பஹல்காம் தாக்குதல் : நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் தள்ளியுள்ள காவி பாசிசக் கும்பலை வீழ்த்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. அந்த கோரத் தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் காவு கொண்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது “ஆபரேசன் சிந்தூர்” தாக்குதலை நிகழ்த்தி கொல்லப்பட்டவர்களுக்கான “நீதியை நிலைநாட்டிவிட்டதாக” மோடி அரசு மார்தட்டுகிறது. உள்நாட்டிலோ நாடெங்கும் காஷ்மீரிகள், இசுலாமியர் மீது கொடிய வெறுப்புப் பிரச்சாரங்களும் தாக்குதல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ‘தீவிரவாத்ததிற்கு ஆதரவளித்தனர்’ என்ற குற்றச்சாட்டில் 2,000 காஷ்மீரி-இசுலாமியரைச் சிறையிலடைத்துள்ளது; வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கி வருகிறது. பாசிசத்தை ஒழிக்கப் போவதாகக் கிளம்பிய “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் இதைக் கூடக் கண்டிக்கத் துப்பில்லாமல் “அரசுக்கு எல்லா விதத்திலும் துணை நிற்பதாக” தேசவெறி, போர்வெறிக் கூச்சலில்  ஒன்றுகலந்துவிட்டனர்.

மோடி அரசை விமர்சிப்பவர்களும் உளவுத்துறையின் தோல்வி; பாதுகாப்புக் குறைபாடு; உள்துறை அமைச்சர் அமித்ஷா இராஜினாமா செய்ய வேண்டும் – என்று கூறுகின்றனர். மாறாக, இத்தகைய தாக்குதல்களின் அடிப்படை குறித்து யாரும் பேசவில்லை. ஊடகங்களும் இந்துமதவெறியர்களும் சித்தரிப்பதுபோல பஹல்காம் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தனியான திடீர் நிகழ்வுகளல்ல. நாடுமுழுவதும் இசுலாமியர் மீது நிகழ்த்தப்படும் இந்து மதவெறியாட்டத்தின் எதிர்விளைவுகளே! ஆம்! ஆர்,எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான காவி பாசிச பயங்கரவாதம்தான் இந்தியாவில் இசுலாமிய பயங்கரவாதம் வளர்வதற்கான அடிப்படையாகும்.

கடந்த பத்தாண்டுகால மோடி ஆட்சியிலும் அதற்கு முன்னதாகவும் ஒருபாவமுமறியாத அப்பாவி இசுலாமியர்கள் மீது நாடு முழுவதும் இந்து மதவெறியர்கள் நடத்திவரும் பாசிச பயங்கரத்தை நினைத்துப் பாருங்கள்! 1992-இல் பாபர் மசூதியை இடித்து நாடெங்கும் கலவரத்தை நடத்தினர். குஜராத்தில்  2,000 இசுலாமியரைக் கொன்று குவித்து, கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்து தீயில் எரித்துக் கொன்று வெறியாட்டம் போட்டனர். மாட்டுக்கறி வைத்திருந்தாலோ மாடுகளை ஏற்றிச் சென்றாலோ பட்டப்பகலில் பசுக் குண்டர்கள் அடித்தே கொல்கின்றனர். லவ்ஜிகாத் என்ற பெயரிலும், ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லியும் தாக்குவது, அடித்துக் கொல்வது சகஜமாக நடக்கிறது.  கொலைகாரர்கள் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றித் திரிய கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொய்வழக்கில் பிணையின்றி சிறையில் வாடுகின்றனர். இசுலாமியர் என்பதற்காகவே அவர்களின் வாழ்நாள் சேமிப்பான வீடுகள் எந்தக் கேள்வியுமின்றி இடித்துத் தரைமட்டமாக்கப்படுகிறது. இந்துப் பண்டிகையோ, இசுலாமியப் பண்டிகையோ எல்லா நாட்களிலும் மசூதிக்குள்ளும் குடியிருப்புக்குள்ளும் புகுந்து வெறியாட்டம் போடுகின்றனர். இவற்றையெல்லாம் வீரதீரச் செயல்போல வீடியோ எடுத்து நாடெங்கும் பரப்புகின்றனர். மொத்தத்தில் அன்றாட வாழ்க்கையைக் கூட நிம்மதியாக வாழ முடியாத நிலையில், சொந்த நாட்டிலேயே அகதிகளை விடக் கேவலமாக இசுலாமியர்கள் நடத்தப்படுகின்றனர்.

போலிசு, இராணுவம் என நாட்டின் அரசு உறுப்புகள் அனைத்தும் இந்துமதவெறியர்கள் நிகழ்த்தும் இந்த வெறியாட்டங்கள் அனைத்திற்கும் பக்கபலமாக நிற்கின்றன. இசுலாமிய பயங்கரவாதத்தைப் பற்றி ஓயாமல் கூச்சலிடும் ஊடகங்களும் ஓட்டுக்  கட்சிகளும் அதைவிடப் பலமடங்கு கொடியவையான இந்து மதவெறி பாசிஸ்டுகளின் பயங்கரவாதத்தை ஒரு செய்திபோலக் கடந்து செல்கின்றனர்.

பாசிஸ்டுகளின் பக்கம் நிற்கும் நீதிமன்றங்களிலோ சட்டத்தின் முன்போ எவ்வித நியாயத்தையும் பெற முடியாத கையறு நிலையில், அரசு உறுப்புகள், ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைத்தின் மீதும் நம்பிக்கையிழந்து தன்மீது அடுத்த தாக்குதல் எங்கிருந்து எப்போது எந்த வடிவில் வருமோ என்ற திகிலுடனே ஆகப் பெரும்பாலான இசுலாமியர்கள் நம் நாட்டில் வாழ்கின்றனர். இவர்கள் செய்த பாவமென்ன, குற்றமென்ன?! இசுலாமியராகப் பிறந்ததுதான்! இவையெல்லாம் மிகையல்ல! நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

பெரும்பான்மை இந்துக்கள் இத்தாக்குதலில் ஈடுபடவில்லை என்றாலும் அவர்கள் பெயரால் நடக்கும் இத்தாக்குதல்களை அவர்கள் தடுப்பதோ எதிர்ப்பதோ இல்லை. பஹல்காமில் தான் சாகக்கூடும் என்பதறிந்தும் தீவிரவாதிகளிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்க முயற்சித்த அப்பாவி இசுலாமியர் சையது அடில் உசேன்-ஷா தன் இன்னுயிரை மாய்த்துள்ளார். இதை வரவேற்கும் அனைவரும் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! இந்துவெறி பாசிஸ்டுகள் நிகழ்த்தும் தாக்குதல்களில் எத்தனை இந்துக்கள் இசுலாமியர்களைக் காக்க முற்பட்டுள்ளனர்?!

இரக்கமற்ற இந்தச் சமூகத்தின் மீதும் அரசமைப்பின் மீதும் ஆத்திரமுற்ற இசுலாமியர்கள் கையறுநிலையில் அஞ்சி நடுநடுங்கிப் போயுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், இந்த வினைக்கு எதிர்வினையாக ஒரு சிறுபிரிவினர் எதிர் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். ஆகப்பெரும்பாலான இசுலாமியர்கள் பயங்கரவாதத்தை எதிர்த்தாலும், அது தமக்கு கேடுதான் விளைவிக்கும் என்பதை அறிந்திருந்தாலும் இந்துமதவெறி பாசிசத் தாக்குதல்கள் சிறுபிரிவினரை பயங்கரவாதச் செயல்களை நோக்கித் தள்ளுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆம்! 1992 பாபர் மசூதி இடிப்பு, அதைத் தொடர்ந்த இந்து மதவெறியர்களின் கலவரங்கள், மும்பையில் இசுலாமியர் மீது சிவசேனாவின் கொலைவெறித் தாக்குதல்கள் ஆகியவற்றின் எதிர்விளைவுதான் 1993 மும்பை குண்டு வெடிப்பு. 1997-இல் கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினர் இசுலாமியர் மீது நடத்திய தாக்குதல்களின் எதிர்விளைவே 1999 கோவை குண்டு வெடிப்பு. 2002 குஜராத் இனப்படுகொலையின் எதிர் விளைவுகளே 2003 மும்பை இரட்டை குண்டுவெடிப்பும் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களும் ஆகும்.

நினைவில் கொள்ளுங்கள்! பாசிஸ்டுகளுக்கும் தமக்கும் சம்பந்தமில்லை; தாம் உண்டு தம் வேலையுண்டு என்று வாழ்ந்த அப்பாவி “இந்துக்கள்”தான் இவையனைத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலிலும் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் மதத்தைக் கேட்டு, வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த அப்பாவி ‘இந்துக்களைக்’ குறிவைத்தே சுட்டுக் கொன்றுள்ளனர். 2024-இல் காஷ்மீரில் 9 பேர் கொல்லப்பட்ட பயங்கரத் தாக்குதலிலும் இந்து பக்தர்கள் வந்த பேருந்தைக் குறிவைத்தே தாக்கியுள்ளனர்.

எனவே, எந்த இந்துக்களைத் தாம் காப்பற்றுவதாக இந்து மதவெறியர்கள் மார்தட்டிக் கொள்கிறார்களோ அவர்கள்தான் பஹல்காமில் ‘இந்துக்கள்’ கொல்லப்பட்தற்கு முழுமுதற் காரணமானவர்கள். பஹல்காம் மட்டுமல்ல, நாட்டில் எங்கு வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் அப்பாவி ‘இந்துக்களை’ குறிவைத்து பயங்கரவாதத் தாக்குதல் நிகழலாம் என்ற அபாயமான சூழலை உருவாக்கியுள்ளவர்களும் அவர்களே. ஆம்! சாக்கடையை ஒழிக்காமல் கொசுவை ஒழிக்க முடியாது! இந்துமதவெறி பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியாமல் இசுலாமிய பயங்கரவாதத்தை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியாது!

இந்துமதவெறியர்கள் நாட்டையே பயங்கரவாதப் பேரபாயத்துக்குள் இன்று தள்ளிவிட்டுள்ளனர். தான் உண்டு தன் வேலையுண்டு; இதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று கருதி ஒதுங்கி வாழும் நிலை இனி இல்லை. நம்முன்னால் இருவழிகள்தான் உள்ளன. அடுத்த பயங்கரவாதத்  தாக்குதல் எங்கு எப்போது நடக்கும் என்ற திகிலுடன் வாழ்வது அல்லது அதன் ஆணிவேரான இந்து மதவெறி பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிவது. நம்மைக் காத்துக் கொள்ள மூன்றாவதாக ஒருவழி இல்லவே இல்லை!

  • இந்தியாவில் இசுலாமிய பயங்கரவாதம் வளரக் காரணம் காவி பாசிச பயங்கரவாதமே!
  • மதவெறி, தேசவெறி அமைப்புகளைப் புறக்கணிப்போம்! ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளின் கீழ் அணிதிரள்வோம்!
  • உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்! காவி பாசிசக் கும்பலுக்குக் கல்லறை எழுப்புவோம்!
  • அரசில் இருந்து மதத்தைப் பிரிக்கிற உண்மையான மதச்சார்பற்ற புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!

புரட்சிகர மக்கள் அதிகாரம் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன