ஒகேனக்கல் முதல் நாட்ராம்பாளையம் வரையிலான சாலையை சீர்படுத்திக் கொடு! பூமரத்துக்குழி வனத்துறை வசூல் கேட்டை இழுத்து மூடு! குந்துக்கோட்டை கொண்டை ஊசி வளைவு சாலையை மாற்றுப்பாதையில் அமைத்துக் கொடு! என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டம் 03.03.2025 திங்கள் காலை 11 மணிக்கு, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சட்ட ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்த நிலையிலும், அடிப்படை தேவைகளுக்காக போராடுவது ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில், போலீசாரின் மறுப்பையும் மீறி திட்டமிட்டபடி எழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மக்கள் அதிகாரம் வட்டார செயலாளர் தோழர் ராமு அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் தனது உரையில் பலமுறை இந்த சாலையை சீர்படுத்திக் கொடுக்க கோரி போராடியும் அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருக்கிறது. ஆனால் மக்களிடம் கொள்ளை அடிக்க மட்டும் புதுப்புது வழிகளில் முயற்சித்து சுற்றுலாப் பயணிகளை வழிப்பறி செய்கிறது. சாலைகள் சரியில்லாத போது டோல் கேட் வரி வசூலிக்க கூடாது என்று காஷ்மீர் உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இங்கு சாலை பழுதாகி இருப்பதால் பல பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர், அப்படி இருக்க இந்த அரசுக்கு வரி வசூல் செய்ய என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உரையாற்றினார்.
பு.ஜ.தொ.மு மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் அவர்கள் பேசும்போது பொதுவாகவே மக்களின் நலன்களுக்காக அரசு திட்டமிடுவதில்லை, அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை, தொழிலாளிகளுக்கும் தொழிற்சட்டங்கள் பாதுகாப்பளிப்பதில்லை, உரிமைகள் வழங்குவதில்லை, என்பதை ஒப்பிட்டு விளக்கி உரையாற்றினார்.
அரசியல் சார்பற்ற விவசாய சங்கத்தின் தோழர் மாரியப்பன் உரையாற்றிய போது “இந்த சாலையை போடுவதற்காக நாங்கள் பல போராட்டங்களை செய்து விட்டோம். ஆனால் அரசு சாலை போட வேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. மனு கொடுங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள். மனு கொடுத்தால் அந்த மனுவினை பரிசிலனை கூட செய்வதில்லை” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சரவணன் அவர்கள் உரையின்போது நாட்றாம்பாளையம் முதல் ஒகேனக்கல் வரையிலான சாலை என்பது ஒரு வரலாற்று நினைவுகளோடு இருக்கின்ற சாலை. இந்த சாலையை முதல் முதலில் போட முயற்சித்தவர்கள் மக்கள். அரசும், வனத்துறையும் சாலை போட அனுமதி தராத போது 30 கிராம மக்கள் ஒன்று திரண்டு தங்களுடைய சொந்த செலவில் மண் சாலையை போட்டு முடித்தனர். இதனைப் பார்த்து பயந்துபோன அரசு தார் சாலையை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சடங்குதனமாகபோட்டு கொடுத்தது. அன்றிலிருந்து இன்று வரை இந்த சாலை என்பது புனரமைக்கப்படவில்லை, இதனால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு இழப்புகள், உயிரிழப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை தடுக்க உடனடியாக இந்த சாலையை விரிவுபடுத்தி சீர்படுத்த வேண்டும். சுற்றுலா பயணிகளிடம் அநியாயமாக வசூலிக்கும் பூமரத்துகுழி வசூல் கேட்டை இழுத்த மூட வேண்டும் என்று கூறி விளக்கி பேசினார்.
தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் பிரகாஷ் அவர்கள் பேசும்போது, இதுபோன்று மக்கள் தங்களின் அடிப்படை பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட வேண்டும். பல போராட்டங்கள் நடத்தினால் கூட அரசு கண்டு கொள்வதில்லை. இது பெரும்பாலும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பயன்படுத்தக்கூடிய காட்டு வழிப்பாதை. இங்கு செல்போன் இணைப்புகள் கிடைப்பதில்லை. விபத்து என்றால் உடனடியாக உதவ முடியாது அப்படி இருக்கும் இந்த சாலையை விரைந்து போட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடும் புரட்சிகர மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் மாநில இணை செயலாளர் தோழர் கோபிநாத், தமது உரையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எமது அமைப்பு இந்த சாலையை போட வேண்டும் என்று முன்முயற்சி எடுத்து கிராம மக்களை இணைத்து போராட்டங்களை நடத்தியது. அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை இதனையடுத்து, மக்களைத் திரட்டி ஜேசிபி எந்திரங்களை கொண்டு மக்களிடம் நிதி திரட்டி சாலைகளை சீர்படுத்தும் வேலையை எமது அமைப்பு செய்தது.
இதனையடுத்து நாங்கள் உடனடியாக இந்த சாலையை சீர்படுத்தி கொடுக்கிறோம் என்று உத்தரவாதம் கொடுத்த மாவட்ட நிர்வாக அதிகாரிகள். இன்று வரை இந்த பக்கமே திரும்பியதில்லை. இப்போது நாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும்போதே குந்துகோட்டை கொண்டை ஊசி வளைவில் விபத்து ஏற்பட்டு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் கவிழ்ந்து இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நாம் எந்த சாலையை விரிவுபடுத்தி போட வேண்டும் என்று சொல்லுகிறோமா அந்த சாலையில் நாம் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது விபத்து ஏற்படுகிறது என்று சொன்னால், தினம்தோறும் எத்தனை விபத்துக்கள் ஏற்படும் என்பதை சற்று யூகித்து பாருங்கள், இந்த சாலை என்பது ஒரு மரணச்சாலையாக இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் இந்த சாலையை சீர்படுத்தி கொடுப்பது அரசினுடைய கடமை, ஆனால் இந்த கடமையை நிறைவேற்றுவதற்கு பதிலாக பூமரத்துகுழி என்ற இடத்தில் வனத்துறை ஒரு கேட்டு வைத்து சுற்றுலா பயணிகளிடம் அடாவடியாக சுங்க கட்டணத்தை வசூலித்து கொள்ளையடிக்கிறது.
நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வரை சுற்றுலா பயணிகளிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சாலையை போட வனத்துறையோ மாவட்ட நிர்வாகமோ ஒரு சிறிதளவு முயற்சியும் கூட எடுப்பதில்லை. 16 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கொண்டை ஊசி மலைச்சாலையை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டநிர்வாகம் சார்பாக ஒரு சுங்க கட்டணமும், தர்மபுரி மாவட்டம் சார்பாக ஒரு சுங்க கட்டணமும் எல்லையில் வைத்துக்கொண்டு இருபுறங்களும் சுற்றுலா பணிகளை வசூல்வேட்டையாடி கொள்ளை அடிக்கிறது. மாவட்ட நிர்வாகங்கள் இரு மாவட்டங்களுக்கு இணைப்பு பகுதியாக இருக்கிற இந்த சாலையை, போடுவதற்கு அக்கறை காட்டுவதில்லை. வசூல் வேட்டை செய்யும் அரசுக்கு சாலை போட வேண்டும் என்கிற கண்ணோட்டமும், அதற்கான முயற்சியும் சிறிதளவு கூட இல்லை. மக்களிடம் எப்படி கொள்ளையடிப்பது என்பதை மட்டும் முதன்மையான பணியாக வைத்திருக்கிறது.
இதனை முறியடிக்கிற வகையில் இன்றைக்கு நாங்கள் போராட்டமாக எடுத்து நடத்துகிறோம். இந்த போராட்டத்திற்கு குறைவான எண்ணிக்கையில் மக்கள் வந்திருக்கிறார்கள் என்ன செய்துவிட முடியும் என்ற அரசு எண்ணக்கூடாது. மாற்றாக இந்த சிறு உளிதான் பெரிய மலையை உடைக்கும், சிறு பொறி தான் பெருங்காட்டுத்தீயை மூட்டும். இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் போடவில்லை என்றால் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு நாங்கள் போட வைப்போம். மக்களின் கோரிக்கைக்கான இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட சட்ட ஒழுங்கை காரணம் காட்டி இன்று அனுமதி மறுத்துள்ளது அஞ்செட்டி காவல்துறை. மக்களின் கோரிக்கையை மதிக்காத இந்த அரசின் சட்டம் ஒழுங்கை மக்கள் தொடர்ந்து மதிப்பார்கள் என்று எண்ண வேண்டாம் என்று எச்சரித்து பேசினார்.
எதுவும் சட்டபூர்வமாக நடப்பதில்லை, மக்கள் நல அரசு என்று சொல்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை. மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக வீதியில் இறங்குவதும் அரசு அதிகாரிகளை பணிய வைக்கிற வகையிலே போராடுவோம். அது தான் இன்றைக்கு ஒரே தீர்வு. அந்த வகையில் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டுகிற பணியை புரட்சிகர மக்கள் அதிகாரம் செய்யும். நீங்கள் போடாத பட்சத்தில் அரசு அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என எச்சரித்து சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தபின் அஞ்செட்டி வட்டாட்சியர் அவர்களிடம் புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டக் கோரிக்கைகளை விளக்கி போர்க்கால அடிப்படையில் சாலை வசதிகளை சீர்படுத்தி கொடுக்க கோரி மனுவும் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் ஒரு மாத கால பிரச்சாரத்தை மக்கள் பல்வேறு வகையில் கவனித்து ஆதரவளித்துள்ளனர். இன்று சாலை நல்ல முறையில் போடப்பட வேண்டும் என தங்களின் கருத்துக்களை உணர்வு பூர்வமாக தெரிவித்து ஆதரவளித்த மக்கள், ஒரு நாள் போராட்டத்தில் இறங்குவது உறுதி.
தகவல்
தோழர் ராமு,
வட்டார செயலாளர்,
புரட்சிகர மக்கள் அதிகாரம்,
அஞ்செட்டி வட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தொடர்புக்கு 91592 64938