காஷ்மீரில் 25 புத்தகங்களுக்கு தடை: அறிவுத்துறையினர் மீது காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்!

இந்திய இராணுவத்தின் துணை இராணுவப் படைகளின் குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளிலுள்ள இப்புத்தகங்கள் மிகவும் வலிமையானவை என்பதால் மோடி அரசை இப்புத்தகங்கள் அச்சுறுத்துகிறது. எனவே தான் அன்று ஜெர்மன் நாஜிகள் செய்ததை இன்று இந்திய பாசிஸ்டுகளான மோடி-அமித்ஷா கும்பல் செய்கிறது.

மோடி அரசு ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் அளித்து வந்த சட்டப் பிரிவான 370 மற்றும் 35(A)  இரண்டையும் இரத்து செய்து ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இச்சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்த  ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று, ஜம்மு காஷ்மீரின் உள்துறை அமைச்சகம்  25 புத்தகங்களை தடை செய்வதாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவிலுள்ள 25 புத்தகங்களும் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், இந்திய அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதாகவும், வரலாற்று உண்மைகளைத் திரிப்பதோடு இளைஞர்களின் மனநிலையை ஆழமாக பாதிப்படையச் செய்யும் எனக்கூறி இப்புத்தகங்களைத் தடை செய்திருக்கிறது.

பாரதிய நியாய சன்ஹிதாவின் (2023) பிரிவுகள் 152, 196 மற்றும் 197 ஆகியவற்றின் கீழ் இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதால் இப்புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதாக ஜம்மு & காஷ்மீரின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.        

காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கிய உடனே பா.ஜ.க.-வின் செய்தித் தொடர்பாளர்களும் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் அமைச்சர்களும் காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவால் தான் தீவிரவாதமும் பிரிவினைவாதமும் வளர்ந்தது. காஷ்மீரின் வளர்ச்சிக்கு சிறப்பு சட்டப்பிரிவை நீக்குவதே தீர்வு எனக்கூறி அதை நீக்கினர்.

ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு, மக்கள் நடமாட்டத்திற்கு தடை, தொலைக்காட்சி, கேபிள், இணையம், கைபேசி, சமூக வலைத் தளங்கள் உள்ளிட்ட நவீன தொடர்புச் சாதனங்கள் அனைத்தும் முடக்கம், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மீது சட்டவிரோத தடை, பல நூறு பேர் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு  என்று பல்வேறு பாசிச நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.

காஷ்மீரின் சிறப்பு சட்டத்தை நீக்கிவிட்டு இன்னும் ஓரிரு ஆண்டுகளில் புதிய காஷ்மீரை உருவாக்கி விடுவோம், காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது என நாட்டு மக்களிடையே பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு வந்தனர்.  ஆனால் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், காவிகள் பரப்பி வந்த காஷ்மீரின் இயல்புநிலை எனும் பொய்ப்பிரச்சாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனால் காஷ்மீரில் இதுவரை மேற்கொண்டு வந்த பாசிச நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக புத்தகங்களை தடை செய்திருக்கிறது மோடி அரசு. இப்புத்தகங்கள் அனைத்தும் காஷ்மீர் மக்களின் வாழ்கையை பற்றி பல்வேறு ஆய்வுகள், தரவுகள் மூலமே இப்புத்தகங்களின் ஆசிரியர்களான அறிஞர்கள், கல்வியாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.

இந்திய இராணுவத்தின் துணை இராணுவப் படைகளின் குண்டுகளை விட காஷ்மீரத்து இளைஞர்களின் கைகளிலுள்ள புத்தகங்கள் மிகவும் வலிமையானவை என்பதால் தான் மோடி அரசை இப்புத்தகங்கள் அச்சுறுத்துகிறது.

பால்செரோவிச் எழுதிய காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெரோஸ் எழுதிய காஷ்மீரிகளின் விடுதலைக்கான போராட்டம், சுமந்த்ரா போஸ் எழுதிய  21-ஆம் நூற்றாண்டில் முச்சந்தியில் நிற்கும் காஷ்மீர், அருந்ததிராய் எழுதிய ஆசாதி, மறைந்த எழுத்தாளர் ஏ.ஜி.நூரனியின் தி காஷ்மீர் டிஸ்பியூட் உள்ளிட்ட 25 நூல்கள் இதில் அடங்கும்.

இப்புத்தகங்கள் வெளிவந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உதாரணமாக, டாக்டர் அப்துல் ஜப்பார் கோக்ஹாமி எழுதிய “காஷ்மீர் அரசியல் மற்றும் பொதுஜன வாக்கெடுப்பு” என்ற புத்தகம் வெளியாகி ஏறக்குறைய  14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏ.ஜி. நூரனி எழுதிய “காஷ்மீர் டிஸ்பியூட்  1947-2012”  எனும் புத்தகம் வெளியாகி 11 ஆண்டுகளாகி விட்டது.

இஸ்லாமிய அறிஞரும், ஜமாத்-இ-இஸ்லாமியின் நிறுவனருமான மௌலானா மௌதுடி எழுதிய “அல் ஜிஹாத் ஃபில் இஸ்லாம்” என்ற புத்தகம்  1927-இல் வெளியிடப்பட்டது. ஹசன் அல் பன்னா ஷஹீத்தின் உருது புத்தகமான “முஜாஹித் கி அஸான்”  எனும் புத்தகம் 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இவைகளை வைத்திருந்தாலே சட்டவிரோத செயல் என காஷ்மீரின் போலீசார் உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே காஷ்மீரின் புத்தகக் கடைகளில் சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

ஜெர்மனியில் 1821-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புத்தகத்தடையின் போது அந்நாட்டு கவிஞர் ஹென்ரிச்ஹெய்ன் எழுதியதை கூறுவது பொருத்தமாக இருக்கும். எங்கே அவர்கள் புத்தகங்களை எரிக்கிறார்களோ, இறுதியில் மனிதர்களையும் எரிப்பார்கள். அக்கவிஞன் கூறியது போலவே 1933-ஆம் ஆண்டு  மே 10-ஆம் தேதியன்று நாஜி ஜெர்மனியில் நாஜிக்களால் பல ஆயிரக்கணக்கான  புத்தகங்கள் நடுவீதியில் எரிக்கப்பட்டன. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெர்டோல்ட் பிரெக்ட், சிக்மண்ட் பிராய்ட், ஃபிரான்ஸ் காஃப்கா, காரல் மார்க்ஸ், ரோமெய்ன் ரோலண்ட், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜாக் லண்டன் மற்றும் விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் கலைஞர்களின் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எரிக்கப்பட்டன.  இதற்கு காரணமாக அன்று ஜெர்மனியில் புழக்கத்தில் இருந்த புத்தகங்கள், அரசியல் அமைப்பால் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், மக்களை தீவிரவாத பாதைக்கு தள்ளுவதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும், தேவையற்ற கருத்துக்களை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் மனநிலையைப் பாதிப்பதாகவும், வரலாற்று உண்மைகளைத் திரிப்பதாகவும் நாஜிக்களால் கூறப்பட்டது.

இன்று காவி பாசிஸ்டுகளால் காஷ்மீரில் விதிக்கப்பட்டிருக்கும் புத்தகத் தடைகளுக்கான காரணங்களுக்கும்,  அன்று நாஜிக்கள் கூறிய காரணங்களுக்கும் வேறுபாடு எதுவுமில்லை.  பாசிஸ்டுகள் ஒருபோதும் ஆராய்ச்சியையும், உண்மை விபரங்களையும், வரலாறுகளையும் கொண்டு அறிவை ஆழப்படுத்துவதை ஏற்றுக் கொள்வதில்லை.

புத்தகங்களை தடை செய்வதன் மூலம் ஒரு போதும் காஷ்மீரின் வரலாற்றை காவி பாசிஸ்டுகளால் மாற்றி எழுத முடியாது, இந்தியாவின் ஆக்கிரமிப்பு வரலாற்றை நியாயப்படுத்த முடியாது.   காஷ்மீர் மக்களின் வரலாறு  முழுவதும் அங்கு நீக்கமற நிலைத்திருக்கிறது. இனி வரும் தலைமுறைக்கும் காஷ்மீர் மக்களின் உண்மையான வரலாறு அம்மக்கள் மூலமாக கடத்தப்படுவதை பாசிஸ்டுகளால் ஒருபோதும் தடுக்க முடியாது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன