உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார், கங்கோத்ரி, கோமுகி மற்றும் கேதார்நாத் புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்தக் கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.
கடந்த ஆண்டின் போது, கன்வார் யாத்திரைப் பாதையில் உள்ள உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தாபாக்கள், உணவு விடுதிகள், இனிப்பு கடைகள், பழக்கடைகள் போன்றவை, அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களையும், பணிபுரிபவர்களின் பெயர்களையும் தெளிவாகவும் பெரியதாகவும் எழுதி வைத்திருக்க வேண்டும் என்று முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, அந்த உத்தரவை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் நீட்டித்தது. இதையடுத்து, உத்தரகாண்ட மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளும், அந்த உத்தரவைப் பின்பற்றியது. இந்த வழிகாட்டு முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடை உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளின் பெயர்களை மட்டுமே எழுதிவைக்க வேண்டும் என்று கூறி உ.பி அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த நிலையில், இந்தாண்டின் கன்வார் யாத்திரை ஜூலை 11-ஆம் தேதி தொடங்கி ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த யாத்திரையை ஒட்டி, கடந்தாண்டைப் போலவே மீரட் முதல் முசாபர்நகர் வரை சுமார் 540 கி.மீ தூரத்திற்கு இந்தாண்டும் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உணவுப்பாதுகாப்பு செயலியுடன் இணைக்கப்பட்ட QR Code வைத்திருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதனை ஸ்கேன் செய்தால் கடை உரிமையாளரின் பெயர், பதிவு எண், முகவரி, உணவு வகைகள் ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும் எனவும், இது தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த நகர்வு எனவும் ஆதித்யநாத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கலவர நோக்கத்துடன் இவ்வுத்தரவு போடப்படுவதால், பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய உணவு வகைகளை மட்டும் காட்சிப்படுத்தினால் போதும் என்ற உத்தரவை கிஞ்சித்தும் மதிக்கவில்லை.
பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் போலீசு, நீதிமன்றம், இராணுவம், அமலாக்கத்துறை உள்ளிட்ட நிரந்தர அரசு உறுப்புக்களையும், கூட்டணிக் கட்சிகளையும் தங்களின் அகண்ட பாரத கனவிற்கு எப்பொழுதும் பயன்படுத்தியே வருகிறார்கள். இதன் விளைவாகக் கலவரங்களின் மூலம் மக்களை ஜாதியாகவும், மதமாகவும் எளிதில் பிளக்க முடிகிறது.
கன்வார் யாத்திரை செல்லும் பாதையில் உள்ள இறைச்சி கடைகளை மூடுவதற்குத் தில்லி முனிசிபல் சட்டங்களில் இடமில்லை என்பது தெரிந்தும், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, ”கன்வார் யாத்திரை செல்லும் பகுதிகளில் இருக்கும் இறைச்சி கடைகள் மூடப்படும்” எனக் கூறியிருக்கிறார். இதன் பொருள் மிரட்டிப் பணியவைப்பது அன்றி வேறென்ன?
அதித்யநாத், மிஸ்ரா போன்றவர்களின் கலவரக் கருத்துக்களால் இரு மதத்தினரிடையே மோதல் உருவாவதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. அதேபோல், பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் கன்வார் யாத்திரையில் இதுபோன்ற மத துவேச கருத்துக்களோ, மோதல்களோ உருவானதில்லை. பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தான் இதுபோன்ற கருத்துக்களும், மோதல்களும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.
ஜூலை 1-ஆம் தேதியன்று டெல்லி – டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபாவில் ‘‘யோகா சாதனா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்நகரில் நடத்தி வரும் யஷ்வீர் மஹராஜ் என்ற துறவியின் சீடர்கள் சோதனை நடத்தியுள்ளனர். ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் பெயர் முஸ்லீம் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் கீழாடையை அவிழ்த்து சீடர்கள் பார்த்துள்ளனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இப்படியான ஈனச் செயலில் ஈடுபடுபவர்களைக் கண்டும் காணாமல் விட்டுவிடும் ஆதித்யநாத்தும், 2015-ஆம் ஆண்டு யஷ்வீர் மஹராஜ் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் பற்றி விமர்சனம் செய்துள்ளதும் தான் கீழாடையை அவிழ்ப்பதற்கான அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளது.
அரசின் நவீன தாராளவாதக் கொள்கையின் விளைவாக மக்கள் போதிய வருமானமின்றி, நிரந்தர வேலையின்றி, கிடைத்த வேலைக்குச் சென்றும், சிறு கடைகளை வைத்தும் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதில் ஒன்றிரண்டு நாட்கள் கடைகளை மூடினாலே வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில், கன்வார் யாத்திரை முடியும் வரை அனைத்துக் கடைகளும் மூடப்பட்டால், சிறு விற்பனையாளர்களும் தினக்கூலிகளும் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க முடியாது என்பது தெரிந்தும் பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் இங்குக் கடை வைத்திருக்கும் பெரும்பாலோனர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே முஸ்லீம் சிறுபான்மையினரின் முழுமையான பொருளாதாரப் புறக்கணிப்புக்கான சூழ்நிலையை உருவாக்குவதே இவர்களின் நோக்கமாகும்.
இந்த யாத்திரையின் போது போலிச் சாமியார்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காக ஆபரேஷன் கலனேமி ( Operation Kalanemi) தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாறுவேடத்தில் சாமியாராக வாழ்ந்ததாகக் கூறப்படும் டேராடூன் மாவட்டத்தின் சஹாஸ்பூர் பகுதியில் ஒரு பங்களாதேஷ் குடிமகன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பே டேராடூனுக்கு வந்துள்ளார். இருந்தும் உத்திரகாண்ட் அரசு இவரைக் கைது செய்வதற்கு பங்களாதேஷி என்ற ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது.
தில்லியைச் சேர்ந்த முஸ்கன் என்ற பெண் கொண்டுவந்த கங்கை நீர் கொண்ட மூங்கில் மீது எச்சிலைத் துப்பியதாக உஸ்மான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், உஸ்மான் காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் மற்றும் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்துள்ளது. எனினும் உஸ்மான் ஒரு முஸ்லீம் என்பதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பலின் போலீசு.
கடந்த பத்தாண்டுகளில் பிற மதத்தினர் மீது குறிப்பாக இஸ்லாமியர்களைக் குறிவைத்து பல்வேறு வெறுப்புப் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அதில் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியும் அடைந்துள்ளனர். எனினும் இது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனென்றால் இவர்கள் நிறுவத்துடிக்கும் ”அகண்ட பாரதத்திற்கு” அடிப்படை சனாதனம். அதாவது பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு என்று கூறும் பாசிஸ்டுகள். எனவே இன்று இஸ்லாமியர்களாக இருக்கலாம் நாளை பல்வேறு மதத்தைச் சார்ந்த பரந்துபட்ட உழைக்கும் மக்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பக்தியின் பெயரல், தேசத்தின் பெயரால், மதத்தின் பெயரால் இவர்கள் செய்யும் கலவரங்களுக்கு எதிர்வினையாற்ற முடியும்.
- மகேஷ்
செய்தி ஆதாரம்:
https://www.nakkheeran.in/24-by-7-news/youth-spits-on-holy-water-during-kanwar-yatra-9473051