மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவின் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுப்பதற்கான ஏலத்தில், நாசகர வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் தேர்வானதாக ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த நவம்பர் 7ம் தேதியன்று அறிவித்திருந்தது.
ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் இச்சுரங்கத் திட்டத்தை எதிர்த்து அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள கிராம மக்கள் கடந்த மூன்று மாத காலமாக பல கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் உச்சமாக லட்சக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பினைப் பதிவு செய்தனர். மக்களின் ஒற்றுமையையும் போராட்ட எழுச்சியையும் கண்ட ஒன்றிய பா.ஜ.க அரசு இப்பகுதியில் மேற்கொள்வதாக இருந்த டங்க்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை திரும்ப பெற்றுள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு இத்திட்டத்தை திரும்ப பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசுதான் காரணம் என அவருக்கு அவசர அவசரமாக அரிட்டாப்பட்டியில் ஒரு பாராட்டு விழாவை திமுக நடத்தி முடித்திருக்கிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.கவும் பாஜகவும் இத்திட்டம் கைவிடப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள்.பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான அண்ணாமலை ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை வரவைத்து அவருக்குப் பாராட்டுவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்.
மக்கள் விரோத திட்டங்களைக் கொண்டு வந்தது மற்றுமின்றி அதனை எதிர்த்து மக்கள் போராடும் போது வேறு வழியில்லாமல் பின்வாங்கிவிட்டு, கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் அதற்கு தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்திக் கொள்ள அண்ணாமலையால் மட்டுமே முடியும்.
திமுக சார்பாக தனக்கு தானே ஏற்பாடு செய்துகொண்ட பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமும், திராவிட மாடல் அரசின் ஒத்துழைப்புடன் நடைப்பெற்ற மக்கள் பேரணியுமே ஒன்றிய அரசை டங்க்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான முயற்சியை கைவிடும் படி செய்தது என்றார்.
மு.க.ஸ்டாலினின் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து டங்க்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் மட்டுமல்லாமல், பல தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த நீட் விலக்கு தொடர்பான மசோதா. இம்மசோதா சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் கழித்து ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது வரை இத்தீர்மானம் மூலம் நீட் விலக்கிற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை. நீட் விலக்கு மசோதாவைப் போல பல சட்டமன்ற தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன என்பது தமிழகம் அறிந்த ஒன்று. அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கும் இது தெரியாத விசயம் ஒன்றுமல்ல.
எனவே தான் டிசம்பர் 9ம் தேதியன்று திமுக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றிய பிறகும் அதனை நம்பி தங்களது போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளி வந்த ஒரு சில நாட்களிலேயே டங்ஸ்டன் சுரங்கத்தினால் ஏற்படவிருக்கும் பாதிப்பு குறித்து மக்கள் புரிந்து கொண்டனர். அதுவும் நாசகர ஸ்டைர்லைட் நிறுவனம் இதில் சம்பந்தப்பட்டிருப்பது இந்த திட்டத்தை எப்படியாவது ஆரம்பத்திலேயே நிறுத்திவிட வேண்டும் என்ற உறுதியுடன் பல கிராமங்களுக்கும் போராட்டம் பரவ காரணமாக இருந்தது.
இதன் பின்பு நவம்பர் 22 அரிட்டாப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தீர்மானங்கள் கிராம மக்களால் நிறைவேற்றப்பட்டது. இந்த சுரங்கத்தால் நேரடியாக பாதிக்கப்படாத ஊராட்சி மக்களும் அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றினர். அதன் பின்னர் மேலூரின் அனைத்து கிராம மக்களும், வணிகர்களும் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். டிசம்பர் 15 ம்தேதி மேலூரில் கூடிய இப்பகுதி மக்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, ஒன்றிய அரசு இத்திட்டத்தை திரும்ப பெறும் வரையில் எமது போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இப்போராட்டக்களத்தின் மகுடமாக ஜனவரி 7ம் தேதியன்று அரிட்டாப்பட்டியைச் சுற்றியுள்ள சுமார் ஒரு இலட்சம் பேர் மேலூர் நரசிங்கம்பட்டி முதல் மதுரை தமுக்கம் வரையிலான 20 கி.மீ தூரத்தை நடைபயணமாக அணி வகுத்துச் சென்றனர். இந்த மாபெரும் நடைபயணம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
இப்பகுதி மக்கள் இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக நடத்திய போராட்டத்தைக் கண்டு அஞ்சியே ஒன்றிய அரசு டங்க்ஸ்டன் திட்டத்தை திரும்ப பெற்றிருக்கிறது.
அமைதியாக நடந்த இந்த மாபெரும் மக்கள் நடைபயணத்தில் கலந்து கொண்ட சுமார் 11,608 பேர் மீது திராவிட மாடல் அரசின் போலீசு வழக்குகளை பதிவு செய்தது. ஒன்றிய அரசு டங்க்ஸ்டன் ஏலத்தை திரும்ப பெறும் வரை இவ்வழக்குகள் பற்றி வாய் திறவாத மு.க.ஸ்டாலின், அரிட்டாப்பட்டியில் நடைப்பெற்ற பாராட்டு விழாவின் போதே இவ்வழக்குகளை திரும்ப பெற்று இந்த மக்கள் பேரணி திராவிட மாடல் அரசின் ஒத்துழைப்போடு நடைப்பெற்றது என இரட்டை வேடம் போடுகிறார்.
தமிழக மக்களின் நலனுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் தான் செயல்படுத்த விடமாட்டேன் என அப்பாராட்டு விழாவில் மார்தட்டும் மு.க.ஸ்டாலின், கார்ப்பரேட் நலன்களுக்கான பரந்தூர் விமானநிலையம், எட்டுவழிச்சாலை போன்ற திட்டங்களை எதிர்த்து நடைபெறும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குகிறார்.
மக்கள் நலனுக்காக தனது முதலமைச்சர் பதவியை துறக்க தயார் என வாய்ச்சவாடல் அடிக்கும் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான தமிழக இயற்கை வளத்துறை தான் முதலில் மதுரை மேலூரில் பகுதியில் டங்க்ஸ்டன் கனிமம் இருப்பதாகவும் அதை வெட்டி எடுப்பதற்காக ஒன்றிய அரசை நாடியது.
தமிழக அரசின் இயற்கை வளத்துறை அக்டோபர் 2023 ஆம் ஆண்டிலேயே டங்ஸ்டன் கனிமம் மதுரை மாவட்டத்தில் இருப்பதை கண்டறிந்து, அதை வெட்டி எடுப்பதற்காக ஒன்றிய அரசை அனுகியிருப்பதாக இத்துறையின் அதிகாரி கூறியதை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் கடந்த அக்டோபர் 13, 2023 ஆண்டிலேயே செய்தியாக வெளியிட்டிருந்தது. இதுமட்டுமில்லாமல் தமிழக அரசின் நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் கனிமவளத்துறையானது டங்க்ஸ்டன் கனிமம் மதுரையில் இருப்பதாக தனது கொள்கை அறிக்கையில் (2023-24) பக்கம் 15-16ல் வெளியிட்டிருந்தது.

இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வாதாரங்களையும் கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாபத்திற்காக திறந்து விடுவதில் ஒன்றிய அரசுக்கு சற்றும் சளைத்தது அல்ல மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. பரந்தூர் விமானநிலையம், எட்டுவழிச்சாலை, என இக்கொள்கை நீண்டு கொண்டே போகிறது. இவர்கள் ஒருபோதும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தப் போவதில்லை என்பதற்கு இதுபோன்ற பல கார்ப்பரேட் கொள்ளைகளை உதாரணமாக கூற முடியும்.
டங்க்ஸ்டன் திட்டத்தை இரத்து செய்ததற்கான வெற்றியை தனது வெற்றி என கூறிக்கொள்ள திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு அருகதை இல்லை. இவ்வெற்றி என்பது இப்பகுதி மக்கள் மூன்று மாத காலம் போராடிப் பெற்ற வெற்றி. கார்ப்பரேட் நலனுக்கானவே இருக்கும் பா.ஜ.க மற்றும் திராவிட மாடல் அரசு மக்கள் சக்தி முன் சரணாகதி அடைந்துள்ளது.
• தாமிரபரணி
மக்கள் போராட்டமே வெல்லும்.