ஆப்பரேசன் காகர்: பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் உள்நாட்டு போர்!

மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழிப்பது என்ற மோடி – அமித்ஷா கும்பலின் அரசியல் நோக்கம் மட்டுமே இந்த உள்நாட்டுப் போரின் வேகத்தைத் தீர்மானிக்கவில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்டகாரண்யாவை ஒட்டச் சுரண்டி, அதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான திட்டங்களுக்காகவே இந்திய அரசு பழங்குடி மக்களை நாலு கால் பாய்ச்சலில் துரத்துகிறது. இதற்காக அரசுப்படைகள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்படுகின்றன. இராணுவமயமாக்கல் மேன்மேலும் தீவிரமாக்கப்படுகின்றன.

ஆப்பரேசன் காகர் என்ற பெயரில் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்திய அரசு ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்திருக்கிறது. சத்தீஸ்கரின் தண்டகாரண்யா காடுகளிலிருந்து மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழித்துக் கட்டுவதே இந்திய அரசின் நோக்கம் என்று தான் போகும் இடங்களிலெல்லாம் அறிவித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப்படைகள் மாவோயிஸ்ட்டுகளுக்கும், சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்கும் எதிராகக் களத்தில் நிற்கின்றன. சத்தீஸ்கரில் துணை இராணுவப்படையினர் அமைக்கும் முகாம்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.  அவ்வனப்பகுதியில் ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக 15 முகாம்கள் அமைக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அரசுப்படைகள் 30 முகாம்களை அமைத்திருக்கின்றன. பஸ்தரில் மட்டும் 182 அரசுப்படை முகாம்கள் உள்ளன. நக்சல் பாதிப்பு மீட்டெடுப்பு கிராமங்கள் என்று அரசால் அறிவித்திருக்கும் பகுதிகளிலோ 612 போலீசு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சத்தீஸ்கரில் முகாமிட்டிருக்கும் இந்திய துணை இராணுவப் படைகள் நேத்ரா 3, பாரத் போன்ற அதிநவீன ட்ரோன்கள் மூலம் சொந்த நாட்டு மக்களையே கண்காணிக்கின்றன.  இப்படைகள் தாக்குதல் தொடுப்பதற்கு முன்பு இந்த அதிநவீன ட்ரோன்களைப் பறக்கவிடுகின்றனர். காசாவில் நடந்தேறிய  இனப்படுகொலையின் போது பயன்படுத்தப்பட்ட இஸ்ரேல் தயாரிப்பான ஹெரான் என்ற ஆளில்லா வான்வழி வாகனங்கள் பஸ்தரில் வசிக்கும் பழங்குடிகளின் தலைக்கு மேலே 35,000 அடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் அவ்வனப்பகுதியில் நடைபெறும் அலைபேசி, வயர்லெஸ் உரையாடல்களைப் பதிவு செய்து  துணை இராணுவப்படைகளுக்கு அனுப்பி வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. 2023 ஆம் ஆண்டு (23); 2024 ஆம் ஆண்டு (235); 2025 ஆம் ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 140 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய அரசுப்படைகளின் இந்தப் படுகொலைகள் பரிசுத்தொகையோடு தொடர்புடையதாக இருக்கிறது. கொல்லப்படும் ஒவ்வொரு மனித உயிர்க்கும் பரிசுத்தொகையாக ரூ 25 இலட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

அரசுப்படைகளின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களையும் வெளிக் கொண்டு வரும் செயற்பாட்டாளர்களை மாவோயிஸ்ட்டுகள் என முத்திரைக் குத்துவதற்கு பல ஆள்தூக்கி சட்டங்கள் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி அதிநவீன ஆயுதங்கள், ட்ரோன்கள் ஆயிரக்கணக்கான போலீசு மற்றும் துணை இராணுவப் படைகள் போன்ற இராணுவமயமாக்கல்  மூலம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, பூர்விக பழங்குடியினருக்கு எதிராக இறுதிப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் போர் வெறிக்குள் புதைந்திருக்கும் இரகசியம் இதுதான், தண்டகாரண்யாவின் காடுகளிலும் மலைகளிலும் அரிய கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. சத்தீஸ்கரின் வருடாந்திர கனிம உற்பத்தியின் மதிப்பு சுமார் ரூ.30,000 கோடியாகும். நாட்டின் இரும்பு மற்றும் தகர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கும்; எஃகு மற்றும் சிமெண்ட் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கும்; நிலக்கரி இருப்புகளில் ஐந்தில் ஒரு பங்கும்; நாட்டின் மொத்தக் கனிம வருவாயில் 15 விழுக்காடும் கொண்ட கனிம வளம் மிக்க மாநிலமாக சத்தீஸ்கர் இருக்கிறது.

எதிர்கால தொழில்நுட்பமாக வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்ப மின்னனுவியல், பாதுகாப்பு சாதனங்கள், தொலைத்தொடர்பு போன்ற துறைகளின் மூலப்பொருட்களான  லித்தியம், கோபால்ட், கிராபைட், டைட்டானியம் போன்ற கனிமங்கள் சத்தீஸ்கரில் நிறைந்து கிடக்கின்றன. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கரின் கனிம வருவாய் 30 மடங்கு அதிகரித்திருப்பதாக அம்மாநில முதல்வர் விஷ்னு தியோசாய் கூறுகிறார். கடந்த 2023-24 ஆம் ஆண்டு மட்டும் கனிம வருவாயில் ரூ.13,000 கோடியை வருவாயாகப் பெற்றிருக்கிறது.

தண்டகாரண்யாவின் காட்டு வளமும் கனிம வளமும் செறிந்த அந்தப் பிராந்தியம்  முழுவதிலிருந்தும் பழங்குடி மக்களை விரட்டி விட்டு அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் வகையிலான ஒப்பந்தங்களை ஒன்றிய, மாநில அரசுகள்  போட்டிருக்கின்றன. கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டில் சத்தீஸ்கரின் கட்கோரா பகுதியில் லித்தியத்தை எடுப்பதற்கான ஏலத்தை தெற்கு மைக்கின் எனும் சுரங்க நிறுவனத்திற்கு அம்மாநில அரசு வழங்கியது. ஆனால் பன்னாட்டு கம்பெனிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் இஷ்டம் போல இந்தப் புதையலை அள்ளிச் செல்ல முடியாமல் மாவோயிஸ்ட்டுகளும் பழங்குடி மக்களும் அரண் போல் நிற்கிறார்கள்.

காங்கிரசு  அரசு ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்த போது அப்போதைய சத்தீஸ்கர் காங்கிரசு அரசும், சல்வார் ஜூடும் என்ற கூலிப்படையும் இணைந்து நடத்திய ஆப்பரேசன் காட்டு வேட்டை; அதன் பின்னர் சமதான் – பிஹார் போன்றவைகள் அப்பூர்விக குடிகளை அம்மண்ணில் இருந்து விரட்டுவதற்காக நடத்தப்பட்டன.  இந்திய அரசு இதுகாறும் தொடுத்த பல்வேறு தாக்குதலுக்குப் பிறகும் சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களைச் சார்ந்த பூர்விக பழங்குடியினர் உறுதியாக நின்று களத்தில் போராடி வருகிறார்கள்.

சத்தீஸ்கரின் இரும்புத்தாதுக்கான அதானி தண்டவேடா திட்டங்கள், ஒடிசாவின் இராயகடாவிலுள்ள பிர்லாவின் பாக்சைட் சுரங்கம், எல்&டி-யின் உத்சல் அலுமினா, ஒடிசா நியாம்கிரியில் உள்ள பாக்சைட் சுரங்கம், ஜாஜ்பூரில் உள்ள இரும்புத் தாது சுரங்கம் என இப்பகுதியில் அமைய இருக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கு எதிராகவும் பழங்குடி மக்கள் ஆங்காங்கே போராடி வருகிறார்கள்.  தங்கள் சொந்த நிலங்களை விட்டு வெளியேற மறுக்கிறார்கள். பகாசுர கம்பெனிகளை ஓட ஓட விரட்டுகிறார்கள்.

மோடி கும்பல் ஆட்சியில் அமர்ந்த பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களின் திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இந்தியாவின் லடாக் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை தங்களது மண்ணைப் பறித்துவரும் கார்ப்பரேட் சுரண்டலுக்கு  எதிராக நாடு முழுவதும் மக்கள் கிளர்தெழுந்து வருகிறார்கள்.

சத்தீஸ்கரின் வனப்பகுதியில் உள்ள பழங்குடி மக்கள், பகாசுரக் கம்பெனிகளின் சுரண்டலுக்கு  எதிராக  நீண்ட காலமாகப் போராடி வருவதால்  இப்பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவைகளால் கால் ஊன்ற முடியவில்லை; கார்ப்பரேட் சுரண்டலுக்கு எதிரான  மக்களின் போராட்டத்தின் கூர்முனையாக இருக்கும் நக்சல்பாரி இயக்கத்தைக் குறிவைத்து அழிப்பதன் மூலம் தான் கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை ஆளும் வர்க்கம் அறிந்தே இருக்கின்றன. இதன் விளைவு தான் இந்த ஆப்பரேசன் காகர். இது ஆளும் வர்க்கத்தின் வழமையான ஒடுக்குமுறை அல்ல. 

இந்திய அரசின் ஆப்பரேசன் காகர் என்ற உள்நாட்டுப் போர் மாவோயிஸ்ட்டுகளையும், பழங்குடிகளையும் அடியோடு ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசு ஆட்சியில் தொடுக்கபட்ட ஆப்பரேசன் காட்டு வேட்டை சுமார் 50,000 பழங்குடி மக்களை பஸ்தரிலிருந்து வாராங்கலுக்கு விரட்டியது என்றால் மோடி-அமித்ஷா கும்பலின் ஆப்பரேசன் காகர், பழங்குடி மக்களை ஒட்டுமொத்தமாக ஒடுக்கிவிட்டு அப்பகுதியில் கார்ப்பரேட் சுரண்டலை தீவிரமாக அமல்படுத்தப்படுவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கிறது.

ஆப்பரேசன் காகர் மூலம் மாவோயிஸ்ட்டுகளை மட்டுமின்றி பஸ்தர் பகுதியில் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் திட்டத்திற்கு  எதிராக யார் போராடினாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். இதற்கு துலக்கமான உதாரணம் மூலவாசி பஞ்ச்சாவ் மஞ்ச் எனும் ஜனநாயக வழியில் போராடும் பழங்குடி மக்களின்  அமைப்பை சத்தீஸ்கர் மாநில அரசு தடைசெய்திருக்கிறது. மேலும், அதன் நிறுவனர்களை மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி என்.ஐ.ஏ-வில் கைது செய்திருக்கிறது.

கடந்த மே 2021 ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் படை போலீசார் தெற்கு சத்தீஸ்கரின் சில்கர் வனப்பகுதியில் முகாம் அமைப்பதற்காக சுமார் 10 ஏக்கர் விவசாய நிலத்தை ஆக்ரமித்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமார் 20,000 பழங்குடியினர் போராடினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ரிசர்வ் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பழங்குடியினரும், ஒரு கர்ப்பினி பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் சடலத்தை எடுக்காமல் அப்பகுதி பழங்குடியினர் போராடினர். இப்போராட்டத்திற்கு அங்குள்ள 20 வயது நிரம்பிய பழங்குடி இளைஞர்களே தலைமை தாங்கினர். அப்போராட்டத்தின் போது உருவாக்கப்பட்டது தான் மூலவாசி பஞ்ச்சாவ் மஞ்ச் எனும் பழங்குடி மக்களின் பாதுகாப்பு மன்றம் என்ற அமைப்பு. இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து பழங்குடியினர் வாழும் ஐந்தாவது அட்டவணைப் பகுதியில் துணை இராணுவப்படைகள் அமைக்கும் முகாம்களை எதிர்த்தும், வான்வழித் தாக்குதல்கள், போலி என்கவுண்டர் கொலைகள், பழங்குடியினரின் கைதுகள் போன்றவற்றிற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடி வந்தது.

அப்பகுதியின் கிராம சபை அனுமதியின்றி  அரசுப் படைகளின் புதிய முகாம்கள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில்கர், நம்பி தாரா, முகரம், கோர்னா மற்றும் பல இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலவரையற்ற தர்ணாக்களை நடத்தி வந்தது. கடந்த ஆண்டு அக்டோபரில் சத்தீஸ்கர் மாநில அரசு இவ்வமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது. இதற்கு அரசு தரப்பில் கூறப்பட்ட காரணம் மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளையும் முன்முயற்சிகளையும் இவ்வமைப்பு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும்; அரசுப்படைகள் தங்களுக்கான முகாம்கள் நிறுவுவதை எதிர்ப்பதன் மூலம் இவ்வமைப்பு அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதாகவும், பொதுமக்களை அரசுக்கு எதிராக தூண்டுவதாகவும் கூறி தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.

ஐந்தாவது அட்டவணைப்பகுதியில் வாழும் பழங்குடியினர் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும், மக்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராடுவது என்ற அடிப்படையில் ஜனநாயகப் பூர்வமாக போராடுவதற்கு ஏற்படுத்திய அமைப்பை தடை செய்ததோடு மட்டுமல்லாமல் இதன் நிறுவனர்களான சுனிதா பொட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிஜப்பூர் போலீசாராலும், இந்த ஆண்டு பிப்ரவரியில் இவ்வமைப்பின் மற்றொரு நிறுவனரான ரகு மிடியாமியை மாவோயிஸ்ட்டு அமைப்போடு தொடர்பில் இருப்பதாக கூறி  என்.ஐ.ஏ-விலும் கைது செய்தது.

இந்திய அரசியலைப்பு சட்டம் வழங்கியிருக்கும் பேச்சு சுதந்திரத்தையும், ஜனநாயக உரிமைகளையும் கொண்டு மக்கள் ஒன்றாகக்கூடி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் எதுவும் சத்தீஸ்கர் பழங்குடி மக்களுக்குக் கிடையாது. அரசியலமைப்பு பழங்குடி மக்களுக்கு வழங்கும் உரிமையான ஐந்தாவது அட்டவணை பிரிவு உரிமை என்பது வெற்று காகிதத்தில் தான் இருக்கின்றன. அரசின் கார்ப்பரேட் கொள்ளைக்காக நடத்தப்படும் இப்போரை வாய்மூடி அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் எந்த பழங்குடி மக்களும் மாவோயிஸ்ட்டுகள் தான் என்கிறது இந்திய அரசு!

இந்தியாவில் இயற்கை வளங்கள் நிறைந்த இடங்களில் இடது தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால் அது கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீட்டை பாதிக்கும் என்று கூறிக் கொண்டு  மாவோயிஸ்ட்டுகளை மட்டுமின்றி, அப்பகுதி பூர்வீக குடிமக்களையும் மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தி பயங்கரமாக ஒடுக்கி வருகிறது ஒன்றிய அரசு.  கார்ப்பரேட் நிறுவங்களின் சுரண்டலுக்கு எதிராக பழங்குடி மக்கள் போராடினால் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். எனவே ஆப்பரேசன் காகர் என்பது மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் உள்நாட்டுப் போராகும்.

மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 க்குள் ஒழிப்பது  என்ற மோடி – அமித்ஷா கும்பலின் அரசியல் நோக்கம் மட்டுமே இந்த உள்நாட்டுப் போரின் வேகத்தைத்  தீர்மானிக்கவில்லை.  மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தண்டகாரண்யாவை ஒட்டச் சுரண்டி, அதன் மூலம் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்கான திட்டங்களுக்காகவே இந்திய அரசு பழங்குடி மக்களை நாலு கால் பாய்ச்சலில் துரத்துகிறது. இதற்காக அரசுப்படைகள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிக்கப்படுகின்றன. இராணுவமயமாக்கல் மேன்மேலும்  தீவிரமாக்கப்படுகின்றன. மாவோயிஸ்ட்டுகள் அமைப்பு மற்றும் பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும்  பழங்குடி மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் ஒன்றிய அரசு செவிசாய்ப்பதாக இல்லை.

கார்ப்பரேட் பாசிசம் சத்தீஸ்கரில் தீவிரமடைந்து வருகிறது.  இதனைக் கண்டும் காணாமல் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் வாய்மூடி மெளனமாக ஓரணியில் நிற்கிறார்கள்.  பழங்குடி மக்களின் உரிமைகளும், இயற்கை வளங்களும் அவர்களுக்கு முக்கியமல்ல. கார்ப்பரேட் கொள்ளையின் ஆதாயங்களைப் பங்குபோட்டு கொள்வதில்  மட்டுமே தமக்குள் மோதிக் கொள்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக நடைபெறும் ஆப்பரேசன் காகர் எனும் உள்நாட்டுப் போரை அப்பகுதி மக்கள் மட்டுமே போராடி முறியடிக்க முடியாது. மாறாக அரசும் கார்ப்பரேட்டுகளும் கூட்டுசேர்ந்து கொண்டு போராடும் மக்களை ஒடுக்குகிறார்களோ அதே வழியில் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், ஜனநாயக சக்திகள், முற்போக்காளர்கள் எனத் தனித்தனியாகப் போராடாமல் அனைவரும் ஒன்றிணைத்து போராடுவதன் மூலம் முறியடிக்க முடியும்.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன