“காவிமயமாக்கல் என்பதன் பொருள் நாட்டுக்குச் சேவை செய்வது என்றால், டெல்லி பல்கலைக்கழகம் அதற்கு தயாராக உள்ளது” இது பாஜக தலைவர்கள் பேசியதல்ல மெத்தப்படித்த பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேசியது. கடந்த ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கல்லூரியில் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த இந்து புத்தாண்டு விழாவை கண்டித்து மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு டெல்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் யோகேஷ் சிங் அளித்த பதில் இது.
மோடியைப் பற்றி புகழ்ந்து எழுதப்பட்ட Modi vs Khan Market Gang என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவை கடந்த வாரம் டெல்லி பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய யோகேஷ் சிங், “மோடியை பற்றி தவறான கருத்துக்களை, அவதூறுகளை, பொய்களை எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் பரப்புகின்றன. 2024 தேர்தலே இந்தியாவின் கடைசி தேர்தல் என்று எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்தன. மேலும் இந்தியாவைப் பற்றி மோசமான தரமதிப்பீடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. இந்தப் பொய்பிரச்சாரங்களையெல்லாம் மோடி தகர்த்தெறிந்துள்ளார்” என்று பேசியிருக்கிறார். அனுமன் தனது நெஞ்சைப் பிளந்து தான் ஒரு சிறந்த ராமபக்தன் என்று காட்டியது போல ஆர்எஸ்எஸ் க்கு ஜால்ரா போடுவதன் மூலம் தான் ஒரு சிறந்த மோடிதாசன் என்று வெளிப்படுத்தியிருக்கிறார் யோகேஷ் சிங்.
தமிழ்நாட்டிலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் முறைகேடு குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்த பின்பும் அவரை பணியிலிருந்து நீக்காமல் ஜெகநாதனின் பதவி காலத்தை மேலும் 11 மாதங்கள் பதவி நீட்டித்திருக்கிறார் ஆளுநர் ரவி. ஜெகநாதன் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் அவரது பாஜக ஆதரவு நிலைப்பாடாகும். யோகேஷ் சிங், ஜெகநாதன் போல, இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் முக்கியப் பொறுப்புகளில் நூற்றுக்கனக்கான யோகேஷ் சிங் களை பணியில் அமர்த்தி வருகிறது ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல்.
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் இதர முக்கிய பொறுப்புகளில் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களைப் பொறுக்கி எடுத்து பணியமர்த்தப்படுகின்றனர். மத்திய பல்கலைக்கழகங்களிலும் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நேரடியாகவே ஆர்எஸ்எஸ் கும்பலின் வழிகாட்டுதல்படி இந்தப் பணி நியமனங்கள் நடைபெறுகிறது. பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றிய அரசின் ஏஜெண்டான ஆளுநர்களின் மூலமாகப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்துகின்றனர். மோடி கும்பலின் இந்த அணுகுமுறை மாநிலப் பல்கலைக்கழகங்களை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.
உதாரணமாக, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கானத் தேர்ந்தெடுக்கும் குழுவில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்கவேண்டும் என ஆளுநரும்; பல்கலைக்கழகங்களுடைய சட்டப்படி யுஜிசி இன் பிரதிநிதிகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக அரசும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதனால் ஆறு பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலம் முடிந்து பலமாதங்கள் ஆகியும் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் போன்ற பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் இதே நிலைமைதான் தொடர்கிறது. இம்மாநில அரசாங்கங்கள் முதலமைச்சரையே பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தன. அச்சட்ட திருத்தத்திற்கு அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் வழங்காமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.
இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் பணிநியமனம், பதவி உயர்வு மற்றும் துணைவேந்தர்கள் நியமிப்பதற்கான நெறிமுறைகளைக் கொண்ட வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகள்-2025). இந்நெறிமுறைகள் அனைத்துமே தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
யுஜிசி இன் இந்த வரைவு துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக கீழ்கண்ட நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது.
1) துணைவேந்தர் பதவிக்கு 10 ஆண்டுகள் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி அல்லது ஆராய்ச்சி மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் அதற்கு இணையாகப் பணியாற்றியவர்கள் அல்லது தனியார் தொழில் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உயர் பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களும் தகுதியானவர்கள்.
2) துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் அகில இந்திய அளவிலான விளம்பரங்கள் மூலமாக கோரப்பட வேண்டும்.
3) துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக் கழக மானியக்குழுவால் நியமிக்கப்படும் ஒருவர், பல்கலைக்கழக சிண்டிகேட்/செனட் போன்ற அமைப்புகளால் நியமனம் செய்யப்படும் ஒருவர் மற்றும் பல்கலைக்கழக வேந்தரால் நியமனம் செய்யப்படும் ஒருவர் என 3 பேர் இருக்கவேண்டும். இக்குழுவின் தலைவராக வேந்தரின் பிரதிநிதி செயல்படுவார்.
4) இக்குழு 3 முதல் 5 பேர் அடங்கிய பட்டியலை வேந்தரிடம் சமர்ப்பிக்கும். அப்பட்டியலிலிருந்து ஒருவரை வேந்தர் துணைவேந்தராக நியமிப்பார்.
இதுவரை துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்காக பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி, பல்கலைக்கழக வேந்தரின் (ஆளுநர்) பிரதிநிதி மற்றும் மாநில அரசின் பிரதிநிதி உள்ளிட்ட 3 பேர் கொண்ட குழுவை மாநில அரசு அமைக்கும். அக்குழு மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து மாநில அரசிடம் கொடுக்கும். அதில் மாநில அரசு பரிந்துரைக்கும் நபரை ஆளுநர் துணைவேந்தராக நியமிப்பார். ஆனால் புதிய வரைவின் படி துணைவேந்தரை தேர்ந்தெடுப்பது மற்றும் நியமிப்பதில் மாநில அரசுக்கு எந்த இடமும் இல்லை.
கூடுதலாக பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க பத்து வருட அனுபவம் கொண்ட பேராசிரியராக மட்டும் இருக்க வேண்டும் என்ற வரையறையைத் தளர்த்தி அரசுத் துறை அல்லது தனியார் துறையின் உயர் பதவிகளில் பத்து வருடம் அனுபவம் கொண்ட நபர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.
மேலும், சொல்லப்பட்டுள்ள நெறிமுறை பின்பற்றாத பல்கலைக்கழகங்களுடைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கிறது இந்த வரைவு.
இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளிவந்த உடனே தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் யுஜிசி நெறிமுறைகள்-2025 ஐ திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கின்றன. பாஜகவோடு கூட்டணியில் இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநிலச் சட்டமன்றத்தினால் தனிச் சட்டம் இயற்றப்பட்டு மாநில அரசின் நிதி உதவியில் இயங்குவது. அதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது இந்தியாவின் கூட்டாசி கொள்கைக்கே எதிரானது என்பதே திமுக உள்ளிட்ட மாநில கட்சிகளின் எதிர்பிற்கு முக்கிய காரணம். இன்னும் பலர் இவ்வரைவு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவே மோடி அரசு இதனைத் திரும்பப்பெற வேண்டும் என்கின்றனர். இவர்கள் சொல்லும் காரணங்கள் ஓரளவிற்கு சரியென்றாலும் இவ்வரைவு அறிக்கைக்குப் பின்னால் உள்ள முதன்மை பிரச்சனையான இந்துத்துவா-முதலாளிகள் நலன்கள் குறித்து பேசாமல் இவர்கள் தவிர்க்கின்றனர்.
கல்வியைக் காவிமயமாக்குவதையும் கார்ப்பரேட்களிடம் ஒப்படைப்பதையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP) க்கு மோடி அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து ஏறத்தாழ ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்த ஐந்தாண்டுகளில் NEP ன் பரிந்துரைகளை யுஜிசி இன் எக்ஸிக்யூட்டிவ் ஆடர்களின் மூலம் அமல்படுத்தி வந்தாலும் மாநில அரசுகளின் எதிர்ப்புகள், மாணவர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டங்கள், போதிய உள்கட்டமைப்பு வசதியின்மை, நிதி பற்றாக்குறை, ஆசிரியர்களின் திறமை குறைபாடு ஆகியவற்றின் காரணமாக கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை முழுமையாக மோடியினால் அமல்படுத்த முடியவில்லை.
இந்தியாவில் மொத்தம் 56 மத்திய பல்கலைக்கழகங்களும் 481 மாநில பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநில பல்கலைக்கழகமும் சராசரியாக 120 இணைப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளன. இந்த புதிய நெறிமுறைகளின் அடிப்படையில் தங்களுடைய ஆதரவாளார்களை துணை வேந்தர்களாக நியமிப்பதின் மூலம் ஒட்டுமொத்த உயர்கல்வியையும் தங்களுடையக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர மோடி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கல்விக்குள் தங்களுடைய காவி-கார்ப்பரேட் பாசிச திட்டத்தை எதிர்ப்பின்றி அமல்படுத்த முடியும். பாடத்திட்டத்திற்குள்ளும் பல்கலைக்கழக அன்றாட நடவடிக்கைகளிலும் இந்துத்துவ கருத்தியலை தடையின்றி திணிக்கமுடியும். ஏற்கனவே பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டங்களில் வேதகால அறிவியல் தொழில்நுட்பம், பகவத் கீதை சொல்லும் வாழ்வியல் நெறிமுறைகள், யோகா முறைகளின் நன்மைகள் போன்ற பலவற்றைப் பாடங்களில் திணித்துள்ளனர். கூடவே திறன் மேம்பாட்டு படிப்புகள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பல புதிய படிப்புகளை துவங்க அனுமதித்துள்ளனர்.
கற்றல் செயல்பாடுகளில் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அனுமதி, கல்லூரியில் படிக்கும் போதே NPTEL, MIT Open Course ஆகியவற்றில் பாடங்களை தேர்ந்தெடுத்துப் படிக்க அனுமதி, தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்களுடைய விருப்பப்பட்ட பாடங்களை உருவாக்குவதற்கும் அதற்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கும் அனுமதி, ஒப்பந்த பேராசிரியர்களை பணியர்த்திக் கொள்ள சட்டரீதியான அனுமதி, தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களை பேராசிரியராக நியமிக்கலாம் என்று பரிந்துரை, ஆய்வுக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டுவதற்கு ஊக்குவிப்பு, தனியார் தொழிற்சாலையுடன் சேர்ந்து புதிய படிப்புகளை தொடங்க அனுமதி, தனியார் கோச்சிங் நிறுவனங்களின் நலன்களுக்காக இளங்களை/முதுநிலை படிப்புகளுக்கு தேசிய அளவிலான தேர்வு, தொழிற்பயிற்சி என்ற போர்வையில் அரசு நிதியுதவியுடன் தனியார் தொழிற்சாலைகளில் மாணவர்களுக்குப் பயிற்சி என உயர்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் தனியார்/கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்திருக்கிறது மோடி கும்பல்.
மேற்கண்டவை உள்ளிட்ட NEP இன் பல பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு மொத்த உயர் கல்வித் துறையே தன் கையில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று மோடி கும்பல் கருதுகிறது. அதற்கான சட்ட ரீதியான வழிமுறையே யுஜிசி வெளியிட்டுள்ள இப்புதிய நெறிமுறைகள்.
- செல்வம்
UGC draft norms for recruiting V-Cs: Political implications & why there’s resistance from academia
https://www.peoplesdemocracy.in/2025/0112_pd/ugc-rules-assault-state-universities