கேஸ் சிலிண்டர் விலையேற்றத்தை முறியடிப்போம்! உழைக்கும் வர்க்கமாய் களமிறங்குவோம்!

கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 50-ம், பெட்ரோல் – டீசல் மீதான கலால் வரி ரூபாய் 2-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவு ஏழை – எளிய நடுத்தர மக்கள் இதுவரை ரூபாய் 818.50 க்கு வாங்கிய சிலிண்டரை, இனிமேல் ரூபாய் 868.50 – க்கு வாங்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி விட்டது பாசிச மோடி அரசு. உயர்த்தப்பட்ட கலால் வரிக் கேற்ப பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, அதையும் மக்கள் தலையில் இடியாய் இறக்கி விடுவார்கள் என்பதை விரைவில் எதிர் நோக்குவோம்.

இந்த விலையேற்றம் எண்ணெய் உற்பத்தியாளர்1களான கார்ப்பரேட்டுகளின் கல்லாவை நிரப்புவது ஒரு புறமிருக்க, இது குறித்து எண்ணெய் நிறுவனங்களின் விளக்கம் என்னவெனில், ஏற்கனவே ஒரு சிலிண்டரை அதன் அடக்க விலைக்கே தருவதால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூபாய் 43,000 கோடி நட்டம் ஏற்படுவதால், அவற்றை ஈடு செய்யவே இந்த விலையேற்றம் என்கிறது.

ஏப்ரல் 1, 2025 முதல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் 32.94 கோடி பேர் உள்ளனர் என்கிறது அரசு புள்ளி விவரம். அதாவது, 33 கோடி பேர் என்று வைத்துக் கொண்டால் கூட இந்த விலையேற்றத்தின் மூலம் 16.50 கோடி மட்டுமே ஈட்ட முடியும், மீதியை எப்படி ஈடு கட்டுவார்கள் என்பதற்கான எந்த விளக்கமும் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து வரவில்லை. அந்த வகையில், இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பது கார்ப்பரேட்டுகளுக்கே வெளிச்சம்.

இன்னொரு புறம், ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி  சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கத்தைப் பொருத்தே விலை தீர்மானிக்கப்படுவதாகக் கூறுகிறார். அமைச்சர் வாதப்படியே வைத்துக் கொண்டால் கூட சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இறங்கும் போது விலை குறைக்கப்படுவதில்லையே ஏன்? தற்போது கூட சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் உள்ளது என்கிற போது ஏன் இந்த விலையேற்றம்! இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினால், அண்டை நாடுகளில் அதிக விலைக்கு விற்பதாகக் கூறி பிரச்சனையைத் திசை திருப்புகிறார்.

கேஸ் சிலிண்டர் விலை குறித்து திருவாய் மலரும் காவிகளோ, அதன் அடிவருடிகளோ மோடி அரசின் விலையேற்றம் குறித்து அடக்கி வாசிக்கின்றனர். மாறாக, திராவிட அரசு ஏன் தேர்தல் வாக்குறுதிப்படி கேஸ் சிலிண்டருக்கான மானியம் ரூபாய் 100-ஐ இதுவரை தரவில்லையே என்று மடை மாற்றுகின்றனர். அதேபோல், திராவிட அரசும், அதன் எடுபிடிகளும் ஒன்றிய அரசின் விலையேற்றத்தைக் கண்டிக்கும் அதே வேளையில் தாங்கள் அறிவித்த மானியத்திற்கு மட்டும் வாய்மூடி மௌனிகளாகி விடுகின்றனர்.

அடுத்தவனின் தவறை கண்டிக்கும் போது எகிறி அடிப்பதும் தமக்கென்று வரும் போது அடக்கி வாசிப்பதும் அருவருப்பான செயல். அவர்கள் எவராக இருந்தாலும், மக்களுக்கு தலைமை தாங்கவோ, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவோ தகுதியற்றவர்கள்.

ஓட்டுக் கட்சிகள் தாங்கள் ஆளும் போது மக்களை அடக்கி ஒடுக்குவதையும், சுரண்டுவதையும், வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்களை நசுக்குவதையும் நியாயப்படுத்துவதும், அதுவே எதிர்க்கட்சியாக இருக்கும் போது இவற்றையெல்லாம் கண்டிப்பதாக வேடம் போட்டு, தேவைக்கேற்ப நடிக்கவும் செய்யும். இந்த வகையில் அனைத்து ஓட்டு பொறுக்கிகளும் மக்களுக்கு தலைமை தாங்கவோ, அவர்கள் மீது அதிகாரம் செலுத்தவோ தகுதியற்றவர்கள், இலாயக்கற்றவர்கள்.

மேலும், ஆளும் வர்க்கமான கார்ப்பரேட்டுகள் தங்கள் சுரண்டலை –  கொள்ளையை மூடி மறைக்கவே, திரை போட்டு மறைக்கவே, அதற்கான சட்டங்களை உருவாக்கவே நாடாளுமன்ற, சட்டமன்றங்களை உருவாக்கியுள்ளனர். அதற்கேற்ப தேர்தலை வடிவமைத்து அதில் பங்கேற்கும் மக்கள்  பிரதிநிதிகளான MLA, MP -க்களையும் தங்களுடைய கைக்கூலிகளாக உருமாற்றி விடுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் திரிந்து வரும் ஆளும் வர்க்கக் கைக்கூலிகளான MLA, MP-க்களை இனியும் நம்புவது முட்டாள்தனம். இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டுவோம்! புறக்கணிப்போம்!

மாறாக, அன்றாடம் விலையேற்றத்தால், கார்ப்பரேட்டுகளின் சுரண்டலால் மிதிபட்டு வரும், நசுக்கப்பட்டு வரும் உழைக்கும் வர்க்கங்களான தொழிலாளர்கள், விவசாயிகள் இதர அனைத்து உழைப்பாளர்களையும் ஒரே அணியில் திரட்டுவோம். நமக்கான ஜனநாயக உரிமைகளை –  வாழ்வுரிமைகளை மீட்டெடுக்க இன்றே குடும்பம் குடும்பமாக களமிறங்குவோம்! வீதிகள் அனைத்தையும் போராட்டக் களமாக்குவோம்!

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன