மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க மாநில அரசு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பசுப் பாதுகாப்பு ஆண்டு என அறிவித்திருந்தது. இம்மாநிலம் முழுவதும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் குண்டர்களின் அட்டூழியங்கள் அரங்கேறி வருகின்றன.
கடந்த மார்ச் 2ம் தேதியன்று இந்தூர் அருகே பசு மாட்டை இறைச்சிக்காக கொன்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்ட சலீம் மற்றும் ஆகிப் மேவதி என்ற இருவர் உஜ்ஜைன் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து போலீஸ் நிலையம் வரை அடித்து வீதி வழியாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரின் கைகளும் ஒன்றோறொன்று கயிறால் கட்டப்பட்டும், இலத்தியால் தாக்கப்பட்டும் நடுவீதியில் நொண்டியடித்தபடியே இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ”பசு எங்கள் தாய்; போலீசு எங்கள் தந்தை” என்று கோஷம் போடும்படி போலீசார் இலத்தியால் மிருகத்தனமாக தாக்குகின்றனர்.
இத்தாக்குதலுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் போலீசு நிலையத்தின் வாயிலில் சலிம் மற்றும் ஆகிப்பை அடித்து இழுத்துச் சென்ற போலீசாருக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கிய காட்சியை வீடியோவாக சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இதேபோன்று வேறொரு சம்பவமும் மார்ச் 8ம் தேதியன்று ம.பியின் தாமோ மாவட்டத்தில் நடந்துள்ளது. சீதா பவுலி பகுதியில் பசு மாட்டை கொன்ற புகாரின் அடிப்படையில் ஐந்து பேர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் ஊர்வலமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடு, உள்ளூர் நகராட்சியின் சொத்தை ஆக்ரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக கூறி இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. இதில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட கல்லு கசாய் என்பவர் மீது கொலை முயற்சி உட்பட 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காவி பாசிஸ்டுகளின் அமைப்புகளான இந்து ஜாக்ரன் மன்ச், விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகியவற்றின் புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக அப்பகுதியின் போலீசு கண்காணிப்பாளர் சோம்வன்சி கூறியிருக்கிறார்.
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க மாநில அரசின் போலீசு முஸ்லீம் மக்களின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. பசுப் பாதுகாப்பு என்ற முறையில் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை அடித்து ஊர்வலமாக இழுத்துச் செல்வது, அவர்களின் வீடுகளை இடித்து தள்ளுவது என காவிக் குண்டர்கள் படையும், போலீசும், உல்ளூர் நகராட்சிகளும் இதுபோன்ற பல அக்கிரமங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தாங்கள் ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்கள் வாழ்வதற்கு உத்திரவாதம் இல்லை என்பதையே காவி பாசிஸ்டுகள் தமது அக்கிரமங்கள் மூலம் மத்தியப் பிரதேசத்தில் நிருபித்து வருகிறார்கள். முஸ்லீம்களின் மீது புகார் என்ற பெயரில் அவர்கள் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுவதும், அடித்து இழுத்துச் செல்லப்படுவதும் நடந்தேறுகிறது. குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் மீதான வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காவி பாசிஸ்டுகள் காத்திருப்பதில்லை. அதற்கு முன்னரே முஸ்லீம்களின் வீடுகளை இடித்துத் தள்ளப்பட்ட சம்பவமும் ம.பியில் நடந்துள்ளது.
சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 2021ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி கவுன்சிலரான ஷபிக் அன்சாரி என்பவர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டியிருந்தார். ஒரு சில நாட்களிலேயே அவர் மீது முதல் தகவலறிக்கைப் பதியப்பட்டு மூன்று மாதம் அன்சாரி சிறையில் இருந்தார். அதன்பிறகு சுமார் ஒரு வருடம் கழித்து இரண்டு கோடி மதிப்பிலான அன்சாரியின் வீடு சட்ட விரோதமாகக் கட்டப்பட்டிருந்தாகக்கூறி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

அன்சாரியும் அவரது குடும்பமும் எவ்வளவோ மன்றாடியும் ஒரே நாளில் அவரது கண் முன்னே வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது; வீட்டிற்கான உரிமைப் பத்திரங்களைக் கூட நகராட்சியினர் பார்க்கத் தயாராக இல்லை; வீட்டிலிருந்த பொருட்களை எடுத்துக்கொள்ளக்கூட அனுமதிக்கப்படவில்லை. தற்பொழுது 7 பேர் கொண்ட அன்சாரியின் குடும்பம் வீட்டை இழந்து வீதிக்கு வந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக அன்சாரியின் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை விசாரித்து வந்த ம.பியின் ராஜ்கார் சிறப்பு அமர்வு நீதிமன்றம் தற்போது (பிப்ரவரி 14, 2025) தீர்ப்பளித்திருக்கிறது. அன்சாரி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அறிவியியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை எனவும், இக்குற்றச்சாட்டு போலியானது எனவும் கூறி அன்சாரியை விடுவித்துள்ளது.
ஆனால் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக பாலியல் குற்றம் சாட்டப்பட்டு வீடு, மகனின் கல்வி, உடைமைகளை இழந்த அன்சாரியின் குடும்பம் தற்போது உறவினர் வீட்டில் தங்கி வருகிறது.
மேற்கூறிய சம்பவம் முஸ்லீம்கள் மீதான காவி பாசிஸ்டுகளின் தாக்குதல்கள் பெருகி வருவதை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. முஸ்லீம்கள் மீது குற்றப்புகார்கள் வந்தாலே அவர்கள் மீது எந்தத் தாக்குதலையும் நடத்தலாம் எனக் காவி பாசிஸ்டுகள் செயல்பட்டு வருகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் தொடரும் அட்டூழியங்கள் நாடு முழுவதும் பரவுவதற்கு முன்பு இக்காவி பாசிஸ்டுகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல் இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களும், இஸ்லாமியர்களும் தங்களது வாழ்வையும், உரிமையையும் பாதுகாத்துக்கொள்ள முடியாது.
- தாமிரபரணி