‘இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும், சாதியைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், வர்க்கப் போராட்டம் வர்க்க போராட்டம் என வரட்டுத்தனமாக கூறிக்கொண்டுள்ளனர்.’ என்பது அடையாள அரசியல் பேசும் தலித்திய செயற்பாட்டாளர்கள் இந்திய இடதுசாரி இயக்கங்கள் மீது எப்போதும் வைக்கின்ற விமர்சனம். வர்க்கப் போராட்டத்தை சாதி ஒழிப்பிற்கு எதிரானதாக நிறுத்தும் இந்த வேலையை, பெரும்பாலான சமயங்களில் தலித்திய செயற்பாட்டாளர்கள் தங்களது சந்தர்ப்பவாதத்தினை மறைப்பதற்கான ஒரு யுக்தியாகவே பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் குறித்துக் கருத்துக் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும், தற்போது தூய்மைப் பணியாளர்களின் வர்க்க கோரிக்கையான பணி நிரந்தரம் என்பதை, சாதியைத் தக்கவைக்கும் கோரிக்கையாக, துப்புரவுத் தொழிலாளர்களை வாழ்நாள் முழுவதும் அதே வேலையில் அழுத்தி வைக்கும் கோரிக்கை எனக் கூறியிருக்கிறார்.
“குப்பையை அள்ளுகிறவர்களைப் பணிநிரந்திரம் செய்து அந்தத் தொழிலையே செய்துகொண்டிருங்கள் என்று கூற முடியாது…. குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளேதான் குப்பை அள்ள வேண்டுமா? அரசு ஊழியர்களாக அவர்களை மாற்றினால் அரசு வேலை என்கிற அடிப்படையில் அவர்களது பிள்ளைகளும் இதே வேலையைச் செய்ய வேண்டும்…. குப்பை அள்ளுபவர்களைப் பணி நிரந்தரம் செய்வதன் மூலம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்தப் பணியைச் செய்து பென்சன் வாங்க வேண்டும் எனக் கூற முடியுமா?” எனக் கேள்வி எழுப்பி தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும், அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது, அம்பேத்கரின் பார்வையில் செயல்படுகின்றவர்கள் இந்தக் கோரிக்கையை எதிர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார், திருமாவளவன்.
திருமாவளவனின் இதே கருத்தைத்தான் ஆதித்தமிழர் பேரவையின் அதியமானும் முன்வைக்கின்றார். “தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும். பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும், என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம்.” என்று அவர் கூறியிருக்கிறார்.
சென்னை போன்ற மாநகரங்களில், தாழ்த்தப்பட்டவர்கள் அல்லாத பிற சாதியைச் சேர்ந்தவர்களும் தூய்மைப் பணியாளர்களாக வேலைசெய்கிறார்கள் என்ற போதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இந்தப் பணியில் ஈடுபடுகின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள்தான் துப்புரவுத் தொழிலில் ஈடுபட வேண்டும் என நெடுங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலை மாற வேண்டும், துப்புரவுத் தொழிலை இயந்திரமயமாக்கி அதில் மனித செயல்பாட்டை குறைக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
அதேசமயம் தற்போது தூய்மைப் பணியாளர்களாக இருப்பவர்கள் அதனை அரசு வேலையாக மாற்ற வேண்டும், பணி நிரந்தரம் கோரக் கூடாது என்பதையும், அவ்வாறு கோருவது அவர்களை அதே வேலையில் அழுத்தி வைப்பதற்கும், அவர்களது அடுத்த தலைமுறையையும் துப்புரவுத் தொழிலில் தள்ளிவிடுவதற்கு வழிசெய்கிறது என்பதை ஏற்க முடியாது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை, துப்புரவுத் தொழில் தவிரப் பிற வேலைகளில் சேர்க்க கூடாது என்று இந்தச் சமூகத்தின் மனநிலையில் ஊறியிருக்கும் சாதியப்பாகுபாட்டின் காரணமாக, வேறு எந்த வேலையும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற சமூகத்தின் இன்றைய அவல நிலையின் காரணமாகவே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துப்புரவுத் தொழிலைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தச் சாதியபாகுபாடு ஒழியாதவரை, தாழ்த்தப்பட்டவர்கள்தான் துப்புரவுப் பணியினைச் செய்ய வேண்டும் என்கிற இந்த அவலநிலையை மாற்ற முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் இந்த வேலையை விரும்பிச் செய்வதில்லை. இது தவிர வேறு எந்த வேலையும் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்ற காரணத்தினால்தான் இதனைச் செய்கிறார்கள்.
இதனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தூய்மைப் பணியாளர்கள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவதால் இந்த வேலையை அவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் செய்யவேண்டும், அவர்களுக்குப் பிறகு அவர்களது வாரிசுகளும் செய்யவேண்டும் என்ற நிலை ஏற்படும் என்று திருமாவளவன் கூறுகிறார்.
துப்புரவுப் பணியை தனியார் முதலாளிகளின் கையில் கொடுத்துவிட்டு, அந்த தொழிலாளர்களைத் தற்காலிகப் பணியாளர்களாக கொடுஞ்சுரண்டலின் பிடியில் வைத்திருந்தால், தாழ்த்தப்பட்டவர்கள்தான் அந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற சமூகத்தின் அவலநிலை மாறாது.
இதனைத் திருமாவளவன் உணராதவரல்ல. பின் எதற்காகச் சம்பந்தமில்லாமல் தூய்மைப் பணியாளர்களின் அரசு வேலை, பணிநிரந்தரம் என்ற கோரிக்கையை அவர் எதிர்க்கிறார்?
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் திமுக அரசினை அம்பலப்படுத்தி இந்தப் பிரச்சனையில் அவர்களைக் கூட்டணிக் கட்சிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் எல்லைவரைக் கொண்டு சென்றுள்ள நிலையில், திமுகவைப் பாதுகாப்பதற்காகவே போராடும் தொழிலாளர்களைக் குழப்பும் வேலையில் அவர் இறங்கியிருக்கிறார்.
சென்னை மாநகரின் துப்புரவுப் பணியினைத் தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்தும், தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டம், சமூகநீதி பேசும் திராவிட மாடல் திமுக அரசைப் பல முனைகளில் அம்பலப்படுத்தியது. அதனை ஒடுக்குவதற்காகப் போலீசினை அவிழ்த்துவிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டம் திமுக அரசின் தொழிலாளர்விரோதத் தன்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது. தனியார்மயமாக்கல் என்பது கொள்கை முடிவு அதனை மாற்ற முடியாது எனத் திட்டவட்டமாக கூறியிருப்பதன் மூலம் அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதை திமுக தெளிவுபடுத்தியிருக்கிறது.
அதேசமயம் திமுக போட்டுவரும் சமூகநீதி என்ற வேடத்தைக் கலையாமல் பாதுகாக்கும் வேலையில் திருமாவளவன் இறங்கியிருக்கிறார். அரசு வேலை நிரந்தர வேலை எனக் கோருவது தாழ்த்தப்பட்டவர்கள் நிரந்தரமாக தூய்மைப் பணியாளர்களாக இருக்கும் நிலையை ஏற்படுத்திவிடும் எனக் கூறி தனியார்மயமாக்கலுக்கு புதியதொரு விளக்கத்தையும் நியாயத்தையும் அவர் வழங்கியிருக்கிறார். இதன்மூலம் வர்க்கப் போராட்டத்தை சாதி ஒழிப்பிற்கு எதிரானதாக நிறுத்தும் வேலையை, தலித்திய செயற்பாட்டாளர்கள் தங்களது சந்தர்ப்பவாதத்தினை மறைப்பதற்கான ஒரு யுக்தியாகவே பயன்படுத்துகின்றனர் என்பதை உண்மை என நிரூபித்திருக்கிறார்.
தூய்மைப்பணியாளர்கள் பணிநிரந்தர கோரிக்கையையும், அரசு வேலைக் கோரிக்கையையும் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் திமுக அரசு அறிவித்துள்ள ஆறு அம்ச திட்டத்தினை புறந்தள்ளியது போன்றே, போராட்டத்திற்குக் குழி தோண்டும் திருமாவளவனின் புறக்கடை முயற்சியையும் புறக்கணித்து போராட்டத்தைத் தொடரவிருப்பதாக தொழிலாளர்கள் கூறியிருக்கின்றனர்.
- சந்திரன்
திருமாவளவன், அதியமான் உள்ளிட்டவர்கள் இந்த கருத்தை பரப்பி வருகின்றனர். இவர்கள் எப்போதும் தனியார்மயத்தை எதிர்ப்பதில்லை சாதியை வைத்து பிழைப்பு நடத்துகிற கூட்டமாக இருந்திருக்கிறது. அதனை நிரூபிக்கிற வகையில் திருமாவளவன் கருத்து உள்ளது. இது குறித்து சரியான நேரத்தில் செங்கனல் கட்டுரை கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது நன்றி.