இடஒதுக்கீட்டை இரத்து செய்வதன் மூலம் மதம் மாறுவதைத் தடுக்க முடியுமா?

அனுபவிக்கும் சலுகைகளைப் பறித்துவிடுவோம், பார்க்கும் வேலையை, கற்ற கல்விக்கான சான்றிதழ்களைப் பிடுங்கிவிடுவோம், வாழ்வாதாரத்தை அழித்துவிடுவோம் என மிரட்டுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை சாதிய ஒடுக்குமுறையின் கீழ் அடக்கிவைத்துவிடலாம் என காவி பாசிஸ்டுகள் நினைக்கிறார்கள்.

இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பட்டியல் சாதி சான்றிதழ் பெற்றிருந்தால், அவை இரத்து செய்யப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

அத்தகைய சான்றிதழ்கள் மூலம் அரசு வேலைகள் அல்லது ஆதாயங்கள் பெற்றிருந்தால், அவை செல்லாததாக்கப்படும் என்றும் சான்றிதழைப் பயன்படுத்திப் பெறப்பட்ட பணப்பலன்கள் மீண்டும் வசூலிக்கப்படும் என்றும் மராட்டிய மாநில சட்டசபையில் வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இதற்கென மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள் மதம் மாறிவிட்டால் அவர்களது இடஒதுக்கீட்டு உரிமையை பறிக்க வேண்டும், என்ற காவி பாசிச கும்பலின் பிரச்சாரத்திற்கு, மராட்டிய மாநில பாஜக கூட்டணி அரசு சட்ட வடிவம் கொடுக்கப்போகிறது.

இந்து மதம் என்பது ஒன்றின் மீது ஒன்று அடுக்கிவைக்கப்பட்ட சாதிகளின் தொகுப்பு. அதாவது ஆயிரக்கணக்கான சாதிகள், ஒவ்வொன்றும் ஒன்றின் மீது ஒன்றாகவோ அல்லது ஒன்றின் கீழ் ஒன்றாகவோ, பல படி வரிசை அடுக்குகளாக உள்ளன. சாதிகளாக பிரிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சமனற்ற தன்மையும், ஒடுக்குமுறையும் படிநிலையில் இருக்கிறது. சத்திரியர் உள்ளிட்ட எல்லா சாதிகளையும் ஒடுக்குவதும், சாதிய அடுக்கின் உச்சியில் உள்ள பார்ப்பனர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள சத்திரியர் உள்ளிட்ட எல்லா சாதிகளையும் ஒடுக்குவதும், சத்ரியர் சாதியைச் சேர்ந்தவர்கள் பார்ப்பனருக்குக் கட்டுப்பட்டுக் கொண்டே தங்களுக்குக் கீழ் உள்ள வைசியரையும், சூத்திரரையும், தாழ்த்தப்பட்டவர்களையும் ஒடுக்குவதையும் இவ்வாறு ஒவ்வொரு படியில் இருப்பவரும் தனக்கு மேலே உள்ளவர்களின் ஒடுக்குமுறைக்கு கட்டுப்பட்டு தனக்கு கீழே இருப்பவர் மீது ஒடுக்குமுறை செலுத்தும் வகையில் சாதிய கட்டமைப்பு வலுவாக கட்டியமைக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை அழுத்திக் கொண்டுள்ளது.

மொத்த சாதிய அமைப்பின் கடைசிப் படிநிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் ஒட்டுமொத்த அமைப்பின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் தங்களது அன்றாட வாழ்வில் எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மட்டுமல்ல கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்குக் கூட உரிமை இல்லாதவர்களாக ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றனர். இன்றளவும் இந்த ஒடுக்குமுறை என்பது தொடரத்தான் செய்கிறது. இந்த ஒடுக்குமுறையில் இருந்து தப்பிப்பதற்கு, சாதிரீதியில் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்கள், மதம் மாறுவதை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர்.

தமிழ்நாட்டு வரலாற்றில் மீனாட்சிபுரம் இதற்கு ஒரு உதாரணம். 1981-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில், மொத்தமுள்ள 300 தலித் குடும்பத்தில் 210 தலித் குடும்பங்களிலுள்ள உறுப்பினர்கள் மதம் மாறியுள்ளனர். இந்து மதம் என்கின்ற பார்ப்பன மதத்தினை விட்டு வெளியேறி இஸ்லாம் மதத்திற்கு ஒரே நாளில் மாறியுள்ளனர். இதற்கு சமூகப் புறக்கணிப்புதான் மிக முக்கிய காரணமாகும். தன்னைவிட உயர்ந்த ஜாதிக்காரனின் முன்னால் தோளில் துண்டு போடக்கூடாது, ஒரே கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது, ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடாது, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியர்களே தங்கள் பிள்ளைகளை வேறொரு பள்ளியில்தான் படிக்க வைக்கின்றனர். அந்த ஆசிரியர்கள் தாங்கள் குடிப்பதற்குகூட அவர்கள் வீட்டிலிருந்துதான் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இத்தனை புறக்கணிப்புகள் இருந்தும் மதம் மாறியதற்கு காரணம் அரபு நாடுகளில் இருந்து பணம் வருகிறது. எனவே ஆசை வார்த்தை காட்டி மதம் மாறுவதற்கு கட்டாயப்படுத்துகிறாரகள் என விஷ்வ ஹிந்து பரிசத், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் பிரச்சாரம் செய்தனர். அதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தலித்துகளுக்கு எதிராகதான் செயல்பட்டுள்ளனர். அன்றைக்கு இதனைச் சரி என பத்திரிக்கைகள் எழுதின அவை இன்றும் இணையத்தில் காணக் கிடக்கிறது. இன்றும் இப்படித்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இவையனைத்தும் சனாதன இந்துமதத்தைக் காப்பதற்கு எடுக்கப்படும் முன்னெடுப்புகளே அன்றி வேறல்ல.

இவ்வாறு சாதிய ஒடுக்குமுறையின் தொகுப்பாக உள்ள இந்து மதத்திலிருந்து மக்கள் பிரிந்து சென்று வேறு மதங்களை தழுவுவது தவிற்கவியலாதது. அதேபோல் வேறு மதங்களில் இருந்து மக்களை இந்து மதத்திற்கு கொண்டு வருவதும் இயலாது. ஏனெனில் இந்து மதத்திற்குள் ஒருவரைக் கொண்டுவர வேண்டும் என்றால் அவரை ஒரு சாதியில் சேர்க்க வேண்டுமே எந்த சாதியில் சேர்ப்பது. எனவே வேறு மதத்தில் இருந்து யாரையும் இந்து மதத்தில் புதிதாக சேர்க்கவும் முடியாது, சாதிய ஒடுக்குமுறையின் காரணமாக இந்து மதத்தை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுக்கவும் முடியாது. இந்த உண்மையை விஷ்வ ஹிந்து பரிசத், இந்து முன்னணி போற்ற காவி பாசிஸ்டுகள் அங்கீகரிக்க மறுக்கின்றனர்.

அவர்கள் உருவாக்க நினைக்கும் இந்து இராஷ்டிரத்தில், மனுநீதியின் படியிலான ஆட்சியில், சாதிய பாகுப்பாடுகளை பாதுகாக்கும் இராம இராஜ்ஜியத்தில், மேலிருந்து உத்தரவு போடும் பார்ப்பனர்களுக்கு கீழிருந்து சேவை செய்ய சூத்திர பஞ்சம சாதிகள் தேவை என்ற காரணத்தினால்தான் தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறுவதை தடுக்க வேண்டும் என வெறிகொண்டு அலைகிறார்கள்.

அதனால்தான் இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மக்கள் மாறிச் செல்வதை சட்டங்கள் போட்டு தடுத்துவிடலாம். அவர்கள் அனுபவிக்கும் சலுகைகளைப் பறித்துவிடுவோம், பார்க்கும் வேலையை, கற்ற கல்விக்கான சான்றிதழ்களைப் பிடுங்கிவிடுவோம், வாழ்வாதாரத்தை அழித்துவிடுவோம் என மிரட்டுவதன் மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை சாதிய ஒடுக்குமுறையின் கீழ் அடக்கிவைத்துவிடலாம் என காவி பாசிஸ்டுகள் நினைக்கிறார்கள். இதன் உண்மையாக பொருள் இந்து மதம் எனும் சனாதன மதத்தின் படிநிலையை மீறாமல் அதற்குள்ளேயே அழுந்திக் கிடக்கும் பொழுதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகளை அனுபவிக்க முடியும் என அறிவிக்கிறது காவி கும்பல்.

சுருங்கக்கூறின் சனாதனம் என்பது சாதிய அடக்குமுறைதான் தாழ்த்தடப்பட்டவர்கள் அதனை மீறாமல் அதற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கூறுகிறார்.

 

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன