கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 19 மார்ச் 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். கடுமையான மின் கட்டண உயர்வு, 2022 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கூலியை உயர்த்தாமல் இருப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர்.
ஜவுளி நிறுவனங்கள் கொடுக்கும் நூலை, துணியாக நெய்து கொடுத்து, அதற்கான கூலியைப் பெற்று வந்தனர் விசைத்தறி உரிமையாளர்கள். குறைந்த கூலி, வருடத்திற்கு 6% மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக விசைத்தறி தொழிலை நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி தொழில் தான் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 5 இலட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்.
இப்பகுதியில் உள்ள 2.5 இலட்சம் தறிகள் மூலம் 1.25 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் 40 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் 23% கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இதுவரையில் ஜவுளி உற்பத்தியாளர் சங்க முதலாளிகள் 15% கூலி உயர்வை மட்டுமே வழங்கி வருகிறார்கள். முத்தரப்பு பேச்சு வார்த்தையை மயிரளவிற்குக் கூட மதிக்கவில்லை. 40 முறைக்கு மேல் மனு அளித்தும் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் எந்த ஒரு விடியலும் கிடைக்கப்பெறாத நிலையிலேயே வேறு வழியின்றி இந்தக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங் நூற்பாலைகள், ஓ.இ.மில்கள், நாட்டிங் மெஷின், வேஸ்டி, சேலை இரகங்கள் ஓட்டும் விசைத்தறி உரிமையாளர்கள், வேன், ஆட்டோ ஓட்டுனர்கள், பீஸ் செக்கிங், அயனிங், மடிப்பு உள்ளிட்ட பல தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலையில் ஏற்ற இறக்கம், வருடம் தோறும் 6% மின் கட்டண உயர்வு, பாவு நூல் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பலபேர் தொழிலைக் கைவிட்டு விட்டனர். வாங்கிய கடனைக் கூட கட்டமுடியாமல் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு பழைய இரும்புக் கடைக்கு தறிகளை விற்று வருகின்றனர்.
ஒப்பந்தபடியான கூலியையும் வழங்காமல், நெய்த துணிக்கான கூலியை முதலாளிகளே நிர்ணயிக்கின்ற அவல நிலை இன்னும் தொடர்கிறது. ஒன்றிய மாநில அரசுகளினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பிற உழைக்கும் வர்க்கங்களுடன் இணைந்து விசைத்தறி தொழிலாளர்கள் போராடும்போது தான் விசைத்தறி தொழிலை பாதுகாக்க முடியும்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெசவாலைகள் நிறைந்து காணப்படுவதாலேயே கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த நெசவாலைகளில் 50% கோவை, திருப்பூர் மாவட்டப் பகுதிகளை சுற்றி இயங்கி வருகிறது. நெசவாலைகள் என்பது பருத்தி, சணல், கம்பளி, பட்டு மற்றும் செயற்கை இழை ஆகிவற்றை உள்ளடக்கியது. நமது நாடு பருத்தி உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்திலும், தறிகள் உற்பத்தி கருவிகளின் எண்ணிக்கையில் முதன்மை நாடாகவும் உள்ளது. இப்படிப்பட்ட வளமான தொழிலை தான் பாசிச மோடி அரசு நலிவடையச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேசியப் பஞ்சாலை கழகத்தின் (NTC) கீழ் 7 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. இதில் கோவையில் மட்டும் 5 பஞ்சாலைகள் இயங்குகின்றன. இந்த ஆலைகளில் சுமார் 2000 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக 23.3.2020 அன்று முதல் தற்போது வரை இந்த ஆலைகள் இயக்கப்படவில்லை. இந்த ஆலைத் தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு வரை 50% ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது கடந்த 5 மாத காலமாக அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. வேலையும் இல்லாமல் சம்பளமும் இல்லாமல் என்டிசி மில் தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலையை ஒன்றிய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. என்டிசி ஆலைகளை எப்போதும் போல் இயக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியப் பஞ்சாலை கழக ஊழியர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் கோவை காட்டூரில் உள்ள தென்மண்டல என்டிசி அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தியுள்ளனர். ஒரு தொழிலாளிக்கு 4 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான சம்பளம் நிலுவையில் உள்ளது. போனஸ் தொகை 30,000 நிலுவையில் உள்ளது.
இந்தியப் பருத்திக் கழகம் பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் நூல் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் ஏற்படுகிறது. விசைத்தறி தொழில் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக ஓட்டுக் கட்சிகளால் பலி கொடுக்கப்படுகிறது.
இந்தியப் பருத்திக் கழகம் பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வன்முறை செய்ய வேண்டும். மெய்நிகர் வர்த்தகம் எனும் இணையதள வர்த்தகத்திலிருந்து பஞ்சு நீக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் பஞ்சு வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும்.
ஒன்றிய, மாநில அரசுகள் அமுல் நடத்திவரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளே விசைத்தறி தொழிலை ஒழிப்பதற்கான முக்கிய காரணமாகும். இந்த அபாயத்தை வீழ்த்த களத்தில் இறங்கிப் போராட ஒன்றுபடுவோம். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
- முத்துக்குமார்