நடப்பிலுள்ள ஆந்திரப் பிரதேச தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, தொழிற்சாலைகள் (திருத்தம்) மசோதா, 2025 என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 1948-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்களை செய்துள்ளனர்.
ஒரு நாளின் அதிகபட்ச வேலை நேரம் 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓய்வு இடைவேளையில்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் அதிகபட்ச நேரம் 5 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு உட்பட ஒரு நாளைக்கான மொத்த வேலை நேரம் 10.5 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலாண்டுக்கான மிகுதிநேர வேலையின் (overtime) அதிகபட்ச வரம்பு 50 மணி நேரத்திலிருந்து 75 மணி நேரமாக முன்பு இருந்தது, இப்போது அதனை 144 மணி நேரமாக (கிட்டத்தட்ட இருமடங்கு) உயர்த்தப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் இரவு நேர சிப்ட்டுகளில் பெண்களை பணியமர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கூடவே, ஆந்திரப் பிரதேச கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டு, 20 பணியாளர்களுக்குக் குறைவாக பணிபுரியும் வணிக நிறுவனங்களுக்கு மேற்சொன்ன பெரும்பாலான விதிகளிலிருந்து விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவைகளுக்கு இவ்விதிகள் பொருந்தும்.
இந்த வேலைநேர உயர்வு தொழிலாளர்களின் வசதிக்காகக் (flexibility) கொண்டுவரப்பட்டது என்கிறது சந்திரபாபு நாயுடு அரசாங்கம். அக்கட்சியின் (TDP) செய்தித்தொடர்பாளர் தீபக் ரெட்டி, தொழிலாளர்கள் சட்டவிரோதமாக கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இச்சட்டத்திருத்தம் “அச்சட்டவிரோதச் செயலை நீக்கும்” ஒரு நடவடிக்கை என்று நியாயப்படுத்துகிறார்.
இவ்வேலைநேர உயர்வு தொழிலாளர்களுக்கு கட்டாயம் இல்லை அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது என்கிறார் அமைச்சர். ஆனால் எதார்த்தத்திலோ வேலைநேர உயர்வு தொழிலாளர்களுக்கு கட்டாயம் என்றும் அதை ஏற்க மறுத்தால் வேலை இழக்க நேரிடும் என்கின்றனர் தொழிலாளர்கள்.
முதலாளிகளின் வசதிக்காகக் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தத்தை தொழிலாளர்களுக்கானதாக புரட்டிப் பேசுகிறார் சந்திரபாபு நாயுடு. ரவுடி தண்டல் வாங்குகிறான் என்று வியாபாரிகள் அரசாங்கத்திடம் முறையிட்டால் தண்டல் வாங்குவதையே சட்டமாக்கிவிட்டால் பிரச்சனைத் தீர்ந்துவிடும் என்று பரிந்துரைக்கும் இருபத்திமூன்றாம் புலிகேசிபோல விளக்கம் தருகிறார் தீபக் ரெட்டி. சட்டவிரோதமாக நடந்துகொள்ளும் தொழிற்சாலை முதலாளிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளி வர்க்கத்தை தண்டித்திருக்கிறார் ஏகாதிபத்திய தாசனான சந்திரபாபு நாயுடு.
இப்புதிய சட்டத்தின்படி, ஒருநாளைக்கு 12-14 மணிநேரத்தை ஒரு தொழிலாளி வேலைக்காக ஒதுக்கியாக வேண்டும். மீதமுள்ள 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்குள் தான் தூங்குவது, படிப்பது, குடும்பத்தைப் பராமரிப்பது, தன்னை பராமரிப்பது போன்றவற்றிற்கு செலவு செய்ய முடியும். இது சாத்தியமா? தினமும் 13 மணிநேரம் வேலைக்காகவே செலவு செய்தால் தன்னை எவ்வாறு பார்த்துக் கொள்வது? குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது என்கிறார் பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்யும் பார்வதி.
நாட்டின் வளர்ச்சிக்காக தொழிலாளர்கள் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் ஆந்திர மாநில மக்கள் தொடர்பு அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி. “இன்று நாம் உலகப் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டுள்ளோம், இதுபோன்ற சட்டங்கள் இல்லாமல் சீனாவோடு நாம் எப்படி போட்டியிட்டு வெல்லமுடியும்” என்று பாடமெடுக்கிறார். அந்நிய முதலீடுகளை ஈர்க்க இச்சட்டத்திருத்தங்கள் தேவை என்பதே இவர் சொல்லவரும் கருத்து.
இந்தியர்கள் ஒருநாளைக்கு 70 மணிநேரம் வேலை செய்தால்தான் இந்தியா வளர்ந்த நாடாகும் என்று கதையளந்தார் பெரும் பணக்காரரான இன்போசிஸ் நாராயண மூர்த்தி. இதை பெருமுதலாளிகளும், தலைமை நிர்வாக அதிகாரிகளும் ஆதரித்து பேசிவருகின்றனர். பெருமுதலாளிகள் உல்லாச வாழ்க்கை நடத்த கடைநிலை ஊழியர்கள் கல்லறைக்குப் போகும்வரை 70 மணிநேரம் உழைக்க வேண்டும் என்பதே இவர்கள் கூறும் வளர்ச்சிக்கான சூத்திரம்.
வேலைநேர உயர்வு தொழிலாளியின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறதா? இல்லை என்கிறது சமூக ஆய்வுகள். ஆனால் இதன் மூலம் முதலாளிகளின் இலாபம் பலமடங்கு அதிகரித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆந்திராவைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசாங்கமும் வேலைநேரத்தை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒன்பது மணிநேரமாக இருந்த வேலைநேரத்தை உயர்த்தி பத்து மணிநேரமாகவும் அதிகபட்சம் 12 நேரம் என்றும் நிர்ணயித்துள்ளது. கூடவே ஓவர்டைம் அளவை 55 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாகவும் உயர்த்தியுள்ளது.
இது கர்நாடகாவிலுள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடியதாகும். கடந்த வருடமே இச்சட்ட திருத்தத்தினை காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்தது. அப்போது இதையொட்டி பேசிய கர்நாடக தொழிலாளர் நல அமைச்சர் சந்தோஷ், ‘இது எங்களுடைய திட்டமல்ல, தொழிற்சாலை முதலாளிகள் வேலை நேரத்தை அதிகப்படுத்த நிர்பந்திக்கின்றனர் என்றார். தற்போது இச்சட்டத்திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் கடுமையான எதிப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளது.
கடந்த வருடம் திமுக அரசாங்கமும் இதேபோன்ற வேலை நேரத்தை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. அப்போது பேசிய அமைச்சர் தென்னரசு, தொழிற்சாலை முதலாளிகள் வேலை நேரத்தை அதிகரிக்க கோருவதாக நியாயம் கற்பித்தார். பிறகு கடுமையான எதிர்ப்பின் காரணமாக அச்சட்டத்திருத்தம் அமலுக்கு வரவில்லை.
ஆட்சியாளர்கள் முன்வைக்கும் வளார்ச்சிக்கான திட்டமென்ன? நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் பொருளாதாரம் வளர வேண்டும்; அதற்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்; அதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க அனுமதிக்க வேண்டும்; அதற்காக அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் சட்டங்களை திருத்த வேண்டும் (ease of doing business). இதுவே இவர்களது தொழில் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான அடிப்படை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2024-25 பொருளாதார ஆய்வறிக்கையில், தொழில் வளர்ச்சிக்காக செய்யவேண்டிய சீர்திருத்தத்தில் தொழிலாளர் நலச்சட்டங்களை தளர்த்துவது மிக அவசியம் என்றும் இச்சீர்திருத்தங்கள் செய்யாமல் இருப்பது தொழில் வளர்ச்சியைத் தடுக்கிறது என்றும் மாநில அரசுகள் இச்சீர்திருத்தத்தை உடனடியாக (Ease of Doing Business 2.0) முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது மோடி அரசு.
இதைச் சொல்லித்தான், பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைக்கு தகுந்தாற்போல 40 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி நான்கு சட்டங்களாக சுருக்கியது காவி கும்பல். அதைப் பின்பற்றி இப்போது ஒவ்வொரு மாநில அரசாங்கமும் வேலை நேரத்தை அதிகரித்து வருகின்றன.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன, வேலை நேரமும் அதிகரிக்கப்படுகிறது என்பது தான் பாஜக, காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் திமுக உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாடு.
தொழில்துறை சட்ட சீர்திருத்தங்கள் (அதில் தொழிலாளர் நலச் சட்டமும் அடக்கம்) முதலில் இராஜஸ்தான் மாநிலத்தில் (2014) அமல்படுத்தப்பட்டது. பத்து வருடங்களாகியும், அம்மாநிலத் தொழிற்துறையில் பெரியளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அங்கு, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நேரடித் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. தொழிற்துறைச் சட்டச் சீர்திருத்தங்களை அமல்படுத்திய தொழிற்சாலைகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 124% அதிகரித்துள்ளது, அதேவேளையில் நிரந்தரத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 19% குறைந்துள்ளது. அம்மாநில தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்காக (ஊதியம் உட்பட) செய்யும் செலவு ~14% குறைந்துள்ளது. [இது முதலாளியின் லாபத்தை அதிகப்படுத்தியிருக்கும்] ஆனால் அந்த நிறுவனங்களின் உற்பத்தி, முதலீடு மற்றும் உற்பத்தித்திறனில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லை. வேலை நிரந்தரம் என்பது தற்போது தற்காலிக மற்றும் ஒப்பந்த வேலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இராஜஸ்தானில், வளர்ச்சிக்காக என்று நியாயப்படுத்தப்பட்ட தொழிற்துறைச் சீர்திருத்தங்கள் உண்மையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவதையும் தீவிர தனியார்மயத்தையுமே எதார்த்தமாக்கியுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அமலுக்கு வரப்போகும் இச்சீர்திருத்தங்கள், இராஜஸ்தானைப் போலவே, தொழிலாளி வர்க்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஓட்டுக்கட்சிகள், வேலைநேர உயர்வு தங்களுக்கு விருப்பமில்லாதது போலவும் வேலைவாய்ப்பை உருவாக்கவே இதைச் செய்வதாகவும் பகல் வேஷம் போடுகின்றனர். தொழிலாளர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், முறையான ஊதியமும் சமூக பாதுகாப்பும் இந்தியாவில் தொழில் தொடங்கும் ஒவ்வொரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை ஏன் இன்னும் சட்டமாக்கவில்லை? இதற்காக பன்னாட்டு நிறுவனங்களிடமும் ஏன் இவர்களால் போராட முடியவில்லை?
இந்த நாடாளுமன்ற ஓட்டு கட்சி கும்பலின் அடிப்படையே தரகு முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் தாசனாக இருப்பதுதான். இக்கட்சிகள் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்கள் போடும் எலும்புத் துண்டினால் வளர்க்கப்படுபவை. காங்கிரஸ், பாஜக, திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் முதலாளிகளிடமிருந்து பெற்ற பலநூறு கோடிக்கணக்கான நன்கொடையே இதற்கு சாட்சி.
கிஞ்சித்தும் இரக்கமற்ற முறையில் கடந்த பத்து வருடகாலமாக காவி பாசிச கும்பல் தீவிரமாக அமல்படுத்திவரும் தொழிலாளர் நலச்சட்டத்திருத்தங்கள் போன்ற தீவிர மறுகாலனியாக்கச் சீர்திருத்தங்களால் தொழிலாளி வர்க்கம் மேலும் மேலும் ஒட்டச் சுரண்டப்பட்டு வருகிறது. இச்சீர்திருத்தங்களினால் தொழிலாளர்களின் உண்மை ஊதியம் உயரவில்லை, போதிய வேலைவாய்ப்பினை உருவாக்கவில்லை, தொழிலாளி பிரிவினரின் குடும்பச் சேமிப்பு அதிகரிக்கவில்லை, அவர்களின் வாழ்நிலை உயரவில்லை. மாறாக நூற்றுக்கணக்கான புதிய பில்லியனர்கள் ஒவ்வொரு ஆண்டும் உருவாகுகின்றனர், தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது, நிதிமூலதனத்தின் இலாபம் பெருமளவு அதிகரித்துள்ளது. மொத்தத்தில் தொழிற்சாலை சட்ட சீர்திருத்தம்/தொழிலாளர் நல சட்டச் சிர்திருத்தம் என்பது தொழிலாளர்களை மேலும் ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் மூலம் முதலாளிகளின் இலாபத்தை மேலும் அதிகரிக்க செய்வதற்குமான சட்ட ரீதியான ஒப்புதலாகும்.
- செல்வம்
https://janataweekly.org/labour-protections-under-attack-in-andhra-and-karnataka-2-articles/
https://thesouthfirst.com/karnataka/who-wants-the-14-hour-workday-in-karnataka/
https://thesouthfirst.com/news/labour-laws-a-barrier-to-indias-development-says-economic-survey/
கோடி அரசு என உள்ளது திருத்தவும்.