கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க PLI, சம்பளம் கொடுக்க ELI

தொழில் தொடங்க முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பல இலட்சம் கோடி அளவிலான சலுகைகள் போதாதென்று தற்போது வேலை கொடுத்தாலே ஊக்கத்தொகை என்று மோடி அரசாங்கம் அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான ஊக்கத்தொகை (Employment Linked Incentive-ELI) என்ற திட்டத்திற்கு மோடி அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் படி, முதல் முறையாக EPFO-வில் பதியும் ஒரு தொழிலாளிக்கு ஊக்கத்தொகையாக அவருடைய முதல் மாத சம்பளத்தை (அதிகபட்சமாக 15000 ரூபாய் வரை) இரண்டு தவணையில் கொடுக்கப்படும்.

வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு ஊக்கத்தொகையாக ஒரு தொழிலாளிக்கு மாதம் 3000 ரூபாய் வீதம் இரண்டு வருடத்திற்கு கொடுக்கப்படும். உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலையாக இருந்தால் இச்சலுகை மூன்றாவது மற்றும் நான்காவது ஆண்டுக்கும் நீட்டிக்கப்படும்.

இச்சலுகைகளைப் பெற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பதிந்துள்ள ஒரு தொழிற்நிறுவனம், 50 தொழிலாளிகளுக்கு குறைவாக இருந்தால் ஆறுமாதத்திற்குள் இரண்டு புதிய தொழிலாளியையாவது பணியில் அமர்த்த வேண்டும், 50 தொழிலாளிகளுக்கு மேல் உள்ள தொழிற்நிறுவனம் ஆறு மாதத்திற்குள் குறைந்தது புதிய ஐந்து இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும்

இத்திட்டதிற்காக 99,446 கோடியை மோடி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் அடுத்த இரண்டு வருடத்திற்குள் 3.5 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என கூறுகிறார் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்.  வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்காவும் சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்று புகழ்கின்றனர் முதலாளிகள்.   

படிப்பை முடித்த ஒரு இளைஞரை வேலைக்கு அமர்த்தும் நிறுவனத்திற்கு 1,44,000 ரூபாயை சலுகையாக கொடுக்கப்படுகிறது. உதாரணமாக டிப்ளமோ படித்து முடித்து சாம்சங்க் தொழிற்சாலையில் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஒரு இளைஞன் வேலைக்கு சேருவதாகக் கொள்வோம். அத்தொழிலாளிக்கு வேலை கொடுத்த சாம்சங் முதலாளியின் ‘நல்ல மனதைப் பாராட்டி’, தொழிலாளிக்கான ஒரு வருட சம்பளத்தை, அதாவது ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாயை அந்நிறுவனத்திற்கு ஊக்கத்தொகையாக ஒன்றிய அரசு கொடுக்கும்.  இதுதான் ELI திட்டம். அத்தொழிலாளிக்கான ஒருவருடச் சம்பளத்தை அரசே தருவதாக மோடி அறிவித்ததே தனியார் தொழிற்துறை உயரதிகாரிகள் இத்திட்டத்தினை வரவேற்பதற்கு முக்கியக் காரணம்.

2024-25 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், அடுத்த ஐந்து வருடத்தில் 4.2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதற்காக 2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்திருந்தார். அதன் ஒரு பகுதி தான் ELI திட்டமாகும். மற்றொரு திட்டமான பிரதம மந்திரி பயிற்சித் திட்டத்திற்கு கடந்தாண்டு அக்டோபரில் அறிவிப்பு வெளியானது. இத்திட்டத்தின் படி, படித்து முடித்த இளைஞர்கள் டாடா, ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான், ஜிங்க் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன் ஒரு வருடத்திற்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த ஊக்கத்தொகை ஒன்றிய அரசே கொடுத்துவிடும்.

முதலாளிகளின் இலாபப்பெருக்கத்திற்கு, சந்தை கோருகின்ற தொழில் திறன்களோடு மாணவர்களை தயாரிப்பது என்ற உள்நோக்கத்திலிருந்து இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தனது தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளிக்கு புதிய தொழில்நுட்பத்தையோ புதிய திறன்களையோ கொடுக்க வேண்டியது தொழில் நிறுவனத்தின் பொறுப்பு. ஆனால் இங்கே மாணவர்களின் கல்விக்கான நிதியையும் கல்வி உதவித்தொகையையும் படிப்படியாக குறைத்து கல்வியில் தானியார்களை ஊக்குவிக்கும் மோடி, மக்களுடைய வரிப்பணம் பல்லாயிரம் கோடி ரூபாயை முதலாளிகளுக்காக தொழில் பயிற்சி வழங்கும் திட்டத்திற்கு செலவிடுகிறார். இதனை வேலைவாய்ப்பு உருவாக்கம் என்று நியாயப்படுத்துகிறார்.

இதுபோன்று பயிற்சியாளர்/தொழில் பழகுநராக சேர்க்கப்படும் இளைஞர்கள் அந்நிறுவனங்களால் கசக்கிப் பிழியப்படுகின்றனர். அரசின் ஊக்கத்தொகையைத் தவிர சரியான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. வேலை நிரந்தரமும் செய்வதில்லை. உதாரணமாக நீம் திட்டத்தில் ஒன்றிய அரசின் அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேரடியாக தொழில் பழகுநராக (ரூ.9000/மாதம்)  நியமிக்கப்படுகின்றனர். இத்தொழிலாளியின் ஊதியத்தில் ஒரு சிறுதொகையை ஒன்றிய அரசு தருகிறது. அதிகபட்சம் மூன்று வருடத்திற்குப் பிறகு அத்தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டு விடுவார். பிறகு புதிய தொழிலாளர்கள் நீம் திட்டத்தின் மூலமாக வேலைக்கமர்த்தபடுவர். நியாயமான ஊதியம், நிரந்தர வேலை, சமூகப்பாதுகாப்பு எதுவும் அவர்களுக்குக் கிடையாது. ELI, பிரதம மந்திரி பயிற்சித் திட்டம் ஆகியவை நீம்மின் அடுத்த கட்டம். கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மக்கள் பணத்திலிருந்து வேலைக்கான தொழிற் பயிற்சியையும், வேலைக்கான சம்பளத்தின் ஒரு பகுதியையும், வேலை கொடுத்ததற்கான ஊக்கத்தொகையையும் கொடுத்து முதலாளியின் இலாபத்தை மேலும் மேலும் அதிகரிப்பதற்கானத் திட்டமேயாகும்.         

உற்பத்தியை ஊக்குவிற்கிறோம் என்ற அறிவிப்பின் பேரில் கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க பல ஆயிரம் கோடி சலுகைகளுடன் உற்பத்தி பெருக்கத்திற்கான ஊக்கத்தொகை (Production Linked incentive-PLI) என்ற திட்டத்தை 2019-20 யூனியன் பட்ஜெட்டில் மோடி அரசாங்கம் அறிவித்தது. ஐந்தாண்டுக்குள் 14 துறைகளில் உற்பத்தியை அதிகப்படுத்த தனியார் நிறுவனங்களுக்கான சலுகையாக 1.97 இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, ஏற்றுமதியை அதிகரிப்பது, உற்பத்தித் துறையின் GDP-க்கான பங்களிப்பை 25 சதவீதமாக உயர்த்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாக சொல்லப்பட்டது.

ஐந்து வருடங்களாகியும் இதில் ஒரு இலக்கைக் கூட இவர்கள் எட்டவில்லை. ஆனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கணிசமான பகுதி விஸ்ட்ரான், ஃபாக்ஸ்கான், பெகாட்ரான், சாம்சங், சுஸூகி, டொயோட்டா, டாடா மோட்டார்ஸ், கியா, அசோக் லேலாண்ட், மகிந்திரா & மகிந்திரா, மிட்சுபிஷி, எல்சர், போஷ், அதானி டிபென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கே சென்றது.  அதன் முதலாளிகளே  அதிக இலாபமடைந்தனர். தற்போது குறைக்கடத்தி சிப்புகள் சார்ந்த தொழில் தொடங்க இலட்சம் கோடிகளுக்கு மேல் சலுகைகள் அறிவித்துள்ளனர்.

பத்து வருடங்களுக்கு முன்பு மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை மோடி அறிமுகப்படுத்தினார். 10 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அதன் இலக்கு என்றார். இதற்காக தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகளும் வழங்கப்பட்டது. ஆனால் தொழில்துறை வேலைவாய்ப்பு அதிகரிப்பதற்கு பதிலாக கடந்த பத்து வருடத்தில் குறையவே செய்துள்ளது.

உற்பத்தியை பெருக்குவது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தன்னிறைவு அடைவது என்ற காரணங்களை முன்வைத்து பல இலட்சம் கோடி மக்களின் வரிப்பணத்தை தொழில் தொடங்குவதற்கான கடனாகவும் உற்பத்திக்கான ஊக்குவிப்பு சலுகைகளாகவும் வரிச் சலுகைகளாகவும் இந்தியா மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசாங்கம் கொடுத்துள்ளது. மேக் இன் இந்தியா, ஆத்ம நிர்பர், அம்ரித்கல், கிக்சிட் பாரத்-2047 என்று ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கும் ஒரு புது பெயர்களில் இவ்வேளைகள் நடந்து வருகின்றன.

தொழில் தொடங்க முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போதாதென்று அவர்களின் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளிகளின் திறன் மேம்பாட்டிற்கும், சம்பளத்திற்கும் பல இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மோடி அரசாங்கம். இது ஒரு கடைந்தெடுத்த மக்கள் விரோத அரசு என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

 

  •  செல்வம்

 

https://peoplesdemocracy.in/2024/1110_pd/public-money-corporate-profit 

https://indianexpress.com/article/business/cabinet-approves-employment-linked-incentive-scheme-job-generation-10100329/

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2035608

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2141127

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன