மோடியின் அமெரிக்க விஜயம் இந்தியத் தொழிற்துறைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கப்போகிறதா இல்லையோ எலான் மஸ்கிற்கு இலாட்டரி அடித்திருக்கிறது என்பதை உறுதியுடன் கூறமுடியும். மோடியை தன்னுடன் வைத்துக்கொண்டே டிரம்ப் அறிவித்த, 100 சதவிகித பரஸ்பர வரியின் காரணமாக இந்தியத் தொழிற்துறையினரும் வர்த்தகர்களும் மிகுந்த கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால் மோடி – மஸ்க்கின் சந்திப்பிற்குப் பிறகு, எலான் மஸ்க்கோ மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார். காரணம். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இந்தியாவில் கால்பதிப்பதற்கான சாதகமான நிலைமைகள் தற்போது உருவாகியிருக்கின்றன.
சரியாக மோடி – மஸ்க்கின் சந்திப்பு நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ உடன் இணைந்து இணைய சேவையை வழங்கப்போவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் அதிவேக இணைய சேவையைப் பெறமுடியும் என்கிறது ஏர்டெல் நிறுவனம்.
ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு சில வருடங்களாகவே முயற்சித்து வந்தது. ஆனால் இந்தியத் தொலைத்தொடர்பு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகே அனுமதி வழங்க முடியும் எனத் தள்ளிப்போட்டு வந்தது மோடி அரசு. மேலும் இந்திய தொலைத்தொடர்புச் சந்தையில் கோலோச்சும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியச் சந்தையில் நுழைவதை விரும்பவில்லை.
கடந்த அக்டோபரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், இந்தியச் சந்தையில் கால்பதிக்க முயற்சிக்கும் இணைய சேவையை (செயற்கைக்கோள் மூலமாக) வழங்கும் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் (கேபில் மூலமாக) போலவே உரிமக் கட்டணங்களைச் செலுத்தி அலைவரிசையை வாங்க வேண்டும் என்று பேசியிருந்தார். ஜியோவோ “செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவையை அளிக்கும் நிறுவனங்ககளுக்கு அளிக்கப்படும் எந்த முன்னுரிமையும் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்” என்று கோரியது.
இந்தியத் தொலைத்தொடர்பு மிகப்பெரிய சந்தையைக் கொண்டது எனவே தான் இம்மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி நிலவுகிறது. இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்தம் 94.5 கோடி பிராட்பேண்ட் இணையச் சந்தாதாரர்களும் 118.9 கோடி தொலைபேசி சந்தாதாரர்களும் உள்ளனர். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் கம்பி மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகளுக்கான சந்தையில் 81 சதவிகிதத்தைக் கூட்டாகக் கட்டுப்படுத்துவதால், இதில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை அனுமதிப்பதென்பது இவர்களுக்குப் போட்டியாகவே அமையும். எனவே தான் இவர்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்தனர்.
ஆனால் மோடியோ, அம்பானியின் கோரிக்கையை ஏற்கவில்லை. மாறாக, செயற்கைக்கோள் மூலமாக இணைய வசதியைக் கொடுக்கும் நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலமுறையில் செய்ய முடியாது நிர்வாக ரீதியான ஒதுக்கீட்டின் மூலமாகவே வழங்க முடியும் எனக் கூறி தனது ஏகாதிபத்திய எஜமானுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தார். இருப்பினும் தனது இந்தியக் கூட்டாளிகளையும் கைவிடவில்லை.
மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது எலான் மஸ்க்குடனான பேச்சுவார்த்தையில் தனது இந்தியக் கூட்டாளிக்கும் ஏகாதிபத்திய எஜமானனுக்கும் சாதகமான ஒரு டீலைப் பேசிமுடித்திருக்கிறார் மோடி. அதன்படி ஸ்டார்லிங்க் இணையச் சேவையை ஏர்டெல்லும், ஜியோவும் இந்தியாவில் வழங்கும் என்ற உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றனர்.
தொலைத்தொடர்பு துறையில் 100 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு மோடி அரசு அனுமதியளித்தது. இதன் விளைவாக ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அந்நிய முதலீட்டின் உதவியுடன் இந்தியச் சந்தையில் ஏகபோகமாக மாறியுள்ளனர். தற்போது தொழில்நுட்பத்திலும் மூலதனத்திலும் மற்றும் தொலைத்தொடர்பு வலைபின்னலிலும் மிகவும் வலிமை பொருந்திய ஸ்டார்லிங்க்கை இணையச் சேவையில் அனுமதிப்பதன் மூலம் மொத்த இந்தியத் தொலைத்தொடர்பு துறையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் காலடியில் சமர்ப்பித்திருக்கிறார் ‘தேசப்பற்றாளார்’ மோடி.
இந்தியப் பொருள்களின் மீது 100 சதவிகித பரஸ்பர வரிவிதிப்பை வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து அமல்படுத்தப்போவதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். அலுமினியம் மற்றும் ஸ்டீல் பொருட்கள் மீதான 25 சதவீகித கூடுதல் வரிவிதிப்பின் மூலம் 5 பில்லியல் டாலர் அளவிலான தொழில் உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதில் 3 பில்லியன் டாலர் அளவிலான உற்பத்தி MSME ஐ சார்ந்தது. இரு நாட்களுக்கு முன்பு இந்திய ஏற்றுமதியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் பீயூஸ் கோயல் “பாதுகாப்பு மனநிலையில் இருந்து வெளியே வாருங்கள்” “கூடுமானவரை சீனப் பொருட்களுக்குப் பதிலாக அமெரிக்கப் பொருட்களை பயன்படுத்துங்கள்” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
மோடியும், அவரது அமைச்சரவை சகாக்களும் வெளிநாட்டிற்குப் பயணம் செய்வது, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கோ, இந்தியச் சந்தையை ஊக்குவித்து MSME ஐ காப்பாற்றுவதற்காகவோ அல்ல. மாறாக தனது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு சேவகம் செய்வதற்காகத்தான் என்பதை எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு மோடி அளித்துள்ள அனுமதியும், இதுபோன்ற வசதிகளை சிறு-குறு தொழில் செய்பவர்களுக்கு வழங்க முடியாது நீங்களே தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என கோயலும் கூறியிருப்பது கார்ப்பரேட் சேவையில் தங்களை அடித்துக்கொள்ள ஆள்ளில்லை என்பதை மீண்டும் ஒருதரம் நிருபித்துள்ளனர்.
- செல்வம்
https://restofworld.org/2025/airtel-starlink-india-deal-modi-musk/
https://www.nytimes.com/2025/03/13/business/starlink-india-musk.html
விரைவில் இந்திய சந்தை முழுவதும் எலன் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு செல்லும்.