இன் அதே கருத்துக்களை வெவ்வேறு வார்த்தைகளில் மிகவும் வலிமையாகக் கூறியுள்ளார்.

இவை மருதையன் உள்ளிட்ட தி.மு.க. ஆதரவு கும்பலின் கண்ணத்தில் விழுந்த அடி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை! எதிர்க்கட்சிகளின் மீதும், நீதிமன்றம் உள்ளிட்ட அரசியல் சட்ட நிறுவனங்களின் மீதும், தேர்தல் மூலம் பாசிசத்தைத் தடுப்பது, ஒழிப்பது போன்ற கருத்துக்களின் மீதும் அப்பாவித் தனமான நம்பிக்கையை மக்களிடையே பரப்பிவரும் இக்கும்பல், பாசிசம் ஏறித்தாக்கிவரும் இன்றைய சூழலில் களத்தில் மக்களைத் திரட்டி முறியடிக்க வேண்டிய அவசியத்தை மூடி மறைக்க, பின்னுக்குத் தள்ளுவதைத் தீவிரமாகச் செய்துவரும் இக்கும்பல், மேற்கூறிய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் குறைந்தபட்ச அபாய ஒலியைக் கூட செவிமடுக்கப் போவதில்லை!

பாசிசம் என்பது பாட்டாளிகள் உழைக்கும் மக்களின் தலைமையில்தான், தேர்தல் அமைப்புமுறைக்கு வெளியில்தான், ஒரு ஆயுதந்தாங்கிய உள்நாட்டுப் போரின் மூலம்தான் முறியடிக்கப்பட முடியும் என்பதை நடைமுறை மீண்டும் மீண்டும் நீருபித்து வருகிறது! ஆளும் வர்க்கக் கட்சிகளிடம் சரணடைந்து கிடப்போர் இந்த உண்மையை ஒருபோதும் மக்களிடையே கொண்டுசெல்லப் போவதில்லை! நாம் என்ன செய்யப் போகிறோம்?

******

 

[1] காண்க, இடைவெளி தளத்தில் மருதையன் எழுதிய கட்டுரை, https://idaiveli.wordpress.com/2021/03/09/elections-also-can-be-a-platform-to-fight-fascism-lets-vote-for-the-dmk-alliance/

[2] காண்க, “பாசிசத்தை எதிர்க்க வேண்டுமா? திமுக, காங்கிரசிடம் சரணடையுங்கள்” – ஓடுகாலி மருதையனின் திண்ணை உபதேசம்! – என்ற செங்கனல் வெளியீடு (ஜூலை 2023)

[3] காண்க, காங்கிரசு கட்சியின் நாளேடான, நேஷனல் ஹெரால்டு-வில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கட்டுரை, The casino is rigged; long live the casino! – by Avay Shukla https://www.nationalheraldindia.com/opinion/bihar-sir-the-casino-is-rigged-long-live-the-casino

[4] காண்க, மருதையனின் சமீபத்திய நேர்காணல், LoP Rahul Gandhi’s Atom Bomb on Election commission India – Maruthaiyan exposes Modi& ECI Vote Theft https://www.youtube.com/watch?v=QSgtLr5wosc

[5] காண்க, அவேசுக்லா, தெபாஷிஸ் கருத்துக்களும் மருதையன் வகையறாக்களின் கருத்துக்களும் நேரெதிரானவை என்பதை விளக்கி, செங்கனல் வெளியிட்டுள்ள கானொலி, https://www.youtube.com/watch?v=qdG8YFo3TG4&t=22s

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. மருதையின் போன்ற துரோகிகள் திமுகவிற்கு வாலாட்டிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் பாசிச சக்திகளை விட மிகவும் அபாயகரமான ஒதுக்கப்பட வேண்டிய, ஒடுக்கப்பட வேண்டிய குரூரபுத்தி கொண்ட துரோக கும்பல் என்பதை அணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.