அர்பன் நக்சல் எதிர்ப்புச் சட்டம் – ஜனநாயக சக்திகள் மீது காவி பாசிஸ்டுகளின் அடுத்த தாக்குதல்

பீமா கொரேகான் வழக்கில் அர்பன் நக்சல்கள் என மோடி அரசால் முத்திரை குத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராகச் சாட்சிகளை உருவாக்க இஸ்ரேலின் பெகாசஸ் உளவு செயலியை ஒன்றிய அரசு பயன்படுத்தியது. தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டம் காவி பாசிஸ்டுகளுக்கு இதுபோன்ற சிரமங்களை ஏற்படுத்தாமல் ஒருவரை எந்த ஆதாரமும் இன்றிச் சிறையிலடைக்க வழி செய்து கொடுக்கிறது..

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், பாசிச ஆட்சியை நிறுவும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று நாம் கூறுகிறோம். அவ்வாறு பாசிச ஆட்சியை நிறுவ வேண்டும் என்றால் முதலில் அது தனக்கு எதிரான குரல்களை நசுக்க வேண்டும் அல்லது வழிக்குக் கொண்டுவர வேண்டும். தனக்கு எதிராக எந்த அமைப்பும், தனிநபரும் செயல்படாமல் தடுக்க வேண்டும். பாசிச கும்பலை அம்பலப்படுத்திப்  பேசவும், எழுதவும், மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவும், தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகளுக்கு உருவாக்க வேண்டும். அதே சமயம் இவை அனைத்தையும் சட்டத்தின் மூலமாகவே செய்ய வேண்டும்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, மராட்டிய மாநிலத்தை ஆளும் பாஜக கூட்டணி அரசு மகாராஷ்டிரா “சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா” என்ற பெயரில் ஒரு மசோதாவைச்  சமீபத்தில் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. இடதுசாரி தீவிரவாத அமைப்புகளும் அதனை ஒத்த மற்ற அமைப்புகளும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டம் என இதனை அம்மாநில அரசு முன்னிறுத்தியிருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் “அர்பன் நக்சல்களுக்கு” எதிரான சட்டமாக இதனை பாஜக கூட்டணி அரசு கொண்டுவந்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன . அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பாஜக கூட்டணி அரசு இந்த மசோதாவில் திருத்தம் செய்வதாகக்  கூறி சட்டசபையில் இரு அவைகளையும் உள்ளடக்கிய கூட்டுக்குழுவை அமைத்தது. இந்தக் கூட்டுக் குழுவின் பரிந்துரைகளின் படி சில மாற்றங்களைச் செய்து மசோதாவை மீண்டும் ஜூலை 10 அன்று தாக்கல் செய்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமே இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். மற்ற எதிர்க்கட்சிகள் மசோதாவை விமர்சித்துப் பேசினாலும் வாக்களிக்கவில்லை. இதனால் இந்த மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவானது எந்தவிதமான நியாயமான விசாரணையும் இன்றி ஒரு அமைப்பைச்  சட்டவிரோதமானது என அறிவிக்க அரசுக்கு அதிகாரமளிக்கிறது. “இடதுசாரி தீவிரவாத அமைப்பு அல்லது அதனை ஒத்த அமைப்புகள்” என்று கூறுவது தெளிவற்றதாகவும், யாரைவேண்டுமானாலும் அர்பன் நக்சல்கள் என முத்திரை குத்துவதற்கு வசதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராகப் போராடும் எந்தவொரு அமைப்பையும், விவசாயச் சங்கங்களையும், மாணவர் அமைப்புகளையும், சிவில் உரிமைக் குழுக்களையும், பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தல்களாக முத்திரை குத்த அனுமதிக்கிறது.

இதன் படி, சட்டவிரோதமான அமைப்பு என எந்த அடிப்படையில் அரசு அறிவித்தது என்பதற்கான ஆதாரங்களை அரசு காட்டத்தேவையில்லை. “பொதுநலன்” என்ற காரணத்தைக் காட்டி அரசுக்கு இம்மசோதா வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது.

இவ்வாறு சட்டவிரோதமான அமைப்பு என்று அரசு அறிவித்துவிட்டால் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை அளிக்கவும் மசோதா இடமளிக்கிறது. இவ்வாறு தொடர்பில் இருப்பது என்று கூறுவதற்கு ஒருவர் அந்த அமைப்பில் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய அமைப்புகளின் கூட்டங்கள் அல்லது செயல்பாடுகளில் பங்கேற்பது, அவர்களுக்காக நிதியளிப்பது, அவர்கள் தொடர்பான விஷயங்களை வெளியிடுதல் அல்லது பரப்புதல் என எந்த வகையிலும் அரசால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்தாலும் அவர்களைத்  தண்டிக்க இந்த மசோதா வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் என்று பொத்தம் பொதுவாகக்  கூறியிருப்பதன் மூலம், அரசுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளையும், எதிர்க்கருத்துக்களையும் சட்டவிரோதம் எனக் கூறி அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க வழிசெய்து கொடுக்கிறது. அரசுக்கு எதிராகப்  பேசுவது எழுதுவதும் சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள், சுவரெழுத்துக்கள், பிரசுரங்கள், துண்டுச் சீட்டுகள், இணையதள போஸ்டர்கள் என எந்தவிதமான பிரச்சார சாதனங்களையும் அரசுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வழிசெய்கிறது. அரசுக்கு எதிராகப் போராட்டம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என எது செய்தாலும் அதற்காக நிதிவசூல் செய்தாலும் அவை சட்டவிரோதம் என இந்தச் சட்டம் கூறுகிறது.

அரசு நினைத்தால் யாருடைய சொத்துக்களை வேண்டுமானாலும் பறிமுதல் செய்யலாம், அவர்களைச் சொத்துக்களில் இருந்து வெளியேற்றலாம், அவர்களது நிதி ஆதாரங்களைப் பறிக்கலாம், காலவரையின்றி முடக்கிவைக்கலாம். இதற்கெதிராக நீதிமன்றங்களில் முறையிட முடியாது.

இது சட்டமாகும் போது அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளுக்கு எதிராக ஒருவர் மனு அளிக்க வேண்டுமென்றால் அவர் கீழமை நீதிமன்றங்களில், மாவட்ட நீதிமன்றங்களில் இல்லாமல் மாநில உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோதான் மனு அளிக்க முடியும். இதன் மூலம் உயர்நீதிமன்றத்திலோ உச்சநீதிமன்றத்திலோ மனுப் போடும் அளவிற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் மட்டுமே அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக  முடியும்.

“நல்ல எண்ணத்துடன்” செயல்படும் அரசு அதிகாரிகளைப் பாதுகாப்பதாக கூறி இந்த மசோதாவில் சில சரத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. அதாவது தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்கியது போல, மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, போராட்டத்திற்குள் நக்சல்கள் ஊடுருவிவிட்டார்கள் ஆகையால் துப்பாக்கிச்சூடு நடத்தினோம் எனப் போலீசு கூறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடி இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கிறது.

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள் பாசிச ஆட்சியை நிறுவுகின்ற தங்களது நிகழ்ச்சிநிரலில் அடுத்தடுத்த இலக்குகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பாசிச எதிர்ப்பு பேசும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இன்னமும் தாங்கலே  பாசிச அபாயம் குறித்து இன்னமும் உணரவில்லை. பாசிச அபாயம் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைப்பதும் இல்லை.

இந்தக் கருப்புச் சட்டத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் செல்வதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் மராட்டிய மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே, நாடு முழுவதும் இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மீது ஒடுக்குமுறையை ஏவும் வேலையைத் தொடங்கியது. பீமா கொரேகன் வழக்கில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க முன்னணியாளர்கள், எழுத்தாளர்கள் , வழக்கறிஞர்கள் எனப் பலரையும் ஊபா வழக்கில் மோடி அரசு கைது செய்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக இஸ்ரேல் உளவு நிறுவனத்திடம் இருந்து, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள்  செயலியைப் பயன்படுத்தி தரவுகளைப் புகுத்தியது. ஆனால் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டம் காவி பாசிஸ்டுகளுக்கு இதுபோன்ற சிரமங்கள் எதுவும் இல்லாமல் ஒருவரை எந்த ஆதாரமும் இல்லாமல் சிறையிலடைக்க வழி செய்து கொடுக்கிறது.

இன்று மராட்டிய மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நாளை மோடி அரசால் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும். அர்பன்  நக்சல்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதா என்பது எதிர்காலத்தில், காவி கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகப் போராடும் எந்தவொரு ஜனநாயக சக்தியையும், அமைப்பையும், தனிநபரையும் ஒடுக்குவதற்கான ஆயுதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

  • சந்திரன்.

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. 12 மணி நேர வேலையை அமல்படுத்த முனைந்தது போல், நாளை தமிழகத்தில் கூட இந்த சட்டம் அமலுக்கு வரலாம் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.