கல்விக்கென்று கடவுள் உள்ள இந்து மத கோவில்களில், கல்விக்கு இடமளிக்கக்கூடாது என சண்டித்தனம் செய்யும் சனாதன – பாசிச, ஆர்.எஸ்.எஸ், பிஜேபி காவிக் கும்பலானது, இது தொடர்பாக ஒரு வழக்கையும் தொடர்ந்துள்ளது. இதற்கு, ஆதரவாக ஆட்சி மோகம் கொண்டு அலையும் திராவிட வாரிசான அதிமுக தலைவர் பழனிச்சாமியும், ஒரு படி மேலே போய் “கோவில் நிலங்களில் பள்ளி – கல்லூரிகள் கட்டுவதை” மக்கள் சதியாகப் பார்ப்பதாகக் கூறி மக்கள் மீது பழியைப் போட்டுவிட்டு, மறைமுகமாக காவிக் கும்பலுக்கு காவடித் தூக்குகிறார். எந்த மக்களும் கோவில் நிலங்களில், பணத்தில் பள்ளி – கல்லூரிகளைக் கட்டுவதற்கு இன்றுவரை எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. எனவே பழனிச்சாமி சொல்லும் மக்கள் பிஜேபி காவிகளும், அதிமுக காலிகளும் தான் என்றால் பொருத்தமாக இருக்கும்.
கோவில் நிலங்ககளில், பணத்தில் பள்ளி – கல்லூரிகள் கட்டி நிர்வகிப்பதை முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் முதல் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி, இந்நாள் முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் அங்கீகரித்து; இந்து அறநிலையத்துறை மூலம் நிர்வகித்து வருகின்றனர். தனியார் பள்ளி – கல்லூரிகளையும் அனுமதித்துள்ளனர். இவற்றை சென்னை உயர்நீதிமன்றமும் ‘நற்பயன்’ என்கிற வகையில் கோவில் நிலங்களில், பணத்தில் பள்ளி – கல்லூரிகள் கட்டுவதையும் அதன் நிலங்களைக் குத்தகைக்கு விடுவதையும் அங்கீகரித்து தீர்ப்பும் வழங்கியுள்ளது. ஆனால், கோவில் நிலங்களில், பணத்தில் பள்ளி – கல்லூரிகளைக் கட்டி பராமரித்தால் கோவிலின் புனிதத் தன்மையும், பாரம்பரியமும் கெட்டுவிடும். எனவே, அவை அனைத்தும் அகற்றப்பட வேண்டுமென எகிறிக் குதிக்கின்றன இந்துமதக் (கல்வி கடவுள் உட்பட) கடவுள்களைக் குத்தகைக்கு எடுத்துள்ள காவிக் கும்பல். இதன் அடிப்படையில், கடலூர் தேவநாத சுவாமி கோவில் நிலத்தில் இயங்கி வரும் தனியார் புனித ஜோசப் பள்ளியை அகற்றக் கோரி வழக்கும் தொடுத்துள்ளது. இவ்வழக்கை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றமும் அப்பள்ளியை அகற்றக் கோரி உத்தரவும் போட்டுள்ளது. போதாக்குறைக்கு இந்த உத்தரவை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தவில்லை என்பதற்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும், மன்னிப்புக் கோரும் பிரமாணப் பத்திரங்களையும் தாக்கல் செய்ய வைத்துள்ளது. இதன் மூலம், கல்வியை விட, காவிகளின் ஆதிக்கமே, அரசு நிறுவனங்களில் ஒன்றான, அதாவது ஜனநாயகத் தூணான நீதிமன்றத்திலும் கோலோச்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களை இந்து அறநிலைத்துறையில் இருந்து விடுவித்து பார்ப்பன சனாதனவாதிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது; அதன் கோடிக்கணக்கான சொத்துக்களை, நிலங்களை சிதம்பரம் நடராஜர் கோவில் தீச்சிதர்களைப் போல ஆக்கிரமிப்பது, ஆட்டையைப் போடுவது என்கிற கேடான நோக்கத்தின் அடிப்படையிலேயே காவிக் கும்பல் சதிசெய்து வருகிறது. இதை, உறுதிப்படுத்தும் வகையில் பிஜேபியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ‘தமிழகத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால், இந்து அறநிலைத்துறையே தேவையில்லை என்பதே எங்களது முதல் கையெழுத்தாக இருக்கும் என திருவாய் மலர்ந்துள்ளார். ஏற்கனவே, காவி கும்பல் நடத்தும் பள்ளி – கல்லூரிகளில் சாகாப் பயிற்சி என்ற பெயரில் கொலைகாரக் கும்பலை உரம் போட்டு வளர்த்து வருகிறது. இவைதான், நாடு முழுவதும், விஹெச்பி, பஜ்ரங்தள், ராம் பக்த சேனா, சனாதன் சன்ஸ்தா என்று பல்வேறு பெயர்களில் மதக்கலவரங்களையும், கொலைபாதகச் செயல்களையும் அரங்கேற்றி வருகின்றன. நாளை இதற்கான பயிற்சிக் கூடங்களாகவும், ஆயுதக் கிடங்குகளாகவும் கட்டியமைக்கவே கோயில்களையும் அதன் பள்ளி – கல்லூரிகளையும் இந்து அறநிலைத்துறையில் இருந்து விடுவிக்கப் படாதப்பாடுபட்டு வருகிறது.
இந்து அறநிலைத்துறையை ஆக்கப்பூர்வமான நிர்வாக அமைப்பாக மட்டும் பராமரிப்பதும், அவற்றால் நிர்வகிக்கப்படும் கோவில்களில், அதற்கு பள்ளி – கல்லூரிகளில், சேவை மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் கண்காணிப்பதும் அவற்றின் சொத்துக்கள், நிலங்கள் திருடப்படாமல் அபகரிக்கப்படாமல் தடுப்பதுமே அதன் வேலையாக அமைய வேண்டும். மாறாக, பூஜைகள் நடத்துவதும், குடமுழுக்குகள் நடத்துவதும் அதன் வேலையாக அமையக்கூடாது. இல்லையேல் திராவிட வாரிசுகள் முழுக்க, முழுக்க காவிகளாக மாறுவதைத் தடுக்க முடியாது. ஏற்கனவே சேகர்பாபு போன்ற பல்வேறு நபர்கள் மாறிவிட்டார்கள் என்பது வேறு, கோவில்களை பராமரிக்கும் ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு காவிகள் கூறுவது போல ஆத்திகர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறந்த நிர்வாகியாக இருந்தாலே போதுமானது.
காவிப் பாசிசக் கும்பல் தமிழகத்தில் வேரூன்ற கைத்தடியாக இருந்து நேர்மறையில் அடியாள் வேலை செய்து வரும் அதிமுக பழனிச்சாமியும், எதிர்மறையில், இந்து அறநிலைத்துறை என்ற பெயரில் கோவில் குடமுழுக்குகளை நடத்தி வரும், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தி வரும் திமுக சேகர்பாபுவும் அதன் B டீம்களாக இருந்து சேவையாற்றி வருகின்றனர். நேரடியாக ஒருவரும், மறைமுகமாக இன்னொருவரும் என்கிற வகையில் காவிப் பாசிசக் கும்பலுக்கு சேவையாற்றி வரும் இவர்களால் ஒருபோதும் காவிப் பாசிசக் கும்பல் தமிழகத்தில் காலூன்றி வருவதைத் தடுக்க முடியாது.
மக்களின் கடவுள் நம்பிக்கையை கேடாகப் பயன்படுத்தி மதக் கலவரங்களை அரங்கேற்ற கோவில்களைக் கேடயமாகப் பயன்படுத்தத் துடிக்கும் காவிப் பாசிசக் கும்பலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு தமிழகத்தில் காவிப் பாசிசக் கும்பல் காலூன்றாமல் தடுக்க வேண்டும். அதற்கு காவிப் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள், மதவெறியை எதிர்ப்பவர்கள், மதநல்லிணக்கத்தை ஒற்றுமையை நேசிப்பவர்கள், ஜனநாயக சக்திகள், பார்ப்பன சனாதன சடங்குகளை நிராகரிப்பவர்கள் அதன் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.
- மோகன்