ஏகாதிபத்திய அடிமைகளுக்கு சொந்த நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமா?

அமெரிக்காவிலுள்ள இந்து கோயில் சுவற்றில் கிறுக்கியதற்கு கவலைப்படும் மோடி கும்பல், டிரம்ப் டங்கிப்பாதையில் குடியேறிய இந்திய மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் போதும், இந்திய விவசாயிகளையும் தொழில்துறையையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் வரி அதிகரிப்பை அறிவித்தபோதும் வாய் திறக்கவில்லை. மேலும் டிரம்ப்பை தாஜா செய்வதற்கு முற்சித்து வருகிறது இந்த ஏகாதிபத்திய அடிமைக் கும்பல்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சினோ ஹில்ஸ் நகரில் உள்ள ஸ்ரீசுவாமி நாராயண் கோயில் சுவரில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாம், இதனை எழுதியவர்கள் யார் என்று இன்னமும் தெரியவில்லையாம். எழுதியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க சங்கிகள் பொங்கி எழுந்துவிட்டனர். குறிப்பாக ஹிந்து அமெரிக்கன் பவுண்டேசன் என்னும் அமைப்பு FBI இதில் தலையிட்டு குற்றவாளியைக் கைதுசெய்ய வேண்டும் என அதன் இயக்குநர் காஷ் படேலிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைவிட பிரமாதம், அமெரிக்காவிலுள்ள ஒரு இந்து (பார்ப்பனர்கள்) கோயில் சுவரில் கிறுக்கியதற்கு இந்திய அரசாங்கம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதுதான். “வழிபாட்டுத்தலங்களில் போதிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அமெரிக்க சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது”.  

மோடியைத் தன்னோடு வைத்துக் கொண்டே இந்தியர்களை அடிமைகள் போல கைகளிலும் கால்களிலும் சங்கிலியிட்டுப் போர்க் கைதிகளை நாடு கடத்துவதைப் போல அமெரிக்க இராணுவ விமானத்தில் வெளியேற்றியது டிரம்ப் அரசாங்கம். ஆனால் மோடியோ/அமைச்சரவை சகாக்களோ, சொந்த நாட்டு மக்களை டிரம்ப் நிர்வாகம் மனிதத்தன்மையற்று நடத்துவது குறித்தோ அல்லது இந்தியாவின் இறையாண்மையை டிரம்ப் மதிக்காதது குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக அமெரிக்கா செய்தது சரி என்று டிரம்பிற்காக வாதாடினர். மெக்சிகோ, கியூபா, நேபாளம்  போன்ற நாடுகள் கூட சொந்த நாட்டு விமானத்தைக் கொண்டு தங்களுடைய மக்களை அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்தது.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்திய பொருள்களின் மீது 100% பரஸ்பர வரி (reciprocal tariff) விதிப்பேன் என்று டிரம்ப் சொன்ன போதும் கூட இந்த ‘தேசபக்த கும்பல்’ டிரம்பை அன்பாகக் கூட கண்டிக்கவில்லை. மாறாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது வரியை குறைக்கப்போவதாக அறிவித்தனர்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களின் மீதான வரி குறைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவில் ரூம் போட்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பீயூஸ் கோயல். இவருக்கும் அமெரிக்க தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பத்திரிகைகள் கூறுகின்றன. இந்தப் பேச்சு வார்த்தையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு குறிப்பாக டெஸ்லாவின் கார்களுக்கு வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாகவும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பருப்பு வகைகள் மற்றும் பட்டாணிக்கு வரியை முற்றிலுமாக தளர்த்த இந்தியத் தரப்பில் ஒப்புக்கொண்டதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மோடி கும்பலின் இந்த முடிவு இந்திய விவசாயிகளையும் தொழில்துறையையும் மிகவும் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கும். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களுடைய ஏகாதிபத்திய எஜமானின் மனதைக் குளிர்விப்பதற்காகவும், இந்திய ஆளும்வர்க்கத்தின் நலனுக்காவும் தான் இப்படி ஒரு முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

போலி இந்து தேசியப் பழம் பெருமைகளைப் பேசித்திரியும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல், அமெரிக்காவில் உள்ள ஒரு கோவில் சுவற்றில் கிறுக்கியதற்காகக் தனது காவிக் கவலையை வெளிப்படுத்துவதும், டிரம்ப் இந்திய மக்களை மனிதாபிமானமற்று நடத்தும்போதும்; இந்திய விவசாயிகளையும் தொழில்துறையையும் நாசப்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் போதும் தனது கார்ப்பரேட் சேவையை மனமுவந்து ஏற்றுக் கொண்டு செயல்படுத்துவதும் வேறுவேறல்ல ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான். எனவே மோடி ஒரு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

  • செல்வம்

https://timesofindia.indiatimes.com/india/despicable-acts-mea-condemns-vandalism-at-a-hindu-temple-in-california/articleshow/118814646.cms

https://www.hindustantimes.com/india-news/india-willing-to-reduce-tariffs-further-to-woo-us-101741544744024.html?utm_source=firefox-newtab-en-intl

https://thewire.in/trade/india-charges-us-100-tariffs-on-april-2-reciprocal-tariffs-kick-in-trump

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. மோடி வகையறா கும்பல், அமெரிக்க அடிமைகள் எப்போதும் எதிர்த்து பேச மாட்டார்கள்.