சத்தீஸ்கர் பழங்குடி மக்களை கொன்று நடனமாடிய துணை ராணுவப் படைகள்
– சோனி சோரி

சத்தீஸ்கர் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி, இந்திய அரசு கொன்று வருவதாக பழங்குடி மக்களின் செயற்பாட்டாளரும், அம்மக்களுக்காக இரண்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்தவரும், அமிலத் தாக்குதலால் காயமடைந்தவரும், தண்டேவாடாவைச் சேர்ந்தவருமான சோனி சோரி தனது நேர்காணலில் கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் செயற்பாட்டாளர் சோனி சோரி, இந்திய அரசு உள்நாட்டின் சில பகுதிகளைக் காலனியாக்கிவரும் இரத்தக்களரி தோய்ந்த நிலத்தில் நிமிர்ந்து நிற்கிறார். சத்தீஸ்கரின் கனிமவளம் நிறைந்த காடுகளின் உரிமைக்காக பழங்குடியினருக்கும் அரசு இயந்திரத்திற்கும் இடையில் நடைபெற்று வரும் நீண்ட, நெடிய மோதல்களை அவரது வாழ்க்கை உள்ளடக்கியிருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு சோனி சோரியை மாவோயிஸ்ட் ஆதரவாளர் என முத்திரை குத்தி இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைத்தது. சிறைச்சாலையில் சோனி சோரிக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது பிறப்புறுப்பில் இரண்டு கற்களும், ஆசனவாயில் ஒரு கல்லும் திணிக்கப்பட்டு பாலியில் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

அமிலத்தாக்குதலால் காயமடைந்த பின்னர்: இன்றைய எனது முகம் பஸ்தர் போராட்டத்தின் முகம் என அஞ்சாது போராடும் சோனி சோரி

சோனி சோரிக்கு சிறையில் நடந்த சித்திரவதையைத் தொடர்ந்து, இந்திய சிறைச்சாலைகளில் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் புகார் எழுப்பினர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோனி சோரியைப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டது. பரிசோதனைக்குப் பிறகு அவர் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் அனைத்தும் அம்பலமாயின. இதற்கு காரணமான அப்போதைய மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அங்கித் கார்க்-கிற்கு போலீசாரின் வீரதீர செயலுக்கான ஜனாதிபதி விருது இக்கொடிய செயலுக்குப் பின்னர் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய அரசின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

கடந்த 2013-ம் ஆண்டில் சிறையில் இருந்து வெளிவந்த சோனி சோரி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் சார்பில் பேசும் சாட்சியாக, அம்மாநிலத்தின் வரலாற்று நிகழ்வுகளை மக்களுக்கு கூறுபவராக இருந்து வருகிறார்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் சோனி சோரியின் மீதான தாக்குதல் நின்று விடவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு சோனி சோரி முகத்தின் மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்குப் பிறகும் சோனி சோரி சோர்வடையாமால் ”இன்றைய எனது முகம் பஸ்தர் போராட்டத்தின் முகம்” என இந்திய ஆளும் வர்க்கமே அஞ்சும் அளவுக்கு சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் உரிமைக்காகவும், அக்காடுகளின் வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் முன்பை விட மிகத் தீவிரமாகப் போராடி வருகிறார்.

வரும் 2026-ம் ஆண்டிற்குள் மாவோயிஸ்ட்டுகளை ஒழிப்போம் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வரும் ’ஆப்பரேசன் காகரை’ என்பது பழங்குடி மக்களின் நிலங்களையும், அவர்களது கண்ணியத்தையும் ஒழிப்பதற்கான ஒரு யுக்தி என்கிறார் சோனி சோரி.

பிஜாப்பூரில் குவிக்கப்படும்  இந்திய அரசுப்படைகள்

சமீபத்தில் சோனி சோரியின் நேர்காணலை பிரண்ட்லைன் இதழ் வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரத்திற்கும்; பழங்குடி மக்களின் அழிவுக்கும் இடையிளான பொருத்தமற்ற கூற்றைத் தோலுரித்துக் காட்டுகிறார். இந்திய அரசு எங்கெல்லாம் சாலைகள் போடுகிறதோ அங்கெல்லாம் கனிம வளங்கள், காட்டின் வளங்கள், பழங்குடி மக்களின் உயிர்நாடியான வாழ்வாதாரங்கள் ஒழித்துக் கட்டப்பட்டு வருகின்றன. எனவே இங்குள்ள சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு நரம்புகளாகக் காட்சியளிக்கின்றன என சோனி சோரி கூறுகிறார்.

சத்தீஸ்கர் வனப்பகுதியில் இந்திய அரசுப்படைகளின் முகாம்களை அமைத்திருப்பதாக இந்திய அரசு கொண்டாடி வருகிறது. ஆனால் இந்த இடங்களில் எல்லாம் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் சித்திரவதை, நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துதல், பாலியல் வன்புணர்வு போன்ற அராஜகங்கள் இந்திய அரசுப்படைகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்றன என வேறோரு சித்திரத்தை சோனி சோரி நமக்கு வரைந்து காட்டுகிறார். இந்தியப் பெருநிறுவன ஊடகங்கள் தமது மூத்த அனுபவமிக்க நிருபர்களின் மூலம் இந்திய அரசின் ஆப்பரேசன் காகரின் வெற்றியை சத்தீஸ்கர் காடுகளில் வழும் பழங்குடி மக்களிடம் பிரச்சாரம் செய்ய அனுப்பும் போது, அம்மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வாக்குறுதிகள் எவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன என்பதை சோனி ஆவணப்படுத்துகிறார். அந்தவகையில் பிரண்ட்லைன் நிருபருக்கு அளித்த நேர்காணலில் இந்திய அரசு சத்தீஸ்கரின் வளங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து; அந்நிலங்களில் இருந்து பழங்குடி மக்கள் வெளியேற மறுக்கும் போதெல்லாம், இந்திய அரசால் ஜனநாயகம் என்று பீற்றிக் கொள்ளப்படுவதெல்லாம் இராணுவ ஆக்கிரமிப்பே என சோனி அம்பலப்படுத்துகிறார்.

நேர்காணலில் இருந்து:

மூலவாசி பச்சாவ் மஞ்சின் (MBM) (Save the Indigenous Peoples Forum) எனும் அமைப்பின் முன்னாள் தலைவரான ரகு மிடியாமி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இவ்வமைப்பின் தலைவர் சுனீதா பொட்டம் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த 2024 நவம்பரில் சத்தீஸ்கர் அரசு MBM-மை தடை செய்துள்ளது.  இப்படி சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சோனி சோரி: தினந்தோறும் ஐந்து அல்லது பத்து பழங்குடியினர் கைது செய்யப்படுகிறார்கள். போலி என்கவுண்டர்கள் நடத்தப்படுகின்றன. பழங்குடியினரின் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவது தான் இதன் முக்கிய நோக்கம். பஸ்தரில் யார் சண்டையிட்டாலும், அது மூலவாசி பச்சாவ் மஞ்சின், சோனி சோரி அல்லது ஹிட்மே மார்கம் என யாராக இருந்தாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என முத்திரை குத்தப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். சுனீதாவுக்கும் இதேதான் நடந்துள்ளது.

இந்திய அரசு நடத்திவரும் ஆப்ரேசன் காகர் மாவோயிசத்தை மார்ச் 31, 2026-க்குள் ஒழிக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பு நடைப்பெற்ற தாக்குதல் ஆப்பரேசன் சமதான்-பிரஹார் என்று அழைக்கப்பட்டது; அதற்கு முன்பு வேறு பெயர்கள் இருந்தன. இந்த பகிரங்க அறிவிப்புக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்ததன் பின்னணியில் உள்ள காரணம் என்ன?

சோனி சோரி: உள்துறை அமைச்சர் தற்போது கூறிவருவது புதிதல்ல. இந்த வசனம் ஏற்கனவே கூறப்பட்ட ஒன்று தான். ஆனால் இந்த முறை ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போதும், சர்வதேச தளங்களுக்கும், பிற இடங்களுக்கும் செல்லும் போதும் இதனை அவர் தீவிரமாக கூறிவருகிறார்.

பஸ்தர் பகுதியின் மிகவும் பதற்றமான கிராமமான சிந்தகுபாவைச் சார்ந்த பழங்குடியினர்

இதற்கு முன்பு சல்வா ஜூடும் இருந்தது. யார் சல்வா ஜூடுமால் மிகவும் பாதிக்கப்பட்டனர்? பழங்குடியினர் தான். பஸ்தர் பட்டாலியன், தண்டேஷ்வரி படை, கமாண்டோ பட்டாலியன், கோப்ரா பட்டாலியன் என அரசுப் படைகள்  பல இருந்தன. பல போலீசு முகாம்கள் அமைக்கப்பட்டன, அனைத்து வகையான படைகளும் பழங்குடியினரை ஒழிக்கவே கொண்டு வரப்பட்டன.

போலி என்கவுன்டர்கள் நடக்கும் இடங்களுக்குச் சென்று கேள்விகள் கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை. ஊடகங்களிடம் பேசவும், குரல் எழுப்பவும் முயன்றால் நாங்கள் அமைதியாக்கப்படுகிறோம். இந்திய அரசு ஒட்டு மொத்த உலகத்துடனும் பேசி வருகிறது. ஆனால் பஸ்தர் மக்களின் குரல்களும், சமூக செயற்பாட்டாளர்களின் குரல்களும் இங்கு நசுக்கப்படுகின்றன.

மாவோயிஸ்டுகள் 2026-ம் ஆண்டுக்குள் ஒழிக்கப்படுவார்கள் என்று அமித்ஷா கூறுகிறார். இதன் பின்னணியில் உள்ள உண்மையான யுக்தி என்ன? மாவோயிஸ்ட் என்ற பெயரில் யாராவது கொல்லப்பட்டால், அந்த நபரின் தலைக்கு பரிசுத்தொகையாக ரூ.2 இலட்சம், ரூ.3 இலட்சம், ரூ.4 இலட்சம் என பணம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த முறையில் கொல்லப்படுவது பழங்குடி விவசாயிகள்தான். ஆனால் அவர்கள் மாவோயிஸ்டுகள் என்று அழைக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்ட மக்களின் தலைக்கு ரூ.60 இலட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை பரிசுத் தொகை வழங்கப்படுவதாகக் கூட நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். மேலும் இந்திய அரசுப்படையினரே அந்த நபரைக் கொன்றுவிட்டு பின்னர் வெகுமதியை வழங்குகிறது.

ஆனால் சட்டத்தின்படி, என்ன நடக்க வேண்டும்? முதலில் ஒரு பிரேத பரிசோதனை நடக்க வேண்டும். கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் என கிராம பஞ்சாயத்துக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்; அவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்; கிராம மக்களுக்கு குறிப்பாக படித்தவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

இதில் எதையுமே அவர்கள் செய்வதில்லை. பிரேத பரிசோதனை செய்வதில்லை. செய்தித்தாள்களில் தகவல்களை அச்சிடுவதில்லை. ஒருவர் கொல்லப்பட்ட பிறகு அவரின் தலைக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்படுகிறது. இதனால்தான் இங்கு தினமும் இவ்வளவு இரத்தக்களரி நடக்கிறது. ஒருவரைக் கொன்று பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சரணடைந்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு எனது கேள்வி என்னவென்றால், உங்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இதற்கு உங்களிடம் கணக்குகள் உள்ளதா?

இந்த இராணுவமயமாக்கலில் தோட்டாக்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. அமித்ஷாவும் ஒன்றிய அரசும் மாவோயிஸ்டுகளின் விசயத்தை தீர்க்க முனைந்தால், அப்பாவி பழங்குடியினரைக் கொல்லாமல், காடுகளையும் மலைகளையும் அழிக்காமல், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இதைச் செய்ய வேண்டும். மலைகள் எரிகின்றன, ஆறுகள் அழிக்கப்படுகின்றன, பழங்குடியினரின் குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மாவோயிஸ்டுகளை ஒழிப்பதாகக் கூறுகிறார்கள், ஆனால் இது மாவோயிஸ்டுகளின் அழிவு அல்ல பழங்குடி மக்களின் அழிவு.

இவர்கள் அளிக்கும் வெகுமதித் தொகை மக்களின் பணமல்லவா? இதற்கான கணக்குகள் எங்கே? யார் அதை ஒதுக்குகிறார்கள், யார் அதை தணிக்கை செய்கிறார்கள், எங்கே செய்யப்படுகிறது? இந்த தகவலை வெளிக்கொணர நான் தயாராக இருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முயற்சித்தால், என்னை நக்சலைட் என்று முத்திரை குத்தி கொலை செய்வார்கள் அல்லது சிறையில் அடைப்பார்கள். ஆனால் நாங்கள் கொல்லப்படுவோம் என்றோ அல்லது சிறையில் அடைக்கப்படுவோம் என்றோ அஞ்சுவதில்லை. ஏனென்றால் எங்களது போராட்டம் எங்கள் காடுகளுக்காகவும் மனிதகுலத்திற்குமானது.

பஸ்தரில் 2,500 பேர்களை கொண்ட ஒரு பட்டாலியனை கொண்டு முகாம்கள் திறக்கப்படுவதாக படித்தேன். பீப்பாய்க்கு அடியில் கையெறி குண்டுகள் ஏவும் விமானங்கள், வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம மக்களின் வாழ்க்கையை இந்நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வாறு சீர்குலைக்கிறது?

முகாம்களை அமைத்த பிறகு, இராணுவத்தினர் கிராமங்களைத் தாக்குகிறார்கள். இதனால் கிராமத்தினர் தூங்கக்கூட முடிவதில்லை. பழங்குடி விவசாயிகள் வயல்களுக்குச் செல்லவோ, தண்ணீர் எடுக்கவோ, விறகு அல்லது டெண்டு இலைகளைச் சேகரிக்கவோ முடியவில்லை. பிஜாப்பூரில் நிலவும் சூழ்நிலை இதுதான்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சால்கி கிராமத்தில் அருகே இருக்கும் ஒரு சுரங்கம்.

சில்கருக்கு அப்பால் உள்ள ஒரு கிராமத்தில் இரவில் நான் தங்கியிருந்தேன். அதிகாலை 1 மணியளவில் குண்டுகளின் சத்தம் என்னை எழுப்பியது. என்னுடன் தங்கியிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண், இது இங்கு நடக்கும் ஒரு அன்றாட நிகழ்வுதான் என்றும், தனது வயிற்றில் உள்ள குழந்தை கூட இந்த சத்தங்களால் தொந்தரவு செய்யப்படுவதாக என்னிடம் கூறினார். குழந்தை அமைதியில்லாமல் வயிற்றில் புரள்வதை எனக்கு உணர்த்த அவளது வயிற்றைத் தொட்டு பார்க்க கூறினார்.

சுற்றுச்சூழலிலும் நிலத்திலும் குண்டு வீச்சு ஏற்படுத்திய தாக்கத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆதாரங்களாக என்னிடம் உள்ளன. நீங்கள் மக்களை மட்டுமல்ல, சுற்றுச்சூழலையும் நாசப்படுத்துகிறீர்கள். எனவே இது நமக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்.

துணை இராணுவப் படையினர் ஏன் எல்லா இடங்களிலும் உள்ளனர்? இவ்வளவு எண்ணிக்கையில் ஏன் அவர்கள் குவிக்கப்படுகிறார்கள்? அரசு ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை? மாவோயிஸ்டுகளுடன் பேசுவதற்கு முன் பஸ்தர் மக்களிடம் ஏன் பேசக்கூடாது? ஆனால் அரசு இந்த பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்த விரும்பவில்லை.

அரசு பணம் கொடுப்பதை நிறுத்தும் நாளில் பழங்குடியினருக்கு எதிரான அட்டூழியங்களும் நின்றுவிடும். நீங்கள் நம்பமாட்டீர்கள், இறந்து கிடக்கும் மக்கள் இருக்கிறார்கள் ஐட்டுவின் தலைக்கு ரூ.4 இலட்சம் வெகுமதி, ஹிட்மாவின் தலைக்கு ரூ.3 இலட்சம் வெகுமதி, ஜோகாவின் தலைக்கு ரூ.2 இலட்சம் வெகுமதி அவர்களைக் கொன்ற பிறகு துணை இராணுவப் படைகள் நடனமாடுகின்றன – அவர்கள் இதைக் கொண்டாட இசைத்தட்டுக்களையும், சவுண்ட் பாக்ஸையும் பெறுகிறார்கள். ஏன் தெரியாமா? பணத்திற்காகத்தான்.

இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்தியாவில் இராணுவம் தான் நாட்டின் நிலத்தைப் பாதுகாக்கிறது என்ற பரவலான கருத்து உள்ளது. இங்கே இராணுவம் நம் நாட்டு மக்களைக் கொன்று கொண்டாடுகிறது. ஆனால் இச்செய்தி பஸ்தரை தாண்டி வெளியே வாழும் மக்களைச் சென்றடையவில்லை. பெண்களும் குழந்தைகளும் தாக்கப்படுகிறார்கள், இல்லையா?

குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டை எதிர்கொள்கின்றனர். இந்திராவதி நதிப் பகுதியில் நான்கு குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன.

சுமார் ஒரு வயதே நிரம்பிய தாய்ப்பால் அருந்தும் குழந்தை ஒரு கிராமத்தில் இருந்தது. அக்கிராமத்திற்குள் துணை இராணுவப் படையினர் நுழைந்த போது அதன் தந்தை அக்குழந்தையுடன் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டார். குழந்தை அழுதுவிட்டால், தான் பிடிபடுவோம் என நினைத்தார். அதனால் அவர் அக்குழந்தையை மறைத்து வைத்திருந்தார். துணை இரானுவப் படையினர் அத்தந்தையைப் பிடித்துக் கொன்றனர். அவர்கள் குழந்தையை வேறொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ளவரிடம் கொடுத்தனர். ஒரு குழந்தை தனது தாயைத் தேடி வருவதாகவும், அதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருப்பதால் அக்குழந்தையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் எனக்கு ஒரு அழைப்பு வந்தது

துணை இராணுவத்தினரின் நடவடிக்கையால் காயமடைந்த குழந்தைகளை நாங்கள் சந்தித்தபோது அக்குழந்தைகளின் காயங்களில் புழுக்கள் இருந்தன. துணை இராணுவப் படையினர் என்கவுண்டர்களைச் செய்யும்போது இறந்த உடலை வெகுமதித் தொகையைப் பெறுவதற்காக அவர்கள் முகாம்களுக்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் தோட்டாக்கள் குழந்தைகளைத் தாக்கினால், அவர்கள் குழந்தைகளை முகாம்களுக்கு அழைத்து வருவது கிடையாது. ஏனெனில் இந்த வழக்கில் அவர்களுக்கு பணம் கிடைக்காது. தோட்டாக்கள், பெண்கள், குழந்தைகள் அல்லது முதியவர்களைத் தற்செயலாகத் தாக்கினால் ஏன் விசாரணை இல்லை?

அவர்கள் குழந்தைகளை சாக விட்டு விடுகிறார்கள். மேலும் இந்த தகவல்கள் அனைத்தும் புதைக்கப்படுகின்றன. நீங்கள் துணை இரானுவப்படையினரை எதிர்கொள்ளும்போது, குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். உங்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்; அவர்களின் உயிர்கள் உங்களுக்கு முக்கியம். ஆனால் இவர்கள் பழங்குடியினரின் குழந்தைகள். அவர்களின் மரணம் உங்களுக்குள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது.

போலீசு ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்குள்ள  ஒரு பெண்ணிடம் விசாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை நிர்ணயிக்கும் விதிகள் பற்றிய புத்தகம் உள்ளது. இவ்விதிகள் எல்லாம் இங்கு பின்பற்றப்படுவதேயில்லை. பெண்கள் தானியங்களை அரைக்கும்போதோ, துணி துவைக்கும்போதோ அல்லது வீட்டு வேலைகளில் ஈடுபடும்போதோ அதிகாலையில் துணை இராணுவத்தினர் எந்த வீட்டிற்குள்ளும் நுழைகிறார்கள். அவர்கள் பெண்களின் உடுப்புகளைக் கிழிக்கிறார்கள்; அவர்களது சேலைகளை பிடித்து இழுக்கிறார்கள். அவர்களைத் தாக்குகிறார்கள். பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற பல வழக்குகள் உள்ளன.

சுதா என்பவரின் வழக்கை எடுத்துக் கொள்வோம். துணை இராணுவத்தினரால் அவரின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அக்கிராமத்தில் உள்ள மற்ற பெண்கள், அவரை விட்டு விடுமாறும் தேவைப்பட்டால் அவள் மீது வழக்குப் பதிவு செய்யுங்கள், அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்கள். ஆனால் துணை இரானுவத்தினர் அவரின் வீட்டிலிருந்து சிறிது தொலைவில் உள்ள வனப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, அவர் சாகும் வரை  அவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். சுதா மீது எந்த குண்டடிப்பட்ட காயங்களும் இல்லை. அவர் தன் கடைசி மூச்சை  சுவாசிக்கும் போது ஒரு நக்சல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர்.

அவருடைய சடலம் தண்டேவேடா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த ஒரு மருத்துவரிடம் சுதாவின் உடலைக் காட்டுமாறு கூறினேன். சுதாவின் உடலில் ஒரு குண்டடிப்பட்ட காயம் கூட இல்லை. இது ஒரு மோதல் என்று நீங்கள் கூறினால் அவள் மீது ஏன் துப்பாக்கிச் சூடு காயம் இல்லை? என நான் கேட்டேன்.

பஸ்தரின் பெண்கள் என்னிடம் கூறும் போது- சோனி அக்கா, நாங்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறப்பதற்காக ஒருபோதும் அஞ்சவில்லை ஆனால் எங்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டாம். நாங்கள் இறக்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் பாலியல் பலாத்காரத்தைத் தாங்க நாங்கள் தயாராக இல்லை என்கிறார்கள். ஏனென்றால் இங்கே பாலியல் பலாத்காரம் மிகவும் ஆபத்தான விஷயம்.

நாராயண்பூர்-தந்தேவாடா எல்லையில் உள்ள வனப்பகுதியில் கொல்லப்பட்ட 38 மாவோயிஸ்டுகளில் 31 பேரின் உடல்கள்

பெண்கள் உயிருடன் சித்திரவதை செய்யப்படுகிறார்கள், நகங்களால் கீறப்படுகிறார்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், பின்னர் தோட்டாக்களால் கொல்லப்படுகிறார்கள் பல பெண்களின் காயமடைந்த வீங்கிய அந்தரங்க உறுப்புகளை நான் பார்த்திருக்கிறேன். எத்தனை வீங்கிய மற்றும் நசுக்கப்பட்ட கால்கள்.

தினந்தோறும் இது போன்ற கொடுமைகள் பஸ்தரில் நடக்கின்றன. ஆனால் இதைப் பற்றிப் பேசினால் நீங்கள் ஒரு மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தப்படுவீர்கள். மக்கள் கொடூரமாக அடிக்கப்படுகிறார்கள். அவர்களின் உறுப்புகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு பெண்ணின் கண்முன்னே அவருடைய கணவர், மகன் மற்றும் சகோதரர்களின் அந்தரங்க உறுப்புகளை  அவர்கள் உயிரோடு இருக்கும் போது வெட்டினர் என அப்பெண் என்னிடம் கூறினார். இங்கே பெண்கள், குழந்தைகள், சகோதரர்கள், தந்தைகள், காடு, விலங்குகள் மற்றும் பறவைகள் என எதுவுமே பாதுகாப்பாக இல்லை.

துணை இரானுவப்படையினர் பழங்குடி மக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்தும், அவர்களை வெளியேற்றி வருகின்றனர் சல்வா ஜூடும் இருந்த காலத்தில், இலட்சக்கணக்கான பழங்குடியினர் வனப்பகுதியை விட்டு  வாரங்கலுக்கு குடிபெயர்ந்தனர். இவை அனைத்தும் பழங்குடியினரை அவர்களின்  நிலத்திலிருந்து வெளியேற்றுவதற்காகவே செய்யப்படுகின்றன. நிலத்தை காலி செய்த பிறகு, அதை அவர்கள் தங்களுக்குப் பிடித்த பெரும் முதலாளிகளுக்குக் கொடுக்க விரும்புகிறார்கள்.

தண்ணீரை சேகரிப்பதற்காக தன் வீட்டிலிருந்து புறப்படும் ஒரு பழங்குடியின சிறுமி

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் பஸ்தருக்கு வந்த போது அங்குள்ள மக்களுக்கு குடிக்க குடிநீர் இல்லை; மின்சாரம் இல்லை என்பதை கண்கூடாக உணர முடிந்தது. ஆனால் எட்டுவழிச்சாலை போல தோற்றமளிக்கும் சாலைகள் கட்டப்பட்டு வந்தது. வங்கி, பொது விநியோக முறைக்கான ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி, மருத்துவமனை ஆகியவற்றைக் கொண்ட ஒருங்கிணைந்த மேம்பாட்டு மையங்களை உள்ளடக்கிய முகாம்களை கட்டுவதாக துணை இரானுவப்படையினர் ஆன்லைனில் விளம்பரம் செய்தனர். இந்த நலத்திட்ட சேவைகள் அரசால் வழங்கப்பட வேண்டும், துணை ராணுவப் படை ஏன் இந்தப் பணிகளைச் செய்கிறது? இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த முகாம்களைக் கட்டுவதன் நோக்கம் என்ன?

ஒரு பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒரு செயலாளரைக் கொண்ட கிராம சபைகள் இங்கே இருக்கிறது. அவையே சட்டத்தின்படி  இங்கு உயர்ந்தவை துணை இராணுவப் படைகள் ஏன் சாலைகளைக் கட்டுகின்றன? எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வரும் சாலைகளை எங்களுக்குக் கொடுங்கள். நாங்கள் சந்தைக்கு  சென்று வீடு திரும்பவதற்கான சாலைகளை எங்களுக்குக் கொடுங்கள். ஆனால் இந்த பெரிய சாலைகள் காடுகளில் வாழும் பழங்குடியினருக்காக கட்டப்படவில்லை. இந்த சாலைகள் கனிம வளங்கள் நிறைந்த மலைகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காகவே கட்டப்பட்டு உள்ளன. மலைகளைச் சுரண்டி, கனிமங்களை பிரித்தெடுத்த பிறகு இப்பெரிய சாலைகள் வழியாக அவற்றைக் கொண்டு செல்வார்கள்.

பழங்குடியினரிடமிருந்து ஒரு துண்டு நிலமோ அல்லது வளமோ பறிக்கப்படாது; சுரங்கம் எதுவும் நடக்காது; நிலம் சுரண்டப்படாது; சுற்றுச்சூழல் அழிக்கப்படாது என்று  ஒன்றிய அரசோ அல்லது அமித்ஷாவோ எழுத்துப்பூர்வமாகக் கூற முடியுமா? பஸ்தரின் அனைத்து பழங்குடியினரை  ஒன்றிணைக்கும் சவாலை ஏற்கவும், மாவோயிஸ்டுகளுடன் கூட பேசவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் பழங்குடியினரின் துண்டு நிலம் கூட பறிக்கப்படாது என்று எங்களுக்கு உறுதியளித்த பிறகு அரசு முதலில் எங்களிடம் பேச வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரில் அனைத்து அட்டூழியங்களும் நடத்தப்படுகின்றன. இந்த “வளர்ச்சிப் பிரச்சாரத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நாங்கள் கனிமச் சுரங்கம் எடுக்கும் நிறுவனங்களை எதிர்க்கிறோம். உதாரணமாக, NMDC எனும் பொதுத்துறை நிறுவனம் (தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்) இந்தப் பகுதியில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தால் எங்கள் மக்களுக்கு வேலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் கிடைக்கும்; எங்களது எதிர்காலம் அனைவருக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்; இது வருங்கால சந்ததியினருக்கு நல்லது என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இன்று மலைகள் குழிகளாக உள்ளன. மலைகளுக்குக் கீழே வாழும் மக்கள் கனிமச் சுரங்கங்களில் இருந்து வெளியேறி கலக்கும் சிவப்பு நிறத்திலான விஷம் கலந்த தண்ணீரைக் குடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குழந்தைகள் உயிர்வாழ முடியாது. விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. அவர்கள் சிறு வனப் பொருட்களை விற்று வாழ்கிறார்கள்  கனிமச் சுரங்கங்கள் இது போன்ற அக்கிரமச் செயல்களை செய்து வந்தால், மக்கள் ஏன் அதை எதிர்த்துப் போராட மாட்டார்கள்?

பிடியா எனும் பகுதியில் பள்ளிகள் இல்லை. மாவோயிஸ்டுகள் பள்ளிகள் கட்ட அனுமதிக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். மருத்துவமனைகள் இல்லை. மாவோயிஸ்டுகள் மருத்துவமனைகளை கட்ட அனுமதிக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். மக்களிடம் நிலச் சான்றிதழ்கள் இல்லை. மாவோயிஸ்டுகள் நிலச் சான்றிதழ்களை உருவாக்க அனுமதிக்கவில்லை என்று அவர்கள் கூறுவார்கள். அங்கன்வாடிகள் இல்லை. அங்கன்வாடிகள் அமைக்க மாவோயிஸ்டுகள் அனுமதிப்பதில்லை என்று அவர்கள் கூறுவார்கள். எந்த தெருக்களிலும், பாதைகளிலும், கிராமங்களிலும் மின்சாரம் இல்லை. மின் கம்பங்கள் அமைக்க மாவோயிஸ்டுகள் அனுமதிப்பதில்லை என்று அவர்கள் கூறுவார்கள்.

அனைத்து கிராமங்களிலும் சாலைகள், மின்சாரம், மருத்துவமனைகள், தண்ணீர் இணைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான வசதிகள் இருக்கும் போது தான் அக்கிராமங்களில் வளர்ச்சி தொடங்குகிறது. இதற்குப் பிறகுதான் பெரிய சாலைகள் வர வேண்டும். ஆனால் அவர்கள் பெரிய சாலைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

முகேஷ் சந்திரகர் என்ற ஒரு பத்திரிகையாளர் பஸ்தரில் சாலைகள் அமைக்கும் போது நடந்த ஊழலை அம்பலப்படுத்தியதால் கொல்லப்பட்டார். நீங்கள் அவரை வளர்ச்சிக்கு எதிரானவர் என்று சொல்வீர்களா? உண்மையைச் சொல்பவர்கள் வெட்டப்படுகிறார்கள்.

நாங்களும் வளர்ச்சியை விரும்புகிறோம், ஆனால் அவர்கள் பேசுவது போன்ற வளர்ச்சியை அல்ல. எங்களது அடிப்படை உரிமைகளை முதலில் எங்களுக்குக் கொடுங்கள். அதன் பிறகு அவர்கள் வளர்ச்சியை உருவாக்க முனையட்டும். ஆனால் அவர்கள் பெரு நிறுவனங்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறார்கள்.

மொழிப்பெயர்ப்பு

  • தாமிரபரணி

புகைப்படங்கள்: நன்றி – பிரண்ட்லைன் இதழ்

மூலக்கட்டுரை:

https://frontline.thehindu.com/social-issues/social-justice/interview-with-tribal-rights-activist-soni-sori-corporate-greed/article69332872.ece

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன