இஸ்லாமியர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள் எனவே அதனை மீட்க வேண்டும் எனக் கூறிக்கொண்டு கலவரம் செய்து அந்த இடத்தில் காலூன்றுவது காவி பாசிஸ்டுகள் தொன்றுதொட்டு பின்பற்றும் வழிமுறை. அயோத்தி தொடங்கி, காசி ஞானவாபி மசூதி, மதுரா, சம்பல் என அடுத்தடுத்து மசூதிகளைக் குறிவைத்து மக்கள் மத்தியில் மத வெறுப்பு அரசியலைப் பிரச்சாரம் செய்வதை அவர்கள் வட இந்தியாவில் வாடிக்கை ஆக்கியிருக்கிறார்கள்.
அந்த வழியில் தற்போது தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் ஷா தர்க்காவைக் கையிலெடுத்திருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோயில் குடைவரைக் கோயிலாக உள்ளது. மலையின் மேலே சமணக் குகைகளும், காசி விஸ்வநாதர் கோயிலும் உள்ளன. மலை உச்சியில் இஸ்லாமியர்கள் வழிபடும் சிக்கந்தர் ஷா தர்க்கா உள்ளது.
இந்த தர்க்கா பதினான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமியர்களால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்த தர்க்காவில் நடைபெறும் சந்தனக் கூடு திருவிழாவிற்கு தென்மாவட்டங்கள் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொள்வது வழக்கம். திருவிழாவின் போது ஆடு கோழிகள் காணிக்கையாகப் பலிகொடுப்பதையும் இஸ்லாமியர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அங்கே ஆடு, கோழி பலியிடுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சந்தனக் கூடு திருவிழாவிற்கு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இருந்துதான் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனை பிபிசி தமிழுக்கு கொடுத்த பேட்டியில் திருப்பரங்குன்றம் கோவிலின் தலைமைப் பட்டரே உறுதிப்படுத்தியிருக்கிறார். அதேபோல 2023ம் ஆண்டும் நடந்த திருவிழாவின் போது சமைக்கப்பட்ட அசைவ உணவை அனைத்து சமூக மக்களும் ஒன்றாக சாப்பிட்ட புகைப்படமும் இஸ்லாமியர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் திருப்பரங்குன்றம் மலையில் இருந்த மதநல்லிணக்கத்திற்கான உதாரணங்கள். ஆனால் இந்துக்களும் முஸ்லீம்களும் மத அடிப்படையில் பிரிந்திருப்பதுதான் காவி பாசிஸ்டுகளின் இந்துத்துவா அரசியலுக்கு தேவை. மத நல்லிணக்கத்துடன் மக்கள் இருப்பது என்பது காவிகளுக்கு காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போன்றது.
எனவேதான் சென்ற டிசம்பர் மாதத்தில் சந்தனக் கூடு திருவிழாவின் போது மலையடிவாரத்தில் குவிந்த இந்து முன்னணி காலிகள், இஸ்லாமியர்கள் ஆடு கோழி பலியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரச்சனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் போலீசாரோ, மதபிரிவினையைத் தூண்டி கலவரம் செய்யும் நோக்கத்துடன் கூடியிருந்த காவிக் கும்பலைக் கலைப்பதற்கு பதிலாக, இஸ்லாமியர்களை மலையேறவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலையை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் மதவெறியைத் தூண்டிவிடும் வேலையில் பாஜக, இந்து முன்னணி காவிக் கும்பல் இறங்கியிருக்கிறது. கேரளாவில் ஐயப்பன் கோவில் பிரச்சனையைப் பயன்படுத்தி காலூன்றியது போல, தமிழகத்தில் காலூன்றுவதற்கு முருகன் மீதான பக்தியைப் பயன்படுத்திக் கொள்ள காவி கும்பல் பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. கந்த சஷ்டி கவசம் பிரச்சனை, வேல் யாத்திரை எனக் கடந்த காலங்களில் முருகனை மையப்படுத்தி பாஜக முன்னெடுத்தவைகள் எல்லாம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்குப் பலனளிக்காததால் தற்போது திருப்பரங்குன்றம் பிரச்சனையைக் கையிலெடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழகத்தில் தை மாதத்தில் முருகனை வழிபட லட்சக்கணக்கான மக்கள் பாத யாத்திரையாக முருகன் கோவில்களுக்குச் செல்வது வழக்கம் என்பதால், மக்களின் இறைநம்பிக்கையைத் தங்களது அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவே இப்போது இந்தப் பிரச்சனையைக் காவிகள் கிளப்பியிருக்கிறார்கள்.
மதவெறியைக் கிளப்பி கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் காவிக் கும்பலை தடுத்து தமிழக அரசு நிறுத்தியிருக்க வேண்டும். இந்நேரம் இந்தக் கும்பலின் சூத்திரதாரிகள் மீது வழக்குப் பதிந்து சிறையிலடைத்திருக்க வேண்டும். தொலைக்காட்சி, பத்திரிக்கைகள், சமூக ஊடகங்கள் என அனைத்தையும் காவிகள் தங்களது விஷப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திவருகிறார்கள். அதனை உடனே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
காவி பாசிசத்திற்கு எதிராக நிற்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறதா என்றால், இல்லை என்பதை விட இதற்கு நேரெதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சந்தனக்கூடு விழாவிற்கு வந்த இஸ்லாமியர்களைத் தடுத்து நிறுத்தியது தொடங்கி, காவிகளின் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து ஜனநாயக சக்திகள் நடத்திய, செய்தியாளர் சந்திப்பைத் தடுத்தது வரை சிறுபான்மையினருக்கு எதிராகவும், ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவும் தான் தமிழக போலீசார் செயல்பட்டுவருகின்றனர்.
மறுபுறம் திருப்பரங்குன்றம் பிரச்சனையை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் கலவர அரசியலைப் பிரச்சாரம் செய்வதற்கு காவிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மதுரையிலேயே நீதிமன்ற உத்தரவைப் பெற்று காவிகள் போலீசு பந்தோபஸ்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
ஞானவாபி மசூதியிலும் சரி சம்பல் மசூதி விசயத்திலும் சரி நீதிமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், போலீசு, காவி கும்பல் என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒன்றாக வேலை செய்தன. திருப்பரங்குன்றம் விசயத்திலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
தமிழகத்தில் காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகள் காலூன்றுவதற்காக முன்னெடுத்திருக்கும் இந்தக் கலவர முயற்சியைத் தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கரம் கோர்த்து நிற்க வேண்டிய தருணம் இது.
- மகேஷ்
திமுக கையாளாகாத அரசு.