ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட காவி பாசிச சக்திகள் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய வரலாற்றைக் கட்டமைக்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். இந்திய வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்று கூறப்படும் சிந்து சமவெளி நாகரீகத்தை, வேதகால நாகரீகம் என நிறுவுவதற்கும், வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி நதி இந்தப் பகுதியில்தான் பாய்ந்தது எனக் காட்டுவதற்காகவும், இந்தியத் தொல்லியல் துறையையே ஒட்டுமொத்தமாகக் களமிறக்கியிருப்பதுடன், இதற்கெனப் பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கியிருக்கிறது பாசிச மோடி அரசு.
ஆனால் தமிழ்நாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் முடிவுகள், பாசிச கும்பலின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போடும் வகையில் அமைந்திருக்கிறது. இந்திய வரலாறு என்பது வேதகால வரலாறு அல்ல, அது சிந்து சமவெளி நாகரீகத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, அதற்கு இணையான காலத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன எனத் தமிழ்நாட்டு அகழாய்வு முடிவுகள் கூறுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் “இரும்பின் தொன்மை” என்ற தமிழ்நாடு தொல்லியல்துறையின் ஆய்வறிக்கையை[1] தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இந்த ஆய்வறிக்கை, தமிழ்நாட்டில் கி.மு.3345 ஆண்டுகளிலேயே இரும்பு பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறுகிறது. அதாவது 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இரும்பில் செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் 2019 முதல் 2022ம் ஆண்டுவரை தமிழ்நாடு தொல்லியியல்துறை மேற்கொண்ட அகழாய்வுப் பணிகளில் கத்தி மற்றும் வாள் போன்ற பல்வேறு இரும்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மாதிரிகளை சோதனைக்குட்படுத்திய போது அவை கி.மு.3345 முதல் கி.மு.2953 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை என்பது தெரிய வந்திருக்கிறது.
இங்கே கிடைத்த மாதிரிகள் அனைத்தையும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள உலகின் முன்னணி சோதனைச் சாலைகளில் பரிசோதிக்கப்பட்டு, பல்வேறு தொல்லியல் அறிஞர்களின் ஆய்வுக்குப் பிறகு இந்தத் தேதியானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆப்ரிக்காவின் சஹாரா பகுதியில் இதுபோன்றே தொல்லியல் அகழாய்வு செய்து கி.மு.3000 ஆண்டுகளில் இரும்புப் பயன்பாடு இருந்ததாக கூறிய முடிவுகளை, ஏற்றுக் கொள்ளாமல் புறந்தள்ளிய டேவிட் கில்லிக் போன்ற புகழ்பெற்ற ஆய்வாளர்கள் கூட சிவகளையில் இரும்புப் பயன்பாடு குறித்த முடிவுகளை ஏற்றுக் கொள்கின்றனர்.[2]
சிவகளை மட்டுமன்றி ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, கீழ்நமண்டி மற்றும் மாங்காடு எனத் தமிழகத்தின் பிற தொல்லியல் அகழாய்வுத் தளங்களில் கிடைத்த இரும்புப் பொருட்களும் தமிழ்நாட்டில் தொடர்ச்சியான இரும்புப் பயன்பாடு இருந்திருப்பதை உறுதி செய்கிறது.
இரும்பை உருக்கி அதிலிருந்து பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் என்பது மிகவும் சிக்கலானது. அத்துடன் ஒப்பிடும் போது செம்பை உருக்குவது எளிதானது. செம்பை உருக்குவதற்கு 1084 டிகிரி செல்சியல் வெப்பம் இருந்தால் போதும். ஆனால் இரும்பை உருக்குவதற்கு 1538 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். இதன் பொருள் என்னவென்றால் இரும்பை உருக்குவதற்கு மேம்பட்ட, சிக்கலான தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது.
அதிலும் குறிப்பாக சிவகளையில் கிடைத்துள்ள மாதிரிகளின் தரத்தில் இரும்புப் பொருட்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வளர்ந்திருக்க வேண்டும்.
இதற்கு முன்பு, உலக அளவில் இரும்புப் பயன்பாடு என்பது அனடோலியாவில் (தற்போதைய துருக்கி) கி.மு.2500 ஆண்டுகளில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது. அதேபோல உத்திரப்பிரதேச மாநிலம் மலகார் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, இந்தியாவில் இரும்புப் பயன்பாடு என்பது கி.மு. 1300ம் ஆண்டுகளில் இருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
சிவகளையில் கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகள் ஏற்கெனவே இந்திய அளவிலும், உலக அளவிலும் இரும்புப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காலத்திற்கு முந்தையாதாக இருக்கிறது. இதன் மூலம் மனிதகுலத்தின் இரும்புப் பயன்பாடு என்பது தமிழ்நாட்டிலிருந்து தொடங்கியிருக்கலாம் எனக் கூறுவதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்துள்ளன.
இரும்புப் பயன்பாடு என்பது மனித நாகரீக வளர்ச்சியின் முக்கியமான மைல்கல்லாகும். விவசாயக் கருவிகளின் முன்னேற்றத்திற்கு உதவியதன் மூலம் உற்பத்திப் பெருக்கத்திற்கும், வணிகத்திற்கும், பிற்காலத்தில் அரசு உருவாக்கத்திற்கும் இரும்புப் பயன்பாடு வித்திட்டது என்று கூறினால் அது மிகையாகாது.
அந்த வகையில் 5300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு இருந்திருக்கிறது என்பது, இதே காலகட்டத்தில் வடஇந்தியாவில் தோன்றிய சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாக தமிழ்நாட்டிலும் ஒரு மனித நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகளை சுட்டிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டில் புதிய கற்கால மனித குடியிருப்புகள் இருந்திருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கெனவே கிடைத்துள்ளன. அதிலிருந்து செம்பை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக இரும்புப் பொருட்கள் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இந்த பாய்ச்சல் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வி பொதுவாகவே எழுப்பப்படுகிறது. இதற்குப் பதிலளித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் சாரதா சீனிவாசன், செம்பு பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சிந்து சமவெளி நாகரீகத்துடன் இருந்தத் தொடர்பின் காரணமாக தமிழ்நாட்டில் இரும்பை உருக்கும் தொழில்நுட்பம் வந்திருக்கலாம் எனக் கூறுகிறார்.[3]
ஆனால் இதனை உறுதி செய்வதற்கு இன்னமும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சிவகளை பகுதியில் மட்டும் 500 ஏக்கர் பரப்பளவில் அடையாளம் காணப்பட்டுள்ள 3000 இடங்களில் இதுவரை 24 இடங்களில் மட்டுமே அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன, மற்ற இடங்களிலும் ஆய்வு செய்யப்படவேண்டும். சிவகளை மட்டுமன்றி, தமிழ்நாட்டில் அகழாய்வு செய்வதற்காக கண்டறியப்பட்டுள்ள இன்னும் பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி இந்திய அளவிலும், உலக அளவிலும் பெயர்பெற்ற தகுதியான ஆய்வாளர்களைப் பணிக்கமர்த்தி இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்த வேலையைத் தமிழக தொல்லியல் துறை மட்டுமே செய்துவிட முடியாது. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் இதற்குக் கட்டாயம் தேவைப்படும். ஆனால் இந்தப் பணிக்கு ஒன்றிய அரசு நிச்சயமாக உதவாது.
ஏனென்றால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் காவி பாசிஸ்டுகள் கட்டமைக்க துடிக்கும் இந்திய வரலாற்றிற்கு, சிவகளையின் ஆய்வு முடிவுகள் நேரெதிராக இருக்கின்றன.
சிந்து சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகம் என நிறுவுவதன் மூலம் வேத மரபுதான் இந்தியாவின் மரபு என்றும், அதுதான் உலகத்திற்கே விஸ்வகுருவாக இந்தியா திகழக் காரணமாக இருந்தது என்றும் சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்றும் காவி பாசிஸ்டுகள் நிறுவ முயற்சிக்கின்றனர்.
முதலில் சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் இருந்த காளை மாட்டின் படத்தினை கணிணியில் குதிரையைப் போன்று மாற்றி வெளியிட்டு அங்கே வேத நாகரீகம் இருந்ததாக கதையளந்தனர். இது சர்வதேச அளவில் பேசு பொருளாகி இறுதியில் காவிக் கும்பலின் பித்தலாட்டம் அம்பலப்பட்டுப்போனது. அதே போல சிந்து சமவெளி எழுத்துக்கள் இதுவரை புரிந்துகொள்ளப்பட முடியாத விடுவிக்கப்படாத புதிராகவே இருந்து வருகின்றன. அவற்றை சமஸ்கிருதத்தின் அடிப்படையில் விளக்க முடியும் என மற்றுமொரு புரளியையும் கிளப்பி அதிலும் அம்பலப்பட்டுப் போனார்கள். இவையெல்லாம் மோடி தலைமையிலான காவிபாசிசக் கும்பல் தலையெடுப்பதற்கு முன்னர் நிகழ்ந்தவை.
2014ம் ஆண்டு மோடி கும்பல் ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பிறகு, இந்திய வரலாற்றைத் திரிக்கும் வேலைக்கு இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
வேதங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியின் கரையில்தான் சிந்து சமவெளி நாகரீகம் உருவானது எனக் கூறி சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் எனப் பெயர்மாற்றம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதுமட்டுமன்றி சரஸ்வதி நதியைக் கண்டுபிடிப்பதற்காக பல நூறு கோடி ருபாய்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல் அழிந்து போன சரஸ்வதி நதியை உயிர்பிக்கப் போவதாக கூறியதுடன், அதற்காக ஒரு அணையையே கட்டவிருப்பதாக அறிவித்த ஹரியாணா மாநில பாஜக அரசு, 200 கோடி ருபாய் நிதியையும் இதற்கென ஒதுக்கியது.
தற்போது சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் இருக்கும் ஒற்றைக் கொம்பு விலங்கு வேதகால ரிஷி ரிஷ்யசிருங்கர் என்றும், குண்டலணி சக்தியை வெளிக்கொணர்ந்து அதனைக் கொம்பு போல வெளிப்படுத்துவதையே அது உருவகப்படுத்துகிறது என்றும் சிந்து சமவெளி நாகரீகம் வேதகால நாகரீகம் தான் என்பது உறுதியாவதாக கூறிவருகிறார்கள்.
இதன் மூலம் வேத மரபுதான் இந்தியாவின் மரபு என்று காவி பாசிஸ்டுகள் நிறுவ முயற்சிக்கின்றனர். கலை, இலக்கியம், விஞ்ஞானம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் பல ஆயிரம் வருடங்களாக செழித்து வளர்ந்த வேத மரபை இடையில் வந்த இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் அழித்துவிட்டனர் என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்டுவதன் மூலம் அந்த மரபை மீண்டும் கட்டமைப்பதுதான் தங்களது லட்சியம் எனும் கதையாடலைக் காவி பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கின்றனர். இதுதான் அவர்களது இந்துத்துவா அரசியலின் அடித்தளமாக இருக்கிறது.
சிவகளை ஆய்வு முடிவுகள் இந்த அடித்தளத்தையே ஆட்டம் காண வைக்கின்றன. இந்திய வரலாறு வேதகால வரலாறு அல்ல என்றும் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இரும்பைப் பயன்படுத்திய முன்னேறியதொரு நகர நாகரீகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கக் கூடும் என்றும் சிவகளையில் ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலம் நிரூபிக்க முடியும்.
எனவே இந்த அகழாய்வுப் பணிக்கு ஒன்றிய அரசு நிச்சயமாக உதவாது. அத்துடன் இந்த ஆய்வு முடிவுகளை இருட்டடிப்பு செய்வதற்கான அனைத்து வேலைகளையும் இந்தக் காவி பாசிச கும்பல் நிச்சயமாகச் செய்யும். அதனை முறியடிப்பது இன்றைக்கு நம் முன் உள்ள முக்கிய கடமையாக உள்ளது.
- அறிவு
அடிக்குறிப்புகள்
[1] https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0065866/TVA_BOK_0065866_Antiquity_of_iron.pdf
[2] https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/tamil-nadu-ancient-iron-smelting-skip-copper-age-discovery/article69233001.ece
[3] https://frontline.thehindu.com/arts-and-culture/heritage/iron-age-ancient-tamil-nadu-archaeology-history/article69210433.ece